Thursday, August 22, 2013

மலைக்கவைத்த மலைப்பாம்பு - PYTHON

மலைக்கவைத்த மலைப்பாம்பு 

குரு அரவிந்தன்

பொதுவாகச் செல்லப்பிராணி என்று யாராவது சொன்னால் பூனையே, நாயோ அல்லது முயலாகவோ இருக்கலாம் என்றுதான் நாங்கள் நினைப்போம். சிலர் பசுக்கன்று அல்லது ஆட்டுக்குட்டி என்று கூடச் சொல்வார்கள். அவற்றையெல்லாம் கடந்து மேலைநாடுகளில் பலவிதமான செல்லப் பிராணிகளை வளர்க்கிறார்கள். ஆமை, தவளை, எலி, ஓணான், அறணை, சிலந்தி, பாம்பு என்றெல்லாம் செல்லப்பிராணிகள் இருக்கின்றன. இவற்றை விற்பனை செய்வதற்கென்றே செல்லப்பிராணிகளின் விற்பனைக் கடைகள் பெரிய சந்தைகளில் இருக்கின்றன. அவற்றுக்குத் தேவையான உணவு, உடை, படுக்கை, மருந்து என்று எல்லாமே அங்கே விற்பனையாகின்றன. ஆனால் இந்தக் கடைகளில் விற்பனை செய்யலாம் என்று அனுமதிக்கப்பட்ட செல்லப் பிராணிகளை மட்டுமே விற்பனை செய்ய முடியும்.


சில கடைகளில் அனுமதி மறுக்கப்பட்ட செல்லப்பிராணிகளையும் களவாகக் கொண்டு வந்து விற்பதுண்டு. அப்படி அனுமதி மறுக்கப்பட்ட மலைப்பாம்பு ஒன்றுதான் கடந்த வாரம் எல்லோரையும் மலைக்கவைத்தது. பழைய தமிழ்ப்படங்களில் யாரையாவது கொலை செய்ய வேண்டுமென்றால் வில்லன் பாம்பு ஒன்றை யன்னல் வழியாக அறைக்குள் விடுவதைப் பார்த்திருப்பீர்கள். வில்லன் பாம்பை விடாமலே அதுபோன்ற நிகழ்ச்சி ஒன்று சென்ற வாரம் கனடாவில் நடந்திருக்கின்றது. இது சாரதரண பாம்பு அல்ல, மலைப்பாம்பு. உண்மையாகவே என்ன நடந்தது என்று இன்னமும் முழுமையான விசாரனை நடைபெற்று முடியவில்லை. ஆனால் இதுவரை நடந்த விசாரனையில் சில தகவல்கள் அதிர்ச்சியடையக் கூடியதாக இருக்கின்றன.


கனடாவில் உள்ள நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் காம்ப்பெல்ரன் என்ற இடத்தில் அதிர்ச்சி தரும் இச் சம்பவம் நடந்திருக்கின்றது. பிளசென்ட் வீதியில் செல்லப் பிராணிகள் விற்பனை செய்யும் கடை கீழேயும், அதன் மேல் மாடியில் விற்பனை நிலையச் சொந்தக்காரரின் குடியிருப்பும் இருக்கின்றன. சென்ற வாரம் செல்லப்பிராணிக் கடைச் சொந்தக்காரரின் மகன் தனது நண்பர்களைத் தனது வீட்டிற்கு விருந்தினர்களாக அழைத்திருந்தார். இங்கே அதைச் ‘சிலிப்போவர்’ என்று சொல்வார்கள். அதாவது அன்று இரவும் நண்பரின் வீட்டிலே படுத்து உறங்கிச் செல்வதை இது குறிக்கும். நான்கு வயதான நோவா பார்தியும் அவனது சகோதரனான ஆறுவயதான கொன்னோர் பார்தியும் தான் நண்பனின் வீட்டில் அன்று இரவு தங்கினார்கள். இரவு உணவு சாப்பிட்டுவிட்டு இவர்கள் இருவரும் தனியறையில் உறங்கினார்கள். திங்கட்கிழமை காலையில் அவர்களை எழுப்ப வந்தபோது இரண்டு சிறுவர்களும் பிணமாகக் கிடந்தார்கள். அறையின் மூலையில் ஒரு மலைப்பாம்பும் அசையாமல் கிடந்தது.


கடையின் சொந்தக் காரருக்கு உடனே என்ன நடந்தது என்பது புரிந்துவிட்டது. மலைத்துப்போய் ஒரு கணம் நின்றவர், உடனடியாக 911 இலக்கத்தை அழைத்து நடந்ததைத் கூறவே, அவர்கள் உடனடியாக வந்து பார்த்தபோது சிறுவர்கள் இருவரும் இறந்து போயிருப்பது தெரிந்தது. மூச்சுத் திணறலால் இறந்ததாகவே உடனடியாக நடந்த வைத்திய பரிசோதனை கூறுகின்றது. கீழே இருந்த செல்லப் பிராணிகளின் கடையில் இருந்த மலைப்பாம்பே இரவில் தப்பி வந்து மேலே உள்ள கூரைக்குள் பதுங்கியிருந்திருக்கிறது. பசியோடு இருந்த பாம்பு இரவு கூரையில் இருந்து கீழே கட்டிலில் குதித்து இருவரையும் ஒன்றாகச் சுற்றி இறுக்கிக் கொன்றிருக்கிறது என்று நம்பப்படுகின்றது. இருவரையும் எப்படி ஒரே சமயத்தில் கொன்றது என்ற கேள்வி மட்டுமல்ல, ஏன் ஆபத்தான அந்த நேரத்தில் அவர்கள் சத்தம் போடவில்லை என்பது சந்தேகத்திற் குரியதாகவே இருக்கின்றது. சிறுவர்கள் பகல் முழுவதும் வேறு பண்ணைப் பிராணிகளுடன் விளையாடியதால் அந்த மணத்திற்கும் பாம்பு பிள்ளைகளைத் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
அறை மூலையில் கிடந்த, இந்த வகைப் பாம்பை ஆபிரிக்கன் றொக் பைத்தோன் என்று அழைப்பர். 4.5 மீற்றர் நீளமான 45கிலோ எடையுள்ளதாகும். தனது இரையை அப்படியே சுற்றி இறுக்கிக் கொல்லும் திறமை கொண்ட இந்த வகைப்பாம்பு விசமற்றது. மூன்று மீற்றருக்கு மேற்படாத நீளம் கொண்ட விசமற்ற பாம்புகளை நியூ பிரன்ஸ்விக்கில் சட்டப்படி விற்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.


கடுமையான விமர்சனம் காரணமாக இந்த செல்லப்பிராணி விற்பனைக் கடையின் முகநூல் தற்போது மூடப்பட்டிருக்கின்றது. இறந்த இச்சிறுவர்களின் இறுதிச் சடங்குகள் சென் தோமஸ் தேவாலயத்தில் நடந்து சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அதிகாரிகள் பொலீசாருடன் வந்து இங்கேயிருந்த ஆமை, ஓணான், போன்றவற்றை மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டு சென்று விட்டனர். நான்கு அலிகேட்டர் வகையைச் சேர்ந்த முதலைகளையும், சில பாம்புகளையும் எந்தவித வலியும் ஏற்படாமல் அவர்கள் கொன்று விட்டதாகவும் தெரிகின்றது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து, இனிமேல் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவர இருக்கின்றனர். 1992ம் ஆண்டு பிராம்டன் நகரில் செல்லப் பிராணியாக மலைப்பாம்பை வளர்த்தவரையே அந்தப் பாம்பு கொன்றுவிட்டிருந்தது.

No comments:

Post a Comment