Wednesday, June 5, 2013

Belly Landing - விமானம்

பயணிகளை நடுங்கவைத்த விமானம்

(குரு அரவிந்தன்)

விமானங்கள் எப்பொழுதும் பாதுகாப்பானவையாகத்தான் இருக்கின்றன. அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் விமானத்தில் பயணிக்கிறோம். அப்படி இருந்தும் சில சமயங்களில் எதிர்பாராத சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. பொதுவாக விமானங்கள் மேல்நோக்கி ஏறும்போது, அல்லது தரையில் இறங்கும்போதுதான் அதிக விபத்துக்கள் எற்படுகின்றன. முன்பெல்லாம் விமானம் பாதுகாப்பாகத் தரை இறங்கி ஓடுபாதையில் ஓடி நின்றதும் பயணிகள் மகிழ்ச்சியில் கரவொலி எழுப்புவார்கள். இப்பொழுது விமானப் பயணம் என்பது ஒரு சாதாரண நிகழ்வாகப் போய்விட்ட படியால் பயணிகள் அதைப் பெரிது படுத்துவதில்லை. சென்ற வாரம் (18-05-2013) நியுயோர்க்கில் உள்ள நியூஆர்க் லிபார்டி சர்வதேச விமான நிலையத்தில் சற்றும் எதிர்பாராத விபத்து ஒன்று நடந்தது. கரவொலி எழுப்பக்கூட நேரமில்லாமல் தங்கள் உயிரைக் காப்பதற்காக பாய்ந்து வெளியேற வேண்டிய நிலையில் அந்தப் பயணிகள் இருந்தார்கள்.


அமெரிக்காவில் பென்சில்பேர்னியா மாகாணத்தில் உள்ள நகரமான பிலடெல்பியா என்றால் பலருக்கும் தெரிந்ததொன்றாகும். 76சேர்ஸ் என்ற கூடைப்பந்தாட்ட அணி அங்கே பிரபலமானது. அங்கேயுள்ள விமான நிலையத்தில் இருந்து யுஎஸ் எயவேய்ஸ் விமானம் ஒன்று 34 பேருடன் நியூயோர்க் நோக்கிப் புறப்பட்டது. 31 பயணிகளும் 3 விமான சிப்பந்திகளும் இதில் இருந்தனர். இது தினசரி நடக்கும் ஒரு விமானப் பயணம்தான். ஆனாலும் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் பிளடெல்பியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் பிளைட் 4560 சிறிது நேரத்தில்  நியூஆர்க் விமான நிலையத்தைச் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் விமானம் இரவு ஒரு மணிவரை தரை இறங்கவில்லை. காரணம் தரை இறங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது விமானத்தின ஒருபக்கச்; சில்லு வெளியே வரவில்லை என்பது தெரிய வந்தது. விமானத்தின் இடது பக்கச் சில்லுத்தான் என்பதை உறுதி செய்த விமானி எவ்வளவே முறை முயற்சி செய்தும் அது பலன் தரவில்லை.


அடுத்து என்ன செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டபோது தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தோடு விமான ஓட்டி உடனே தொடர்பு கொண்டார். முயற்சிகள் பயனளிக்காமல் போகவே, பெலிலாண்டிங் (டீநடடல டயனெiபெ ) என்ற முறையைத்தான் பின்பற்ற வேண்டும் எனத் தீர்மாணிக்கப்பட்டது. வேறு வழிகள் இல்லாவிட்டால் இந்த முறையைத்தான் கடைசியில் பாவிப்பார்கள். பெலிலாண்டிங் என்பது மிகவும் ஆபத்தானது. சில்லுகள் இயங்காத நிலையில் விமானி விமானத்தை அப்படியே ஒடுபாதையில் மெதுவாக இறக்க வேண்டும். இயங்கு நிலையில் இருக்கும் சில்லுகளையும் உள்ளே எடுத்துவிடவேண்டும். வேகம் மெதுவாகவும் சீராகவும் இருக்க வேண்டும். சீராக இல்லாவிட்டால் விமானம் இறங்கும்போது எதிர்க்காற்றில் விமானம் சரிந்து போகலாம். சில விமான ஓட்டிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல் பட்டியலை பார்வையிடாமல், தினசரி நினைவில் இருப்பதை வைத்துக் கொண்டு செயற்படுவதுண்டு. அப்படியான நேரத்தில் இத்தகைய ஆபத்துக்கள் நேரலாம். பெலிலாண்டிங் செய்யும்போது, விமானத்தின் கீழ்ப்பகுதியான வயிற்றுப்பகுதி ஒடுபாதையை உராய்ந்தபடி தரையிறங்கும். அப்படி உராயும்போது தீப்பொறி எழும்பும். அப்படி தீப்பொறி எழும்போது, விமானத்தில் இருக்கும் எரிபொருள் தாங்கி விமானம் தீப்பிடிப்பதற்குக் காரணமாகும். எனவே இப்படியான சந்தர்ப்பங்களில் விமானம் தரை இறங்குவதற்குப் போதுமான எரிபொருளை வைத்துக் கொண்டு மிகுதியை வெளியேற்றிவிடுவார்கள். தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து எரிபொருளை அகற்றும்படி கட்டளை பறிறப்பிக்கப்பட்டதால், விமானி பல தடவைகள் விமான நிலையத்தைச் சுற்றி வரவேண்டியிருந்தது.


விமானம் தரை இறங்கப் போவதாக அறிவித்த பின்பும் ஏன் இறங்கவில்லை என்பதில் பயணிகளிடையே சந்தேகம் எழுந்தது. ஒவ்வொரு பயணியும் ஒவ்வொருவிதமான கற்பனையில் இருக்க, விமான ஓட்டி தனது அறிவித்தலில் விமானத்திற்கு என்ன நடந்தது என்பதைச் சொன்னார். இரண்டு விமான ஓட்டிகளும், ஒரு பெண் உதவியாளரும் அந்த விமானத்தில் கடமையில் இருந்தனர். பெலிலாண்டிங் செய்வதாக முடிவெடுத்தபின் பயணிகளுக்கு அதைப்பற்றி அறிவித்தல் கொடுக்கப்பட்டது. ஆனாலும் பயப்படவேண்டாம், பாதுகாப்பான தரை இறக்கத்திற்கு நாங்கள் எல்லோரும் பிரார்த்திப்போம் என்று அவர் பயணிகளிடம் அறிவித்தார். என்ன நடக்கப்போகிறதோ என்ற பயத்தில் பயணிகள் முகத்தில் மாற்றங்கள் தெரிந்தன. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தரை இறக்கத்திற்காகக் காத்திருந்தனர்.


பிளைட் இல.4560ன் அவசர நிலை அறிவிக்கப்பட்டதும், உடனடியாகவே விமான நிலையம் முடப்பட்டு, இறங்கு பாதை ஒன்று இதற்காக ஒதுக்கப்பட்டது. காரணம் தெரியாமல் விமான நிலையத்தில் நின்ற ஏனைய பயணிகள் கலவரமானார்கள். மற்றொரு பக்கம் செய்தி தொடர்பு சாதனங்கள் விமான நிலையம் நோக்கி அவசரமாகப் படையெடுத்தனர். அவசர நடவடிக்கை காரணமாக தீயணைக்கும் படையினரும், அம்புலன்ஸ் சேவைப்பிரிவினரும் தயார் நிலையில் நின்றனர். விமானம் தரையில் உராயந்து கொண்டு செல்கையில் தீயணைக்கும் பிரிவினர் ஓடுபாதையில் தண்ணீரைப் பாய்ச்சி தீப்பொறி கிளம்பாது செய்தனர். விமானம் நின்றதும் பயணிகள் உடனடியாகவே பேருந்தில் ஏற்றப்பட்டு விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். பயணிகள் யாரும் காயமடைந்ததாகத் தெரியவில்லை. உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே சிகிட்சை அளிக்க்ப்பட்டது. விமானம் இறங்கும்போது விமானத்தின் செட்டைகளைச் சமநிலையில் வைத்திருந்த விமானியின் திறமையால், தகுந்த நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் சிறந்த முடிவெடுத்ததால் 34 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. விபத்து என்பது எங்கே, எப்போ, எப்டி நடக்கும் என்பது தெரியாதது. இந்த வருடத்தில் மட்டும் அந்த விமான நிலையத்தில் நடந்த மூன்றாவது விமான விபத்து இதுவாகும்.


நியூஆர்க் விமான நிலையம் நியுயோர்க் நகரில் இருந்து பதினைந்து மைல் தென்மேற்கே நியூஜேர்சியில் இருக்கின்றது. 1928ம் ஆண்டு அக்டோபர் மாதம் 68 ஏக்கர் காணியில் முதன் முதலாக இந்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. நியூயேர்க் மாகாணத்தில் உள்ள மூன்று பெரிய விமான நிலையங்களில் இது இரண்டாவது இடத்தை வகிக்கிறது. முதலாவதாக ஜே.எப்.கென்னடி விமான நிலையமும், இரண்டாவதாக நியூஆர்க் விமான நிலையமும், மூன்றாவதாக லாகுவாடியா விமான நிலையமும் இருக்கின்றன.  நியூயோர்க்கில் உள்ள இந்த விமான நிலையங்களுக்கூடாக முறையே 49.3 மில்லியன், 34.1 மில்லியன், 25.7 மில்லியன் பயணிகள் 2012ம் ஆண்டு பயணம் செய்திருக்கிறார்கள்.
இநத விபத்துக் காரணமாக விமான ஓடுபாதை எட்டு மணி நேரமும், விமான நிலையம் ஒரு மணி நேரமும் முடப்பட்டது. டி ஹவிலான்ட் என்ற கனடிய நிறுவனம் இந்த விமானத்தைத் தயாரித்திருந்தது. 37 பயணிகளைக் கொள்ளக்கூடிய இந்த விமானம் பொம்பாடியா நிறுவனத்திற்குச் சொந்தமானது. யுஎஸ் எயவேயிஸ் நிறுவனத்தினர் யுஎஸ் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையுடன் விபந்து நடந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து விரைவில் அறிக்கை விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.


இதே போன்ற விபத்து ஒன்று போலிஸ் எயலைன்ஸின் போயிங் 767 விமானம் ஒன்று நவம்பர் மாதம் முதலாம் திகதி 2011ல் இதே விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகளுடன் புறப்பட்டு வார்ஸோ ஸொப்பின் விமான நிலையத்தில் இறங்கும் போதும் ஏற்பட்டது. பெரிய விமானமாக இருந்தாலும் வேறு வழியின்றி பெலிலாண்டிங் முறையையே பின்பற்றினார்கள். இறங்கும்போது விமானத்தில் சிறிதளவு தீப்பிடித்தாலும் அது பரவுமுன் அணைத்து விட்டதால், பயணிகள் தப்பிக் கொண்டனர். இதற்காக அந்த விமான நிலையம் நாள் முழுவதும் மூடப்பட்டிருந்தது.

அமோனியா - Ammonia

சுற்றுச் சூழல் மாசுபடுதல்

(குரு அரவிந்தன்)

விண்வெளியில் நிலை கொண்டிருந்த சர்வதேச ஆய்வு நிலையத்தின் அமெரிக்க பகுதியில் உள்ள குழாயில் அமோனியா திரவம் கசிந்ததாக (11-05-2013) சமீபத்தில செய்திகள் வெளிவந்தன. கசிவு ஏற்பட்ட இடங்களில் வெள்ளை நிறத் துகள்கள் காணப்பட்டதாகத் தெரிய வருகின்றது. அவற்றை அப்படியே விட்டால் சூழல் மாசடையும் என்பதால் உடனடியாகவே நடவடிக்கை எடுத்தார்கள். அமெரிக்கா மற்றும் ரஸ்யா விண்வெளி நிபுணர்கள் உடனடியாகவே இதுபற்றி ஆலோசனை நடத்தினர். இரண்டு விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடந்தபடி அமெரிக்கப்பகுதியில் இருந்த கசிவை அடைத்து நிறுத்தினர். விசை இயக்க குழாயில் இருந்து அமோனியா வெளியேறியதால், இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர். அமெரிக்க விண்வெளி வீரர்களான கிறிஸ் கசிடி மற்றும் டொம் மாஷ்பேர்ன் ஆகியோர் சுமார் ஒரு மணித்தியாலத்தில் அதனைத் திருத்தியமைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்காலிகமாகக் கசிவை நிறுத்தினாலும் அதைத் தொடர்ந்தும் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பழைய பம்புக்குப் பதிலாகப் புதிய பம்ப் ஒன்றைப் பொருத்தியிருப்பதாக நாசாவின் விண்வெளித்திட்ட துணை மேலாளர் ஜோயல் மோன்டல்ப்பனோ என்பவர் தெரிவித்தார். தற்போது அமோனியா வெளியேறுவது நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஆய்வு நிலையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக இந்தக் கசிவு நின்றுவிட்டதா இல்லையா என்பதை நான்கைந்து வாரங்களின் பின்புதான் உறுதிப்படுத்த முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


விண்வெளி நிலையச் செயல்பாடுகளுக்கு மின்சாரம் அளிக்கும் சாதனங்கள், குளிரூட்டப்படுவதற்காக செலுத்தப்படும் அம்மோனியா வாயு கசிவினால், நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு ஆபத்து எதுவுமில்லை என்று நாசா முன்பே அறிவித்திருந்தது. ஆனால், சுற்றுச் சூழல் மாசுபடுவதற்கு இதுவும் ஒரு புதிய காரணமாக இருந்திருக்கின்றது. இதுவரை மனிதரால் ஏற்படுத்தப்பட்ட காரணிகளால் பூமியின் தரைப்பகுதி மட்டுமே மாசடைவதாகக் குற்றம் சாட்டினர். விமானம் பறப்பில் ஈடுபட்டதும் வானமும் மாசடையத் தொடங்கியது. இப்போது அதையும் கடந்து வானத்தின் மேற்பரப்பும் விண்கலங்களால் மாசடையத் தொடங்கியுள்ளன என்பதற்கு இது சான்றாகும். சுற்றுச் சூழல் மாசுபடுதல் என்பது எம்மைச் சுற்றியுள்ள இடங்கள் மசுபடுதலைக் குறிக்கும். இதில் காற்று வெளி மாசுபடுதல் என்பது வளிமண்டலம் மாசுபடுதலைக் குறிக்கும். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக வளிமண்டலத்தில் அதிகமாக வெளியேற்றப்படும் வாயுக்கள், வேதிப் பொருட்களின் சுழற்சி, அமில மழை, ஓசோன் செறிவு போன்றவற்றைக் குறிப்படலாம். கார்பன் மற்றும் நைட்ரஜன் போன்றவற்றின் சுழற்சியினால் எம்மைச் சுற்றி இயற்கையாகவும், செயற்கையாகவும் மாசுபடுத்தல் தினமும் நடைபெறுகின்றன. வெப்பம், மின் உற்பத்தி, வாகனப்புகை, தொழிற்சாலைப்புகை, திரவத்தின் கழிவு, எரிபொருள் உற்பத்தி, வேளாண்மை செயற்கை உரங்கள், காட்டுத்தீ, எரிமலைக் குழம்பு போன்றவை சூழல் மாசடைய முக்கிய காரணமாக அமைகின்றன.
அமோனியா கசிவு என்று அடிக்கடி சொல்கிறார்களே, அமோனியா என்றால் என்னவென்று பார்ப்பபோம். அமோனியா என்பது ஒரு நைதரசன் அணுவுடன் மூன்று  ஐதரசன் அணுக்கள் இணைந்திருக்கும் ஒரு சேர்மமாகும் (NH3). அறை வெப்ப அழுத்தநிலைகளில், அமோனியா ஒரு வளிமமாகும். காற்றைவிட இலேசான, நச்சுத்தன்மையும் அரிப்புத்தன்மையும் கொண்ட இவ்வளிமம் ஒருவகை துர்நாற்றம் கொண்டது. அமோனியா எரியும் பொழுது பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத் தீக்கொழுந்தாக எரியும். முழுக்கரைசைலாக இருக்கும்போது இதை அமோனியம் ஹைட்ராக்ஸைடு என்று அழைப்பர். அமோனியா பயிர்களுக்கு இடும் உர உற்பத்திக்குத் தேவையான ஒரு பொருளாகும். பல வருடங்களாக உலகில் அமோனியா உற்பத்தி செய்யப்படுகின்றது. உற்பத்தி செய்யும் வேதிப்பொருட்களில் மொத்த மதிப்பில் அமோனியாதான் முதல் இடம் வகிக்கின்றது. இவ்வளிமத்தை 1774 ஆம் ஆண்டு முதன் முதலாக ஒரு வளிமமாகக் கண்டுணர்ந்தவர் ஆங்கிலேய வேதியியலாளர் ஜோசப் பிரீஸ்ட்லி (Joseph Priestley) என்பவராகும்.


வளிமண்டலம் மாசடைவதற்கு சல்பர் டை ஓக்ஸைட்,(SO2) நைட்ரஜன் ஒக்ஸைட், (NOX = NO + NO2)
 மற்றும் ஓஸோன் (o3) வாயுக்கள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இத்தகைய மாசுபடுத்தலினால் மனிதரின் உடல் நலம் மட்டுமல்ல, உளநலமும் பாதிக்கப்படுகின்றது. மனிதரைப் போலவே தாவரங்களும், விலங்கினங்களும் பாதிக்கப் படுகின்றன. கண், வாய், மூக்கு போன்ற உடல் உறுப்புக்களில் எரிச்சல், நுரையீரல் பாதிப்பு, சுவாச சம்பந்தப்பட்ட அறிகுறிகள், மூச்சிரைப்பு, இருமல், சளி, தலைவலி, தலைச்சுற்றல், செயற்திறன்கள் குறைதல், தோல்புற்றுநோய் போன்ற பாதிப்புக்கள் மனிதருக்கு ஏற்படுகின்றன.


இது போன்ற அமோனியா கசிவுச் சம்பவங்கள் சமீபத்தில் பல இடங்களில் நடந்திருக்கின்றன. இலங்கையில் நீ;கொழும்பு பகுதியில் உள்ள தங்கொட்டுவ பிரதேசத்தில் கடல் மீன்களை பதனிடும் தொழிற்சாலையில் கடந்த மேமாதம்15ஆம் திகதி (15-05-2013) வாயுக் குழாய் வெடித்ததில் கசிந்த அமோனியா வாயுவை உட்சுவாசித்து கடும் சுகயீனமுற்ற பெண்ணொருவர் உயிரிழந்து உள்ளதாகத் தெரிய வருகின்றது. பாதிக்கப் பட்டவர்களில் ஆறு பேர் சுகமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாகச் செய்திகள் கூறுகின்றன.  அமோனியா நச்சு வாயுவை அதிகளவில் சுவாசித்தன் காரணமாக உடலின் உள்ளுறுப்புக்கள் பாதிக்கப்பட்டதால் அந்தப் பெண்ணின் மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை எண்ணூர் பகுதியிலும் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. சென்ற மாதம் காலை 11 மணியளவில் அந்தப் பகுதியால் சென்றவர்களுக்கு கண் எரிச்சல், லேசான மூச்சு திணறல் ஏற்பட்டது. பயந்துபோனவர்கள் வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டனர். எண்ணூர் உரதொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்து வெளியேறியதாக மக்களிடையே பயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோது, கம்பெனியில் வாயு கசிவு எதுவும் ஏற்படவில்லை, வழக்கமாக கம்பெனியில் இருந்து வெளியேறும் புகைதான் என்று கூறினர். இதுதொடர்பாக வருவாய்துறைக்கும், மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதே போல சென்னையை அடுத்த மணலி உரத் தொழிற்சாலையில் இருந்து, சில மாதங்களுக்கு முன் (13-02-2013) வெளியேறிய அமோனியா வாயுவால், அப்பகுதி மக்கள், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கே மத்திய அரசின் உரத் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. அப்பகுதியில் அதிகளவு பரவிய அமோனியா வாயுவால், கண்ணெரிச்சல் மற்றும் மூச்சுவிட முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டதாகவும், பல மணி நேரம் அமோனியா கசிவு நிலவியதால். அந்த வழியாக வாகனங்கள் மற்றும் நடந்து சென்ற பலரும் துணிகளால் முகத்தை மூடியபடியே சென்றதாகவும் தெரிகின்றது. இதேபோலத்தான் சென்ற வருடம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்கு அமோனியா அனுப்பும் குழாயில் கசிவு ஏற்பட்டதால், சூழல் மாசடையவே  அப்பகுதிப் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.


காற்று மாசடைவது என்பதே மனித உயிருக்கு மிகப் பெரிய ஆபத்தானது. எமது தினசரி வாழ்க்கையில் எம்மைச் சுற்றியுள்ள இப்படியான உயிர் கொல்லிகளுடன்தான் நாங்கள் வாழ்கிறோம். மக்கள் அப்படியான பயத்துடனே வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். இயற்கை தரும் பாதிப்பைவிட செயற்கை தரும் பாதிப்பே இன்று அதிகமாக இருக்கின்றது. நவீன உலகில் பல விதத்திலும் நன்மை தரும் இந்த வேதிப் பொருட்கள், கவலையீனம் காரணமாகச் சரியான முறையில் பாதுகாக்கப்படாவிட்டால், மனிதரின் உயிர் கொல்லிகளாகவும் மாறிவிடுகின்றன. குறிப்பாக குடிமக்கள் மத்தியில் இருக்கும் வாயுமண்டலத்தை மாசடையச் செய்யும் அணு உலைகள் போன்றவற்றின் பாதுகாப்பு மிகவும் அவசியமாகும். உயிர்ப்பலி எடுத்தபின் அதற்காக ஆயிரம் காரணங்கள் சொல்லும் இந்த உலகில், வெள்ளம் வருமுன்பே அணைகட்டுவது மிகவும் சிறந்தது. சுற்றுச் சூழல் மாசுபடுதலில் இருந்து எம்மைப் பாதுகாப்பதற்கு, தீங்கற்ற வாயுக்களிலிருந்து மாசுக்களை பிரித்தெடுத்தல், வளிமண்டலத்தில் வாயுக்கள் கலப்பதற்கு முன் மாசுக்களை மாற்றுதல், கார்பன் மோனாக்ஸைடை தக்கவைக்கும் தாவரங்களை வளர்த்தல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதால் ஓரளவு நல்ல பலன் கிடைக்கும். ஒவ்வொரு மனிதனும் புதிதாக ஒரு மரத்தை நட்டாலே இன்றைய உலகத்தை மாசடைதலில் இருந்து ஓரளவு காப்பாற்ற முடியும்.