Tuesday, February 18, 2014

தமிழுக்கும் செம்மொழி என்று பெயர்

தமிழுக்கும் செம்மொழி என்று பெயர்

குரு அரவிந்தன்

தமிழுக்கும் அமிழ்தென்று பெயர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று புரட்சிக்கவி பாரதிதாசன் குறிப்பிட்டது போல தாய் மொழி மீது பற்றுக் கொண்டவர்களுக்கு இந்த ஆதிமொழி அமிர்தமாகத்தான் இருக்கின்றது. ஒவ்வொரு தமிழ் கவிஞரும் தமிழ் மீது கொண்ட உண்மையான பற்றுக் காரணமாக தங்கள் தாய் மொழியைப் புகழ்வது என்பது தொன்று தொட்டு வழக்கமாகி விட்டது. மொழி வளர்ச்சி என்பது பல பரிணாமங்களைக் கொண்டது. பேச்சு வழக்கிலிருந்து மெல்ல மெல்ல வளர்ந்து எழுத்து வடிவம் பெறுவதற்குப் பல நூற்றாண்டுகள் எடுக்கலாம். காலத்தை மட்டுமல்ல, எத்தனையோ இடர்களை எல்லாம் கடந்து வந்த எங்கள் தமிழ் மொழி இன்று செம்மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டது.


‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ என்று புகழப்பட்ட செந்தமிழைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வளர்த்ததால் மூவேந்தர் வளர்த்த தமிழ் என்றும் எங்கள் தமிழைச் சொல்வர். இந்த மன்னர்கள் தங்கள் காலத்தில் வாழ்ந்த புலவர்களைக் கொண்டே தமிழ் வளர்த்தார்கள். எழுத்துநடை அந்தக் காலங்களில் இருக்கவில்லை என்பதால் எல்லாம் பாடல் வடிவிலேயே அமைந்தன. இந்தத்தமிழ் இயல், இசை, நாடகத்தைத் தன்னகத்தே கொண்டதால் தமிழை முத்தமிழ் என்றார்கள். தமிழரின் பொற்காலம் என்றால் சங்ககாலத்தைத்தான் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். முதல், இடை, கடை என்று மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாக அறியமுடிகிறது. தென்மதுரை, நாகநன்னாடு, கபாடபுரம் போன்ற இடங்களில் இருந்ததாகத் தெரியவரும் இச் சங்கங்களை முத்தமிழ்ச்சங்கம் என்றார்கள். கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத் தமிழ் சங்கங்கள் ஆழிப்பேரலைகளால் அழிந்ததாகக் கூறுவர். இதைவிட நான்காவது தமிழ் சங்கம் என்று ஒன்று காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்ததாகச் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.


தமிழ் மொழி செம்மொழியாக வளம்பெற, எம் முன்னோர் விட்டுச் சென்ற இலக்கிய நூல்களே முக்கிய காரணமாயிருந்தன. செம்மொழி என்றால் செழுமையான மொழி என்றும் அர்த்தம் கொள்ளலாம். செழுமை என்றால் செல்வச் செழிப்பு கொண்ட மொழி என்றும் சொல்லலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இலக்கிய மரபைத் தமிழ் கொண்டுள்ளது. இன்று தமிழ் மொழியைச் செம்மொழியாக அடையாளம் காண்பதற்கும் இந்தச் சங்ககால நூல்களே உதவி செய்தன. அகத்தியரால் இயற்றப்பட்ட இலக்கணநூலான அகத்தியத்தையே தமிழுக்குக் கிடைத்த மிகப் பழைய நூலாகச் சிலர் குறிப்பிடுவர். முழுமையாக இந்த நூல் கிடைக்கவில்லை என்பது பெரிய குறையாகும். அடுத்து அறியப்பட்ட நூலான, கி.மு. 200 முன் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தமிழ் தந்த தொல்காப்பியத்திற்கு ஈடுஇணையாக வேறு எந்த நூல்களும் தமிழில் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதேபோல பத்துப்பாடல், எட்டுத்தொகை, அகநாநூறு, புறநாநூறு, நற்றிணை, ஐங்குறுநூறு, பரிபாடல் என்று சங்ககால நூல்கள் பல காலத்தால் அழியாமல் இன்றும் இருக்கின்றன. இதே போலத்தான் திருவள்ளுவர் தந்த திருக்குறளை உலகப் பொது மறையாக அறிஞர்கள் இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, கம்பரின் கம்பராமாயணம் போன்றவற்றில் தமிழின் செழுமையை முழுமையாகக் காணலாம்.
இதேபோல ஐஞ்சிறு காப்பியங்களையும் குறிப்பிடலாம்.

உதயணகுமாரகாவியம், நாககுமாரகாவியம், யசோதரகாவியம், நீலகேசி, சூளாமணி போன்ற நூல்களும், அவ்வப்போது எழுதப்பட்ட நீதி நூல்களான நல்வழி, கொன்றைவேந்தன், ஆத்திசூடி, உலகநீதி, நன்நெறி போன்றவையும் தமிழுக்கு உரம் சேர்த்தன.


தமிழுக்கு உரம் சேர்த்த இலக்கிங்களில் நாயன்மார்களின் பக்தி இலக்கியமும் அடங்கும். இத் தொகுப்பை பன்னிருதிருமுறைகள் என்பர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்களும், பெரியபுராணத்தைத் தந்த சேக்கிழார் பெருமான், காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி, போன்ற பலரும் தமிழுக்குப் பக்தி இலக்கியத்தைத் தந்துவிட்டுச் சென்றார்கள். அதேபோல வைஸ்ணவ சமய நூல்களும் இதில் அடங்கும். குறிப்பாக திருவந்தாதி, திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி போன்றவற்றைக் குறிப்பிடலாம். தமிழ் மொழி இன்று செழுமை பெற்றிருப்பதற்குப் பக்தி இலக்கியமும் ஒரு காரணமாகும்.


பிற்காலத்தில் கிறிஸ்துவ மத குருமார்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பல வழியிலும் உதவினார்கள். இவர்களில் முக்கியமாக கால்டுவெல் வின்ஸ்லோ, ஜி.யு.போப், பெஸ்கி போன்றவர்களைக் குறிப்பிடலாம். இத்தாலியரான பெஸ்கி தமிழ் மீது கொண்ட பற்றுக் காரணமாக தனது பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். இவர்தான் தேம்பவாணி என்ற அரும்பெரும் காவியத்தைத் தந்தவர். அந்த வகையில் நபிகள் நாயகத்தின் வரலாற்றைச் சீறாப்புராணம் என்ற பெயரில் தந்த உமறுப்புலவர் பற்றியும் குறிப்பிடலாம்.


முற்காலத் தமிழை அறியத் தொல்காப்பியம், அகத்தியம் போன்ற சங்க இலக்கியங்கள் உதவியது போல, இடைக்காலத் தமிழை அறிய தேவாரம், திவ்யப்பிரபந்தம், சிந்தாமணி போன்ற இலக்கியங்களும், தற்காலத் தமிழை நன்நூலுக்குப் பிற்பட்ட இலக்கியங்களும் எடுத்துக் கூறுகின்றன. இவை எல்லாம் எம்மினத்திற்குக் கிடைத்த அரிய பொக்கிஷங்களாகும்.
புலம் பெயர்ந்த மண்ணில் இன்றைய யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளப் பலர் மறுக்கிறார்கள். தென்னிந்தியாவில் தமிழர் வாழ்ந்த பகுதிகளில் இருந்த வட்டார வழக்கு மொழிகள் எப்படி வேறு மொழிகளாக மாறினவோ, அதேபோல புலம்பெயர்ந்த தமிழ் மொழியும் வேற்று மொழிக் கலப்பால் மாறிவிடச் சந்தர்ப்பங்கள் உண்டு. இந்த மண்ணில் எங்கள் மொழி அழியாது என்று சில தமிழ் அறிஞர்கள் உறுதியாகச் சொன்னாலும், மொழி அழியாமல் இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று அவர்களைக் கேட்டால் அதற்கு அவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள். சிலர் மேடையில் முழங்கிவிட்டுச் செல்வதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். ஒரு மொழி அழிந்து போவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. மக்களின் இடப்பெயர்ச்சி, வேறுமொழிகளின் கலப்பு, காலனி ஆதிக்கம், பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம், இனப்படுகொலை, ஊடகங்களின் அலட்சியம், பெற்றோரின் கவலையீனம், போன்ற பல காரணிகளை இங்கே முக்கியமாகக் குறிப்பிடலாம்.


ஓலைச் சுவடிகளிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் கண்டெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட தமிழ் இன்று கணனி எங்கும் பரவியுள்ளது. எமக்குக் கிடைத்திருந்கும் இந்த நவீன வசதிகளைப் பாவித்து நாம் எமது மொழியை விருத்தி செய்து முடிந்தளவு பாதுகாக்கவேண்டும். வேற்று மொழிகளில் அறிமுகமாகும் புதுச் சொற்களைத் தேவையேற்படின் நாமும் அதற்கேற்ற தமிழ் மொழியில் பாவிக்கப் பழகிக் கொள்வேண்டும். இல்லாவிட்டால் எமது மொழி காலத்தோடு ஒன்றிப் போகாமல் பின்தள்ளப்பட்டுவிடும். எது எப்படியோ எங்கள் மொழியும், எங்கள் இனமும் புலம் பெயர்ந்த மண்ணில் நிலைத்து நிற்கவேண்டுமானால், தமிழ் மொழியை வளம்படுத்தத் துரிதகதியில் சிறந்த நல்ல எதிர்காலத் திட்டங்களை நாம் நடைமுறைப் படுத்தவேண்டும். தமிழ் மொழி செம்மொழியாகத் தொடர்ந்தும் நிலைக்க வேண்டுமானால்;, காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நாங்கள் எங்கள் தாய் மொழியில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி: தமிழர் தகவல்

No comments:

Post a Comment