Tuesday, July 16, 2013

China's Space Programme - சீன நாட்டின் விண்வெளிப் பயணம்

சீன நாட்டின் விண்வெளிப் பயணம்

குரு அரவிந்தன்


View Veedu-Chinaspace1-2013.jpg in slide show

ண்டு கொழுத்தால் வளையில் இருக்காது என்பது போல சீன நாடும் விண்வெளி நோக்கிய தனது பயணத்தில் வேகமாகச் செயற்பட ஆரம்பித்து விட்டது.  மண்ணாசையில் அக்கம் பக்கத்து நாடுகளோடு முரண்டு பட்டுக் கொண்டிருந்த சீனாவிற்குத் திடீரென ஞானம் பிறந்ததுபோல, விண்வெளி நோக்கிய எதிர்காலத்தில் ஆசை வந்து விட்டது. அதன் காரணமாகத் தனது விண்வெளிக் கப்பலை வெற்றிகரமாக சென்ற செவ்வாய்க் கிழமை 11-06-2013 விண்ணை நோக்கி ஏவியது. லாங் மார்ச் - 2 என்ற ராக்கெட் மூலம் இந்தக் கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஷென்ஸோ-10 என்று பெயரிடப்பட்ட இந்த விண்கலத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்திருக்கிறார்கள். நிஹி ஹாய்செங் இந்தக் குழுவின் கொமாண்டராகக் கடமையாற்றுவார். இவர் ஏற்கனவே ஷேன்ஸோ-6ல் விண்வெளிக்குச் சென்று வந்தவர். ஜாங் ஜிஸாகுவாங் என்ற விண்வெளி வீரர் இந்தக் கலத்தை விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தோடு இணைப்பதில் பயிற்சி பெற்றவர். வாங் யாப்பிங் இரண்டாவது பெண் விண்வெளி வீராங்கனையாவார். பதினைந்து நாட்கள் விண்வெளியில் தங்கியிருக்கப் போகும் இந்த விண்கலத்தை, கோபி பாலைவனத்தில் உள்ள கான்சு மாகாணத்தின் ஜியுகான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஏவியிருக்கிறார்கள். 2003ம் ஆண்டில் இருந்து சீனாவால் ஏவப்பட்ட விண்கலங்களில் விண்வெளி வீரர்களை விண்வெளிக்குச் சுமந்து செல்லும் ஐந்தாவது விண்கலமாக இது இருக்கின்றது. விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லக்கூடிய வசதி படைத்த மூன்று நாடுகளில் ஒன்றாக இப்போது சீனாவும் இடம் பெற்றிருக்கின்றது. விண்வெளி நோக்கிய சீனாவின் இந்த திடீர் வளர்ச்சி வியப்பிற்குரியது.






2003 அக்டோபர் மாதம் 15ம் திகதி ஜாங் லீவி என்ற விண்வெளி வீரர் ஷென்ஸோ – 5 என்ற விண்கலத்தில் முதன் முதலாக சீனாவின் விண்வெளி வீரராக விண்;வெளிப் பயணத்தை மேற்கொண்டார். 1965ம் ஆண்டு பிறந்த இவர் 21 மணிநேரம் விண்வெளியில் பயணம் செய்து வெற்றிகரமாகத் திரும்பியிருந்தார். இவர் பூமிக்குத் திரும்பும்போது தற்செயலாகத் தவறான இடத்தில் இறங்கிவிட்டால் அவரது பாதுகாப்பிற்காக ஒரு கத்தியும், துப்பாக்கியும், கூடாரமும் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. தொடர்ந்து ஷென்ஸோ-9 என்ற விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் 2012 யூன் மாதம் 16ம் திகதி விண்வெளிக்குச் சென்று வெற்றிகரமாக விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து கொண்டது.
1980ம் ஆண்டு ஐனவரி மாதம் பிறந்த வாங் யாப்பிங் என்ற பெண் வீராங்கனையும் ஷென்ஸோ-10 ல் பயணம் செய்கின்றார் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது சீனப்பெண் என்ற தகுதியை இதன் மூலம் பெறுகின்றார். இவரும் மக்கள் விடுதலை இராணுவத்தின் விமானப்படைப் பிரிவைச் சேர்ந்தவர். விண்வெளிக்குச் சென்ற முதலாவது சீனப் பெண்மணி என்ற பெயரை 2012ல் விண்வெளிக்குச் சென்ற ஷென்ஸோ-9ல் பயணம் செய்த 1978ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்த லியுயாங் என்ற பெண்மணி ஏற்கனவே தட்டிக் கொண்டார். ரஸ்யாவைச் சேர்ந்த முதவாவது பெண் விண்வெளி வீராங்கனையான வலன்டினா தெரஸ்கோவா 1963ம் ஆண்டு யூன் மாதம் 16ம் திகதி வின்வெளிக்குச் சென்ற முதலாவது பெண்மணி என்ற சாதனையைப் படைத்திருந்தார். 49 வருடங்களின்பின் லூயாங் முதலாவது சீனப் பெண் விண்வெளி வீராங்கனை என்ற சாதனை படைத்திருக்கின்றார். முதற் பெண்மணியான வலண்டினா விண்வெளிக்குச் சென்ற 50வது ஆண்டு நிறைவுவிழாவை யூன் 16ம் திகதி விண்ணிலிருந்தே கொண்டாடும் பெருமை சீனப் பெண்மணியான வாங் யாப்பிங்குக்குக் கிடைத்திருக்கிறது. 1961ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த யூரி காகரின் என்பவரே விண்வெளியில் பயணம் செய்த முதலாவது விண்வெளி வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார். சோவியத் ஒன்றியத்தின் ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைக்கோள் தான் 1957ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ம் திகதி முதன் முதலாக வானத்தில் பறந்து பூமியைச் சுற்றி வந்தது.


The Shenzhou 10 space capsule at its main landing site in Inner Mongolia, China


2011ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21ம் திகதி விண்வெளிக்கு சீனாவால் அனுப்பப்பட்ட டியாங்ஹாங்-1 என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தோடு இந்த விண்கலம் இணைந்து தேவையான செயற்பாடுகளைச் செய்யும். இரண்டுவிதமான இணைப்பை இவர்கள் முயற்சி செய்து பார்ப்பார்கள். ஒன்று தானாகவே ஆராய்ச்சி நிலையத்தோடு இணைவது, மற்றையது இவர்கள் தமது முயற்சியால் ஆராய்ச்சி நிலையத்தோடு இணைய வைப்பது. 2020ம் ஆண்டு முழுமையான, எல்லா வசதிகளோடும் கூடிய பாரிய விண்வெளி நிலையம் ஒன்றை உருவாக்குவதே சீனாவின் குறிக்கோளாகும். அதற்கான முயற்சிகளே இதுவாகும். அமெரிக்காவும் ரஸ்யாவும் மட்டுமே இத்தகைய வசதிகளோடு இதுவரை இருந்தன. இப்போது சீனாவும் மூன்றாவதாக இணைந்து விட்டது. மூன்றாவதாக இணைந்தாலும் சீனாவிடம் இருக்கும் கடுமையான உழைப்பும், பொருளாதார வசதிகளும், தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையும் சீனாவை முதலிடத்திற்குக் கொண்டு வந்து விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.


இந்த விண்வெளி வீரர்கள் புறப்படுமுன் சீனப் பிரதமர் அவர்களைச் சந்தித்தார். இவர்கள் செய்யப்போகும் சாதனை குறித்துத் தானும், சீனமக்களும் பெருமைப்படுவதாகவும், வெற்றிகரமாகத் தமது பயணத்தை முடித்துக் கொண்டு அவர்கள் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


இந்த மூன்று விண்வெளி வீரர்களும் வானத்திலிருந்து தரையில் இருக்கும் ஏனைய பயிற்சி மாணவர்களுடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். குறிப்பாக வாங் யாப்பிங என்ற பெண் வீராங்கனை தரையில் இருக்கும் மாணவர்களுக்கு விண்வெளி பற்றிய விளக்கங்களைத் தருவார். இனிவரும் காலங்களில் நீண்ட காலத்திற்கு விண்வெளியில் தங்கியிருக்கவும், ஆராய்ச்சிகள் செய்யவும் இந்தப் பயணம் வழி வகுக்கும் என்று உத்தியோகபூர்வ பேச்சாளர் தெரிவித்தார்.


‘சீனா இந்த விண்வெளி நிகழ்ச்சியைத் தொடருவதற்கு முக்கிய காரணம் சீனமக்களிடம் தங்கள் பெருமையை நிலைநாட்டவும், உலக மக்களுக்குத் தங்களது பிரமாண்டமான வளர்ச்சியைக் காட்டவுமாகும்’ என்று அவுஸ்ரேலிய விண்வெளி நிபுணரான மோறிஸ் ஜோன்ஸ் தனது நேர்காணலின்போது குறிப்பிட்டார்.


சீனாவின் முதலாவது விண்வெளி ஆராய்ச்சி நிலையம் டியாங்ஹாங்-1 சுமார் 8.000 கி.கிராம் நிறையுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. 34 அடி நீளமும், 11 அடி குறுக்களவும் கொண்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆறில் ஒரு பங்கு அளவுள்ளதாகவும் இருக்கும். இராணுவத் தகவல்களுக்காகச் சீனா தனது விண்வெளி நிலையத்தைப் பயன்படுத்த இருப்பதால், சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயற்பாடுகளுடன் பங்குபற்ற சீன ஏற்கனவே மறுத்துவிட்டது.


இதேபோல 20,000 கி.கிராம் நிறை கொண்ட டியாங்ஹாங்-2 என்ற இன்னுமொரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சீனா விரைவில் விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது. 47 அடி நீளமும் 14 அடி குறுக்களவும் கொண்டதாக இந்த இரண்டாவது நிலையம் இருக்கும். இரண்டு பக்கமும் இணைக்கக் கூடிய வசதிகளோடு இருக்கும் இந்த விண்வெளி ஆராய்ச்சி நியைத்தில் மூன்று வீரர்கள் 20 நாட்களுக்குத் தொடர்ந்து இருக்க் கூடிய வசதிகள் இருக்கும்.


மூன்றாவதாக 2020ல் பெரிய அளவிலான டியாங்ஹாங்-3 என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஒன்றைச் சீனா விண்வெளியில் அமைக்க இருக்கின்றது. மூன்று வீரர்கள் 40 நாட்களுக்குத் தங்கியிருக்கக்கூடிய வசதிகள் இதில் அமைந்திருக்கும். இது 60,000 கி.கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

இச்சந்தர்ப்பத்தில் அமெரிக்க ரஸ்ய கூட்டு முயற்சியில் உருவான சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தனது கடமையை முடித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிதாக இவர்களால் ஒன்றும் உருவாக்கப்படாவிட்டால், 2020ம் ஆண்டுக்குப்பின் விண்வெளியில் தனிக்காட்டு ராஜாவாகச் சீனாவே இருக்கும் என்று நம்ப இடமுண்டு.

No comments:

Post a Comment