Wednesday, May 15, 2013

செயற்கை மனிதன் றெக்ஸ் - Robo Rex

அறிவியல் கட்டுரை.

முதலாவது செயற்கை மனிதன் றெக்ஸ்
குரு அரவிந்தன்

நீங்கள் அனேகமாக சுப்பஸ்டார் ரஜனியின் ரோபோ படம் பார்த்திருப்புPர்கள். அதிலே கதாநாயகன் ரஜனியால் உருவாக்கப்பட்ட ரஜனியைப் போலவே உருவம் கொண்ட, ரோபோரஜனியின் செய்கைகளைப் பார்த்து அனேகமானவர்கள் வியந்திருப்பீர்கள். கணனியின் தொழில் நுட்ப உதவியோடு அதில் வரும் பல காட்சிகள் சினிமாவிற்காக உருவாக்கப்பட்டன என்பதே உண்மையாகும். உதடுகளின் அசைவுக்கேற்ப ஓலியமைப்பும் சிறப்பாக இருந்ததால் செயற்கை மனிதன் அப்படித்தான் இருப்பான் என்று நாங்கள் எமக்குள் கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தோம்.. ஆனால் அப்படி ஒரு கற்பனையை நிஜமாக்கும் வகையில் இன்று பிரித்தானியாவில் அது போன்ற ஒரு செயற்கை மனிதனை உருவாக்கியிருக்கிறார்கள். லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த இரண்டு மீற்றர் உயரமான செயற்கை மனிதனை நீங்கள் நேரில் பார்க்க விரும்பினால், 2013மார்ச்மாதம் 11ம் திகதிவரை உங்களால் அங்கே சென்று நேரில் பார்க்க முடியும். றெக்ஸ் என்ற பெயரைக் கொண்ட இந்த செயற்கை மனிதன் அடுத்தாக அமெரிக்காவிற்கு வருகைதர இருப்பதாகத் தெரியவருகின்றது.
டாக்டர் பேல்ட் மயர் (டீநசவழடவ ஆநலநச) தான் றெக்ஸ் என்ற பெயரைக் கொண்ட இந்த செயற்கை மனிதனை பலரின் உதவியோடு உருவாக்க முழுமூச்சாக நின்றவர். அதன் பின்னணியில் அதற்கான காரணமொன்றுமிருந்தது. அதாவது அவரும் ஒருவகையில் உடல் ஊனமுற்றவராக இருந்ததும் ஒரு காரணமாகும். இடது கையை இழந்த அவர் செயற்கைக் கையை; அணிந்திருந்தாலும் அதனால் எந்தப் பயன்பாடும் இல்லாமற் போனதால் அதைப் பற்றிச் சிந்திக்கலானார். அதனால்தான் தனது கையையே மாற்றி அமைக்க முற்பட்டார். அதைப்பற்றிக் குறிப்பிடும் போது இந்தக் கையில்லாவிட்டால் ஏதோ ஒன்றை இழந்துவிட்ட உணர்வு ஏற்படுகின்றது என்று குறைப்பட்டுக் கொண்டார்.


தனது கனவுகளை நிஜமாக்க நினைத்த அவர், மசெச்சுசெஸ்ற் இன்சிற்ரியூட் ஒவ் ரெக்னோலஜியைச் சேர்ந்த பெறியியலாளரும் பேராசிரியருமான ஹியூ ஹே என்பவரைச் சந்தித்து அவரிடம் தனது குறைகளைக் குறிப்பிட்டார். அவரின் உதவியோடு காலில்லாதவர்கள் எப்படிக் கணணியின் கட்டுப்பாட்டோடு  செயற்கைக் கால்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைச் செய்கை மூலம் அவரிடம் கற்றுக் கொண்டார். பென்சில்பேனியாவைச் சேர்ந்த ஹியூ கடினமான மலைகள் ஏறுவதில் கெட்டிக்காரர். ஏட்டு வயதில் றொக்கிமலையின் கடினமா பகுதியில் 11.627 அடி உயரம் ஏறிச் சாதனை படைத்தவர். செயற்கை உறுப்புகளைச் செய்வதில் வல்லுணர். ஓலிம்பிக் வீரர் ஒஸ்கார் பிஸ்ரோறிஸ்சின் செயற்கைக் கால்களை வடிவமைப்பதில் இவர் தான் முன்னின்று உழைத்தவர். இவரைவிட செயற்கை மனிதனை உருவாக்க டாக்டர் பேல்ட் மயருக்கு இத்துறையில் நிபுணர்களான றிச்சாட் வாக்கர், மத்யூ கோல்டன் போன்றோரும் உருதுணையாக நிற்கின்றனர்.
ரோபோவிற்கு உடலுறுப்புக்க்ள் கொடுக்கும்போது முகம் எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானித்தபோது பலரும்  பேல்ட் மயரின் முகம் மாதிரியே வேண்டும் என்று தமது விருப்பத்தைத் தெரிவித்தனர். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மயரின் முகம் போலவே ரோபோவிற்கு செயற்கை முகம் வடிவமைக்கப்பட்டது. செயற்கை குருதிச் சுற்றோட்டம், குருதி, சிறுநீரகம், கணையம், மண்ணீரல், மூச்சுக்குழல், கண்கள், கைகள், கால்கள், காதுகள், வாய் போன்ற செயற்கை உறுப்புக்களைக் கொண்டே இந்த ரோபோ செயற்படுகின்றது. இதயம், நுரையீரல் போன்ற உறுப்புக்கள் கணணியின் தொழில் நுட்ப உதவியுடன் செயற்படுகின்றது. இதுவரை தனித்தனியாக இப்படியான உறுப்புக்களைச் செயற்பட வைத்த முயற்சியில் இருந்து ஒரு படி முன்னேறிச் செயற்கை உறுப்புக்கள் எல்லாமே ஒன்றாய் இயங்கக்கூடிய செயற்கை மனிதன் உருவாக்கப்பட்டது.


கறுப்புக் கண்ணாடியில் பொருத்தப்பட்ட சிறியகமெரா மூலம் செயற்கை மனிதனின் கண்கள் இயங்குகின்றன. இந்தக் கண்களைக் கலிபோணியா பல்கலைக்கழக்த்தினரும், காதுகளை சிட்னி மக்குயர் பல்கலைக்கழகத்தினரும் கொடுத்து உதவியிருந்தனர். இதயத்தை அரிஸோனா சிங்காடியா பல்கலைக்கழகத்தினரும், கணையத்தை லெயிஸ்ரர் டி மொன்போட் பல்கலைக்கழகமும் கொடுத்து உதவியிருந்தனர். சிறுநீரகத்தை கலிபோணியா பல்கலைக்கழகமும், நியூசிலாந்தைச் சேர்ந்த ரெக்ஸ்பயோனிக்கஸ் கால்களையும், மசெச்சுசெஸ்ற் எம்ஐரி நிறுவனத்தினர் பாதங்களையும் கொடுத்து உதவியிருந்தனர்.


இந்த செயற்கை மனிதனை உருவாக்க சுமார் ஒரு கோடி டொலர்கள்வரை செலவிடப்பட்டது. ஆக்ஸ் போர்ட் பல்கலைக்கழகமும்,  ஸ்வாசீன் பல்கலைக் கழகமும் செயற்கை மனிதனை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. செயற்கை மனிதனுக்குத் தேவையான கணையம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றை உருவாக்க ஆக்ஸ்போட் பல்கலைக்கழக நிபுணர்களும், செயற்கை நுரையீரலை ஸ்வாசீன் பல்கலைக்கழக நிர்ணர்களும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். பிரித்தானிய தொலைக்காட்சி நிறுவனமான சனல் 4 இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.


சில மாதங்களுக்கு முன் ரஸ்யா நாட்டைச் சேர்ந்த டிமிற்ரி ஸ்கோவ் என்பவர் அலிஸா என்ற செயற்கைப் பெண்ணின் தலையை உருவாக்கியிருந்தது நினைவிருக்கலாம். முகத்தில் உள்ள முக்கிய உறுப்புக்களான கண்களும், உதடுகளும் அசையக் கூடியதாக இதை உருவாக்கியிருந்தார். சிலிக்கோனினால் உருவாக்கப்பட்ட முகமாகையால் பார்ப்பதற்கு நிஜமான பெண் போலவே முகம் காட்சியளிக்கின்றது. ஒற்றைக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது அலிஸாவின் கண்களும் உதடுகளும் நிஜப்பெண்ணின் உறுப்புகள் போலவே அசைகின்றன. சுமார் முப்பது அசைவுகள் வரை உள்ள செயற்கைத் தலைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும், அலிஸாவின் தலையில் எட்டு அசைவுகளே இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த அசைவுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கின்றன என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது. இந்தத் திட்டம் சரிவர நடைமுறைப் படுத்தப் பட்டால், 2045ம் ஆண்டளவில் செயற்கை மனிதர்களை முழுமையாக உருவாக்க முடியம் என்று ரஸ்ஸியர்கள் நம்புகின்றார். இதே போன்ற முயற்சிகளில் ஜப்பான் தேசமும் அதிக அளவில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரோபோக்கள் என்று சொல்லப்படுகின்ற செயற்கை மனிதர்கள் மட்டும் பயனடையும் இந்த அரிய முயற்சியால் ஒருநாள் நிஜமான மனிதர்களின் உயிரைக் காக்கக்கூடிய முறையில் பயனடைய முடியும் என்றே நம்பவேண்டும். தொடக்கத்தில் இது வெறும் வேடிக்கைபோலத் தோன்றனாலும் காலப்போக்கில் இதன் அவசியத்தை மக்கள் புரிந்து கொள்வர். இது ஆரம்பம்தான், ஆனால் மனிதரும் பயனடையக் கூடியதான மாற்றங்கள் வெகுவிரைவில் வந்தடையும் என்றே எதிர்பார்க்கலாம். எல்லாம் நன்மைகே என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment