Wednesday, June 5, 2013

Belly Landing - விமானம்

பயணிகளை நடுங்கவைத்த விமானம்

(குரு அரவிந்தன்)

விமானங்கள் எப்பொழுதும் பாதுகாப்பானவையாகத்தான் இருக்கின்றன. அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் விமானத்தில் பயணிக்கிறோம். அப்படி இருந்தும் சில சமயங்களில் எதிர்பாராத சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. பொதுவாக விமானங்கள் மேல்நோக்கி ஏறும்போது, அல்லது தரையில் இறங்கும்போதுதான் அதிக விபத்துக்கள் எற்படுகின்றன. முன்பெல்லாம் விமானம் பாதுகாப்பாகத் தரை இறங்கி ஓடுபாதையில் ஓடி நின்றதும் பயணிகள் மகிழ்ச்சியில் கரவொலி எழுப்புவார்கள். இப்பொழுது விமானப் பயணம் என்பது ஒரு சாதாரண நிகழ்வாகப் போய்விட்ட படியால் பயணிகள் அதைப் பெரிது படுத்துவதில்லை. சென்ற வாரம் (18-05-2013) நியுயோர்க்கில் உள்ள நியூஆர்க் லிபார்டி சர்வதேச விமான நிலையத்தில் சற்றும் எதிர்பாராத விபத்து ஒன்று நடந்தது. கரவொலி எழுப்பக்கூட நேரமில்லாமல் தங்கள் உயிரைக் காப்பதற்காக பாய்ந்து வெளியேற வேண்டிய நிலையில் அந்தப் பயணிகள் இருந்தார்கள்.


அமெரிக்காவில் பென்சில்பேர்னியா மாகாணத்தில் உள்ள நகரமான பிலடெல்பியா என்றால் பலருக்கும் தெரிந்ததொன்றாகும். 76சேர்ஸ் என்ற கூடைப்பந்தாட்ட அணி அங்கே பிரபலமானது. அங்கேயுள்ள விமான நிலையத்தில் இருந்து யுஎஸ் எயவேய்ஸ் விமானம் ஒன்று 34 பேருடன் நியூயோர்க் நோக்கிப் புறப்பட்டது. 31 பயணிகளும் 3 விமான சிப்பந்திகளும் இதில் இருந்தனர். இது தினசரி நடக்கும் ஒரு விமானப் பயணம்தான். ஆனாலும் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் பிளடெல்பியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் பிளைட் 4560 சிறிது நேரத்தில்  நியூஆர்க் விமான நிலையத்தைச் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் விமானம் இரவு ஒரு மணிவரை தரை இறங்கவில்லை. காரணம் தரை இறங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது விமானத்தின ஒருபக்கச்; சில்லு வெளியே வரவில்லை என்பது தெரிய வந்தது. விமானத்தின் இடது பக்கச் சில்லுத்தான் என்பதை உறுதி செய்த விமானி எவ்வளவே முறை முயற்சி செய்தும் அது பலன் தரவில்லை.


அடுத்து என்ன செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டபோது தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தோடு விமான ஓட்டி உடனே தொடர்பு கொண்டார். முயற்சிகள் பயனளிக்காமல் போகவே, பெலிலாண்டிங் (டீநடடல டயனெiபெ ) என்ற முறையைத்தான் பின்பற்ற வேண்டும் எனத் தீர்மாணிக்கப்பட்டது. வேறு வழிகள் இல்லாவிட்டால் இந்த முறையைத்தான் கடைசியில் பாவிப்பார்கள். பெலிலாண்டிங் என்பது மிகவும் ஆபத்தானது. சில்லுகள் இயங்காத நிலையில் விமானி விமானத்தை அப்படியே ஒடுபாதையில் மெதுவாக இறக்க வேண்டும். இயங்கு நிலையில் இருக்கும் சில்லுகளையும் உள்ளே எடுத்துவிடவேண்டும். வேகம் மெதுவாகவும் சீராகவும் இருக்க வேண்டும். சீராக இல்லாவிட்டால் விமானம் இறங்கும்போது எதிர்க்காற்றில் விமானம் சரிந்து போகலாம். சில விமான ஓட்டிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல் பட்டியலை பார்வையிடாமல், தினசரி நினைவில் இருப்பதை வைத்துக் கொண்டு செயற்படுவதுண்டு. அப்படியான நேரத்தில் இத்தகைய ஆபத்துக்கள் நேரலாம். பெலிலாண்டிங் செய்யும்போது, விமானத்தின் கீழ்ப்பகுதியான வயிற்றுப்பகுதி ஒடுபாதையை உராய்ந்தபடி தரையிறங்கும். அப்படி உராயும்போது தீப்பொறி எழும்பும். அப்படி தீப்பொறி எழும்போது, விமானத்தில் இருக்கும் எரிபொருள் தாங்கி விமானம் தீப்பிடிப்பதற்குக் காரணமாகும். எனவே இப்படியான சந்தர்ப்பங்களில் விமானம் தரை இறங்குவதற்குப் போதுமான எரிபொருளை வைத்துக் கொண்டு மிகுதியை வெளியேற்றிவிடுவார்கள். தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து எரிபொருளை அகற்றும்படி கட்டளை பறிறப்பிக்கப்பட்டதால், விமானி பல தடவைகள் விமான நிலையத்தைச் சுற்றி வரவேண்டியிருந்தது.


விமானம் தரை இறங்கப் போவதாக அறிவித்த பின்பும் ஏன் இறங்கவில்லை என்பதில் பயணிகளிடையே சந்தேகம் எழுந்தது. ஒவ்வொரு பயணியும் ஒவ்வொருவிதமான கற்பனையில் இருக்க, விமான ஓட்டி தனது அறிவித்தலில் விமானத்திற்கு என்ன நடந்தது என்பதைச் சொன்னார். இரண்டு விமான ஓட்டிகளும், ஒரு பெண் உதவியாளரும் அந்த விமானத்தில் கடமையில் இருந்தனர். பெலிலாண்டிங் செய்வதாக முடிவெடுத்தபின் பயணிகளுக்கு அதைப்பற்றி அறிவித்தல் கொடுக்கப்பட்டது. ஆனாலும் பயப்படவேண்டாம், பாதுகாப்பான தரை இறக்கத்திற்கு நாங்கள் எல்லோரும் பிரார்த்திப்போம் என்று அவர் பயணிகளிடம் அறிவித்தார். என்ன நடக்கப்போகிறதோ என்ற பயத்தில் பயணிகள் முகத்தில் மாற்றங்கள் தெரிந்தன. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தரை இறக்கத்திற்காகக் காத்திருந்தனர்.


பிளைட் இல.4560ன் அவசர நிலை அறிவிக்கப்பட்டதும், உடனடியாகவே விமான நிலையம் முடப்பட்டு, இறங்கு பாதை ஒன்று இதற்காக ஒதுக்கப்பட்டது. காரணம் தெரியாமல் விமான நிலையத்தில் நின்ற ஏனைய பயணிகள் கலவரமானார்கள். மற்றொரு பக்கம் செய்தி தொடர்பு சாதனங்கள் விமான நிலையம் நோக்கி அவசரமாகப் படையெடுத்தனர். அவசர நடவடிக்கை காரணமாக தீயணைக்கும் படையினரும், அம்புலன்ஸ் சேவைப்பிரிவினரும் தயார் நிலையில் நின்றனர். விமானம் தரையில் உராயந்து கொண்டு செல்கையில் தீயணைக்கும் பிரிவினர் ஓடுபாதையில் தண்ணீரைப் பாய்ச்சி தீப்பொறி கிளம்பாது செய்தனர். விமானம் நின்றதும் பயணிகள் உடனடியாகவே பேருந்தில் ஏற்றப்பட்டு விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். பயணிகள் யாரும் காயமடைந்ததாகத் தெரியவில்லை. உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே சிகிட்சை அளிக்க்ப்பட்டது. விமானம் இறங்கும்போது விமானத்தின் செட்டைகளைச் சமநிலையில் வைத்திருந்த விமானியின் திறமையால், தகுந்த நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் சிறந்த முடிவெடுத்ததால் 34 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. விபத்து என்பது எங்கே, எப்போ, எப்டி நடக்கும் என்பது தெரியாதது. இந்த வருடத்தில் மட்டும் அந்த விமான நிலையத்தில் நடந்த மூன்றாவது விமான விபத்து இதுவாகும்.


நியூஆர்க் விமான நிலையம் நியுயோர்க் நகரில் இருந்து பதினைந்து மைல் தென்மேற்கே நியூஜேர்சியில் இருக்கின்றது. 1928ம் ஆண்டு அக்டோபர் மாதம் 68 ஏக்கர் காணியில் முதன் முதலாக இந்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. நியூயேர்க் மாகாணத்தில் உள்ள மூன்று பெரிய விமான நிலையங்களில் இது இரண்டாவது இடத்தை வகிக்கிறது. முதலாவதாக ஜே.எப்.கென்னடி விமான நிலையமும், இரண்டாவதாக நியூஆர்க் விமான நிலையமும், மூன்றாவதாக லாகுவாடியா விமான நிலையமும் இருக்கின்றன.  நியூயோர்க்கில் உள்ள இந்த விமான நிலையங்களுக்கூடாக முறையே 49.3 மில்லியன், 34.1 மில்லியன், 25.7 மில்லியன் பயணிகள் 2012ம் ஆண்டு பயணம் செய்திருக்கிறார்கள்.
இநத விபத்துக் காரணமாக விமான ஓடுபாதை எட்டு மணி நேரமும், விமான நிலையம் ஒரு மணி நேரமும் முடப்பட்டது. டி ஹவிலான்ட் என்ற கனடிய நிறுவனம் இந்த விமானத்தைத் தயாரித்திருந்தது. 37 பயணிகளைக் கொள்ளக்கூடிய இந்த விமானம் பொம்பாடியா நிறுவனத்திற்குச் சொந்தமானது. யுஎஸ் எயவேயிஸ் நிறுவனத்தினர் யுஎஸ் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையுடன் விபந்து நடந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து விரைவில் அறிக்கை விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.


இதே போன்ற விபத்து ஒன்று போலிஸ் எயலைன்ஸின் போயிங் 767 விமானம் ஒன்று நவம்பர் மாதம் முதலாம் திகதி 2011ல் இதே விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகளுடன் புறப்பட்டு வார்ஸோ ஸொப்பின் விமான நிலையத்தில் இறங்கும் போதும் ஏற்பட்டது. பெரிய விமானமாக இருந்தாலும் வேறு வழியின்றி பெலிலாண்டிங் முறையையே பின்பற்றினார்கள். இறங்கும்போது விமானத்தில் சிறிதளவு தீப்பிடித்தாலும் அது பரவுமுன் அணைத்து விட்டதால், பயணிகள் தப்பிக் கொண்டனர். இதற்காக அந்த விமான நிலையம் நாள் முழுவதும் மூடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment