Monday, September 16, 2013

தமிழ் பயில்வோம் - நூல் வெளியீடு

தமிழ் பயில்வோம் - நூல் வெளியீடு


திருமதி விமலா பாலசுந்தரம் அவர்கள் எழுதிய 'தமிழ் பயில்வோம்' ஆரம்ப நிலைக்கான நூல் வெளியீட்டு விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை (15-09-2013) கனடா ரொறன்ரோவில் உள்ள பெரிய சிவன் கோயில் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிற்பகல் 5:30 மணிக்கு மங்கள விளக்கேற்றி, தமிழ்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம் ஆகியவற்றுடன் விழா ஆரம்பமாகியது. தொடர்ந்து தாயகத்தில் எம் இனத்திற்காக உயிர் தந்த உடன் பிறப்புக்களுக்காக ஒரு நிமிட அகவணக்கம் இடம் பெற்றது. தொடர்ந்து வனிதா குகேந்திரனின் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. திருமதி சிவநயனி முகுந்தனின் வரவேற்பு உரையைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு சின்னையா சிவநேசன், அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி செல்வம் ஸ்ரீதாஸ் ஆகியோரின் வாழ்த்துரைகள் இடம் பெற்றன. அடுத்து விழாவிற்குத் தலைமை தாங்கிய அறிஞர் சாமி அப்பாத்துரையின் தலைமையுரை இடம் பெற்றது.

தொடர்ந்து ஆசிரியை திருமதி கோதை அமுதன் நயவுரை வழங்கினார். மதிப்புரையை ஆசிரியை திருமதி வாசுகி நகுலராசா வழங்கினார். அடுத்து கனடாவில் தமிழ்க் கல்வியும் அதன் எதிர் காலமும் பற்றி ரொறன்ரோ மாவட்ட பாடசாலைச் சபையைச் சேர்ந்த பொன்னையா விவேகானந்தனின் சிறப்புரை இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து எழுத்தாளரும், ஆசிரியருமான குரு அரவிந்தன் வெளியீட்டுரை நிகழ்த்தினார்.  அவர் தனது உரையில்:

இன்று கனடிய தமிழ் சிறுவர் இலக்கியத்தில் முக்கியமானதொரு நாளாகும். தமிழ் பயில்வோம் ஆரம்பநிலைப் புத்தகம் ஒன்று திருமதி விமலா பாலசுந்தரம் அவர்களின் ஆக்கத்தில் இன்று வெளிவருகின்றது. வெளியீட்டுரை நிகழ்த்த வேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றது.

1983ம் ஆண்டுக்குப்பின் தமிழர்கள் உள்ளாட்டு யுத்தம் காரணமாகப் புலம் பெயர்ந்து அதிக அளவில் வெளிநாடுகளில் குடியேறத் தொடங்கினர். அந்த வகையில் அதிக தமிழர்கள் வாழும் இடங்களில் மூன்றாவது இடத்தை இன்று கனடா வகிக்கின்றது. தமிழகத்து, ஈழத்து சிறுவர் இலக்கியத்துடன் எங்கள் சிறுவர் இலக்கியத்தை ஒப்பிட முடியாது. இந்த மண்ணில் எங்கள் சிறுவர் கல்வி 1987ல்தான் பெரிய அளவில் ஆரம்பமாகியது எனலாம். எனவே எமது சிறுவர் இலக்கியம் சுமார் 26 வருடகால வளர்ச்சியை மட்டுமே கொண்டது எனலாம். ஆனால் அது வளர்ந்து வந்த வேகம் வியப்பிற்குரியது.

மதிப்புக்குரிய அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் ரொறன்ரோ கல்விச்சபையின் தேவைக்காக தொடக்கத்தில் தமிழ் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் தமிழில் ஆரம்ப நிலைத் தமிழ் புத்தகங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து பலரும் இந்த முயற்ச்சியில் குழுவாகவும், தமிழ் கற்பிக்கும் நிறுவனங்கள் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் ஈடுபடத் தொடங்கினர். தனிப்பட்ட முறையில் அவர்களின் பெயர்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. ஆரம்ப நிலை தொடக்கம் எட்டாம் வகுப்பு வரையான தமிழ் பயிற்சிப் புத்தகங்கள், சிறுவருக்கான தமிழ் பாட்டுப் புத்தகங்கள், சிறுவர் கதைப் புத்தகங்கள், இசையோடு கூடிய தமிழ் பாடல்கள் அடங்கிய குறுவட்டுக்கள், காணெளிகள் என்று பல வடிவங்களில் இதுவரை இங்கே வெளிவந்திருக்கின்றன. 1997ல் தமிழ் ஆரம் பயிற்சி நூலையும், காணெளி ஒன்றையும் வெளியிட்டிருந்தேன். அதற்கு அந்த நேரம் முற்று முழுதிலும் உதவியாக இருந்தவர்கள் பேராசிரியர் டாக்டர் பாலசுந்தரம் தம்பதியினரும், திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களும் என்பதை மறக்க முடியாது. இது போலப் பலரும் தமிழ் மொழி இந்த மண்ணில் நிலைத்து நிற்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாகத் தங்கள் அர்ப்பணிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

அடுத்து எனது வெளியயிட்டுரை பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன். இந்த நூலின் ஆசிரியர் திருமதி விமலா பாலசுந்தரம் அவர்கள் எம். ஏ பட்டதாரி மட்டுமல்ல, ரொறன்ரோ மாவட்ட பாடசாலைச்சபையின் அனைத்துலக மொழி;த்திடத்தின் கீழ் தமிழாசிரியராகத் தற்போதும் கடமையாற்றி வருகின்றார். நூலகராகவும் கடமையாற்றிய இவர் அவை சம்பந்தமாக சில நூல்களையும் ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றார். 15 வருடகாலதிற்கு மேற்பட்ட கற்பித்தல் அனுபவம் பெற்ற இவர், இந்த நூலின் முதற் பக்கத்திலேயே ‘ட ப ம’ என்று பயிற்சி ஆரம்பிப்பதில் இருந்தே அவரது கற்பித்தல் அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த நூல் சிறுவர்கள் விரும்பக்கூடிய வண்ண அட்டைப் படத்துடன் வெளிவந்திருக்கிறது. அட்டைப் படத்தில் உள்ள கனடிய தேசியக் கொடியும், சீஎன் டவரும் இந்த நூல் எங்கே வெளியிடப்பட்டது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. 112 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் உள்ள அத்தனையும் முத்துக்கள். பெரும்பான்மையான சொற்கள் எளிமையானதாகவும், மூன்று எழுத்துக்களுக்குள்ளும் அடங்கிவிடுகின்றன. சுமார் 46 பக்கங்கள் வரை வண்ணப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவராக நான் இருந்தபோது பல ஆசிரியர்களும் பெற்றோர்களும் ரொறன்ரோ கல்விச் சபையினரின் தமிழ் பாடப் புத்தகங்கில் வரும் படங்கள் வண்ணத்தில் இருந்தால் பிள்ளைகளை அதிகம் கவரக்கூடியதாக இருக்கும் என்று கருத்துச் சொன்னார்கள். அந்தக் குறைகூட இப்போது இந்தப் புத்தகத்தின் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த நூலுக்கு ரொறன்ரோ மாவட்டப் பாடசாலைச்சபை முன்னாள் பல்கலாச்சார ஆலோசகர் அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் அணிந்துரை எழுதியிருக்கின்றார். கொத்தணிப் பாடசாலை முன்னாள் அதிபர் சிவபாலு தங்கராசா அவர்கள் ஆசிரியரைப் பற்றி அறிமுக உரை எழுதியிருக்கின்றார். என்னைப் பொறுத்தவரையில் இதுவரை வெளிவந்த சிறுவர்க்கான புத்தகங்களில் ஏதாவது குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தக் குறைகளை எல்லாம் இந்தப் புத்தம் நிவர்த்தி செய்திருக்கிறது என்றுதான் சொல்வேன். பல சிரமங்களுக்கு மத்தியில் எமது சிறுவர்கள் தமிழ் பயில வேண்டும் என்ற ஆர்வம் காரணமாகத் தனது கடின உழைப்பால் அழகிய நூல் உருவத்தில் இந்தப் புத்தகத்தை எங்கள் சமூகத்திற்குத் தந்த திருமதி விமலா பாலசுந்தரம் அவர்களுக்கும், இந்த நூல் வெளிவருவதற்கு உறுதுணையாக இருந்த அவரது கணவர் பேராசிரியர் டாக்டர் பாலசுந்தரம் அவர்களுக்கும், அச்சுரு ஏற்றித்தந்த பைன் பிறின்ற் அன்ட் கிப்ற் நிறுவனத்தினருக்கும் நன்றியைக்கூறி விடைபெறுகின்றேன். நன்றி.

குரு அரவிந்தனின் வெளியீட்டுரையைத் தொடர்ந்து முதற்பிரதி, சிறப்புப் பிரதிகள் வழங்கும் நிகழ்ச் சிநடைபெற்றது.  தொடர்ந்து நூலாசிரியர் திருமதி விமலா பாலசுந்தரத்தின் ஏற்புரையுடனும், நன்றியுரையுடனும் விழா இனிதே முடிவுற்றது.


No comments:

Post a Comment