Thursday, March 13, 2014

மலாக்கா - 1 - Malacca - 1

அனுபவம் புதுமை..!

குரு அரவிந்தன்

அயலகம் நோக்கி… (7)

மலாக்கா - 1 - Malacca - 1

மலாக்காவைப் பற்றி ஏற்கனவே அறிந்திருக்கிறேன். குறிப்பாக இதுவும் இலங்கையைப் போலவே போத்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற அன்நியர்களின் ஆட்சிக்குள் உட்பட்டிருந்த இடம் என்பதைப் படித்திருக்கின்றேன். ஹரியும் சுபாவும் மறுநாள் விடுப்பு எடுத்திருப்பதாகவும், மலாக்காவிற்குப் போவோமா என்று கேட்டபோது எனக்கும் அங்கு செல்வதற்கு விருப்பமாக இருந்தது. எனவே நாங்களும் அங்கே சென்று சரித்திரப் பிரசித்தி பெற்ற அந்த இடத்தைப் பார்க்க விரும்பினோம். அதன்படி காலையில் மலாக்கா நோக்கி மோட்டார் வண்டியில் பெருந்தெரு வழியாகப் பயணமானோம்.


தீபகற்ப மலேசியாவில் இருக்கும் பினாங்கு, மலாக்கா மாநிலங்களும், கிழக்கு மலேசியாவில் இருக்கும் சபா, சரவாக் மாநிலங்களும், ஒரு காலத்தில் பிரித்தானியர்களின் தனிப்பட்ட காலனிகளாக இருந்தவை. அதனால்தான்  அவற்றை ஆட்சி செய்யும் தலைவரைக் ‘கவர்னர்’ என்று அழைக்கிறார்கள். அந்த மாநிலங்களின் முதலமைச்சரை ‘கெத்துவா மந்திரி’ என்று அழைக்கிறார்கள். தீபகற்ப மலேசியாவின் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட ஒரே மாநிலமாக திரெங்கான் மாநிலம் திகழ்கின்றது. மலேசியாவிலேயே மிக நீளமான பதினேழு கடற்கரைகள் இம்மாநிலத்தில் இருக்கின்றன. மலாக்கா போலவே பினாங்கிலும் நிறைய இலங்கைத் தமிழர்கள் வசிக்கிறார்கள்.


மலேசியாவிலுள்ள 13 மாநிலங்களில், மூன்றாவது சிறிய மாநிலமாக மலாக்கா இருக்கின்றது. அன்நிய ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால், வரலாற்றுச் சிறப்புகள் பெற்றது. தீபகற்ப மலேசியாவின் தென் பகுதியில் இருக்கும் இதன் தலைநகரம் மலாக்கா பட்டினமாகும். மலாக்காவை உலகப் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக யுனெஸ்கோ நிறுவனம், 2008 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. மலாக்கா மாநிலத்தை மத்திய மலாக்கா, அலோர் காஜா, ஜாசின் என்று மூன்று மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். தென் மேற்கே மலாக்கா நீரிணையும் சுமத்திரா தீவும், வடக்கே நெகிரி செம்பிலான் மாநிலமும் தெற்கே ஜொகூர் மாநிலமும் உள்ளன. மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 148 கி.மீ. தொலைவில் மலாக்கா பட்டினம் அமைந்து உள்ளது. எப்படி இலங்கையில் அந்னியரின் ஆட்சிச் சின்னங்கள் விடப்பட்டனவோ அது போலவே மலாக்காவிலும் பல சின்னங்கள் அவர்களின் ஆட்சியை நினைவு படுத்துகின்றன.


மலேசியாவில் மலாக்கா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலமாகும். 1402 ஆம் ஆண்டு பரமேசுவரா எனும் ஒரு சிற்றரசனால் மலாக்கா நகரம் உருவாக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காகவும், தனதாட்சியை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் இவர் இஸ்லாமிய இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். அதன் காரணமாக இவர் பின்னாளில் இஸ்லாமிய சமயத்தைத் தழுவி தன் பெயரை இஸ்கந்தாரஷா என்று மாற்றிக் கொண்டார். இவருக்கு ஸ்ரீ மகாராஜா என்றும் மற்றொரு பெயரும் உண்டு. இவர்தான் சிங்கப்பூரின் கடைசி மன்னனாகவும் இருந்தவர். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக் என்பதாகும். உள்ளுர் பிரச்சனைகள் காரணமாக இவர் சிங்கப்பூரில் இருந்து மலாக்காவிற்கு சென்று அங்கே தனது ஆட்சியை அமைத்துக் கொண்டதாகத் தெரிகின்றது. சிங்கப்பூரில் இருந்து அரசியல் காரணங்களுக்காக இவர் வெளியேற்றப்பட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள்.


16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் காலனித்துவ ஆட்சியாளர்களாக தென் கிழக்கு ஆசியா நோக்கி வந்த போத்துக்கேயர் மலாக்காவில் காலடி பதித்தார்கள். மெல்ல மெல்ல வேர் ஊன்றிய போர்த்துகேயர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக மலாக்காவில் ஒரு பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார்கள். அந்தக் கோட்டையின் பெயர் ‘ஆ பாமோசா’ என்பதாகும். அந்தக் கோட்டையின் சிதைவுற்ற பாகங்களை இன்றும் மலாக்காவில் பார்க்க முடியும். அவற்றை வரலாற்று நினைவுச் சின்னங்களாகக் கருதி, மலாக்கா வாழ் மக்கள் இன்றும் போற்றிப் பாதுகாத்து வருகின்றார்கள். போத்துக்கேயர்களின் சந்ததியினர் மலாக்காவில் பண்டார் ஹீலிர் எனும் இடத்தில் இன்றும் வாழ்ந்து வருகிறர்கள்.

நாங்கள் மலாக்காவிற்குப் பயணமாகும் போது, ‘கோயிலுக்குப் போக விருப்பமா?’ என்று பாதி வழியில் சுபா கேட்டார். எனது மனைவி முந்திக் கொண்டு ‘ஓ போவோமே, கிட்ட ஏதாவது கோயில் இருக்கிறதா?’ என்று கேட்டார். ‘ஓ இருக்கிறது அந்தக் கோயிலைப் பார்த்தால் நீங்கள் அதிசயப்படுவீர்கள்’ என்று ஹரி சொன்னார். ‘என்னதான் அந்தக் கோயிலில் புதுமையாக இருக்கிறது, பார்ப்போமே’ என்று நானும் சம்மதித்தேன். ‘அப்படி என்றால கட்டாயம் பார்க்கவேண்டி கோயில்தான்’ என்று மகனும் சம்மதித்தார். எனவே எல்லோருடைய விருப்பப் படியும் ஹரி அந்தக் கோயிலை நோக்கி வண்டியைச் செலுத்தினார். வுhசலில் வண்டியை நிறுத்தி உள்ளே நுழைந்த போது வாசலில் நின்ற கோயில் ஐயர் வாங்க வாங்க என்று வரவேற்றார். நான் மேலாடையை நீக்க முயன்றபோது, சட்டையோடு உள்ளே போகலாம், சப்பாத்தை இங்கே கழற்றி விடுங்கள் என்று ஓர் இடத்தைக் காட்டினார். அதன்படியே நாங்கள் நடந்து கொண்டோம்.


உள்ளே சென்றபோது பாலகன் யேசு போல பாலகன் சிவனைக் காணமுடிந்தது. கையில் பால் புட்டியுடன் ஹாயாய் படுத்திருக்கும் பாலகன் சிவனைப் பார்த்ததுமே புதுமையான ஒரு ஆலயம் என்பது புரிந்து போயிற்று. சிவன் மட்டுமல்ல அதை உறுதி செய்வது போல பாலகன் பிள்ளையாரும் சற்றுத் தள்ளப் படுத்திருந்தார். அதனால்தானோ என்னவோ இந்தக் கோயிலை பேபி சிவன் கோயில் என்றும் அழைக்கிறார்கள். இந்த அதிசயமான கோயிலின் சரியான பெயர் சிவ சங்கர வால்முனி வண்ணமுனி ஆலயம் என்பதாகும். கோலாசாவா, உளுசாவா, நிகிரி சாம்பிளான் என்ற இடத்தில் 5601, 5602 ஆம் இலக்கக் காணியில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது. இந்தக் கோயிலுக்குச் செல்வதானால் வடக்குத் தெற்குப் பெரும் வீதி வழியாகப் பயணிக்கும் போது போட் டிக்ஷன் வழியாக வெளியேற வேண்டும். இங்கே தினமும் காலை ஏழு மணிக்கும் மாலை ஏழரை மணிக்கும் இரண்டு நேரப் பூசை நடைபெறுகின்றது. ஆலயக் கட்டிடங்கள் செங்கட்டியால் கட்டப் பட்டிருக்கின்றன. திருப்பணி வேலைகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன. நிதி எப்படிக் கிடைக்கிறது என்று வினாவிய போது பல்வேறு இன, மத மக்களும் இங்கே வந்து வழி படுவதால் அவர்களிடம் இருந்து தாராளமாகக் கிடைப்பதாக ஹரி பதிலளித்தார். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அதிக பக்தர்கள் வருவதாகவும், அருகே உள்ள சீன இனப் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடுவதாகவும்; சொன்னார்கள். முகக்கியமாக அருள்வாக்குப் பெறவே பல்லின மக்களும் பல இடங்களில் இருந்தும் வருகிறார்களாம். பூசாரியின் அருள்வாக்குப் பலிப்பதாகவும் குடும்பச் சச்சரவுகள் தீர்க்கப்படுவதாகவும் பல பக்தர்கள் நம்புகின்றார்கள். இதைவிடத் தீக்குளிப்பது, கத்திமேல் நடப்பது, ஊஞ்சாலில் சகாசம் செய்வது போன்ற நிகழ்ச்சிகளும் நடப்பதுண்டு. ஒவ்வொரு வருடமும் கோயில் பக்தர்கள் இரத்த தானம் செய்கிறார்கள்.


விநாயகர், முருகன், நாகதம்பிரான், துர்க்கையம்மன், காளி, கண்ணகி, புத்தர், சீனப்புத்தர், ஹனுமான், ஸ்ரீசிங்கமுனி, பைரவர், சரஸ்வதி, இலட்சுமி, யேசுநாதர், சீரடிபாபா, சிவலிங்கம், நந்தி, விஷ்னு, கண்ணன் என்று எல்லாவித மக்களும் வழி படக்கூடிய விதமாக இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது. ஊரிலே பார்த்த நாகதம்பிரான் போல இந்தக் கோயிலிலும் நாகதம்பிரானை பார்க்க முடிந்தது. நாகர்கள் வழிபடும் தெய்வம் ஆகையால் இங்கேயும் அவர்கள் குடிபெயர்ந்திருக்கலாம். மிகஉயரமான தெய்வச் சிலைகளைப் பார்ப்பதற்குப் பக்தி உணர்வு ஏற்படுவதற்புப் பதிலாக அழகு உணர்வைத்தான் ஏற்படுத்துகின்றன. குடிபுகுந்த மண்ணில் மதத்தை நிலை நாட்டுவது என்பது கடினமான விடயமாகும். எனவே அந்த மண்ணில் தங்கள் மதத்தைத் தக்கவைத்திருக்கும் அவர்களின் உணர்வுகளைக் கட்டாயம் பாராட்டவேண்டும்.

No comments:

Post a Comment