Saturday, July 20, 2013

சூழல் மாசடைதல்


சூழல் மாசடைதல் 

View Space station-2013.bmp in slide show

குரு அரவிந்தன்

விண்வெளியில் நிலை கொண்டிருந்த சர்வதேச ஆய்வு நிலையத்தின் அமெரிக்க பகுதியில் உள்ள குழாயில் அமோனியா திரவம் கசிந்ததாக (11-05-2013) சமீபத்தில செய்திகள் வெளிவந்தன. கசிவு ஏற்பட்ட இடங்களில் வெள்ளை நிறத் துகள்கள் காணப்பட்டதாகத் தெரிய வருகின்றது. அவற்றை அப்படியே விட்டால் சூழல் மாசடையும் என்பதால் உடனடியாகவே நடவடிக்கை எடுத்தார்கள். அமெரிக்கா மற்றும் ரஸ்யா விண்வெளி நிபுணர்கள் உடனடியாகவே இதுபற்றி ஆலோசனை நடத்தினர். இரண்டு விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடந்தபடி அமெரிக்கப்பகுதியில் இருந்த கசிவை அடைத்து நிறுத்தினர். விசை இயக்க குழாயில் இருந்து அமோனியா வெளியேறியதால், இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர். அமெரிக்க விண்வெளி வீரர்களான கிறிஸ் கசிடி மற்றும் டொம் மாஷ்பேர்ன் ஆகியோர் சுமார் ஒரு மணித்தியாலத்தில் அதனைத் திருத்தியமைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்காலிகமாகக் கசிவை நிறுத்தினாலும் அதைத் தொடர்ந்தும் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பழைய பம்புக்குப் பதிலாகப் புதிய பம்ப் ஒன்றைப் பொருத்தியிருப்பதாக நாசாவின் விண்வெளித்திட்ட துணை மேலாளர் ஜோயல் மோன்டல்ப்பனோ என்பவர் தெரிவித்தார். தற்போது அமோனியா வெளியேறுவது நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஆய்வு நிலையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக இந்தக் கசிவு நின்றுவிட்டதா இல்லையா என்பதை நான்கைந்து வாரங்களின் பின்புதான் உறுதிப்படுத்த முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


விண்வெளி நிலையச் செயல்பாடுகளுக்கு மின்சாரம் அளிக்கும் சாதனங்கள், குளிரூட்டப்படுவதற்காக செலுத்தப்படும் அம்மோனியா வாயு கசிவினால், நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு ஆபத்து எதுவுமில்லை என்று நாசா முன்பே அறிவித்திருந்தது. ஆனால், சுற்றுச் சூழல் மாசுபடுவதற்கு இதுவும் ஒரு புதிய காரணமாக இருந்திருக்கின்றது. இதுவரை மனிதரால் ஏற்படுத்தப்பட்ட காரணிகளால் பூமியின் தரைப்பகுதி மட்டுமே மாசடைவதாகக் குற்றம் சாட்டினர். விமானம் பறப்பில் ஈடுபட்டதும் வானமும் மாசடையத் தொடங்கியது. இப்போது அதையும் கடந்து வானத்தின் மேற்பரப்பும் விண்கலங்களால் மாசடையத் தொடங்கியுள்ளன என்பதற்கு இது சான்றாகும். சுற்றுச் சூழல் மாசுபடுதல் என்பது எம்மைச் சுற்றியுள்ள இடங்கள் மசுபடுதலைக் குறிக்கும். இதில் காற்று வெளி மாசுபடுதல் என்பது வளிமண்டலம் மாசுபடுதலைக் குறிக்கும். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக வளிமண்டலத்தில் அதிகமாக வெளியேற்றப்படும் வாயுக்கள், வேதிப் பொருட்களின் சுழற்சி, அமில மழை, ஓசோன் செறிவு போன்றவற்றைக் குறிப்படலாம். கார்பன் மற்றும் நைட்ரஜன் போன்றவற்றின் சுழற்சியினால் எம்மைச் சுற்றி இயற்கையாகவும், செயற்கையாகவும் மாசுபடுத்தல் தினமும் நடைபெறுகின்றன. வெப்பம், மின் உற்பத்தி, வாகனப்புகை, தொழிற்சாலைப்புகை, திரவத்தின் கழிவு, எரிபொருள் உற்பத்தி, வேளாண்மை செயற்கை உரங்கள், காட்டுத்தீ, எரிமலைக் குழம்பு போன்றவை சூழல் மாசடைய முக்கிய காரணமாக அமைகின்றன.


அமோனியா கசிவு என்று அடிக்கடி சொல்கிறார்களே, அமோனியா என்றால் என்னவென்று பார்ப்பபோம். அமோனியா என்பது ஒரு நைதரசன் அணுவுடன் மூன்று  ஐதரசன் அணுக்கள் இணைந்திருக்கும் ஒரு சேர்மமாகும் (NH3). அறை வெப்ப அழுத்தநிலைகளில், அமோனியா ஒரு வளிமமாகும். காற்றைவிட இலேசான, நச்சுத்தன்மையும் அரிப்புத்தன்மையும் கொண்ட இவ்வளிமம் ஒருவகை துர்நாற்றம் கொண்டது. அமோனியா எரியும் பொழுது பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத் தீக்கொழுந்தாக எரியும். முழுக்கரைசைலாக இருக்கும்போது இதை அமோனியம் ஹைட்ராக்ஸைடு என்று அழைப்பர். அமோனியா பயிர்களுக்கு இடும் உர உற்பத்திக்குத் தேவையான ஒரு பொருளாகும். பல வருடங்களாக உலகில் அமோனியா உற்பத்தி செய்யப்படுகின்றது. உற்பத்தி செய்யும் வேதிப்பொருட்களில் மொத்த மதிப்பில் அமோனியாதான் முதல் இடம் வகிக்கின்றது. இவ்வளிமத்தை 1774 ஆம் ஆண்டு முதன் முதலாக ஒரு வளிமமாகக் கண்டுணர்ந்தவர் ஆங்கிலேய வேதியியலாளர் ஜோசப் பிரீஸ்ட்லி ((Joseph Priestley) என்பவராகும்.
வளிமண்டலம் மாசடைவதற்கு சல்பர் டை ஓக்ஸைட்,(SO2) நைட்ரஜன் ஒக்ஸைட், (NOX = NO + NO2) மற்றும் ஓஸோன் (o3) வாயுக்கள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இத்தகைய மாசுபடுத்தலினால் மனிதரின் உடல் நலம் மட்டுமல்ல, உளநலமும் பாதிக்கப்படுகின்றது. மனிதரைப் போலவே தாவரங்களும், விலங்கினங்களும் பாதிக்கப் படுகின்றன. கண், வாய், மூக்கு போன்ற உடல் உறுப்புக்களில் எரிச்சல், நுரையீரல் பாதிப்பு, சுவாச சம்பந்தப்பட்ட அறிகுறிகள், மூச்சிரைப்பு, இருமல், சளி, தலைவலி, தலைச்சுற்றல், செயற்திறன்கள் குறைதல், தோல்புற்றுநோய் போன்ற பாதிப்புக்கள் மனிதருக்கு ஏற்படுகின்றன.


இது போன்ற அமோனியா கசிவுச் சம்பவங்கள் சமீபத்தில் பல இடங்களில் நடந்திருக்கின்றன. இலங்கையில் நீ;கொழும்பு பகுதியில் உள்ள தங்கொட்டுவ பிரதேசத்தில் கடல் மீன்களை பதனிடும் தொழிற்சாலையில் கடந்த மேமாதம்15ஆம் திகதி (15-05-2013) வாயுக் குழாய் வெடித்ததில் கசிந்த அமோனியா வாயுவை உட்சுவாசித்து கடும் சுகயீனமுற்ற பெண்ணொருவர் உயிரிழந்து உள்ளதாகத் தெரிய வருகின்றது. பாதிக்கப் பட்டவர்களில் ஆறு பேர் சுகமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாகச் செய்திகள் கூறுகின்றன.  அமோனியா நச்சு வாயுவை அதிகளவில் சுவாசித்தன் காரணமாக உடலின் உள்ளுறுப்புக்கள் பாதிக்கப்பட்டதால் அந்தப் பெண்ணின் மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சென்னை எண்ணூர் பகுதியிலும் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. சென்ற மாதம் காலை 11 மணியளவில் அந்தப் பகுதியால் சென்றவர்களுக்கு கண் எரிச்சல், லேசான மூச்சு திணறல் ஏற்பட்டது. பயந்துபோனவர்கள் வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டனர். எண்ணூர் உரதொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்து வெளியேறியதாக மக்களிடையே பயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோது, கம்பெனியில் வாயு கசிவு எதுவும் ஏற்படவில்லை, வழக்கமாக கம்பெனியில் இருந்து வெளியேறும் புகைதான் என்று கூறினர். இதுதொடர்பாக வருவாய்துறைக்கும், மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதே போல சென்னையை அடுத்த மணலி உரத் தொழிற்சாலையில் இருந்து, சில மாதங்களுக்கு முன் (13-02-2013) வெளியேறிய அமோனியா வாயுவால், அப்பகுதி மக்கள், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கே மத்திய அரசின் உரத் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. அப்பகுதியில் அதிகளவு பரவிய அமோனியா வாயுவால், கண்ணெரிச்சல் மற்றும் மூச்சுவிட முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டதாகவும், பல மணி நேரம் அமோனியா கசிவு நிலவியதால். அந்த வழியாக வாகனங்கள் மற்றும் நடந்து சென்ற பலரும் துணிகளால் முகத்தை மூடியபடியே சென்றதாகவும் தெரிகின்றது. இதேபோலத்தான் சென்ற வருடம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்கு அமோனியா அனுப்பும் குழாயில் கசிவு ஏற்பட்டதால், சூழல் மாசடையவே  அப்பகுதிப் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.


காற்று மாசடைவது என்பதே மனித உயிருக்கு மிகப் பெரிய ஆபத்தானது. எமது தினசரி வாழ்க்கையில் எம்மைச் சுற்றியுள்ள இப்படியான உயிர் கொல்லிகளுடன்தான் நாங்கள் வாழ்கிறோம். மக்கள் அப்படியான பயத்துடனே வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். இயற்கை தரும் பாதிப்பைவிட செயற்கை தரும் பாதிப்பே இன்று அதிகமாக இருக்கின்றது. நவீன உலகில் பல விதத்திலும் நன்மை தரும் இந்த வேதிப் பொருட்கள், கவலையீனம் காரணமாகச் சரியான முறையில் பாதுகாக்கப்படாவிட்டால், மனிதரின் உயிர் கொல்லிகளாகவும் மாறிவிடுகின்றன. குறிப்பாக குடிமக்கள் மத்தியில் இருக்கும் வாயுமண்டலத்தை மாசடையச் செய்யும் அணு உலைகள் போன்றவற்றின் பாதுகாப்பு மிகவும் அவசியமாகும். உயிர்ப்பலி எடுத்தபின் அதற்காக ஆயிரம் காரணங்கள் சொல்லும் இந்த உலகில், வெள்ளம் வருமுன்பே அணைகட்டுவது மிகவும் சிறந்தது. சுற்றுச் சூழல் மாசுபடுதலில் இருந்து எம்மைப் பாதுகாப்பதற்கு, தீங்கற்ற வாயுக்களிலிருந்து மாசுக்களை பிரித்தெடுத்தல், வளிமண்டலத்தில் வாயுக்கள் கலப்பதற்கு முன் மாசுக்களை மாற்றுதல், கார்பன் மோனாக்ஸைடை தக்கவைக்கும் தாவரங்களை வளர்த்தல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதால் ஓரளவு நல்ல பலன் கிடைக்கும். ஒவ்வொரு மனிதனும் புதிதாக ஒரு மரத்தை நட்டாலே இன்றைய உலகத்தை மாசடைதலில் இருந்து ஓரளவு காப்பாற்ற முடியும்.

No comments:

Post a Comment