Thursday, August 22, 2013

மலைக்கவைத்த மலைப்பாம்பு - PYTHON

மலைக்கவைத்த மலைப்பாம்பு 

குரு அரவிந்தன்

பொதுவாகச் செல்லப்பிராணி என்று யாராவது சொன்னால் பூனையே, நாயோ அல்லது முயலாகவோ இருக்கலாம் என்றுதான் நாங்கள் நினைப்போம். சிலர் பசுக்கன்று அல்லது ஆட்டுக்குட்டி என்று கூடச் சொல்வார்கள். அவற்றையெல்லாம் கடந்து மேலைநாடுகளில் பலவிதமான செல்லப் பிராணிகளை வளர்க்கிறார்கள். ஆமை, தவளை, எலி, ஓணான், அறணை, சிலந்தி, பாம்பு என்றெல்லாம் செல்லப்பிராணிகள் இருக்கின்றன. இவற்றை விற்பனை செய்வதற்கென்றே செல்லப்பிராணிகளின் விற்பனைக் கடைகள் பெரிய சந்தைகளில் இருக்கின்றன. அவற்றுக்குத் தேவையான உணவு, உடை, படுக்கை, மருந்து என்று எல்லாமே அங்கே விற்பனையாகின்றன. ஆனால் இந்தக் கடைகளில் விற்பனை செய்யலாம் என்று அனுமதிக்கப்பட்ட செல்லப் பிராணிகளை மட்டுமே விற்பனை செய்ய முடியும்.


சில கடைகளில் அனுமதி மறுக்கப்பட்ட செல்லப்பிராணிகளையும் களவாகக் கொண்டு வந்து விற்பதுண்டு. அப்படி அனுமதி மறுக்கப்பட்ட மலைப்பாம்பு ஒன்றுதான் கடந்த வாரம் எல்லோரையும் மலைக்கவைத்தது. பழைய தமிழ்ப்படங்களில் யாரையாவது கொலை செய்ய வேண்டுமென்றால் வில்லன் பாம்பு ஒன்றை யன்னல் வழியாக அறைக்குள் விடுவதைப் பார்த்திருப்பீர்கள். வில்லன் பாம்பை விடாமலே அதுபோன்ற நிகழ்ச்சி ஒன்று சென்ற வாரம் கனடாவில் நடந்திருக்கின்றது. இது சாரதரண பாம்பு அல்ல, மலைப்பாம்பு. உண்மையாகவே என்ன நடந்தது என்று இன்னமும் முழுமையான விசாரனை நடைபெற்று முடியவில்லை. ஆனால் இதுவரை நடந்த விசாரனையில் சில தகவல்கள் அதிர்ச்சியடையக் கூடியதாக இருக்கின்றன.


கனடாவில் உள்ள நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் காம்ப்பெல்ரன் என்ற இடத்தில் அதிர்ச்சி தரும் இச் சம்பவம் நடந்திருக்கின்றது. பிளசென்ட் வீதியில் செல்லப் பிராணிகள் விற்பனை செய்யும் கடை கீழேயும், அதன் மேல் மாடியில் விற்பனை நிலையச் சொந்தக்காரரின் குடியிருப்பும் இருக்கின்றன. சென்ற வாரம் செல்லப்பிராணிக் கடைச் சொந்தக்காரரின் மகன் தனது நண்பர்களைத் தனது வீட்டிற்கு விருந்தினர்களாக அழைத்திருந்தார். இங்கே அதைச் ‘சிலிப்போவர்’ என்று சொல்வார்கள். அதாவது அன்று இரவும் நண்பரின் வீட்டிலே படுத்து உறங்கிச் செல்வதை இது குறிக்கும். நான்கு வயதான நோவா பார்தியும் அவனது சகோதரனான ஆறுவயதான கொன்னோர் பார்தியும் தான் நண்பனின் வீட்டில் அன்று இரவு தங்கினார்கள். இரவு உணவு சாப்பிட்டுவிட்டு இவர்கள் இருவரும் தனியறையில் உறங்கினார்கள். திங்கட்கிழமை காலையில் அவர்களை எழுப்ப வந்தபோது இரண்டு சிறுவர்களும் பிணமாகக் கிடந்தார்கள். அறையின் மூலையில் ஒரு மலைப்பாம்பும் அசையாமல் கிடந்தது.


கடையின் சொந்தக் காரருக்கு உடனே என்ன நடந்தது என்பது புரிந்துவிட்டது. மலைத்துப்போய் ஒரு கணம் நின்றவர், உடனடியாக 911 இலக்கத்தை அழைத்து நடந்ததைத் கூறவே, அவர்கள் உடனடியாக வந்து பார்த்தபோது சிறுவர்கள் இருவரும் இறந்து போயிருப்பது தெரிந்தது. மூச்சுத் திணறலால் இறந்ததாகவே உடனடியாக நடந்த வைத்திய பரிசோதனை கூறுகின்றது. கீழே இருந்த செல்லப் பிராணிகளின் கடையில் இருந்த மலைப்பாம்பே இரவில் தப்பி வந்து மேலே உள்ள கூரைக்குள் பதுங்கியிருந்திருக்கிறது. பசியோடு இருந்த பாம்பு இரவு கூரையில் இருந்து கீழே கட்டிலில் குதித்து இருவரையும் ஒன்றாகச் சுற்றி இறுக்கிக் கொன்றிருக்கிறது என்று நம்பப்படுகின்றது. இருவரையும் எப்படி ஒரே சமயத்தில் கொன்றது என்ற கேள்வி மட்டுமல்ல, ஏன் ஆபத்தான அந்த நேரத்தில் அவர்கள் சத்தம் போடவில்லை என்பது சந்தேகத்திற் குரியதாகவே இருக்கின்றது. சிறுவர்கள் பகல் முழுவதும் வேறு பண்ணைப் பிராணிகளுடன் விளையாடியதால் அந்த மணத்திற்கும் பாம்பு பிள்ளைகளைத் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
அறை மூலையில் கிடந்த, இந்த வகைப் பாம்பை ஆபிரிக்கன் றொக் பைத்தோன் என்று அழைப்பர். 4.5 மீற்றர் நீளமான 45கிலோ எடையுள்ளதாகும். தனது இரையை அப்படியே சுற்றி இறுக்கிக் கொல்லும் திறமை கொண்ட இந்த வகைப்பாம்பு விசமற்றது. மூன்று மீற்றருக்கு மேற்படாத நீளம் கொண்ட விசமற்ற பாம்புகளை நியூ பிரன்ஸ்விக்கில் சட்டப்படி விற்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.


கடுமையான விமர்சனம் காரணமாக இந்த செல்லப்பிராணி விற்பனைக் கடையின் முகநூல் தற்போது மூடப்பட்டிருக்கின்றது. இறந்த இச்சிறுவர்களின் இறுதிச் சடங்குகள் சென் தோமஸ் தேவாலயத்தில் நடந்து சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அதிகாரிகள் பொலீசாருடன் வந்து இங்கேயிருந்த ஆமை, ஓணான், போன்றவற்றை மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டு சென்று விட்டனர். நான்கு அலிகேட்டர் வகையைச் சேர்ந்த முதலைகளையும், சில பாம்புகளையும் எந்தவித வலியும் ஏற்படாமல் அவர்கள் கொன்று விட்டதாகவும் தெரிகின்றது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து, இனிமேல் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவர இருக்கின்றனர். 1992ம் ஆண்டு பிராம்டன் நகரில் செல்லப் பிராணியாக மலைப்பாம்பை வளர்த்தவரையே அந்தப் பாம்பு கொன்றுவிட்டிருந்தது.

Workshop- கனடா சொப்காவின் மூன்றாவது வருடாந்த பயிற்சிப்பட்டறை

கனடா சொப்காவின் மூன்றாவது வருடாந்த பயிற்சிப்பட்டறை


சொப்கா என்று அழைக்கப்படும் கனடா, பீல் குடிமக்கள் ஒன்றியத்தின் மூன்றாவது வருடாந்தப் பயிற்சிப்பட்டறை சென்ற ஞாயிற்றுக்கிழமை மிசஸாகாவலியில் உள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. எமது சமூகத்திற்குப் பலன் தரும் நல்ல பல விடையங்கள் பற்றிய கருத்தரங்குகள் ஒவ்வொரு வருடமும் இத்தகைய பயிற்சிப்பட்டறையில் இடம் பெறுகின்றன. குறிப்பாக கனடிய மண்ணில் பிறந்து வளரும், தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தில் ஆர்வம்மிக்க இளைய தலைமுறையினருக்குப் பலனுள்ள பல விடையங்கள் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்துரையாடப் படுகின்றன. அந்த வகையில் இவ்வருடமும் அவைநிறைந்த நிகழ்வாக 18-08-2013 நடந்த இந்தப் பயிற்சிப்பட்டறை அமைந்திருந்தது.

நிழ்ச்சியின் ஆரம்பத்தில் சொப்காவின் உபதலைவரும், எழுத்தாளருமான திரு. குரு அரவிந்தனின் உரை இடம் பெற்றது. சமூக விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், சமூகத்திற்குத் தேவையான பல பலனுள்ள விடையங்கள் இந்த நிகழ்வில் ஆராயப்பட உள்ளதாகவும், இத்தகைய நிகழ்வுகளுக்கு ஒவ்வொரு வருடமும் வருகைதந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆதரவு தரும் அங்கத்தவர்களையும், பொதுமக்களைப் பாராட்டுவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டு, நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றிய திரு. பொன் பாலராஜன் அவர்களையும், திரு. நடராஜா மூர்த்தி அவர்களையும் பாராட்டி நன்றிகூறி, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சொப்கா நிர்வாகசபை அங்கத்தவர் செல்வி. ராகுலா சிவயோகநாதனுக்கும், கனடியப் பல்கலைக் கழகத்தில் தனது முதலாண்டு அனுபவத்தை ஏனைய மாணவ, மாணவிகளுடன் பகிர்ந்து கொண்ட அங்கத்தவர் செல்வி. றுவிங்கா ஸ்ரீசண்முகதாசன் அவர்களையும் வரவேற்று நன்றி கூறினார். குறிப்பாக, பல இளம் தலைமுறையினர் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டதைப் பாராட்டி உரை நிகழ்த்தினார்.


நிர்வாகசபை அங்கத்தவர் செல்வி ராகுலா சிவயோகநாதனின் அறிமுக உரையைத் தொடர்ந்து மக்கள் தொடர்பு சாதனங்களின் நன்மை தீமை பற்றி திரு. பொன் பாலராஜன் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் நவீன தொடர்பு சாதனங்களைக் கையாளும்போது குறிப்பாக இளம் தலைமுறையினர் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தெரிந்தோ தெரியாமலோ இணையத்தளத்தில் அல்லது முகநூலில் பதியப்படும் எந்தத் தகவலும் அடுத்த வினாடியே பலரைச் சென்றடைந்து விடும் என்பதையும், அதை அழித்துவிட முயன்றாலும் அது ஏற்கனவே பல இடங்களில் சேமிக்கப்பட்டு விடுமாகையால் அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார். சபையோர் கேட்ட கேள்விகளுக்கும் ஆதாரங்களுடன் பதிலளித்தார். அவரைத் தொடர்ந்து உளஎழுச்சியின் தாக்கங்கள் பற்றியும் அதை எவ்வாறு எங்கள் தேவைக்கேற்ப கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியம் என்பது பற்றியும், கோபத்தை அடக்கப் பழகிக் கொண்டால் அதனால் வரும் பல பாதிப்புக்களை எப்படித் தவிர்த்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் திரு. நடராஜா மூர்த்தி அவர்கள் உரையாற்றினார். சபையோரிடம் இருந்து எழுந்த கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.தொடர்ந்து பட்டயக் கணக்காளரான திரு. சுப்ரமணியம் மகேந்திரன் அவர்கள் சுமார் அறுபது வருடங்களுக்கு முன் இலங்கைப் பல்கலைக் கழத்தில் ஏற்பட்ட தனது அனுபவங்கள் பற்றிப் பயிற்சிப் பட்டறைக்கு வருகை தந்திருந்த மணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இறுதியாக செல்வி ராகுலா சிவயோகநாதனின் நன்றியுரையுடன் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவு பெற்றது.

Friday, August 2, 2013

Amirtharnavam Book Release - அமிர்தார்ணவம் -1

கனடா மிஸசாகாவில் நடந்த 

அமிர்தார்ணவம் -1 

நூல் வெளியீட்டு விழா


சென்ற சனிக்கிழமை கனடா மிஸசாகாவில் டிக்ஸி வீதியில் உள்ள நூல்நிலைய பார்வையாளர் மண்டபத்தில் பரதகலாவித்தகர் ஸ்ரீமதி. லலிதாஞ்சனா கதிர்காமனின் ஆக்கத்தில் அமிர்தார்ணவம் என்ற நடனக்கலைக்குரிய பாடல்களும், அதற்குரிய முத்திரைகளும் அடங்கிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் திரு. திருமதி குரு அரவிந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு.எஸ். மதிவாசன், திரு. ஸ்ரீமதி பவானி ஆலாலசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். முதலில் மங்களவிளக்கேற்றி, கனடிய தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து, அமிர்தாலயா நுண்கலைக்கல்லூரிக் கீதம் போன்றன இசைக்கப்பட்டன.தொடர்ந்து வரவேற்புரை நிகழ்ந்தது. அடுத்து திருமதி வாசுகி நகுலராஜா அவர்களால் நூல் ஆய்வு செய்யப்பட்டது. சிறுவர்களுக்கு ஏற்ற பாடல்களை எடுத்து அதற்கு எப்படி அபிநயம் பிடிக்கலாம் என்பதை சிறப்பாகவும் எழிமையாகவும் இந்த நூல் எடுத்துக் காட்டுவதாகவும், வர்ணத்தில் படங்கள் அச்சிடப்பட்டிருப்பதால் பலராலும் வரவேற்கப்படும் என்றும் தனது ஆய்வுரையில் அவர் குறிப்பிட்டார். அடுத்து உரையாற்றிய கலைக்கோயில் அதிபர் குகேந்திரன் கனகேந்திரம் அவர்கள் இந்த நூலில் உள்ள சிறப்பம்சங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறி, அமரரான தங்கள் சகோதரியும் இசையாசிரியையுமான திருமதி. அமிர்தாஞ்சனா சுரேஸ்வரன் அவர்களின் நினைவாக தமிழிலும், ஆங்கிலத்திலும் படங்களோடு கூடிய விளக்கங்கள் அடங்கிய இந்த நூலை வெளியிட்ட ஸ்ரீமதி லலிதாஞ்சனாவிற்கு நன்றி தெரிவித்தார். ஆசிரியைமணி ஸ்ரீமதி லலிதாஞ்சனாவின் குருவான கலாபூஷணம் ஸ்ரீமதி திரிபுரசுந்தரி யோகானந்தம் அவர்கள் வழுவூர் இராமையாபிள்ளையிடம் முறையாக நடனக்கலை பயின்றவர். இதைவிட தனது சகோதரியான ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துருவிடமும் இவர் நடனக்கலையைப் பயின்றிருக்கின்றார். கனடாவில் அமிர்தாலயா என்ற நடக்கல்லூரியின் அதிபராக இருக்கின்றார். வழுவூர் நடனக்கலை இவர்களது கல்லூரியின் சிறப்பம்சமாகும்.


ஆடற்கலை சிறப்பாக அமைய அமிர்தார்ணவம் போன்ற நூல்கள் இன்னும் பல வெளிவரவேண்டும். குறிப்பாக புலம் பெயர்ந்த மண்ணில் இவற்றை ஆவணப்படுத்த வேண்டும். அதனாலே தமிழிலும் ஆங்கிலத்திலும் வர்ணவிளக்கப்படங்களுடன் வெளிவந்திருக்கும் இந்த நடனக்கலை நூலைத் தொகுத்து வெளியிட்ட ஸ்ரீமதி லலிதாஞ்சனா கதிர்காமனைப் பாராட்டு கின்றேன். தகுந்த முறையில் ஆவணப்படுத்தாமல் எம்மவர்கள் விட்ட சில தவறுகளினால் பல கலைகள் எம்மிடம் இருந்து மறைந்து விட்டன. அழியும் நிலையில் இருந்த பரதக் கலையைச் சில கலைஞர்கள் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியால் இன்று காப்பாற்ற முடிந்திருக்கிறது. ஆனால் எமது பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுள்வேத மருத்துவ முறை இன்று அழிந்துவிடும் நிலைக்குச் சென்றுவிட்டது. குடும்ப வைத்திய முறையாக இருந்ததால் வாய்வழி வந்த வைத்திய முறை ஒருபோதும் எழுதி ஆவணப்படுத்தப் படவில்லை. அதுமட்டுமல்ல எமது ஊரில் இருந்த மூலிகை மருந்துகளும் அழிந்து கொண்டே போகின்றன. இவற்றையும் அழிவில் இருந்து நாம் காப்பாற்ற வேண்டும், கடந்த பதினேழு வருடங்களாக நடனக்கலையை புலம் பெயர்ந்த மண்ணில் கற்பிக்கும் அமிதாலயா அதிபர் ஸ்ரீமதி லலிதஞ்சனா அவர்களின் அளப்பரிய சேவையை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன் என்று இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்த கொண்ட எழுத்தாளர் திரு. குரு அரவிந்தன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்.


தொடர்ந்து ஸ்ரீமதி வலிதாஞ்சனாவின் மாணவிகளின் குழு நடனங்கள் இடம் பெற்றன. நான்கு குழுக்களுக் கிடையே நடைபெற்ற போட்டியில் சிறந்த குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அதே போல ஒவ்வொரு குழவிலும் சிறந்த நடன தாரகைகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. இறுதியாக ஸ்ரீமதி லலிதாஞ்சனா கதிர்காமன் அவர்கள் பிரதமவிருந்தினர், விசேடவிருந்தினர், மற்றும் பெற்றோர்களுக்கும், இந்த நூலை வெளியிட உதவியாக இருந்த அனைவருக்கும் தனது நன்றியுரையில் நன்றி வழங்கினார். அரங்கேற்றம் செய்த அவரது மாணவிகளின் சிறப்பு நடனத்துடன் விழா இனிதே முடிவுற்றது.