Tuesday, February 18, 2014

Sleep apnea

பகலில் தூக்கம் வருகிறதா?

(மாலினி)

தூக்கம் என்பது மனிதருக்குத் தேவையானது. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதுபோல தூக்கம் குறைந்தாலும் அல்லது அளவிற்கு அதிகமாகக் கூடினாலும் அது உடல் ஆரோக்கியத்தைப் பாதித்துவிடும். தூக்கத்தை உறக்கம், நித்திரை என்றெல்லாம் சொல்வார்கள். ஊரிலே இப்படியான தூக்கக் குறைபாடுகள் இருந்தாலும் அதை நாங்கள் கவனத்தில் எடுப்பதில்லை. அதன் பின்விளைவுகள் என்ன என்பதையும் நாங்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆனால் மேலை நாடுகளில் ஒருவருடைய நித்திரை சம்பந்தமாக அதிக கவனம் செலுத்து கின்றார்கள். ஒரு குடிமகன் ஆரோக்கியமா இருந்தால் அது நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது என்று அவர்கள் நினைக்கின்றார்கள்.


நித்திரையின்மைக்குரிய அறிகுறிகள் என்ன என்பதை முதலில் பார்ப்போம். மன அழுத்தம், அல்லது கவலை காரணமாக உங்களுக்கு நித்திரை வராமல் போகலாம். அல்லது சோர்ந்துபோய் படுக்கையில் படுத்து அசந்துபோய் தூக்கத்தில் இருக்கலாம். அது மனதில் ஏற்படும் பாதிப்பால், தற்காலிகமாக நடைபெறும் மாற்றங்கள். ஆனால் சிலீப் அப்னியா (Sleep apnea) என்பது நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது உங்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறலால் ஏற்படும் பாதிப்பாகும். இரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது உங்களை அறியாமலே பல தடவைகள் உங்கள் தொடர் சுவாசத்தைச் சரியான முறையில் நடைபெறாமல் தடை செய்யப்படுவதே சிலீப் அப்னியா என்பதாகும். இந்த நோய் இருந்தால், வைத்தியர்களின் கணிப்பின்படி ஆழ்ந்த தூக்கத்தின்போது, சுமார் நூறு தடவைகளுக்குமேல் உங்களுக்கு மூச்சுத் தடைப்படுவதாகக் கருதுகின்றனர்.


இதன் பாதிப்பு உடனே தெரியாவிட்டாலும் காலப்போக்கில் இது அதிகரிக்கும் போது பல உடல் உபாதைகளை எதிர்நோக்க வேண்டிவரும். உங்கள் மூளைக்குச் செல்லும் பிராணவாயு அடிக்கடி தடைப்படுவதால் அதில் உள்ள செல்கள் செயலிழக்க ஆரம்பிக்கும். செல்கள் செயலிழப்பதால் ஞாபகமறதி மெல்ல மெல்ல அதிகரிக்கும். இது பலருக்குத் தெரிவதில்லை. அதற்குரிய முக்கியமான அறிகுறி என்னவென்றால் காலையில் தினமும் தலைவலி, சோர்வு போன்றவை இருக்கும், பகலில் வழமைக்கு மாறாகத் தினமும் தூக்கம் வரும். முன்பெல்லாம் வயது போய்விட்டது அதுதான் மறந்து போனார் என்று ஒருவரது வயதை வைத்து அவரைக் கணிப்பிடுவோம். ஆனால் இன்றைய உலகில் ஞாபகமறதி வயது வித்தியாசம் இல்லாமல் நாற்பது ஐம்பது வயதில் கூடச் சிலருக்கு வரலாம். இதனால் குடும்ங்களுக்குள், இனத்தவர்களுக்குள் எல்லாம் புதிய பிரச்சனைகள் தோன்றலாம். ஞாபகமறதி காரணமாக உங்கள் வேலையில் தவறுகள் ஏற்படலாம். அதனால் வேலையை விட்டுத் தூக்கிவிடலாம்.  மறந்துவிட்டேன் என்று சொன்னாலும் அதற்குரிய காரணத்தைப் பலர் புரிந்து கொள்வதில்லை. இதனால் காரணம் என்னவென்று சொல்லமுடியாமல், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பலர் அவதிப்படுவதை அவதானித்திருக்கிறேன்.


பலராலும் புரிந்து கொள்ள முடியாத இந்த சிலீப் அப்னியா என்ற நித்திரையில் மூச்சுத் திணறல் அல்லது மூச்சுத் தடைப்படுதல் சுமார் 20 கோடி மக்களைப் பாதித்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. தூக்கத்தில் மூச்சுத் தடங்கி நிற்றல், தூக்கத்தில் மைய மூச்சுத் தடங்கி நிற்றல், கலந்த நிலையில் மூச்சுத் தடங்கி நிற்றல் என்று இதை மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்கள். இன்னும் பலர் உடனடிப் பாதிப்பு இல்லாததால், இப்படி ஒரு நோய் இருப்பதை வெளிக்காட்டாமல் இருக்கின்றார்கள். சுமார் 50 விகிதமான இதயநோயாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதைவிட உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும், நீரழிவு நோய் உள்ளவர்களும்கூட இதனால் பாதிபடைந்திருக்கிறார்கள். ஆனால் இதில் உள்ள நல்ல செய்தி என்னவென்றால் காலம் கடத்தாமல் முடிவெடுத்தால், இந்தக் குறைபாட்டை இலகுவில் நிவர்த்தி செய்ய முடியும் என்பதுதான்.
சிலீப் அப்னியா ஒருவருக்கு இருக்கிறதா என்பதற்கான சில பொதுவான அறிகுறிகளை வீட்டில் உள்ளவர்கள் சில சமயங்களில் அவதானிக்கலாம்.

அதற்கான அறிகுறிகள்:
அளவிற்கு அதிகமான பகற்தூக்கம்
அதிகசத்தம் போட்டுக் குறட்டைவிடுதல்
ஆழ்ந்த நித்திரை நேரத்தில் மூச்சுத் திணறுதல்
அமைதியற்ற நித்திரை
அவதானக் குறைவு
மனவழுத்தம்
காலையில் தலைவலி
உயர் இரத்த அழுத்தம்.


அகேனமானவர்களுக்குத் தங்களுக்கு சிலீப் அப்னியா இருப்பதே தெரியாது. அப்படி இருந்தாலும் அதை வேறு நோய் என்று தவறாகப் புரிந்து தவறான மருத்துவம் செய்து கொள்கிறார்கள். பெரிதாகச் சத்தம் போட்டுக் குறட்டை விடுபவர்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பொதுவாக அவர்கள் தூங்கும் போது அவர்களுக்கு அருகே படுத்திருப்பவரால்தான் இதை இனங்காணமுடியும். நீங்கள் சத்தம் போட்டுக் குறட்டைவிடுகின்றீர்களா, பகலில் அடிக்கடி சோர்வாக இருக்கின்றீர்களா, நீங்கள் தூங்கும்போது மூச்சுத் திணறுவதாக யாராவது முறையிட்டார்களா, உங்களுக்கு இரத்த உயரழுத்தம் இருக்கிறதா, உங்கள் கழுத்தின் சுற்றளவு ஆண்களுக்குப் 17 அங்குலத்திற்கு மேற்பட்டதாயும், பெண்களுக்கு 16 அங்குலத்திற்கும் மேற்பட்டதாய் இருக்கிறதா, ஒருவருடைய வயதுக்கேற்ற நிறையைவிட அதிகமாக இருக்கிறீர்களா, அப்படியானால் இதைப்பற்றி உங்கள் குடும்ப வைத்தியருடன் கலந்து ஆலோசியுங்கள்.


இப்படியான அறிகுறிகள் இருந்தால் நீங்கள் உங்கள் குடும்ப வைத்தியரிடம் முறையிட்டால் அவர் அதற்குரிய ஒழுங்குகளைச் செய்வார். இதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் ஓரிரவு உங்களைத் தங்கவைத்து, நீங்கள் தூங்கும்போது (ளுடநநி ளவரனல) அதற்குரிய பரிசோதனைகளைச் செய்வார்கள். உங்களுக்குச் சிலீப் அப்னியா இருப்பதாகக் கண்டறிந்தால் அதற்குரிய (CPAP) காற்று செலுத்தி இயந்திரத்தை (Continuous Positive Airway Pressure) பரிட்சார்த்தமாகக் கொடுத்துப் பரிசோதிப்பார்கள். இரண்டு வாரத்தில் மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் முன்னேற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து சொல்வார்கள். இதற்காக மருந்துகள் எடுக்கவோ அல்லது பொதுவாக சத்திரசிகிட்சை செய்யவோ தேவையில்லை. பலன் கிடைக்கும் பட்சத்தில் நீங்கள் உங்களுக்கான இயந்திரத்தை வாங்கிப் பலனடையமுடியும். இதில் பல விதமான சிறிய இயந்திரங்கள் இருக்கின்றன.

தினமும் படுக்கைக்கு அருகே இதை வைத்துப் பாவிக்க முடியும். முகமூடி போல மூக்கை மட்டும் மூடக்கூடிய வடிவமைப்போடு குழாய்கள் இருக்கின்றன. இவை தேவைக்கு ஏற்ப அளவான காற்றை உள்ளே செலுத்திக் கொண்டிருக்கும். சிலீப் அப்னியா உள்ளவர்களுக்கு உதவும் முகமாக அரசாங்கம் நீங்கள் வாங்கும் இயந்திரத்திற்கான ஒரு பகுதி செலவைத் தான் ஏற்றுக்கொள்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. சிலீப் அப்னியா உள்ளவர்கள் வண்டி ஓட்டும்போது சோர்ந்து போவதால், வீதி விபத்தில் அகப்பட்டுக் கொள்வதும் 15 விகிதம் அதிகமாகவே உள்ளது. எனவே காலம் தாழ்த்தாது மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இருப்பதாகச் சந்தேகப்பட்டால் உடனடியாகக் குடும்ப வைத்தியருடன் கலந்தாலோசியுங்கள். தேவை ஏற்படின் அவர் அதற்கான ஒழுங்குகளைச் செய்து கொடுப்பார். சிலீப் அப்னியா இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் அதனால் வரும் பின்விளைவுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதால் வருமுன் காப்பது சாலச்சிறந்தது.

நன்றி: தமிழர் தகவல் ஆண்டு மலர்

No comments:

Post a Comment