Sunday, July 14, 2013

அனுபவம் புதுமை..! பயணக் கட்டுரை

அனுபவம் புதுமை..!

குரு அரவிந்தன்

(உதயன் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள்  விடுமுறையில் தாயகம் சென்று வந்த தனது அனுபவங்களை உதயன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்.)

தாயகம் நோக்கி… (1)

கனடாவில் பங்குனி மாதத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை கிடைக்கும். இதை மார்ச் பிறேக் என்று சொல்வார்கள். எனவே அதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். அதே நேரம் எனது காலம்சென்ற மூத்த சகோதரர் அமரர் திரு. கு. சிவகணநாதனின் ஞாபகர்த்தமாக மார்ச்மாதம் கொழும்பில் நடைபெற இருக்கும் விருது வழங்கும் விழாவில் பங்குபற்ற முடியமா என்று எனது அண்ணாவின் மூத்த மகன் டாக்டர். எஸ். அருள்நாதன் செய்தி அனுப்பியிருந்தார். வேலை பார்க்கும் இடத்திலும் போதிய விடுமுறை கிடைத்தது. எனவே குடும்பத்தோடு தாயகத்திற்கு சென்றுவர விரும்பினேன்.


கனடா, ரொறன்ரோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எங்கள் பயணம் ஆரம்பமாகியது. நியூஆர்க், லண்டன் வழியாக சென்ற விமானம் அதிகாலையில் கொழும்பில் இருந்து 22மைல்கள் தூரத்திற்கு அப்பால் வடக்கே உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில்; தரை இறங்கியது. பழைய கட்டுநாயக விமானநிலையமே இப்படியாகப் பெயர் மாற்றப்பட்டிருந்தது. 1967ம் ஆண்டிலிருந்து இந்த விமான நிலையம் பாவனையில் இருக்கிறது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அண்ணாவின் மகன் அருள் காத்திருந்தார். அவருடன் அவரது வண்டியில் சென்றோம். கொழும்பில் உள்ள அவரது வீட்டில் தங்குமிட வசதிகளை எங்களுக்குச் செய்து கொடுத்திருந்தார். மாலை ஆறு மணிக்கு விருது வழங்கும் விழா ஆரம்பமாகிறது என்பதால் பிரயாணக் களைப்புத்தீர உடனே நாங்கள் நல்ல தூக்கம் போட்டோம்.

மாலை ஐந்தரை மணியளவில் எல்லோரும் வெளிக்கிட்டு கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்த இலங்கை வங்கி தலைமைக் காரியாலயக் கட்டிடத்தை அடைந்தோம். அங்கேதான் இலங்கை வங்கியில் எனது மூத்த சகோதரர் அமரர் சிவகணநாதன் அதியுயர் முகாமையாளராகக் (யுபுஆ) கடமையாற்றினார். அங்கே உள்ள பார்வையாளர் மண்டபத்தில்தான் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இலங்கையின் எல்லாப்பாகத்தில் இருந்தும் வங்கிப்பரீட்சை எழுதி அதில் அதிதிறமையுடன் சித்தி எய்திய சுமார் நாற்பது மாணவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. எல்லா வங்கிகளில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் வந்து கலந்து கொண்டனர். இதைவிட ஓய்வு பெற்ற வங்கி அனுபவசாலிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர். அந்த நிகழ்வில் கலந்து கொண்டதில், வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இருந்து விருதுபெற வந்திருந்த தமிழ் பிள்ளைகளுடன் கதைத்ததில் மகிழ்ச்சியாக இருந்தது.


மறுநாள் எங்கள் பயணம் யாழ்ப்பாணம் நோக்கியதாக இருந்தது. பகலில் கொழும்பில் உள்ள உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றோம். இரவு 9மணியளவில் வெள்ளவத்தையில் இருந்து புறப்படும் சொகுசு பஸ்வண்டிகள் மறுநாள் அதிகாலை 5மணியளவில் யாழ்ப்பாணம் பேருந்து வண்டி நிலையத்தை அடைகின்றன. எனது ஒன்றுவிட்ட சகோதரர் பிரேம்குமார் பிரயாணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். எங்களை அழைத்துச் செல்ல யாழ்ப்பாணத்திலும் ஒரு நண்பரை ஒழுங்கு செய்திருந்தார். இரவு உணவு உண்பதற்காக ஒரு இடத்திலும் அதன் பின் முருகண்டியிலும் வண்டியை நிறுத்தினார்கள். ஓமந்தை இராணுவத் தடை முகாமில் இராணுவத்தினர் வண்டியில் ஏறி ஒவ்வொருவராக அடையாள அட்டையைப் பார்த்தார்கள். பாஸ்போட் உள்ளவர்களை கீழே இறங்கிப் பதிவு செய்யச் சொன்னார்கள். நான் மட்டும் தனியே இறங்கி குடும்பத்தினரின் பாஸ்போட்டையும் காட்டினேன். பதிவு செய்யும்போது, என்ன தொழில் பார்ப்பதா வினாவினார்கள், கணக்காளர் என்றேன். ஒருவேளை ரிப்போட்டராக இருந்திருந்தால் மேலும் கேள்விகள் கேட்டிருக்கலாம். வாய் திறக்காமல் இருந்தால் நல்லது என்று ஏற்கனவே புத்திமதி சொல்லியிருந்தார்கள். வண்டிக்குள் யாருமே கதைத்துச் சிரித்தாகத் தெரியவில்லை. நீறுபூத்த நெருப்பு என்பார்களே அதுபோல, ஏதோ ஒரு மௌனம் வண்டியில் ஏறிய நேரத்திலிருந்தே தொடர்ந்து கொண்டிருந்தது.  ஒருவேளை எனக்குப் புத்திமதி சொன்னதுபோலப் பயணிகள் எல்லோருக்கும் உறவினர்கள் சொல்லியிருப்பார்களோ தெரியவில்லை. இப்போது ஆனையிறவு தடைமுகாமிலும் சோதிப்பதாகத் தெரிய வருகின்றது. ஆனையிறவைக் கடந்ததும் எங்ளை அழைக்க வருபவருக்குச் செல்பேசியில் தகவல் தெரிவித்தேன். நாங்கள் வண்டியை விட்டு இறங்கியபோது, அவர் எங்களுக்காகப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.


நான் பிறந்த, எனது தாயாரின் ஊரான சண்டிலிப்பாய்க்குச் சென்றேன். காலநிலை மிகவும் சீராக இருந்தது. சண்டிலிப்பாய் வயலில் அருவி வெட்டினார்கள். நெற்கதிர் அறுவடை செய்வதையும், கதிரடிப்பதையும், சூடு மிதிப்பதையும், குடும்பத்தினர் பார்க்க ஆசைப்பட்டதால் அவர்களையும் வயலுக்கு அழைத்துச் சென்று காட்டினேன். முதல் வாரம் மழை பெய்திருந்ததால் வயல் நடுவே இருக்கும் பூவல் குளத்தில் தண்ணீர் நிறைந்திருந்தது. சின்ன வயதிலே வன்னியசிங்கம் அங்கிளின் மேற்பார்வையில் ஒல்லித் தேங்காய் கட்டிச் சிறுவர்களாகிய நாங்கள் நீந்திப் பழகிய ஞாபகம் மெல்ல எழுந்தது. அந்த நாட்களில் வயல் கிணறுகளும், பூவல் கேணியும், கீரிமலைக் கேணியுமே எங்கள் நீச்சல் தடாகமாக இருந்தது.


கோயில்கள், உறவினர் வீடுகள் என்று சண்டிலிப்பாய், கீரிமலை, மாவிட்டபுரம், தெல்லிப்பளை, அளவெட்டி என்று அன்றைய பொழுது ஊர்ப்பயணத்தில் போனது. நான் வளர்ந்த எனது தந்தையின் இடமான மாவிட்டபுரம் இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் வந்ததால் அங்கே போக முடியவில்லை. அப்படிப் போவதானாலும் இராணுவத்திடம் அனுமதி பெற்று அவர்களுடன்தான் சென்று பார்க்க முடியும் என்று நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்தது. திட்டமிட்டபடி எங்கள் பயணம் அமைந்ததால் அதற்காக எனது நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. ஏற்கனவே அதிபர் கனகசபாபதி அவர்கள் அங்கே சென்று பார்த்தபோது வீடு இருந்த அடையாளத்திற்குப் பற்றைகளுக்கு நடுவே இடிந்த சுவர்களைத் தவிர வேறு எதுவம் இருக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். நெஞ்சு வலித்தது, சீமெந்துத் தொழிற்சாலையடியில் நின்று அந்தத் திசைநோக்கிக் கும்பிட்டேன். என்னை வாழவைத்த, நான் வணக்கும் குலதெய்வம் குருநாதசுவாமி கோயிலும், ஆரம்பகல்வி கற்ற நடேஸ்வராக் கல்லூரியும், என் மூதாதையர் வாழ்ந்த இடங்களும் அந்தத் திசையில்தான் இருந்தன.

 தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரிக்குச் சென்றபோது மீண்டும் கல்லூரிக் கடந்தகாலம் நினைவில் வந்தது. ஒவ்வொரு இடத்தில் கால் பதிந்த போதும், என்கூடப்படித்த சகமாணவ,மாணவிகள், கற்பித்த ஆசியர்கள் எல்லோரும் நினைவில் வந்தனர். அமரர் அதிபர் ஜெயரட்ணம் அவர்கள் கையில் பிரம்போடு கல்லூரியில் உலாவரும் காட்சி அப்படியே மனதில் பதிந்து நின்றது. புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வெளியே வரும்போது என்கண்களில் நீர் பனித்ததைப் பார்த்து என்மகன் அதிசயித்தார். என் கண்களில் நீர் பனித்தது ஏன் என்பது கனடாவில் கல்விகற்ற அவருக்குப் புரிந்திருக்க நியாயமில்லை.

அன்று முழுவதும் நாங்கள் பரம்பரையாக வாழ்ந்த மண் பறிபோகிறதே என்ற ஏக்கம் எனக்குள் இருந்தது. இலங்கை காணி அமைச்சின் 1964ம் ஆண்டின் 28ம் இலக்க காணி எடுத்தல் திருத்தச் சட்டத்தின்படி காணி அமைச்சின் உத்தரவின்படி வலிகாமம் வடக்கில் தமிழர்கள் பாரம்பரியமாக தொன்றுதொட்டு வாழ்ந்த காணிகள் முதற்கட்ட நடவடிக்கையாக அரசதேவைக்காக சுவீகரிக்கப்பட இருப்பதாச்செய்திகள் தெரிவித்தன. இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் முதலில் காங்கேசன்துறை மேற்கு(ஜே233), காங்கேநச்துறை மத்தி(ஜே234), வீமன்காமம் தெற்கு(ஜே237), தையிட்டி மேற்கு(ஜே250), பலாலி தெற்கு(ஜே256), ஒட்டகப்புலம்(ஜே252), வளலாய்(ஜே264) ஆகிய பகுதிகள் முதலில் சுவீகரிக்கப்பட இருபதாகத் தெரிவித்தார்கள். பொதுமக்கள் செல்ல முடியாத இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இவை அமைந்திருக்கின்றன. பாதுகாப்பு படையணித் தலைமையகம் அமைப்பதற்காகவே இந்தக் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகத் தெரியவருகின்றது. பலாலி இராணுவ முகாமிலிருந்து காங்கேசந்துறை துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் இந் முதற்கட்ட அபகரிப்புக்குள் அடங்கும். எதிர்காலச் சந்ததியினர் இந்த இடங்கள் எல்லாம் ஈழத்தமிழர் தொன்றுதொட்டு வாழ்ந்த பாரம்பரிய பிரதேசங்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதால் இதை இங்கே ஆவணப்படுத்த விரும்புகின்றேன்.

தாயகம் நோக்கி… (2)

நண்பரின் மோட்டார் வண்டியில் சண்டிலிப்பாயிலிருந்து முதலில் கீரிமலைக்குச் சென்றிருந்தேன். போகும் வழியெல்லாம் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. அன்று சிவராத்திரி என்பதால் கேணிக்கு அருகே இருந்த மண்டபத்தில் சுவாமி தரிசனம் கிடைத்தது. சிலர் கேணியிலும், வேறுசிலர் கடலிலும் நீராடிக் கொண்டிருந்தனர். கரையோரத்தில் பொலீசார், சீருடை அணிந்த கடற்படையினரின் நடமாட்டம் இருந்தது. சிவராத்திரி என்ற எந்த ஒரு கலகலப்பும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஒலிபெருக்கியில் பக்திப் பாடல்கள் போய்க்கொண்டிருந்தன. ஒருவர், கேணிக்கருகே இருந்த சிறிய ஆலய புணருத்தாரணத்திற்குப் பணம் கேட்டார். கையில் இருந்ததைக் கொடுத்தேன். மாருதப்புரவீகவல்லியின் பெரிய உருவச்சிலையை அங்கேதான் முதலில் பார்த்தேன்.


நாங்கள் சிறுவர்களாய் படிக்கும் காலத்தில் சிவராத்திரி என்றால் கீரிமலை ஒரே கலகலப்பாக இருக்கும். பாடசாலையில் விடுமுறை கிடைக்கும். காங்கேசந்துறையில் சிவராத்திரி இரவில் நடேஸ்வராக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வி.வி. வைரமுத்துவின் நாடகம் விடிய விடிய நடைபெறும். அதே சமயம் காங்கேசந்துறை – யாழ்ப்பாணம் வீதியில் காங்கேசந்துறைச் சந்திக்கு அருகாமையில் இருந்த இராஜநாயகி படமாளிகையிலும், பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள யாழ் படமாளிகையிலும் அன்று இரவு மூன்று காட்சிகள் நடைபெறுவதுண்டு. அங்கே சிவாஜியின் படமென்றால் இங்கே எம்.ஜி. ஆர் படமும், இங்கே ரஜனியின் படம் என்றால் அங்கே கமலின் படம் நடக்கும். எனவே சிறிது நேரம் விவியின் மயானகாண்டம், அதன் பிறகு மாறிமாறி வித்தியாசமான இரண்டு திரைப்படங்கள், விடியும்போது சைக்கிளில் கீரிமலை நோக்கிப் பயணம் தொடரும். சடையம்மா மடத்தடியில் செல்லும்போது கொஞ்சம் ஏற்றம் இறக்கத்தில் கஷ்டப்பட்டாலும், கூட்டமாகச் செல்வதால் சைக்கிள் ஓடுவதில் அந்தக் கஷ்டம் தெரிவதில்லை. காங்கேசந்துறை அரசினர் மருத்துவமனை அந்த நாட்களில் காங்கேசந்துறை – கீரிமலை வீதியில், கடற்கரை ஓரமாகத்தான் அமைந்திருந்தது. பிரித்தானிய இராணுவம் இரண்டாம் உலகமகாயுத்தத்தின்போது முகாமாகப் பாவித்த கட்டிடங்களைத்தான் திருத்தங்கள் செய்து மருத்துவ மனையாகப் பாவித்தார்களாம். நோயாளர்களின் ஆரோக்கியம் கருதி, தெற்கேயிருந்த சீமெந்து தொழிற்சாலையில் இருந்து காற்றில் பரவும் தூசிகாரணமாக இந்த மருத்துவமனை தெல்லிப்பளைக்கு இடமாற்றம் பெற்றது. அதை ஓரளவு நிவர்த்திசெய்ய தனியார் மருத்துவ மனையான டாக்டர் இராஜேந்திராவின் மருத்துவமனை புதிதாக யாழ்ப்பாணம் வீதியில் அமைந்து சுற்று வட்டத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ சேவையாற்றியது. இன்று இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இந்த இடங்கள் எல்லாம் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுவிட்டன.


தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினர் கீரிமலையில் ஒரு மண்டபம் அமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள். அதன் முன்னால், கீரிமலைக் கேணிக்குச் செல்லும் வழியில் இருந்த சிறிய இந்துக் கோயில்கள் அறைகுறையாக இடிக்கப்பட்ட நிலையில் இருந்தன. காணியைத் துப்பரவு செய்யும் இயந்திரங்களையும் அங்கே காணமுடிந்தது. இனி வருங்காலங்களில் அந்தக் கோயில்கள் புனருத்தாரணம் செய்யப்படுமா, அல்லது இடித்து அழிக்கப்படுமா என்பது தெரியவில்லை. அதனருகே சந்தியில் அரசமரமொன்று தனித்து நிற்பதும் என் கண்ணில் பட்டது. இந்தக் காணிகளை இராணுவம் பொறுப்பேற்க இருப்பதாகவும் தற்போது அறிவித்தல் வந்திருக்கிறது. சீமெந்துச் தொழிற்சாலை திரும்பவும் அமைக்கப் பெற்றால் அங்கே தொழில் புரிவதற்காகப் பெரும்பான்மைய இனத்தவர் இந்த இடங்களில் வந்து குடியேறச் சந்தர்ப்பமும் உண்டு. உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்தான் நான் ஆரம்பக்கல்வி கற்ற நடேஸ்வராக் கல்லூரியும் இருந்தது. நடேஸ்வரா கனிஷ்ட பாடசாலையில்தான் எனது தந்தையார் அதிபராகக் கடமையாற்றினார். இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்த இந்தக் கல்லூரி கட்டிடத்தின் ஒரு பகுதி பின்நாளில் சித்திரவதை முகாமாக மாற்றப்பட்டிருந்தது. அதற்கு முன்பாகவே நடேஸ்வராக்கல்லூரி மருதனாமடம் நோக்கி நகர்ந்துவிட்டது.


கீரிமலை – மாவிட்டபுரம் வீதிவழியாக மாவிட்புரம் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்றேன். ஜனாதிபதி குடும்பத்தினர் அடிக்கடி கீரிமலைக்கும், நல்லூருக்கும் செல்வதால் இந்த இரண்டு கோயில்களும் மட்டுமல்ல, வீதிகளும் நல்ல நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. அரச பார்வைபட்ட நல்லூர், கீரிமலை போலல்லாது, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் ஏழ்மை தெரிந்தது. உள்ளே இரண்டு மூன்று பக்தர்களை மட்டும் காணமுடிந்தது. நல்லூரிலும் கீரிமலையிலும் கோயிலுக்குள் செல்லும் ஆண்களை மேலாடையை அகற்றச் சொன்னார்கள். கீரிமலை நகுலேஸ்வரர் கோயிலில் பொலீஸார் ஒருவர் முழுசீருடையுடன், பாதவணி அணிந்தபடி உள்ளே நிற்பதைக் கவனித்தேன். சட்டையை இடுப்பிலே கட்டியபடி பனியனோடு அங்கே நின்ற ஒருவரை ஐயர் பனியனை அகற்றும்படி கட்டாயப்படுத்தினார். சீருடையோடு நின்ற பொலீஸார் அந்தப் பக்தரை முறைத்துப் பார்க்கவே அந்தப் பக்தர் பனியனை அகற்ற விரும்பாது தானாகவே வெளியேறிவிட்டார். உள்ளே புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டிருந்ததால் அந்தக் காட்சியைப் படம் பிடிக்கமுடியவில்லை.


மாவிடட்புரம் கந்தசுவாமி கோயிலைப்பற்றிக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். காங்கேசந்துறை, கீரிமலை, மாவிட்டபுரம் ஆகியன அடங்கிய பகுதியை கோயிற்கடவை என்றும் அழைப்பர். காங்கேசன்துறை வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கே சுமார் ஒன்பது மைல்கள் தொலைவிலும், காங்கேசன்துறை சந்தியில் இருந்து தெற்கே சுமார் ஒரு மைல் தொலைவிலும் மாவிட்டபுரம் அமைந்துள்ளது. மாவிட்டபுரத்திற்கு வடக்கு எல்லையில் காங்கேசன்துறையும், மேற்கு எல்லையில் கொல்லங்கலட்டியும், தெற்கு எல்லையில் தெல்லிப்பழையும் கிழக்கில் வீமன்காமமும் உள்ளன. இங்கேதான் மிகவும் பழமை வாய்ந்த புகழ் பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் உள்ளது.

இக் கோயிலின் வரலாறும், இவ்வூருக்குப் பெயர் வந்த வரலாறும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கூறப்படுகின்றன. சோழநாட்டின் கட்டுப்பாட்டில் இலங்கை இருந்தபோது, சோழநாட்டு இளவரசியான மாருதப்புரவீகவல்லிக்கு குதிரைமுக நோய் எனப்படும் நோய் ஏற்பட்டதாகவும் அதனால் யாழ்ப்பாணத்துக்கு வந்து நகுலமுனிவரிடம் ஆலோசனை பெற்றதாகவும் தெரியவருகிறது. கோயிற்கடவைப் பகுதியில் இருந்த புனித நீர்நிலை ஒன்றில் நீராடிக் குணம் பெற்றதாகவும், அதனால் மகிழ்ச்சியுற்ற இளவரசி அப்பகுதியில் முருகனுக்கு ஒரு கோயில் எழுப்பியதாகவும் சரித்திரச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. இளவரசியின் குதிரை முகம் மாறி அழகான முகமாக மாறியதால், மாவிட்டபுரம் என்ற பெயர் ஏற்பட்டது என்பதும் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் தொன்று தொட்டு நிலவும் ஐதீகமாகும். முருகனின் (காங்கேயன்) சிலையைக் கொண்டு வந்து இறக்கிய துறைதான் பின்னாளில் காங்கேயந்துறை என்ற பெயர் பெற்றது.


திருவிழாக்காலங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவின் போது ஐந்து தேர்கள் ஒன்றின்பின் ஒன்றாக வீதி வலம் வரும் காட்சி மறக்க முடியாதது. உள்வீதியில் இருந்த பூஞ்சோலையில் மயில்கள் ஆடிப்பரவசமாக்கும் காட்சி; வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. ஆடி அமாவாசை அன்று கீரிமலையில் தீர்த்த உற்சவம் நடைபெறும் போது திரண்டுவரும் மக்கள் வெள்ளம் சொல்லில் அடங்காது. நடேஸ்வராக் கல்லூரி சாரணராக நான் திருவிழாக் காலங்களில் அந்த வீதிகளில் கடமையாற்றியிருக்கின்றேன். மகாஜனாக் கல்லூரியில் நான் கற்கும்போது, சாரணராக இணையவில்லை. புதின்மவயதுப் பெண்கள் நிறம் நிறமாய் அரைத்தாவணி, முழுப்பாவாடை சட்டையுடன், தலையில் பூமாலை சூடி அலங்கரித்து வருவதைப் பார்ப்பதற்கென்றே பல இளவட்டங்கள் திருவிழா நாட்களில் கோயிலுக்கு வருவதுண்டு. வீதியோரத்தில் நின்று அந்த அழகை ரசிப்பதும் (தேரையல்ல), பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசிவரப் ப+த்த பருவமா..? என்று முணுமுணுப்பதும் எல்லோருக்கும் தெரிந்ததொன்று. கட்டுப்பாட்டோடு வளரும் பிள்ளைகள் என்பதால், பதின்மவயதில் இதைவிட வேறு சந்தர்ப்பம் அவர்களுக்கு இலகுவில் கிடைப்தில்லை. யாருமற்ற அனாதைபோல கலகலப்பற்றிருந்த கோயிலைப் பார்த்தபோது, கவனிப்பார் அற்றுக்கிடக்கும் புராதன கோயிலுக்குள் வந்தது போன்ற மனநிலை ஏற்பட்டது. போதாக் குறைக்கு உடைந்துபோன பெரிய தேரின் பாகங்களைக் காட்சிப் பொருள் போல அங்கே ஒரு மூலையில் வைத்திருந்தார்கள். யாரிடம் சொல்வேன், யாரை நோவேன்..!

தாயகம் நோக்கி… (3)

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் புணருத்தாரணம் செய்யப்படாமைக்கு சுற்றம் சூழலில் குடிமக்கள் மீளக் குடியமர்த்தப் படாமையும் ஒரு காரணமாகும். நல்லூர் கந்தசுவாமி கோயிலிலும், கீரிமலை நகுலேஸ்வரர் கோயிலிலும் தெற்குப் பகுதியில் இருந்து சுற்றுலா வந்த பெரும்பான்மை இனத்தவர்களே அதிகமாகக் காணப்பட்டனர். தனிப்பட்ட வாகனங்களில் வந்தவர்களில் அனேகர் வன்னிப்பகுதியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட யுத்தகால நினைவுச் சின்னங்களையும் தாங்கள்; சென்று பார்வையிட்டதாகத் தெரிவித்தனர். எனது நண்பர் ஒருவர் இராணுவத்திடம் உத்தரவு பெற்று அவர்களுடன் உயர்பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டிருந்த, சீமெந்துத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பக்கமாகச் சற்று வடக்கே தள்ளியிருந்த காங்கேசந்துறை குருவீதிவரை சென்றிருந்தார். அவர் எடுத்த சில படங்களோடு எங்கள் குலதெய்வம் குருநாதசுவாமி கோயிலின் சேதமடைந்த வசந்த மண்டபத்தின் படத்தையும் என்னிடம் கொடுத்திருந்தார்.

நான் சிறுவனாக இருந்தபோது இந்தியாவில் இருந்து ஓவியக் கலைஞர்களை வரவழைத்து இந்த வசந்த மண்டபத்தில் ‘ஏறுமயில் ஏறிவிளையாடும் முகமொன்றே’ என்ற தேவாரவரிகளை அப்படியே அழகாக வசந்த மண்டபசுவரில் வரைந்திருந்தார்கள். கோயில் சேதமடைந்திருந்தாலும், அவர்கள் வரைந்த படங்கள் அப்படியே சுவரில் இருக்கின்றன. சிறு சிறு கோயில்களில் இருந்த வாகனங்கள், மிகப்பழைய பெட்டகங்கள், வேலைப்பாடமைந்த தேக்கம் கதவுகள், போன்ற பல பொருட்கள் ஆக்கிரமிப்பாளர்களால் திருடப்பட்டு விட்டன. குறிப்பாக எருது, மயில் போன்ற வாகனங்கள் கொழும்பிலே இருந்த (அன்ரிக்) பழையபொருள்களை  விற்பனை செய்யும் கடைகளில் காட்சிப் பொருளாக வைத்திருப்பதை அங்கே சென்றபோது, அவதானிக்க முடிந்தது. முன்னோர்கள் எமக்காக விட்டுச் சென்ற ஒரு இனத்திற்குரிய பாரம்பரியப் பொருட்களை அழிப்பது என்பது, திட்டமிட்ட கலாச்சாரத் திருட்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


மாவிட்டபுரத்திற்கு வடக்கிலும், கிழக்கிலிலும் யாரும் குடியமர்த்தப்படவில்லை. சீமெந்துத் தொழிற்சாலை கைவிடப்பட்ட நிலையில் தனித்துப்போய் இருந்தது. சுற்றி உள்ள நிலங்களில் குறிப்பாக தெற்குப் பகுதியில் சுண்ணக்கல் எடுத்து இலங்கையின் தென்பகுதிக்கு அனுப்புவதற்காகப் பெரிய குழிகள் தோண்டியிருந்தார்கள். அருகேயுள்ள கடல் நீர் இப்பெரிய பள்ளங்களுக்குள் புகுந்தால், உப்புநீரால் சுற்றியுள்ள அருமையான விவசாய நிலங்கள் பாழாய்ப் போய்விடும். சீமெந்து தயாரிப்பதற்கு முக்கியமான மூலப்பொருள் இங்கேயுள்ள சுண்ணக்கல்லாகும். யாழ்ப்பாணத்தில் கிணறுகள் தோண்டி அதிலிருந்து நன்னீர் கிடைப்தற்கும் இந்தச் சுண்ணக்கல் ஒரு காரணமாகும். இந்தச் சுண்ணக்கல்தான் தண்ணீரை அடியில் தேக்கி வைத்திருக்கிறது. வீதி ஓரத்தில் இருந்த வெற்றிலைத் தோட்டங்கள் எல்லாம் கவனிப்பார் அற்று வறண்டு காய்ந்து கிடந்தன. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்த மண்ணில்தான், முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இதே மண்ணில்தான். நாங்கள் சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள் வளர்த்ததும் இந்த மண்ணில்தான். இந்த மண்ணில்தான் பிறந்தோம், தவழ்ந்தோம், நிரந்தரமாக இந்த மண்ணிலே இருப்போம் என்று எத்தனையோ கனவுகள் கண்டோம், கண்ட கனவுகள் எல்லாம் கண்முன்னால் சிதறிப் போயிருந்தன. இன்று அதன் வலியும் வேதனையும்தான் மிஞ்சி நிற்கின்றன.


மாவிட்டபுரம் கந்தசுவாமிகோயிலைத் தரிசித்துவிட்டு தெல்லிப்பளைக் கோயிலுக்குச் சென்றோம். கலைவாணியாம் சரஸ்வதி வாழும் கோயிலது, அதுதான் நான் உயர்கல்வி கற்ற மகாஜனாக்கல்லூரி. 2010ம் ஆண்டுதான் கல்லூரியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியிருந்தோம். எழுத்தறிவூட்டிய எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய கலைக்கோயில். உள்ளே காலடி எடுத்து வைத்தபோது, அமரரான அதிபர் தெ.து. ஜெயரத்தினம் அவர்கள்தான் நினைவில் வந்தார். கல்லூரி வளவிற்குள் நிற்பதுபோல அவரது உருவச்சிலை கம்பீரமாக நின்றது. அவரது காலத்தில் மகாஜனாவில் சுமார் 2000 மாணவர்கள் கல்விகற்றார்கள். மாணவர்களின் ஒழுக்கம் கட்டுப்பாடு காரணமாக தினமும் பிரம்போடு உலாவந்த அவர் இன்று எங்கள் மத்தியில் இல்லாவிட்டாலும், அவருக்கு இன்று நூறு வயது. கனடா பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக எற்கனவே அவரது பிறந்த தினவிழாவை விருந்துபசாரத்தோடு, அவரைப்பற்றிய கட்டுரைகள் அடங்கிய நினைவுமலரும்; வெளியிட்டு அவரது தன்னலமற்ற சேவையைப் பாராட்டிக் கௌரவித்திருந்தோம். இவ்வருடம் கல்லூரியிலும் அவரது பிறந்ததின விழாவைக் கண்காட்சியோடு பெரிய அளவில் கொண்டாட இருப்பதாக தற்போதய அதிபர் திரு. கு. வேல்சிவானந்தன் அவர்கள் அறிவித்தார். குறைந்த வசதிகளோடு மிகவும் திறமையாக இவர் இன்றைய மகாஜனாவை வழி நடத்திச் செல்கின்றார். இவர் பதவி ஏற்கமுன்பு திருமதி எஸ். அனந்தசயனன் அவர்கள் அதிபராக இருந்தார். தமிழகத்திலிருந்து கலைமகள் இதழ் நடத்திய அமரர் ராமரத்தினம் அவர்களின் நினைவுக் குறுநாவல் போட்டியில் எனக்குப் பரிசு கிடைத்தபோது, அதை அறிந்த முன்னாள் மகாஜனா அதிபர் திருமதி அனந்தசயனன் அவர்கள் என்னைப் பாராட்டி விருது வழங்கிக் கௌரவித்திருந்ததை இன்றும் என்னால் மறகக்க முடியாது.

மகாஜனாவில் கல்வி கற்பித்த ஐந்து அதிபர்களிடம் கல்விகற்ற பெருமையும் எனக்குண்டு. நடேஸ்வராவில் அதிபராக இருந்த கே. கிருஷ்ணபிள்ளை அவர்களிடமும், அதிபர் பொன். சோமசுந்தரம் அவர்களிடமும், மகாஜனாவில் அதிபர் தெ.து.ஜெயரட்ணம், அதிபர் எம். மகாதேவன், அதிபர் த. சண்முகசுந்தரம் ஆகியோரிடம் கல்வி கற்றிருக்கின்றேன். எங்கு சென்றாலும் எங்களுடன் எடுத்துச் செல்லக்கூடிய செல்வமான கல்விச் செல்வத்தை எமக்கு ஊட்டியவர்கள் இவர்கள்தான். நேற்றிருந்தார் இன்றில்லை என்பதை நினைத்தபோது, உலகே மாயம் வாழ்வே மாயம் என்ற வாழ்க்கையின் தத்துவங்களை அந்தக்கணம் உணரமுடிந்தது. கல்லூரியின் சுற்று வட்டாரத்தில் இருந்தவர்கள் எல்லாம் புலம் பெயர்ந்து வெளியேறி இருந்தபடியால், போக்குவரத்து வசதியிருக்கும் வெளியிடங்களில் இருந்துதான் அனேகமான மாணவர்கள் கல்விகற்க இங்கே வருகின்றார்கள். பழைய மண்டபத்திற்குப் பதிலாக மாடிக்கட்டிடம் ஒன்று புதிதாக விளையாட்டு மைதானத்திற்கு வடக்கே எழுந்திருக்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல, அழகியலை மகாஜனாவில் அறிமுகப்படுத்திய அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் அன்று நட்டுவைத்து அழகுபார்த்த பூஞ்செடிகளில் ஒன்றான விசிறி வழைமரமும் அவர் நினைவாக வாசலில் வளர்ந்து உயர்ந்து தலைதூக்கி நிற்கின்றது.


பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வலுவுள்ளர்கள்; தமது மூளையைப் பாவித்து நாட்டாண்மையாக மாறிவிடுவதால், தவறு செய்தவனும், குற்றவாளியும் ஆங்காங்கே சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். இவர்களில் சிலர் தகவல் கொடுப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். மிகவிரைவாகவே ஊர் அடங்கிவிடுகிறது. இதேவேளை, பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் 154 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 13 பேர், அனுமதியின்றி சாராயம் விற்பனை செய்த 10 பேரும், சந்தேகத்தின் பேரில் 16 பேரும், மதுவருந்திக்  கலகம் விளைவித்த 15 பேரும், பிறரை அடித்துக் காயப்படுப்படுத்தியதற்காக 32 பேரும், வீதி விபத்து தொடர்பில் 5 பேரும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 12 பேரும் பொருளை உடைத்து சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் 3 பேரும், அனுமதியின்றி மின் இணைப்பை எடுத்துக் கொண்டதற்காக 5 பேரும், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததற்காக 2 பேரும், சூழலை மாசுப்படுத்திய குற்றத்திற்காக 4 பேரும், திருட்டில் தொடர்புடைய 4 பேரும், சமாதானத்திற்கு பங்கம் ஏற்படுத்தியதற்காக ஒருவரும் என சுமார் 154 பேர்வரை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


மௌனம்தான் யாழ்ப்பாணத்து மக்களின் மொழியாக இருக்கின்றது. எதையுமே வாய்திறந்து கதைப்பதற்குத் தயங்குகிறார்கள். கேட்பதற்கு யாருமில்லை, எந்த நேரமும் என்னவும் நடக்கலாம் என்ற பயம் அவர்கள் மனதில் உறைந்து போயிருக்கிறது. ‘உங்களுக்கென்ன வந்திட்டுப் போய்விடுவீர்கள், நாங்கள் இந்த மண்ணில்தானே வாழவேண்டும்’ என்ற யதார்த்தத்தைச் சிலர் மறைமுகமாக உணர்த்தினார்கள். சாதாரண வாழ்க்கை முறைக்கு அவர்கள் இன்னமும் திரும்பவில்லை என்பது அவர்களின் ஒவ்வொரு செய்கையிலும் தெரிந்தது. அவர்கள் கூற்று உண்மைதான் என்பதை அந்த மண்ணில் சில நாட்கள் தங்கி நின்றபோது புரிந்து கொண்டேன்.

தாயகம் நோக்கி… (4)


மகாஜனாக் கல்லூரியில் இருந்து புறப்பட்டு அம்பனை வீதி வழியாக அளவெட்டி சென்று அங்கிருந்து சண்டிலிப்பாய் சென்றேன். மகாஜனாவில் படிக்கும் காலங்களில் செழிப்பாக பச்சைப் பசேலென்று இருக்கும் அம்பனை தோட்டங்களைத் தினமும் பார்த்து இரசித்திருக்கிறேன். மழை நீர் போதாவிட்டால் கிணற்றில் இருந்து நீர் பாய்ச்சுவார்கள். இப்பொழுதெல்லாம் தண்ணீர் இறைக்கும் யந்திரங்களை அனேகமானவர்கள்  பாவிக்கின்றார்கள். முன்பு பனைமரத்தில் செய்யப்பட்ட துலாவின் உதவியுடன், பனை ஓலையில் செய்யப்பட்ட பட்டை கட்டி தண்ணீர் இறைத்தார்கள், அதன்பின் சூத்திரஇயந்திர முறை மூலம் தண்ணீர் இறைத்தார்கள். இந்த இயந்திரம் பூட்டிய கிணற்றை சூத்திரக் கிணறு என்று அழைப்பர். இரண்டு மாடுகள் சுற்றிச் சுற்றிவந்து இந்த இயந்திரத்தை இயக்கும். அப்படி இயங்கும் போது பெரிய இரண்டு வாளிகளில் தண்ணீர் வெளியே வந்து மாறிமாறிக் கொட்டும். மழைக் காலங்களில் வழுக்கியாறு என்று சொல்லப்பட்ட நீரோடை இப்பகுதிகளில் இருந்து அளவெட்டியூடாக கந்தரோடை, சண்டிலிப்பாய் வயல்களைக்கடந்து ஐந்துகண் மதகுக்கூடாகச் சென்று அராலிக்கடலில் கலந்ததாகச் சொல்வார்கள். மழை காலங்களில் இந்த நீரோடையில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். மலையில்லாமல் எப்படி ஆறோடும் என்று மெத்தப்படித்த சிலர், அதில் கருத்துப் பிழை பிடிப்பதுண்டு. என்ன செய்வது ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை என்று தானே எங்களுக்கு அன்று பெரியோர்கள் அறிவூட்டியிருந்தார்கள்.


நாங்கள் பயணித்த பாதையில், அம்பனை வீதியில் உள்ள அழகொல்லைப் பிள்ளையார் கோயிலையும் தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பிள்ளையார் கோயில் கோபுரம் மிக அழகாகக் கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றது. சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் இங்கே திருவிழா நடைபெறுகின்றது. ஊர்மக்களின் கரிசனையால், வெளிநாடுகளில் இருப்பவர்களின் நிதி உதவியுடன் ஒவ்வெரு பகுதிகளில் இருப்பவர்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் குலதெய்வங்களின் கோயில்களைக் கட்டி எழுப்புகின்றார்கள். ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று ஒளவைப்பாட்டி அன்று சொல்லிச் சென்றதை இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்கள். அதுமட்டும் காரணமல்ல, ஒட்டகத்திற்கு கூடாரத்தில் இடம் கொடுத்த கதைபோல, இந்துக் கோயில்களைப் புணருத்தாரணம் செய்யாவிட்டால் அந்த இடங்களில் பௌத்த விகாரைகள் அத்துமீறி வந்துவிடுமோ என்ற பயமும் அவர்களுக்கு இருக்கின்றது. ஏன் அப்படிப் பயப்படுகிறீர்கள் என்று கேட்டபோது, நாட்டு நடப்பு அப்படி இருக்கிறது என்றார்கள். முன்பு அரசமரம் இருக்கும் இடங்களுக்குத்தான் ஆபத்து என்றார்கள், இப்பொழுது பெரிய ஆரவாரத்தோடு அரசமரத்தையும் அவர்களே கொண்டு வந்து நடுவதாகச் சொன்னார்கள். மாசியப்பிட்டி சந்தியில் இராணுவ சோதனை முகாம் ஒன்று இருந்தாலும் அவர்கள் இப்போது பயணிகளைச் சோதனை செய்வதில்லை என்று சொன்னார்கள். எங்கள் வண்டி முகாமைக் கடந்தபோது இருவர் துப்பாக்கியோடு கடமையில் இருப்பதை அவதானித்தேன்.


குடாநாடு முழுவதும் பேருந்து வண்டிகள் முக்கியமான பாதைகளில் சேவையில் ஈடுபடுத்தப் பட்டிருக்கின்றன. பல பாதைகள் இன்னமும் சரியாகத் திருத்தப்படவில்லை. காங்கேசந்துறை வீதியில் சீனியர் ஒழுங்கையைச் சுற்றியுள்ள வீதிகளில் திருத்தவேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. முன்பெல்லாம் பேருந்து இலக்கம் 769 யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிட்டு காங்கேசந்துறை சந்தி வழியாக கீரிமலை சென்றடையும். சில இரண்டு தட்டு பேருந்துக்கள் காங்கேசந்துறை வரை சென்று திரும்பி விடுவதுமுண்டு. இத்தகைய இரண்டு தட்டு பேருந்து வண்டிகள் தொடக்கத்தில் 1958ம் ஆண்டு லண்டனில் இருந்து இலங்கைப் போக்குவரத்து சபையால் ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டவை. அதேபோலப் பேருந்து இலக்கம் 764 யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு பலாலிச் சந்திக்கு வந்து, பருத்துறைவீதி வழியாக காங்கேசந்துறை சந்தியைக் கடந்து மேற்கு நோக்கிக் கீரிமலை சென்றடையும். அதே சமயம் 763ம் இலக்க வண்டி பருத்துறையில் இருந்து புறப்பட்டு பருத்துறை வீதிவழியாக நேரே மேற்கு நோக்கி வந்து, காங்கேசந்துறை வழியாக கீரிமலையைச் சென்றடையும். வடக்கே இருந்த கடைசிப் புகையிரத நிலையமாக காங்கேசந்துறை இருந்ததால், அனேகமானவர்கள் இந்தப் பேருந்து வண்டிகளில் வந்து இருக்கை பிடிப்பதற்காகத் தொடர்வண்டி நிலையத்தில் இறங்குவார்கள். அந்த வசதிகள் எதுவும் இப்பொழுது இல்லை. அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இந்தப் பேருந்துப் பாதைகள் அகப்பட்டிருப்பதால் இந்தப் பாதையில் பேருந்து சேவைகள் நடைபெறுவதில்லை என்பதை அறிந்து கொண்டேன். அதேபோல உள்நாட்டு யுத்தகாலத்தில் தொடர்வண்டிப் பாதைகளும் அகற்றப்பட்டு விட்டதால், உருக்குலைந்த காங்கேசந்துறை தொடர்வண்டி நிலையமும் அங்கே கவனிப்பார் அற்றுத் தனித்துப்போய் நிற்கின்றது.


முன்பு காங்கேசந்துறையில் இருந்து புறப்பட்டு, தினமும் மூன்று தொடர் வண்டிகளும், ஞாயிற்றுக் கிழமைகளில் நான்கு தொடர் வண்டிகளும் முறையே யாழ்தேவி, உத்தரதேவி, தபால்வண்டி, கடுகதிவண்டி என்பன கொழும்பிற்குச் சென்று வந்தன. 1956ம் ஆண்டு ஏப்ரல் மாதம் யாழ்தேவி தொடர் வண்டிச்சேவை ஆரம்பிக்கப்பட்டது. உள்நாட்டு யுத்தம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால், 1990ம் ஆண்டு யூன் மாதம் வரை நடைபெற்ற இச்சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. யாழ்தேவி பயண அனுபவத்தை பலரும் இன்று மறந்திருக்க மாட்டார்கள். தொடக்க காலத்தில் நீராவியில் இயங்கும் கரிஇஞ்சின்கள் புகைகக்கிக் கொண்டு சென்றதால் அதைப் புகைவண்டி என்று அழைத்தார்களாம்;. பின்நாளில் டீசல் எஞ்சின்கள் பாவனைக்கு வந்ததால் அதைத் தொடர்வண்டி என்று அழைக்கத் தொடங்கிவிட்டோம். கனடா – கொழும்பு திட்டத்தின் கீழ் கனடாவும் இலங்கைக்கு நான்கு டீசல் எஞ்சின்களை அந்த நாட்களில் 1954ல் கொடுத்திருந்ததாம். அதற்கு ஒன்ராறியோ, அல்பேட்டா, சஸ்கற்சுவான், பிரிட்டிஷ் கொலம்பியா என்று பெயர் சூட்டியிருந்தனர். இவற்றில் சில இஞ்சின்கள் இன்றும் பாவனையில் இருக்கின்றனவாம். 1966ல் காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலைக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு கனடிய இஞ்சினுக்கு (எம்2டி-628 ) காங்கேசந்துறை என்ற பெயர் சூட்டப்பட்டு இப்போது சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது.


யாழ்ப்பாணத்தில் உள்ள சீனியர் ஒழுங்கையில் ஒரு வீட்டு வாசலில் கேற்ருக்கு வெளியே தண்ணீர் நிரப்பியபடி இரண்டு போத்தல்கள் இரண்டு கரையிலும் வைக்கப்பட்டிருந்ததை அவதானித்து அவர்களிடம் ஏன் என்று விசாரித்தேன். தெருநாய்கள் காலையில் கேற்றுக்கு வெளியே தினமும் அசுத்தம் செய்து வந்ததாகவும், அந்தப் போத்தல்கள் வைக்கப்பட்டபின் அவை வாசலில் அசுத்தம் செய்வதில்லை என்றும் அந்த வீட்டுக்காரர் குறிப்பிட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. போத்தல் தண்ணிக்கும் தெருநாய்களுக்கும் என்ன தொடர்பு என்பது எனக்குப் புரியவில்லை. ஆனாலும் யாரோ சொல்லிச் செய்து பார்த்தபோது அவரது முயற்சி பலன் கொடுத்ததில் அவருக்கு மகிழ்ச்சியே. என்ன காரணம் என்பது அவருக்கும் புரியவில்லை, எனக்கும் புரியவில்லை.


இதுபோலப் புரியாத பல விடையங்களைப் பார்த்து சின்ன வயதில் அதிசயித்திருக்கிறேன். தென்னை மரத்தில் அணில் ஏறாது என்று சொல்லிக் கறுப்பு மையால் அடிமரத்தில் பாம்பின் படம் வரைந்திருப்பார்கள், தோட்டத்தில் கத்தரி வெருளியைச் சட்டைபோட்டு நிறுத்தி வைத்திருப்பார்கள். கையிலே ஒரு வில்லும், அம்பும் இருக்கும். சண்டிலிப்பாயிலிருந்து கீரிமலை செல்லும்போது வீதி ஓரத்துத் தோட்டத்தில் ஒரு வெருளியைப் பார்த்தேன். சின்ன வயதில் படித்த, நவாலியூர் சோமசுந்தரப் புலவரது ‘கத்தரித்தோட்டத்து மத்தியில் நின்று காவல் புரிகின்ற சேவகா’ என்ற பாடல் நினைவில் வந்தது. இதேபோலத்தான் வீட்டு வளர்ப்பு மிருகங்கள், குறிப்பாக ஆடு மாடுகள் குட்டி போட்டால், தொப்புள் கொடி போன்ற கழிவுகளை வெட்டி ஒரு உமலில் போட்டுக் கள்ளி மரத்தில் கட்டி, மூன்று தரம் கத்தியால் கள்ளிமரத்தில் கீறிவிடுவார்கள். கேட்டால் நிறையப் பால் கிடைக்கும் என்று பதில் சொல்வார்கள், ஏன், எதற்கு என்று எம்மவர்கள் பல விடையங்களை ஆவணப்படுத்தாமல் போனதால் எதற்குமே சொந்தம் கொண்டாட முடியாத நிலையில் இன்று நம்மினம் இருக்கிறது.

தாயகம் நோக்கி… (5)

கோயில்கள் நிறைந்த அளவெட்டி நகர்போலவே, அதற்குத் தெற்கேயுள்ள சண்டிலிப்பாயும் கோயில்கள் நிறைந்த இடமாக இருக்கின்றது. யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் பத்து மைல்கள் தூரத்தில், பல குறிச்சிகளைக் கொண்ட ஒரு நகரம் சண்டிலிப்பாயாகும். இங்கே பிள்ளையார் கோயில்களும், வயிரவர் கோயில்களும் நிறைய இருக்கின்றன. பச்சைப்பசேல் என்ற வயல்களும், அதன் கரைகளில் கோயில்களும் பார்ப்பதற்கு அழகோ அழகு. வுயல் வரம்புகளில் உட்கார்ந்து அந்த அழகை ரசிப்பதற்கு எமக்குக் கொடுத்து வைக்க வேண்டும். நாட்டுச் சூழ்நிலை காரணமாகத் திருத்தங்கள் செய்யப்படாமல் இருந்த இந்தக் கோயில்கள் சில இப்போது அயலவர்களால் வெளிநாட்டில் உள்ளவர்களின் நிதி உதவியோடு திருத்தப்படுகின்றன. முக்கியமாகச் சண்டிலிப்பாய் பகுதிகளில் திருப்பணி நடக்கும் கோயில்களில் சீரணி நாகம்மாள் கோயில், கல்வளைப் பிள்ளையார் கோயில், ஆலங்குளாய் முருகமூர்த்தி கோயில், கண்ணகை அம்மன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில், நாகம்மா கோயில், குளங்கரைப் பிள்ளையார் கோயில், இரட்டையப்புலம் வயிரவர் கோயில், வயல்களைக் கடந்து, கந்தரோடை வீதிக்கு மறுபக்கமிருக்கும் மாரியம்மன் கோயில் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


இவற்றில் சீரணிநாகம்மா கோயில், கல்வளைப் பிள்ளையார் கோயில், ஆலங்குளாய் முருகமூர்த்தி கோயில், மாரியம்மன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் வருடாந்த இரத உற்சவம் நடைபெறுவதுண்டு. குளங்கரைப் பிள்ளையார் கோயிலின் முன்பாக இருக்கும் பூவல் குளத்தில்தான் மீனாட்சி அம்மன் தீர்த்தமாடுவதுண்டு. ஆலங்குளாய் வீதியில் படிப்பகத்திற்கு முன்னால் உள்ள புளியடி வயிரவர் கோயிலில் நடக்கும் மடை அந்த நாட்களில் சிறுவர்களாய் இருந்த எங்களைக் கவர்ந்ததொன்று. அயலவர்கள் எல்லாம் ஒன்றுகூடி பலகாரம் சுடுவார்கள். குறிப்பாக முறுக்கு, பால்ரொட்டி, உழுந்து வடை, போன்றவற்றால் வயிரவருக்கு மாலை சூட்டி, பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றைப் படைத்து வணங்குவார்கள். அன்றைய தினம் சுற்றம் ஒன்றுகூடியிருப்பதால், மிகவும் கலகலப்பாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும், பக்திப் பரவசமாயும் அந்த வயிரவர்மடை நிகழ்வு இருக்கும். இதைவிட அம்பலந்துறை வயிரவர் கோயிலிலும் மடை வைப்பதுண்டு. ஆனால் இரட்டையப்புலம் ஞானவயிரவர் கோயில் பூங்காவனத்தின் பின் வைக்கப்படும் மடையே அதிகம் பக்தர்கள் கலந்து கொள்ளும் மிகப் பெரிய மடையாகும்.


மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலை அமைத்த சோழ இளவரசி மாருதப்புரவீக வல்லிக்கும் இங்கே உள்ள  பிள்ளையார் கோயில்களுக்கும் தொடர்பிருப்பதாக ஐதிகக்கதைகள் கூறுகின்றன. மாருதப்புரவீகவல்லி கந்தனை வழிபட்டுக் குதிரை முகத்தை மாற்றினாலும், இளவரசியின் மனதில் ஏதோ குறை இருந்ததாகவும், கீரிமலையில் இருந்த நகுல முனிவரிடம் அதைச்சொன்னபோது, ஆனைமுகனை வழிபட மறந்துவிட்டாய் அதுதான் உன் மனத்தில் உள்ள சஞ்சலத்திற்குக் காரணம் என்று அவர் விளக்கம் கொடுத்தாகவும், அக்குறையை நீங்க விநாயகக் கடவுளின் உருவச்சிலையை அனுப்பி வைக்கும்படி தந்தையான சோழ மன்னனைக் கேட்கவே, அவர் ஏழு விநாயக விக்கிரகங்களை அனுப்பிவைத்தாகவும் புராதன கதைகள் கூறுகின்றன. அந்த நாட்களில் போக்குவரத்துப் பாதைகள் அதிகம் இல்லாததால், பிரதான பாதை சென்ற வழிகளில் இந்த விநாயகர் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அவையாவன கொல்லங்கலட்டி பிள்ளையார், வரத்தலம் பிள்ளையார், அழகொல்லைப் பிள்ளையார், கும்பிளாவளை பிள்ளையார்,  பெருமாள் கடவை பிள்ளையார்,  ஆலங்குளாய் பிள்ளையார், கல்வளை பிள்ளையார் ஆகியனவாகும். இப் பிள்ளையார் கோயில்கள் ஒரே நேர்ப்பாதையில் அமைந்திருப்பதை இன்றும் அவதானிக்கலாம். முருகனுக்குக் காங்கேயன் என்ற பெயருமிருப்பதால் மாவை முருகக்கடவுள் விக்கிரகத்தைக் கொண்டு வந்து இறக்கிய துறையைக் காங்கேயந்துறை என்று அழைத்தனர். மாவிட்டபுரத்திற்கு வடக்கே ஒரு மைல் தூரத்தில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமாகிய காங்கேசந்துறை இறங்குதுறை பாக்குநீரணை ஓரத்தில் இன்றும் இருக்கின்றது.


நான் அங்கே நின்ற சமயம், உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது, ஆலங்குளாய் வீதியில் உள்ள ஆலங்குளாய் சனசமூகநிலைய வளவில் நிறையப் பெண்களும் குழந்தைகளும் கூடி நிற்பதை அவதானித்தேன். இருக்கைகள் போடப்பட்டு பல பெண்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். என்ன காரணம் என்று குழந்தை ஒன்றைக் கையில் ஏந்தியிருந்த ஒரு தாயிடம் விசாரித்தபோது, ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மருத்துவ பரிசோதனை உதவிகள் அன்று அங்கே நடைபெறுவதாகவும், அதற்காக வந்து காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். கடந்த பதினொரு வருடங்களாகக் கனடாவில் இயங்கிவரும், சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஆதரவோடு இது நடைபெறுகின்றது. வைத்திய கலாநிதி சித்தா தியாகராஜாவின் உதவியோடு மூளாய் வைத்திய சாலையில் இருந்து ஒவ்வொரு மாதமும் முதற் சனிக்கிழமைகளில் வைத்தியர்களும், தாதிகளும் வருகைதந்து நோயாளிகளைக் கவனித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகத்; தெரிவித்தார்கள். போக்குவரத்து வசதிகள் அற்ற காலத்தில் குறிப்பாகக் கற்பிணி பெண்கள், தாய்மார்கள் குழந்தைகளுடன் அப்படியான வீதிகளில் பயணிப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பது யாவரும் அறிந்ததே. யுத்த சூழ்நிலையால், போக்குவரத்துத் தடைப்பட்டிருந்த காலங்களில் இத்தகைய மனிதாபிமான உதவிகள் போற்றப்பட வேண்டிய தொன்றாகும். சண்டிலிப்பாய் மக்களின் நன்மை கருதி இத்தகைய மருத்து சேவை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதைவிட அங்கேயுள்ள கலைவாணி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செலவுகளையும் இவர்களே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பிள்ளகை;கும் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்த மன்றத்தினர் மாணவர்களுக்கான புலமைப்பரிசுத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். 1929ல் ஆரம்பிக்கப்பட்ட சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி இவ்வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற பாடசாலையாக இருக்கின்றது.


தாய் மண்ணில் முன்பு கிடைக்காத சில அனுபவங்கள் இம்முறை எனக்குக் கிடைத்தது. மருதனாமடத்தில் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஜனவரி 2013ல் கும்பாவிசேஷம் நடைபெற்றது. 72அடி உயரமான ஆஞ்சநேயர் உருவச்சிலை ஒன்று அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் இருந்து வந்திருந்த சிற்பக் கலைஞர்கள் இதை உருவாக்கியிருந்தனர். இதைவிட வடக்கே மாதகலுக்கு அருகே பௌத்த கோயில் ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு தம்பகோல பட்டுனா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சங்கமித்திரை அரசமரக் கிளையோடு வந்து இறங்கிய இடம் என்ற குறிப்பும், உருவச்சிலையும் அங்கே இடம் பெற்றிருக்கின்றது. முன்பு பௌத்த தமிழர்கள் வாழ்ந்த கந்தரோடை என்ற இடத்தின் பெயர் ஹடுறுகொட என்று மாற்றப்பட்டிருக்கிறது. இப்படியான அதிரடியான பல மாற்றங்கள் அங்கே தினமும் நடந்து கொண்டிருக்கின்றன.
இலங்கையில் யுத்தம் முடிந்து நான்கு வருடங்களாகி விட்டாலும் இன்னமும் வடக்குக், கிழக்கில் வாழும் மக்கள் அதன் பாதிப்பில் இருந்து விடுபடவிலிலை, அதற்குரிய வழி முறைகளும் அங்கே ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. தெற்கே நான் சந்தித்து உரையாடிய பல கிராமத்து மக்களுக்கு யுத்தத்தின்போது,  இப்படி ஒரு பெரும் அழிவு வடக்கே நடந்ததே அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. தெற்கே செல்லும் பத்திரிகைகள் இவற்றை எல்லாம் பயங்கரவாதம் என்ற போர்வைக்குள் மூடி மறைத்திருந்தன. இனவாதத்தையும், மதவாதத்தையும் மீண்டும் மீண்டும் தூண்டும் நடவடிக்கைகளே இப்பொழுதும் ஆங்காங்கே நடைபெறுகின்றன.

ஆனால் இப்படியானவர்களின் தூண்டுதலால், எப்பொழுதும் பாதிக்கப்படுபவர்கள் சிறுபான்மையினத்தவர்களாகவே இருக்கின்றார்கள். சமாதானமோ, ஜனநாயகமோ, தேசிய நல்லிணக்கமோ ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் எதுவும் திறந்த மனதோடு கொண்டு வரப்படாமையும் இதற்கொரு காரணமாகும். சிறுபான்மையினத்தவருக்கு ஏதாவது நன்மை செய்ய முற்பட்டாலும், அதை விரும்பாதவர்கள் ஊர்வலம் சென்று அதைத் தடுத்து விடுகின்றார்கள். 1948ல் இருந்து இப்படியான சிறுபான்மையினத்தவருக்கு நன்மை தரும் பல ஒப்பந்தங்கள் எதிர்ப்பு ஊர்வலம் காரணமாகக் கிழித்து எறியப்பட்டன. அனேகமான அரசியல் வாதிகள் ஒவ்வொரு செய்கையிலும் தமக்கு என்ன லாபம் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்களே தவிர பொதுமக்களின் நலனில் எந்தவொரு கவனமும் செலுத்துவதாகத் தெரியவில்லை.

தாயகம் நோக்கி… (6)

சண்டிலிப்பாயில் உள்ள இன்னுமொரு முக்கியமான கோயில் கல்வளைப்பிள்ளையார் கோயில். ஏனைய இந்துக் கோயில்கள் போலவே இந்தக் கோயிலுக்குள்ளும் எல்லோரும் சென்று வழிபட முடியாத நிலைதான் ஒரு காலத்தில் இருந்தது. போராளிகளின் கையில் தமிழர்கள் வாழ்ந்த பெரும்பகுதி வந்த போது அவர்கள் ‘ஒன்றே ஜாதி ஒன்றே மதம்’ என்ற கொள்கையைக் கடைப்பிடித்ததால் எல்லோரும் வேற்றுமையின்றி உள்ளே சென்று வழிபடலாம் என்று வழிபாட்டுத் தலங்களைத் திறந்து விட்டனர். அதனால் ஒரு சாரார் மட்டும் உள்ளே சென்று வழிபட்டு வந்த பல கோயில்கள் எல்லோருக்கும் பொதுவான கோயில்களாக அவர்கள் காலத்தில்தான் மாற்றப்பட்டன. அதேபோல அயலவரோடு நடக்கும் வேலிச் சண்டையையும் நிறுத்தி வைத்த பெருமை போராளிகளுக்கு உண்டு. சில இடங்களில் இதனால் எதிர்ப்புக்கள் ஏற்பட்டாலும் அவர்கள் தங்கள் திறமையால் அதைச் சமாளித்து வைத்திருந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க சண்டிலிப்பாய் விநாயகப் பெருமான் மீது கல்வளை அந்தாதி பாடிய நல்லூர் சின்னத்தம்பிப் புலவரின் (1716-1760) நினைவாக அவரது உருவச்சிலை கல்வளைப் பிள்ளையார் கோயிலில் வைக்கப்பட்டிருக்கின்றது.


‘பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்
நன் பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் – மின்பிரபை
வீசுபுகழ் நல்லூரான்வில்லவரா யன்கனக
வாசலிடைக்கொன்றை மரம்.’


என்ற பாடல் மூலம் தனது வீட்டின அடையாளத்தைக் காட்டிச் சிறுவயதிலேயே புகழ் பெற்றவர் நல்லூர் சின்னத்தம்பிப் புலவர். சுமார் 300 வருடங்களுக்குமுன் சண்டிலிப்பாய் விநாயகப் பெருமான் மீது அவர் பாடிய கல்வளை அந்தாதி இப்போது இசைவடிவில் இசைத்தட்டாகவும் வெளிவந்திருக்கிறது. பழைய நினைவுகளை மீட்டிப் பார்த்தபோது, வயலும் வயல் சூழ்ந்த பகுதிகளையும் கொண்ட மருதநிலமான சண்டிலிப்பாய் இன்றும் பசுமை மாறாமல் அப்படியே கண்முன்னே நிற்கின்றது. நாங்கள் ஓடியாடி விளையாடிய அந்த வயல் வரம்புகளையும், இயற்கை எழில் கொஞ்சும் அந்த மண்ணையும் எங்கிருந்தாலும் எங்களால் மறக்கமுடியாது.


யாழ்ப்பாண நகரைச் சுற்றிப்பார்க்க விரும்பி, நண்பர் ஒருவரின் வண்டியில் யாழ்பாணம் நகருக்குச் சென்றிருந்தேன். அவர் முதலில் என்னை யாழ்ப்பாணம் கோட்டைக்குத்தான் அழைத்துச் சென்றார். யாழ்ப்பாணம் கோட்டை யாருடைய கையில் இருக்கிறதோ அவர்கள்தான் அந்தப் பகுதியை ஆள்வார்கள் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் அப்பகுதி மக்களிடையே இருந்தது. 1625ம் ஆண்டு போத்துக்கேயரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையை இடித்துவிட்டு 1658ல் ஒல்லாந்தர் புதிதாக வடிவமைத்திருந்தனர். முன்பெல்லாம் போராளிகள் இராணுவத்தை வெளியே வராமல் இந்தக் கோட்டைக்குள்தான் முடக்கி வைத்திருந்தார்கள். பின் நீண்ட போராட்டத்தின்பின் போராளிகள் வசம் அந்தக் கோட்டை வந்திருந்தது. இன்று மீண்டும் அரசாங்கத்தின் கைக்கு மாறிவிட்டது. செல் விழுந்ததாலும், விமானத் தாக்குதலாலும் உடைந்துபோன கோட்டையின் சில பகுதிகள் திருத்தப்பட்டுக் கொண்டிருந்தன. கறுப்பு நிற ஆடைகளோடு நின்று திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த சிலரிடம் பேச்சுக் கொடுத்தேன். நீர்கொழும்புப் பகுதியில் இருந்து வந்த சில மக்கள் தமிழ் கதைப்பது போல கொச்சைத் தமிழில் அவர்களின் பேச்சு இருந்தது. தினக்கூலிக்காக அங்கே வேலை செய்வதாகச் சொன்னார்கள்.


சிறுவயதில் நடேஸ்வராக் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது எனது ஓவிய ஆசிரியையாக இருந்த  திருமதி விஜயம்மா சின்னத்துரை அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரை யாழ்ப்பாணம் அரசவைத்தியசாலையில் சென்று பார்த்தேன். அவரது கணவர் சமீபத்தில்தான் காலமானார். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் பரிச்சயமாகப் பேசக்கூடியவர். வறக்காபொல, நீர்கொழும்பு பகுதிகளில் தபாலதிபராக அதிகமாகக் கடமையாற்றியவர். சமாதான நீதவானான அவர் இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்தபோது தமிழ் மக்களின் துயர்துடைப்பதில் அதிக கவனம் செலுத்தியவர். எப்பொழுதுமே முகத்தில் புன்சிரிப்போடு இருக்கும் ஆசிரியை, தனது நோயைப்பற்றிக்கூடக் கவலைப்படாமல் எங்களைச் சுகம் விசாரிப்பதில் அதிககவனம் செலுத்தினார். நீண்ட நாட்களின் பின் சந்தித்ததில், கைகளைப் பற்றிக் கொண்டு கண்கள் கலங்கினாலும், தனது மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டார்.


ஜனாதிபதி ராஜபக்ஷாவின் பிரமாண்டமான கட்அவுட் ஒன்று வைத்திய சாலையின் உள்ளே வைக்கப்பட்டிருக்கின்றது. எனக்கு அறிமுகமான வைத்திய கலாநிதி ஒருவரைத் தற்செயலாக அங்கே சந்திக்க நேர்ந்தது. சிறுவன் ஒருவனுக்குப் பாம்பு கடித்ததால், ஆபத்தான நிலையில் கிளிநொச்சியில் இருந்து அவனை அங்கே கொண்டு வந்திருந்தார்களாம். சிறுவனுடன் அவனுடைய தாயாரும் வந்திருந்தாராம். சிறுவன் ஆபத்து நிலையைக் கடந்து விட்டதால், அந்தப் பெண்மணி யாருக்கோ தொலைபேசி அழைப்பு விடுத்தாராம். அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ஜீப் வண்டியில் சீருடை இல்லாத இருவர் வந்து தாயுடன் சிரித்துச் சிரித்துப் பேசினார்களாம். உடனே அந்தத் தாய் தலைவாரி, முகத்திற்குப் பவுடரும் பூசிக்கொண்டு அவர்களுடன் ஜீப்பில் சென்றுவிட்டதாகவும் சொல்லி வருத்தப்பட்டார். சிறுவனையும் அங்கே விட்டுவிட்டு தாயார் அவர்களுடன் சிரித்துப் பேசியபடியே சென்றாராம். இரவு முழுவதும் வெளியே தங்கிவிட்டு, மறுநாள் மதியம்தான் அவர் திரும்பி வந்ததாக அந்தப் பெண் வைத்தியர் குறைப்பட்டு, நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லி நின்றார். என்ன செய்வது, அவரவர் கஷ்டம் அவரவருக்குத்தான் புரியும்!


யாழ் நகரத்தில் இருந்த படமாளிகைகள் எல்லாம் உடைந்து உருக்குலைந்த நிலையில் இருக்கின்றன. அந்த நாட்களில் புதிய படங்களைப் பார்க்க வேண்டுமானால் யாழ்நகருக்குத்தான் வரவேண்டும். அங்கு முதலில் ஓடிய பின்தான் ஏனைய நகரங்களில் உள்ள திரை அரங்குகளுக்குச் செல்லும். வெலிங்டன், வின்ஸர், மனோகரா, றீகல், ராஜா, ராணி, சாந்தி, ஹரன், சிறீதர் என்று பல படமாளிகைகள் இருந்தன. ஆங்கிலப்படம் தினமும் மூன்றுகாட்சிகள் றீகல் திரையரங்கில் நடைபெறும். பாடசாலை மாணவர்களுக்காக 3:30 மணிக் காட்சியும் நடைபெறும். செல்லா, சிவாஸ் என்று சில திரையரங்குகள் புதிய பெயர்களில் இயங்குகின்றன. வின்ஸர் படமாளிகை இருந்த இடத்தில் இப்போது சாதோசா வர்த்தக நிலையம் இயங்குகின்றது. தரைமட்டமாய் இருந்த வீரசிங்க மண்டபம் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த மண்டபம் ஐந்து மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நான்கு மாடிகளைக் கொண்ட வீரசிங்கம் மண்டபம்தான் தற்போது யாழ்ப்பாணத்தின் உயரமான கட்டடம் என்று சொல்லப்பட்டாலும், யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதி இதைவிட உயரமானது என்ற புதிய தகவல் ஒன்றையும் நண்பர் குறிப்பிட்டார். யாழ் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினால் 1960 ஆம் ஆண்டளவில் திருவாளர் வீரசிங்கத்தின் ஞாபகார்த்தமாக இந்த மண்டபம் எழுப்பப்பட்டது.


அருகே இருந்த பிரதம தபால் நிலையக் கட்டிடமும் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. 1882ல் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்து மணிக்கூட்டுக் கோபுரத்து மணிக்கூடு அப்பொழுது ஆளுநராக இருந்த ஜேம்ஸ் லோங்டன் என்பவரால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்தக் கோபுரம் பழுதடைந்திருந்தது. 2002ம் ஆண்டு பிரித்தானிய அரசின் உதவியுடன் மீண்டும் திருத்தி அமைக்கப்பட்டது. தற்சமயம் கோபுரத்தில் இருந்த மணிக்கூடு பழுதடைந்து விட்டதால் அதைக் கறுப்புத் துணியால் மூடிக்கட்டியிருந்தார்கள். தமிழ்தாயின் கண்களை மூடிக்கட்டி விட்டதுபோல இருந்தது. இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தின் உச்சியில் மறைந்திருந்துதான்; ஒருகாலத்தில் போராளிகள் யாழ்ப்பாணம் கோட்டையில் இருந்த இராணுவத்தினர் செல்லடிக்கும்போது பொதுமக்களுக்கு முன்னெச்சரிகை அலாரம் அடித்தனர். ஒரு போராளி தன் உயிரைச் துச்சமாக மதித்து எப்பொழுதும் அதில் கடமையில் இருந்தார். அதனால் பல உயிர்கள் அன்று கபாப்பாற்றப்பட்டதை இன்றும் மறக்கமுடியாது.

தாயகம் நோக்கி… (7)


யாழ்ப்பாணம் கோட்டைக்கருகே கட்டப்பட்டிருந்த தந்தை செல்வா என்று அன்பாக அழைக்கப்பட்ட திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நினைவுத்தூபி வெள்ளையடித்துப் புதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. 1898ல் மலேசியாவில் பிறந்து தெல்லிப்பளையில் வாழ்ந்த தந்தை செல்வா அவர்கள், காங்கேசந்துறை நாடாளுமன்றப் பிரதிநிதியாக பல வருடங்களாக அப்பகுதி மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். 1977ம் ஆண்டு மரணமான இவரது 115வது பிறந்த தினத்தை கட்சி ஆர்வலர்கள் மிகவும் சிறப்பாகச் சமீபத்தில் கொண்டாடினர். துரையப்பா விளையாட்டரங்கமும் இப்போது பாவனையில் இருக்கின்றது. யாழ் மாநகர பிதாவாக இருந்த திரு அல்பிரட் துரையப்பா அவர்களின் 37 ஆவது நினைவு தினம் சமீபத்தில் அவரது ஆதரவாளர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. குடாநாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பல வருடங்களாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மூடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்கா 2008ம் ஆண்டு மீண்டும் திறந்து வைக்கப்பட்டாலும், மக்கள் அதிகமாக அதைப் பயன் படுத்துவதில்லை என்பது அதைப் பார்த்தபோதே புரிந்தது. யுனிசெப் உதவியுடன் இந்தப் பூங்கா புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பேருந்து நிலையமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இப்பொழுதும் கலகலப்பாகவே இருக்கின்றன. ஒரு காலத்தில் யாழ் கோட்டையில் இருந்து இராணுவத்தால் ஏவப்பட்ட செல்குண்டுகள் இங்கே வந்து விழுந்து பல உயிர்களைப் பலி எடுத்திருந்தது இப்பொழுதும் ஞாபகம் இருக்கின்றது. முன்பு துவிச்சக்கர வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த இடங்களில் இப்போது நிறைய மோட்டார் சைக்கிள்கள் வீதியோரங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. உணவு விடுதிகளுக்கு முன்பாக செல்வீச்சிலிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மண் மூட்டைகள் எல்லாம் அகற்றப்பட்டு விட்டன.


யாழ்பாண வரலாறு பற்றிய ஏதாவது புதிய நூல்கள் வெளிவந்திருக்கின்றனவா என்ற ஆர்வத்தோடு பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள பிரபல புத்தகசாலை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். வாசலில் பரபரப்பாகப் பத்திரிகை விற்பனை நடந்தது. அவரிடம் கேட்டபோது உள்ளே செல்லும்படி சொன்னார். புத்தகங்கள் உள்ள பகுதியில் யாராவது விற்பனையாளர்கள் இருக்கிறார்களா என்று தேடியபோது யாரும் இல்லை என்பதால் ‘ஹலோ’ என்று குரல் கொடுத்தேன். மேசைக்குப் பின்னாhல் இருந்து ஒரு இளம் பெண் விற்பனையாளரின் தலை வெளியே வந்தது. என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு என்ன? என்றார். நான் அவரிடம் எனக்குத் தேவையான சில புத்தகங்களின் பெயர்களைச் சொன்னேன். நான் சொல்ல முன்பே அவர் இல்லை இல்லை என்று தலையசைக்கத் தொடங்கிவிட்டார். ஏதோ அவருடைய முக்கியமான வேலையை நான் குழப்பிவிட்டேன் என்பது போல அவரின் நடவடிக்கை இருந்தது. முதலாளி கொடுக்கும் சம்பளம் போதாவிட்டாலும் இங்கே சில விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் இப்படி நடந்து கொள்வதுண்டு. காரணம் புரியாமல் கொண்டுபோன துண்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு வெளியே வரும்போது ஏதோ ஆர்வத்தில் திரும்பிப் பார்த்தேன். ஆயிரம் மலர்கள் மலர்ந்ததுபோல முகமெல்லாம் பூப்பூக்க அப்படி என்னதான் சுவாரஸ்யமாக மறுபக்கத்தில் சொல்லப்பட்டதோ தெரியவில்லை. செல்போனைக் காதுக்கருகே பிடித்தபடி அவர் மீண்டும் மேசையில் அடுக்கியிருந்த புத்தங்களுக்குப் பின்னால் மறைந்து விட்டார். முன்பெல்லாம் இந்த செல்போன் வசதிகள் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. இருந்திருந்தால் எங்கள் நடத்தையும் இப்படித்தான் மாறியிருக்குமோ தெரியவில்லை.


யாழ்ப்பாணம் கச்சேரி, சுண்டுக்குளி பகுதிகளுக்குச் சென்றேன். சுண்டுக்குளி பகுதியில் எதுவும் திருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. நல்லூர் பகுதி நன்றாகத் திருத்தப்பட்டு முன்னேறியிருக்கிறது. வீடுகளும், வீதிகளும் திருத்தப்பட்டிருக்கின்றன. நல்லூர் கோயிலில் எப்பொழுதும் கூட்டம் நிறைந்தே இருக்கிறது. முன்பு இருந்ததுபோல, சுண்டுக்குளி மகளிர் கல்லூரிப் பகுதி அதிக கலகலப்பாக இல்லை. அதே போலத்தான் சென்ஜோன்ஸ் கல்லூரியும் இருந்தது. அதே நிலைதான் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரிக்கும் ஏற்பட்டிருக்கிறது. சுற்று வட்டாரத்தில் குடிகள் இல்லாததால் வெளியிடங்களில் இருந்துதான் மாணவர்கள் படிக்க வருகின்றார்கள். வெளியிடங்களில் இருந்து அனேக பேருந்துக்கள் யாழ் நகர் நோக்கிச் செல்வதால் பிரயாண வசதி கருதி அனேகமானவர்கள் யாழ்ப்பாணப் பள்ளிக்கூடங்களுக்கே படிக்கப் போகிறார்கள். திறமையான மாணவர்கள் அங்கே செல்வதால் நல்ல பரீட்சை முடிவுகளையும் அந்தப் பாடசாலைகளால் தரமுடிகின்றது. வீதியில் சனங்களின் நடமாட்டத்தை அதிகமாகக் காண முடியவில்லை. தானுண்டு தன்பாடுண்டு என்பதுபோல இருக்கிறார்கள். முன்புபோல மாணவர்கள் வீதி ஓரங்களில் கலகலப்பாகக் காத்திருக்கும் காட்சிகளைக்கூடக்; காணமுடியவில்லை. சில பெற்றோர்களிடம் விசாரித்தபோது, வேம்படி மகளிர் கல்லூரிதான் இப்போது முன்னணியில் இருப்பதாகச் சொன்னார்கள். எதைக் கேட்டாலும் வாய் திறந்து பேசப் பயப்படுகின்றார்கள். இனம்புரியாத ஒருவகை மௌனம் அவர்களிடையே நிலவியது. தமிழ் சமூகம் இன்னும் இரண்டு தலைமுறைக்கு எழும்ப முடியாதவாறு அடக்கி ஒடுக்கப்பட்டிருப்பது அங்கிருந்த ஒவ்வொருவரின் பேச்சிலும் தெரிந்து கொள்ள முடிந்தது.


மதுபானக் கடைகள் அங்கே தாராளமாக திறக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நாளைக்கு சுமார் ஒருகோடி ரூபாவிற்குக் கிட்டத்தட்ட மதுபானம் விற்பனையாகின்றது. 60 லிட்டர் பனங்கள்ளு 40 ரூபாவிற்குக் கிடைக்கின்றது. இளைஞர்களின் சிந்தனையை மழுங்கடித்து, அவர்களின் செயல்களை வேறுபக்கம் திருப்புவதில் அதிக நாட்டம் காட்டப்படுகின்றது. இதனால் தேவையில்லாத தகராறுகளும், கோஷ்டி மோதல்களும் அதிகரித்திருக்கின்றன. பெரிய அளவில் இல்லாவிட்டாலும் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். நிறையவே துஷ்பிரயோகங்கள் அங்குமிங்குமாய் நடைபெறுகின்றன.


காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட இருப்பதாகச் செய்திகள் அடிபட்டன. பழைய சீமெந்துத் தொழிற்சாலை காங்கேசந்துறைச் சந்தியில் இருந்து தெற்கே ஒரு மைல் தூரத்தில் யாழ்ப்பாணம் வீதியில் அமைந்திருந்தது. எமது பயணத்தின்போது, சீமெந்துத் தொழிற்சாலைக்கு அப்பால் வடக்கு நோக்கிச் செல்ல நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. இத்தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் மிகமோசமாக பாதிக்கப்படும். பழைய தொழிற்சாலை இயங்கும்போது, வளிமண்டலம் மாசடைந்ததால் அங்கே இருந்த அரசினர் வைத்தியசாலை ஏற்கனவே தெல்லிப்பளைக்கு மாற்றப்பட்டிருந்தது. வளிமண்டலம் மாசடைந்ததால், எனக்குத் தெரிந்த அப்பகுதி மக்கள் சிலர் நுரையீரல் கான்ஸர் காரணமாக சிறுவயதிலேயே மரணமாகியிருக்கிறார்கள். வாடைக்காற்று அடிக்கும்போது, மாவிட்டபுரம் தெல்லிப்பளை பகுதிகளில் உள்ள விவசாய பயிர்கள் சீமெந்துத் தூசியால் பாதிக்கப்படுவதுண்டு. வெற்றிலைக் கொடிகள் அப்படியே சாம்பல் நிறமாக மாறியிருக்கும். தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டால் காங்கேசந்துறைப் பகுதிகளில் மீண்டும்; பெருமளவு முருகைக் கற்பாறைகள் அகழ்ந்தெடுக்கப்படும்போது, யாழ் குடாநாட்டின் நிலத்தடியில் உள்ள நன்னீர் மாசுபடும் அபாயம் உண்டு. இப்பகுதி முருகைக்கற்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு, முன்பு நடந்ததுபோல புத்தளத்திற்கும், காலிக்கும் அங்கிருந்து பெருமளவில் அனுப்பப்படலாம். அதுமட்டுமல்ல, பெருமளவில் பள்ளங்கள் தோண்டப்படுவதால், வடக்கேயிருந்து கடல்நீர் உட்புகும் அபாயமும்; ஏற்படும். இதனால் விவசாய நிலங்களும் முழுமையாக பாதிக்கப்படுது மட்டுமல்ல, குடிநீர்ப் பிரச்சனையும் ஏற்படும். வடபகுதி மக்களுக்கு முன்புபோல பெருமளவில் வேலைவாய்ப்பும் கிடைக்கப்போவதில்லை, ஏனென்றால் அப்பகுதி மக்கள் இன்னமும் மீளக் குடியேற்றப்படவில்லை. ஏற்கனவே இராணுவம் வடபகுதி மக்களின் நிலத்தை அதிபாதுகாப்பு வலையத்திற்காக ஆக்கிரமித்திருக்கும் நிலையில் இது மேலும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.


பிறந்த மண்ணைத் துறந்து புலம் பெயர்ந்து வந்தாலும் அனேகமானவர்களின் நினைவுகள் தாங்கள் வாழ்ந்த மண்ணைச் சுற்றியே இன்றும் இருக்கின்றன. கீரிமலை, காங்கேசந்துறை, சண்டிலிப்பாய் போன்ற பகுதிகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் சிலர் என்னுடன் தொடர்பு கொண்டு, பல வருடங்களாகத் தங்கள் ஊருக்கே செல்லவில்லை என்றும், தாங்கள் வாழ்ந்த மண்ணைப்பற்றியும் விசாரித்தார்கள். அங்கே இருக்கும் யுத்தத்திற்குப் பின்னான நிலையைப் பார்த்து நெஞ்சம் வலித்தாலும், மீண்டும் ஒருமுறை அந்த மண் புழுதியில் கால்தோய்த்து நடந்த நினைவுகள் இன்னும் மனதைவிட்டகலாது நிற்கின்றன.

தாயகம் நோக்கி… (8)


நேற்றிருந்தார் இன்றில்லை என்ற வாக்கு சென்ற வாரம் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் என்னை அதிர்ச்சியடைய வைத்தது. இரண்டு வாரங்களுக்குமுன் நடேஸ்வராக் கல்லூரியில் ஓவிய ஆசிரியையாக இருந்த திருமதி விஜயம்மா சின்னத்துரை அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் எழுதியிருந்தேன். யாழ்ப்பாணம் வைத்திய சாலைக்குச் சென்று அவரைப் பார்த்தபோது, சிரித்த முகத்துடன்தான் அவர் படுக்கையில் இருந்தார். அதனால் சிறிது காலமாவது அவர் உயிர் வாழ்வார் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். ஆனால் எதிர்பாராத அவரது மரணச் சொய்தி வந்தபோது என்னை சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அவரது உறவினரோடு தொடர்பு கொண்டபோது, நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்து அவஸ்தைப் படுவதைவிட சீக்கிரம் போய்விடுவது நல்லதுதானே என்று எனக்கு ஆறுதல் சொன்னார்கள். ஆனாலும் என்னவோ மனசு கேட்கவில்லை. அவருடைய ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

 இப்பொழுதெல்லாம் யாராவது மரணித்தால் நினைவு அஞ்சலி மலர் அடிக்கும்போது அவர்கள் பிறந்த இடத்தையும் ஒரு வரைபடம் போட்டு அதிலே ஊரின் பெயரைக் குறித்துவிடும்படி நான் சொல்வதுண்டு. மேலதிக செலவில்லாமல் இதைச் செய்யமுடியும். வடக்குக் கிழக்கு மாகாணத்தில் எமது காலத்தில் இருந்த இடங்களின் தமிழ் பெயர்கள் எல்லாம் திட்டமிட்டு மாற்றப்படுகின்றன. அடுத்த தலைமுறையினர் தங்கள் பாட்டன், பூட்டன் பிறந்த ஊர் எது என்று இணையத்தளத்தில் தேடும்போது ஒரு சிங்களக் கிராமத்தின் பெயரே கூகுளில் வெளிப்படக்கூடும். 1950ம் ஆண்டு பெரும்பான்மை இனத்தவரைக் குடியேற்றுவதற்காகப் பெயர் மாற்றப்பட்ட கல்லோயா, கந்தளாய் போன்ற இடங்களின் பெயர்கள் நாளடைவில் அழிக்கப்பட்டு, இன்று மறைக்கப்பட்டு விட்ட சம்பவமே இதற்கு நல்ல உதாரணம். குறைந்த பட்சம் இவற்றை வரைபடம் மூலம் ஆவணப்படுத்தி வைத்தால் அடுத்த தலைமுறையின் நீண்டகாலத் தேடுதலுக்கு இது உதவியாக இருக்கும். எங்கள் உரிமையை மீண்டும் நிலைநாட்ட, தனது முன்னோர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதையாவது அறிய இது வசதியாக இருக்கும் என நம்புகின்றேன்.


கல்விச் செல்வம் ஒன்றே தமிழர்களின் முக்கிய செல்வமாக இதுவரை இருந்தது. எங்கு சென்றாலும் எங்களுடன் எடுத்துச் செல்லக்கூடிய செல்வமாகவும் அது இருந்தது. ஆனால் அதைக்கூட அடைய முடியாத நிலையில் இலங்கையின் தமிழ் பகுதிகளில் வாழும் மாணவர்கள் இன்று அவஸ்தைப் படுகின்றார்கள். அங்கே பாடசாலைக்குச் செல்லும் மாணவிகளைக் கடத்தவென்றே ஒரு கும்பல் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கிறது. யுத்த சூழ்நிலை காரணமாக மூடப்பட்ட பல பாடசாலைகளில் வடபகுதியில் உள்ள சுமார் 86 பாடசாலைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில் உள்ளதாகத் தெரியவருகின்றது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள அனேகமான கரையோரப் பாடசாலைகள் இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் காரணமாகவும் மீள்குடியேயற்றப் பிரச்சினைகள் காரணமாகவும் இன்னமும் திறக்கப்படாத நிலையிலேயே இருக்கின்றன.


வடமாகாணத்தில் சுமார் 1055 பாடசாலைகள் இருந்ததாகவும், இவற்றில் தற்பொழுது 969பாடசாலைகள் மட்டுமே ஓரளவு குறைந்த வசதிகளோடு இயங்கி வருதாகவும் அறிய முடிகின்றது. பல பாடசலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், இன்னமும் மீள இயங்க முடியாத நிலையிலுள்ளன. இவற்றில் வலிகாமம் கல்வி வலயத்தில் சுமார் 17பாடசாலைகளும் தீவகத்தில் 16 பாடசாலைகளும்;, அதேபோல யாழ்கல்வி வலயத்தில் உள்ள சுமார் 133 பாடசாலைகளில் 14 பாடசாலைகளும், வடமராட்சி வலயத்தில் இருந்த சுமார் 87 பாடசாலைகளில் ஐந்து பாடசாலைகளும், தென்மராட்சி வலயத்தில் 68 பாடசாலைகளில் 8 பாடசாலைகளும், கிளிநொச்சி பகுதியில் 110 பாடசாலைகளில் 9 பாடசாலைகளும், மன்னார் வலயத்தில் 82 பாடசாலைகளில் 2 பாடசாலைகளும், வவுனியா வடக்கு வலயத்தில் 91 பாடசாலைகளில் 2 பாடசாலைகள் இன்னமும் திறக்கபடவில்லை. வவுனியா தெற்கு வலயத்தில் 108 பாடசாலைகளில் 8 பாடசாலைகளுக்கும், முல்லைத்தீவு வலயத்தில் 57 பாடசாலைகளில் 4 பாடசாலைகளுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டிருக்கின்றன.

இதே நிலைதான் நான் ஆரம்ப கல்வி கற்ற நடேஸ்வராக் கல்லூரிக்கும் ஏற்பட்டிருக்கின்றது. பழைய இடத்திற்குத் திரும்பச் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. கல்லுரி அமைந்திருந்த யாழ்ப்பாணம் - நடேஸ்வராக் கல்லூரி வீதிப்பகுதி அதிபாதுகாப்பு வலயத்திற்குள் வருவதாக்ககூறி அந்த இடத்தில் மீள இயங்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டார்கள். இந்தக் கல்விச்சாலையை சித்திரவதை முகமாக ஒரு காலத்தில் பாவித்தார்கள். காகத்தின் கூட்டுக்குள் குயில்கள் அத்துமீறி முட்டையிடுவதுபோல, கல்லூரிக்கு அருகே உள்ள பெரிய வீடுகள் எல்லாம் இராணுவ அதிகாரிகளின் இல்லங்களாகிவிட்டன. கல்லூரி வளவில் இருந்த, காளிகோயில் அரசமரத்தடியில் புத்தர் குடிவந்தமர்ந்து விட்டதாகத் தெரிகின்றது. அன்புதான் இன்ப ஊற்று என்று அகிம்சையைப் புகட்டிய புத்தர் பெருமான் பிறப்பால் ஒரு இந்து என்றாலும் இப்படியான அத்துமீறலைத் தவிர்த்திருக்கலாம். இராணுவ உயர்பாதுகாப்பு வலயம், மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சனை, பாடசாலைகள் உள்ள பகுதிகள் அபவிருத்தி செய்யப்படாமை போன்ற காரணங்களாலேயே இந்தப் பாடசாலைகள் திறக்கப்படாமல் இருப்பதாகத் தெரியவருகின்றது. எங்கள் தலைமுறையினரின் அறிவைத், திறமையை வெளிக் கொண்டுவர எங்களுக்கு அறிவூட்டும் எங்கள் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். எங்கள் தலைமுறையின் கல்விச் செல்வத்தை எங்களிடம் இருந்து பறிப்பதை நாங்கள் எப்படியாவது தடுக்கவேண்டும். விரைவில் மீளத் திறக்கப்படாமல் இருக்கும் இப்பாடசாலைகளுக்கு விடிவு கிடைக்கும் என்று எதிர்பாப்போம்.


சீனியர் ஒழுங்கையில் உள்ள ஒருவரிடம் பழைய கார்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டு நண்பருடன் அங்கே சென்று சில வண்டிகளைப் புகைப்படம் எடுத்தேன். பழைய வண்டிகளைப் புதுப்பித்துப் பழைய வண்டிகளில் ஆர்வமுள்ளர்களுக்கு அவர் கொடுப்பதாக அறிந்தேன். மொறிஸ்மைனர், ஆமை போன்ற வோட்ஸ்வகன், ஏ40, வைக்ஸ்ஷோல், கொன்சல் போன்ற பழைய கார்கள் அங்கே வரிசையாய் நிறுத்தப்பட்டிருந்தன. வியப்போடு அவற்றைப் பார்த்தேன். மாணவப்பருவத்தில் இருந்தபோது, பதின்மூன்று பேர் எப்படி அந்தக் காரில் அன்று பயணம் செய்தோம் என்பது ஆச்சரியமாக இருந்தது. அந்த வண்டிகளைப் பார்த்ததும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே மீண்டும் துளிர்த்தது.


யாழ்ப்பாணத்து நிலைமைகளைப் பற்றி எழுதுவதென்றால் நிறைய எழுதிக் கொண்டே இருக்கலாம். ஏனென்றால் நான் பிறந்து வளர்ந்த மண்ணது. என் முந்தையர் ஆயிரமாண்டுகள் பரம்பரையாக வாழ்ந்த மண். புதுமைக்கவி பாரதி குறிப்பிட்டதபோல எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியிருந்த மண்ணது. சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்த்து, அந்த இளமைக் கனவுகளைத் தெலைத்து விட்டு இன்று செய்வதறியாது புலம்பெயர்ந்;த மண்ணில் நின்று தவிக்கிறோம். என்றாவது ஒரு நாள் இதற்கெல்லாம் விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடுதான் வாழ்கின்றோம். இந்த நம்பிக்கைதானே மனிதனை எதிர்பார்ப்போடு இறுதிவரை வாழவைக்கின்றது.


கொழும்பில் இருந்து இரவு ஒன்பது மணியவில் புறப்படும் தனியார் பேருந்துக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் இருந்து அன்று இரவு புறப்பட்டு மறுநாள் காலையில் கொழும்பைச் சென்றடைகின்றன. நாங்கள் திரும்பிச் சென்ற பேருந்தும், வேறு சில பேருந்துக்களும் ஓமந்தை சோதனைச் சாவடியில் நீண்ட நேரம் மறிக்கப்பட்டிருந்தன. பொறுமையிழந்து என்ன விடையம் என்று விசாரித்தேன், தெரியாது என்றார்கள். என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே என்ற ஆர்வத்தில் நடத்துணரையும் அழைத்துக் கொண்டு முன்னால் சென்று விசாரித்தேன். துப்பாக்கியோடு நின்ற சிப்பாய் மேலும் கீழும் எங்களைப் பார்த்துவிட்டு ‘அங்கே பார்’ என்று சிங்களத்தில் கூறியபடி கையைக் காட்டினான். அவன் கைகாட்டிய திசையைப் பார்த்தேன். சோதனைச் சாவடிக்கு முன்னால் வீதியோரத்தில் மங்கிய வெளிச்சத்தில் ஏதோ கறுப்பாய் அநாதரவாய் விழுந்து கிடப்பது என் கண்ணில் பட்டது.

தாயகம் நோக்கி… (9)


வீதியோரத்தில் கறுப்பாய் விழுந்து கிடப்பது என்னவாய் இருக்கும் என்ற சிந்தனையோடு, அருகே சென்று பார்க்கக் காலடி எடுத்து வைத்தேன். யுத்தகாலச் சம்பவம்போல, கண்ணை மூடிக்கொண்டு யாரையாவது சுட்டுப் போட்டிருப்பார்களோ? அருகே செல்ல வேண்டாம் என்று அந்தச் சிப்பாய் அவசரமாய் எச்சரித்தான். இப்படித்தான் இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்தபோது, சுண்ணாகம் சந்தை பேருந்து வண்டிகள் நிறுத்துமிடத்தில் ஒருவரைச் சுட்டுப் போட்டிருந்தார்கள். அவர் மீது இலையான்கள் மொய்த்துக் கொண்டேயிருந்தன. விசாரித்தபோது, போராளிகளுக்கு உணவு கொடுத்த குற்றத்திற்காகச் சுடப்பட்டதாகச் சொன்னார்கள். மற்றவர்களுக்கு இது பாடமாக அமைய வேண்டும் என்பதற்காக அன்று முழுவதும் அந்த உடம்பு அங்கேயே கிடக்க வேண்டும் என்று மருதனாமடம் முகாமிலிருந்து வந்தவர்கள் எச்சரித்து இருந்தார்களாம்.


வண்டி நடத்துணர் கையிலே டார்ச் லைட் வைத்திருந்ததால், அங்கிருந்தே அடித்துப் பார்த்தோம். இரண்டு பயணப்பொதிகள் தரையில் கிடப்பது தெரிய வந்தது. இதற்குமுதல் அந்த இடத்தைக் கடந்து சென்ற பேருந்து யாருடையதாக இருக்குமென அவரிடம் விசாரித்தேன். நடத்துணருக்கு அவையெல்லாம் மனப்பாடமாக இருந்தன. அவர்களைச் செல்பேசியில் அழைத்து எல்லாப் பொதிகளும் இருக்கிறதா என்று பார்க்கும்படி சொல்லச் சொன்னேன். சுமார் பத்து நிமிடத்தால் இரண்டு பொதிகள் குறைவதாகக் கண்டு பிடித்து முன்னால் சென்ற வண்டியின் நடத்துணர் அழைத்தார். அதிக தூரம் செல்லாததால் திரும்பிவந்து அந்தப் பொதிகளைப் பொறுப்பெடுத்த பின்தான் எங்களையும் அந்த இடத்தைவிட்டுச் செல்ல அனுமதித்தார்கள். இல்லாவிட்டால் விடியும்வரை பயணிகளை அங்கே காத்திருக் வைத்திருப்பார்கள். பொதிகளைச் சோதனைக்காக வீதி ஓரத்தில் இறக்கி வைத்து விட்டு இருட்டுக்குள் இருந்ததால் அவசரத்தில் அதைக் கவனிக்காமல் மறந்துபோய் விட்டதுதான் இந்தத் தாமதத்திற்குக் காரணமாகும்.


ஆனையிறவைத் தாண்டி வரும்போது எங்கள் வண்டிகள் சோதனைச் சாவடியில் நிறுத்தப்படவில்லை. நீண்ட காலமாக ஆனையிறவு சோதனைச் சாவடியில் நிறுத்திச் சோதனை செய்வதே இராணுவத்தின்  வழக்கமாக இருந்தது. 1760ம் ஆண்டு ஒல்லாந்தரால் கட்டப்பட்ட ஆனையிறவுக் கோட்டை வாசலே இவர்களது காவலரனாக இருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் கட்டுப்பாடு இந்தச் சோதனைச் சாவடியிவேயே முக்கியமாகப் பல காலம் தங்கி இருந்தது. இந்தச் சாவடியைக் கடக்க முயன்ற பலர் காணாமல் போயிருக்கிறார்கள். அல்லது இங்கே சித்திரவதை அனுபவித்திருக்கிறார்கள். அவர்களின் அனுபவங்களைக் கேட்டால் உங்களுக்கே கண்ணீர் வரும். ஆனால் இப்போது பொருட்களைக் கொண்டு செல்லும் லொறிகள் மட்டுமே நிறுத்தப்பட்டு ராணுவத்தால் சோதனை செய்யப்படுவதாகச் சொன்னார்கள். நீண்ட காலமாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆனையிறவு ஒரு காலத்தில் போராளிகளின் கைக்கு மாறியிருந்தது. 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதி போராளிகள் முழுமையாக ஆனையிறவைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். இந்தச் சமரில் பல உயிரிழப்பிற்குப் பின்தான் ஆனையிறவைப் போராளிகள் கைப்பற்றியிருந்தனர். முடியாது என்று பொதுமக்கள் நினைத்ததை எல்லாம் முடியும் என்று செய்து காட்டிப் பலரின் மனதில் இடம் பிடித்திருந்தனர்.


கிளிநொச்சியைக் கடக்கும்போது போராளிகளின் வான்படை ஞாபகம் வந்தது. இரணைமடு விமானத்தளம் போராளிகளால் அமைக்கப்பட்டு இங்கேதான் அவர்களின் பிரபலமான வான்படையின் பாவனை இருந்தது. போராளிகள் பாவித்த 600 மீற்றர் ஓடுபதையை திருத்தி இப்போது 1500 மீற்றர் நீளமும், 25 மீற்றர் அகலமும் கொண்டதாக அமைத்திருக்கிறார்கள். 2009ம் ஆண்டு ஜனவரி 9ம் திகதி போராளிகளிடமிருந்து இராணுவத்தினர் இந்த விமானத் தளத்தைக் கைப்பற்றியிருந்தனர். துருப்புக்களையும், இராணுவப் பொருட்களையும் காவக்கூடிய நாலு இயந்திரங்களைக் கொண்ட ஹேக்குலீஸ் சி-130 போன்ற பெரிய விமானங்கள் அவசிய மேற்படும் போது தரை இறங்கக் கூடியதாகவே இதைப் புனரமைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் அவசர நிலை ஏற்படும்போது வவுனியாவில் இருந்தோ அல்லது பலாலியில் இருந்தோதான் துருப்புக்கள் பாதை வழியாக முன்னேற வேண்டும். அதைக் கவனத்தில் கொண்டுதான் இந்த விமானத்தள புனரமைப்பு நடக்கின்றது. விரைவில் நிரந்தரமான விமானத்தளமாக இதை மாற்ற இருக்கின்றார்கள். இரணைமடு விவசாயக் கழகத்தின் உதைபந்தாட்டக் குழுவோடு நாங்கள் மாணவப்பருவத்தில் இங்கே வருடா வருடம் வந்து உதைபந்தாட்டம் விளையாடுவது வழக்கமாக இருந்தது. காங்கேசந்துறை, மங்கொல்லையைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் இங்கே விவசாயத் திணைக்களத்தில் முக்கியமான உத்தியோகத்தராக அப்போது கடமையாற்றினார். அவரின் அழைப்பின் பேரில் நாங்கள் குருவிளையாட்டுக் கழகத்தின் சார்பில் வார இறுதி நாட்களில் அங்கு சென்று தங்கி உதைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதுண்டு. யானைக் கூட்டங்களை எதிர் கொண்டு இரணைமடு அணைக்கட்டில் அந்த நாட்களில் காலாற நடந்த அனுபவங்கள் மறக்க முடியாதவை.


ஏ9 வீதி சிறப்பாகப் போடப்பட்டிருப்பதால், நாங்கள் பயணித்த பேருந்து இங்கே உள்ள நெடுஞ்சாலையில் பயணிப்பது போலவே பயணித்தது. பண்டாரவன்னியன் ஆண்ட மண்ணைக்கடந்து அனுராதபுரம் நோக்கிப் பேருந்து சென்றது. ஒரு காலத்தில் எல்லாள மன்னன் ஆண்ட பூமியிது. எல்லாள மன்னனுக்காக மக்கள் அனுராதபுர வீதியோரத்தில் கோயில் கட்டியிருந்தார்கள். முன்பு ஒரு தரம் யுத்த தொடக்க காலத்தில் யாழ்ப்பாணம் போகும்போது அனுராதபுரம் சோதனைச்சாவடியில் இறக்கி எங்களைக் கையை உயர்த்திக் கொண்டு நிற்கச் சொன்னார்கள். எங்களோடு பயணம் செய்த ஒரு இளைஞன் எதற்கோ சிரித்தான். கோபம் கொண்ட இராணுவச் சிப்பாய் அவனுக்குக் கன்னத்தில் கோபமாக அறைந்து விட்டு ‘நாங்கள் தினந்தினம் ஒரு கையில துவக்கைப் பிடிச்சுக் கொண்டு மலசலகூடம் போறது, உனக்குச் சிரிப்பாடா’ என்று கத்தியது ஞாபம் வந்தது. காலம் வேகமாக ஓடினாலும், சரித்திரம் திரும்பிக் கொண்டே இருக்கும்.


அரைகுறைத் தூக்கம் கலைந்தபோது அதிகாலையில் வண்டி கொழும்பைச் சென்றடைந்திருந்தது. கொழும்பு சென்று ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் கொழும்பையும் அதன் சுற்றுப் பகுதியையும் நண்பரின் வண்டியில் சுற்றிப் பார்த்தோம். தமிழ் மக்களின் நடமாட்டம் அப்பகுதிகளில்; முன்போல இருக்கவில்லை. தெகிவலையில் இருந்து கரையோரப் பாதை ஒன்று காலிமுகத்திடல்வரை போடப்பட்டிருக்கின்றது. காலி வீதியையும் இப்புதிய பாதையையும் தொடுக்கும் இடைப்பட்ட சிறிய வீதிகள் எல்லாம் மாறிமாறி ஒருவழிப் பாதையாக்கப் பட்டிருக்கின்றன. கடற்கரைப் பகுதியில் இருந்த சில வீடுகளை இடித்துத்தான் இந்தப் புதியவீதி அமைக்கப்பட்டிருக்கின்றது. வெள்ளவத்தைக் கடற்கரையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. எம்மவரில் பலர் நீச்சல் பழகிய கின்றோஸ்கிளப் இப்பொழுதும் அங்கே அந்த இடத்தில் இருக்கின்றது. கரையில் இருந்த வாடிகளுக்குப் பதிலாக சுற்றுலா விடுதிகள் வீதியின் மறுபக்கத்தில் எழுந்திருக்கின்றன. காலிமுகத்திடல் பரபரப்பாகவே இருக்கின்றது. சுற்றிவர நிறைய ஹோட்டல்கள் இருக்கின்றன. பொழுது போக்குவதற்கு ஏற்ற வசதிகள் குறிப்பாக நீச்சல்குளம், விளையாட்டுத் திடல், உள்ளக விளையாட்டு அரங்கங்கள், கசினோ என்று நல்ல வசதிகளோடு அமைந்திருக்கின்றன. பணம் படைத்த அனேகமானவர்கள் வாரஇறுதியில் தங்கள் நேரத்தை அங்கேதான் செலவழிப்பது மட்டுமல்ல, இரவு உணவையும் அங்கேயே முடித்துக் கொள்கிறார்கள்.

மருதானைப் பகுதியில் கப்பியாவத்தை பிள்ளையார் கோயில் புதுப்பிக்கப் பட்டிருந்தது. முன்பு பிரேமதாச பதவியில் இருக்கும்போது, காலையில் எழுந்து வாழைத்தோட்டத்திற்குச் சென்று தனது தாயாரைப் பார்த்துவிட்டு இங்கே அடிக்கடி சென்று வணங்குவதுண்டு. அவரது ‘1952-மொறிஸ் மைனர்’ பழைய காரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓட்டிப்பார்ப்பது அவரது வழக்கமாக இருந்தது. கொட்டஹேனா பகுதியில் எந்த மாற்றமும் புதிதாகத் தெரியவில்லை. அந்தோனியார் ஆலயம் அப்படியே பழைய மாதிரியே இருக்கின்றது. நாங்கள் அங்கே நின்றபோது பெண்கள் தினம் என்று பெண்களும் பிள்ளைகளுமாய் பதாதைகளையும் ஏந்திய வண்ணம் வீதியில் ஊர்வலமாய்ச் செல்வதை அவதானித்தேன். ஒரு புறம் செல்வந்தர்களையும், மறுபுறம் ஏழைகளின் நடமாட்டத்தையும் அங்கே காணமுடிந்தது.


தாயகம் நோக்கி… (10)


கொழும்பில் ‘நெலும் பொக்குண மகிந்த ராஜபக்ஷா கலையரங்கம்’ என்ற பெயரில் முன்பு ‘நாஷனல் ஆட்கலரி’ இருந்த இடத்தில் கலையரங்கம் ஒன்று கட்டப்பட்டிருக்கின்றது. பொலநறுவையில் 12ம் நூற்றாண்டில் பராக்கிரமபாகு கட்டிய தாமரைக் குளத்தின் வடிவில் இது வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. சீனநாட்டின் கட்டிடக் கலைஞர்கள் இதை வடிவமைத்திருக்கிறார்கள். சீன அரசாங்கம் இதற்காக 2430 கோடி ரூபா கொடுத்திருந்தது. 1300 பேர் உட்கார்ந்து பார்க்ககூடிய வசதிகளைக் கொண்ட இக்கலையரங்கம், 14.000 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்டது.


இதே போலத்தான் 1956 தொடக்கம் 1959ம் ஆண்டுவரை இலங்கையின் பிரதமராக இருந்த பண்டாரநாயக்காவின் ஞாபகார்த்தமாக ஒரு மண்டபம்; 1973ம் ஆண்டு கொழும்பில் உள்ள கறுவாத்தோட்டத்தில் கட்டப்பட்டது. சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் கட்டப்பட்ட 93,000 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்ட மண்டபத்திற்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டது. தனிச் சிங்களத்தை அரச கரும மொழியாகக் கொண்டு வந்து பின்னால் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு எல்லாம் வழி வகுத்தவர் இவர்தான். என்னதான் இவர் தமிழர்களை ஓரம்கட்டிவிட்டு, தன் இனத்திற்காக இவற்றைச் செய்தாலும், கடைசியில் இவர் ஒரு பௌத்த பிக்குவாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.


இந்த மண்டபத்திற்கு அருகே சிறிய பொருட்காட்சி மண்டபம் ஒன்றும் சீன அரசின் அன்பளிப்போடு 1998ல் 4,500 சதுர மீற்றர் பரப்பளவில் கட்டப்பட்டு அதற்குத் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரது பதவிக்காலத்தில் 1971ம் ஆண்டு தென்பகுதியில் சிங்கள மக்களிடையே ஜேவிபி என்ற இயக்கம் தலை தூக்கியபோது இந்தியாவின் உதவியுடன் அதை அடக்கி ஒடுக்கியவர். அப்பொழுது பல இளைஞர்களின் உயிர்கள் பலி எடுக்கப்பட்டதும், கதிர்காம அழகி உயிரோடு புதைக்கப்பட்டதும் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். 1972ல் இலங்கை குடியரசாக மாற்றப்பட்போது சிறுபான்மையினருக்கு அதுவரை பாதுகாப்பாக இருந்த 29வது பிரிவை முற்றாக நீக்கித் தமிழரை இந்த நிலைக்குக் கொண்டு வந்ததும்; நினைவிருக்கலாம்.


சிலேவ்ஐலண்ட என்று சொல்லப்படுகின்ற கொம்பனித்தெருவில் உள்ள வாவியின் நடுவே இருந்த சிறிய தீவில் பௌத்த கோயில் பெரிதாகக் கட்டப்பட்டிருக்கின்றது. இந்தத் தீவு முனியாண்டி என்பவருக்கு முன்பு சொந்தமாக இருந்ததால் இதை முனியாண்டி தீவு என்றே முன்பு அழைத்தனர். முனியாண்டியை வெளியேற்றிவிட்டு சிறிய அளவில் இந்தக் விகாரையை அமைத்ததாகவும், தற்போது அது பெரிப்பிக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள். கொழும்பில் உள்ள சமபோதி விகாரைக்கு அருகாமையில் அவுஸ்ரேலிய தனவந்தரால் பிரமாண்டமான கசினோ ஒன்று கட்டப்பட இருந்ததாகவும் அதற்கு இப்போது எதிர்ப்புக் கிளம்பியிருப்பதாகவும் தெரிகின்றது.


இலங்கையின் தெற்கு பகுதிகளுக்குச் சென்று அங்கே உள்ள கடற்கரைப் பகுதிகளைப் பார்ப்பதற்கு குடும்பத்தினர் ஆசைப்படவே வண்டி ஒன்றை ஏற்பாடு செய்து தெற்குப்பகுதி நோக்கிப் புறப்பட்டோம். வண்டியை ஓட்டி வந்தவர் கட்டுநாயக்கா பகுதியைச் சார்ந்தவர். ஆங்கிலம் நன்றாகப் பேசக்கூடியவராக இருந்தார். வெய்யில் அதிகமாக இருந்தாலும், குளிரூட்டப்பட்ட வண்டியாகையால் பிரயாண அலுப்புத் தெரியவில்லை.  முதலில் அகுணுகல ஹெரிற்ரன் ஹோட்டலுக்குச் சென்றோம். உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய வகையில் மேற்குத்திசைக் கடற்கரையில் ஹோட்டல் அமைந்திருந்தது. எங்களை வரவேற்று, வரவேற்பு மண்டபத்தில் அமரச்சொல்லி எல்லோர்க்கும் குளிர்பானம் கொடுத்தார்கள். முன்பு இப்படியான வழக்கம் இருக்கவில்லை. கணக்காய்வாளராகக் கொழும்பிலே நான் இருந்தபோது, தெற்கேயுள்ள பேருவளை, பெந்தோட்டை, கிக்கடுவா, வடக்கே நீர்கொழும்புப் பகுதியில் உள்ள புளுலகூன் ஹோட்டல், நுவரெலியாவில் உள்ள சென். அன்றூ ஹோட்டல் போன்றவற்றுக்கு அடிக்கடி காணக்காய்வு செய்வதற்காகச் சென்று அங்கேயெல்லாம் தங்கியிருக்கிறேன். எனவேதான் நிறைய மாற்றங்களை இப்போது இப்பகுதிகளில் என்னால் அவதானிக்க முடிந்தது.

 மேலை நாட்டு உணவு வகைகளோடு எமது உணவு வகைகளும் வைத்திருந்தார்கள். பிட்டு, இடியப்பம், தோசை, அப்பம், சோறு, இறைச்சிக்கறி, மீன் குளம்பு, இறால், நண்டுக்கறி என்று நிறையக் கறிவகைகள் உணவு விடுதியில் இருந்தன. வேண்டிய அளவு எடுத்துச் சாப்பிடக்கூடிய வசதிகளும் இருந்தன. பொதுவாக அதிக அளவில் வரும் ஐரோப்பா உல்லாசப் பயணிகளின் வருகை குறைவாக இருந்தாலும், அதிகமான சுற்றுலா பயணிகள் ரஸ்யா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். ஐரோப்பிய உல்லாசப் பயணிகளின் வருகை குறைந்ததற்கு முக்கிய காரணம் 2001ம் ஆண்டு யூலை மாதம் 24ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தமிழ் போராளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சேதமானதும் ஒரு காரணமாகும்.


அகுணுகலவிற்கு அருகே உள்ள இடங்களைப் பார்க்க விரும்பினோம். ஹோட்டலில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது அருகே கொஸ்கொட என்ற இடத்தில் ஆமைகளின் காப்பகம் ஒன்று இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். எனவே வண்டியை எடுத்துக் கொண்டு கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த அந்த இடத்திற்குச் சென்றோம். வெளிநாட்டவர்களுக்கான அனுமதிச்சீட்டு 250 ரூபாவாக இருந்தது. பொதுவாக உள்ளுர் வாசிகளுக்கு 30 ரூபாதான் எடுக்கிறார்கள். சில இடங்களில் புகைப்படம் எடுக்கும் கருவிக்கும், வீடியோ எடுக்கும் கருவிக்கும் தனித்தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வளவு தூரம் வந்தவர்கள் கட்டாயம் படம் எடுப்பார்கள் என்பதை அவர்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். அனுமதிச் சீட்டு எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம். வேறு பல வெளிநாட்டவர்களும் அங்கே வந்திருந்தார்கள்.


கடலில் வாழமுடியாத பாதிக்கப்ட்ட ஆமைகளை இங்கே கொண்டு வந்து பராமரிக்கிறார்கள். சில ஆமைகளுக்கு ஒரு கால் இல்லை. படகுகளுக்கு அருகே நீந்தி வரும்போது படகுகளின் உந்துவிசை விசிறி வெட்டியதால் அவை காலை இழந்ததாகக் கூறினார்கள். சில வயதுபோன ஆமைகளும் அங்கேயிருந்தன. இதைவிட கடற்கரையில் வந்து மணலில் முட்டையிடும் கடலாமையின் முட்டைகளைத் தினமும் சேகரித்து இங்கே வைத்துப் பொரிக்கச் செய்கிறார்கள். பின் அவற்றை தொட்டிகளில் விட்டு வளர்த்து ஓரளவு வளர்ந்ததும் திரும்பவும் கடலில் கொண்டு சென்று விடுகின்றார்கள். பொதுவாகக் கடலாமைகள் மணலில் குழி தோண்டி முட்டையிட்டு விட்டுத் திரும்பவும் கடலுக்குள் சென்று விடுமாம். சூரிய வெப்பத்தில் மணலில் இருக்கும் முட்டைகள் பொரிக்குமாம். பொரித்ததும் அவை கடலை நோக்கி ஓடுமாம். ஆனால் இந்த வட்டத்திற்குள் பல எதிரிகளை அவை சமாளிக்க வேண்டும். குறிப்பாக முட்டையைத் தோண்டி எடுத்துச் சில பறவைகளும், மிருகங்களும் சாப்பிட்டு விடும். அதிலிருந்து தப்பினாலும் கடலை நோக்கி அவை செல்லும்போது கடற்பறவைகள் அவற்றைக் கொத்திக் கொண்டு சென்று விடும். கடலிலும் இவை சிறிதாக இருந்தால் வேறு கடல்வாழ் உயிரினங்கள் இவற்றைச் சாப்பிட்டு விடும். எனவேதான் அழிந்து கொண்டு போகும் கடலாமை இனங்களைக் காப்பாற்றுவதற்காக இந்தச் சரணாலயத்தை அமைத்திருக்கிறார்கள்.


ஆமைகளில் பல வகையுண்டு. இவை ஊர்வன இனத்தைச் சேர்ந்தன. நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியன. உலகில் ஏறத்தாழ 300 வகையான ஆமைகள் இருக்கின்றன. கடலாமைகளில் சிறியது சிற்றாமை. இது சுமார் 80 செ. மீற்றர் வரை வளரக்கூடியது. இதன் எடை சுமார் 50 கிலோவரை இருக்கும். லெதபாக் என்ற கடலாமையினம் 900 கி.கிராம் நிறைவரை வளரக்கூடியன. நில ஆமைபோல கடலாமையால் தனது உறுப்புக்களை ஓட்டுக்குள் இழுத்துக்கொள்ள முடியாது. இதற்குப் பற்களும் கிடையாது. இந்த சரணாலயத்தைப்பற்றி விரிவாக விளக்கம் தந்த இளைஞர் ஆங்கிலத்திலும், சிங்களத்திலுமே விளக்கம் சொல்லிக் கொண்டு வந்தார். நான் மனைவியோடு தமிழில் கதைத்தபோது அவர் ஆச்சரியப்பட்டு “நீங்கள் தமிழா, நானும் தமிழ்தான்’ என்றார். விசாரித்தபோது அவர் நுவரேலியாவைச் சேர்ந்தவர் என்பதும், அங்கே கல்வி கற்று தொழிலுக்காக இங்கே வந்திருக்கின்றார் என்பதும் தெரிய வந்தது.No comments:

Post a Comment