Friday, July 12, 2013

FeTNA-2013 - பட்னா - 2013


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா - 2013 (FeTNA - 2013)
குரு அரவிந்தன்'யாதும் ஊரே யாவரும் கேளிர்'


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் 26ஆவது ஆண்டு விழா சென்ற யூலை மாதம் 4ம் திகதி தொடக்கம் 7ம் திகதி வரை கனடியத் தமிழர் பேரவையால் கனடாவில் முதன் முறையாக சொனி நடுவத்தில் மாகாண அரசின் ஆதரவோடு நடத்தப்பட்டது. அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த  தமிழ் உறவுகளோடு ஆயிரக்கணக்கான கனடியத் தமிழர்களும் இணைந்து இவ் விழாவைச் சிறப்பித்தனர். பலவேறு நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த உலகத் தமிழருக்கும் இது ஓர் உறவுப் பாலமாய் அமைந்திருந்தது. ஒன்ராறியோ மாகாண, மற்றும் மாநில அரசின் உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.Actor Samuththirakani - Kuru Aravinthan
 ஈழத்தமிழர் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவாக அமைந்த, ரொறன்ரோவில் உள்ள சொனி நடுவத்தில் நடந்த 26வது ஆண்டு விழாவில் மொழி, மரபு, பண்பாடு, கலை, இலக்கியம், விடுதலை, ஆன்மீகம் போன்ற பலவற்றை உள்ளடக்கிய முத்தமிழ் நிகழ்வுகள் வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளார் பற்றிய நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது. வணிகம், அரசியல், மருத்துவம், இசை, திரைப்படம், இளையோர் அரங்கு போன்ற வேறுபல இணை நிகழ்வுகளும் இந்த இரண்டு நாட்களிலும் அருகே இருந்த நோவோரெல் விடுதியில் இடம் பெற்றன. இறுதிநாளான 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகை தந்திருந்தவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பரிமாறல் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன.Kuru and Nanda
 சொனி நடுவத்தில் வெள்ளி மாலை இடம்பெற்ற பிறேம் கோபாலின் ‘வலி சுமந்த மண்’ என்ற நடன நிகழ்ச்சி பார்வையாளர் அனைவரது மனங்களையும் உருக்கியதாக இருந்தது. அதைத் தொடர்ந்து இடம் பெற்ற கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ என்ற நாட்டிய நாடகத்தில் நூற்றுக்கணக்கான கனடியத் தமிழ்க் கலைஞர்கள் பங்கேற்றுத் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தினர். மறுநாள் ஈழத்து வில்லுப்பாட்டு, ‘வேந்தனின் சீற்றம்’ நாட்டுக்கூத்து, நந்தாவின் ‘வாட்டர்’ மற்றும் இலக்கிய வினாடி வினா என்பனவும் முக்கிய நிகழ்ச்சிகளாய் அமைந்தன. தமிழகத்தில் இருந்து வருகை தந்த நடிகர் சமுத்திரக்கனி, ரோபோ சங்கர், நடனக் கலைஞர் நந்தா ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. சனிக்கிழமை சொனி நடுவத்தின் இறுதி நிகழ்வாக அக்னி இசைக் குழுவோடு இணைந்து மனோ, சாருலதா மணி, சத்தியப்பிரகாசு, பிரகதி, வியித்தா, சாயீசன், சரிகா ஆகியோர் பங்குபற்றிய திரையிசை நிகழ்ச்சி நடைபெற்றது.


ரொறன்ரோ சொனி நடுவத்தில் நடைபெற்ற விழாவின்போது முக்கிய நிகழ்ச்சியாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 26வது ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தண்டபாணி குப்புசாமி, ஒருங்கிணைப்பாளர் பிரகல் திரு, செயலாளர் திருமதி. செந்தாமரை பிரபாகர் மற்றும் பலரின் வாழத்துச் செய்திகளும், தமிழ் மொழியோடு இணைந்த மரபு, பண்பாடு, கலாச்சாரம் பற்றிய அறிஞர்களின் விசேட ஆக்கங்களும் இந்த மலரில் இடம் பெற்றிருக்கின்றன. அழகான அட்டைப்பட ஓவியம் ஓவியர் மார்க்கின் அகத்தூண்டலில் கருணா வரைந்திருக்கின்றார். அ.முத்துலிங்கம், மங்களா ஐயர், செந்தில்முருகன் வேலுச்சாமி, ஜெயகுமார் முத்தழகு ஆகியோர் மலர்க் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர். திட்டப்பணி, வடிவமைப்பை குமார் இரத்தினம் செய்ய, பிறின்ட்பாஸ்ட் மலரை அச்சேற்றியிருக்கின்றார்கள்.

துரை எழில் விழியன், குரு அரவிந்தன், எம்.ஏ.சுசீலா, ச. பார்த்தசாரதி, மருத்துவர் கலை செல்வம், க.நவம், செழியன், தஞ்சை கோ. கண்ணன், அசோகமித்திரன், மயூமனோ, ரெக்ஸ் சகாயம் அருள், கந்தசாமி கங்காதரன்,
சபா அருள் சுப்பிரமணியம், இலவசக்கொத்தனார், ப. ஸ்ரீஸ்கந்தன், திருமாவளவன், தேவகி செல்வன், அநுராதா ஸ்ரீநிவாசன், கீதா சதீஷ், சொ.சங்கரபாண்டி, கவிஞர் புகாரி, ராஜராஜேஸ்வரி கார்த்திகேயன், பேராசிரியர் இ.பாலசுந்தரம், இரா. சம்பந்தன், சின்னையா சிவநேசன், இரா. செல்வராசு, பேராசிரியர் கா. சிவத்தம்பி, த.சிவபாலு, கரோல்ட் எவ். ஷிவ்மென் ஆகியோரின் சிறந்த ஆக்கங்கள் இந்த மலரைச் சிறப்பிக்கின்றன.

No comments:

Post a Comment