Thursday, March 13, 2014

தமிழ்நாடு - 2 - Tamil Naadu - 2

அனுபவம் புதுமை..!

குரு அரவிந்தன்

அயலகம் நோக்கி… (14)

தமிழ்நாடு - 2 - Tamil Naadu - 2 


தமிழ் நாட்டைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் சிறிதளவாயினும் அங்குள்ள அரசியற் கட்சிகளைப் பற்றியும், சினிமாத்துறை பற்றியும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அங்கே சினிமாவும், அரசியலும் பொது மக்களின் இரு கண்கள் போல இருக்கின்றன. அரசியலைவிட சினிமா பற்றித்தான் அதிகமானவர்கள் பேசிக் கொள்கிறார்கள். சி;னிமா என்று சொல்லும்போது சின்னத்திரையும் அதற்குள் அடங்கி விடுகின்றது. சமுதாயத்தில் அடிக்கடி பெரிய மாற்றங்களை இவர்களே ஏற்படுத்து கின்றார்கள். அதிக மக்களைச் சென்றடையும் துறையாகத் தமிழ் சினிமாத் துறை அங்கே இருக்கின்றது. அதே போல, அரசியலைப் பிரட்டிப் போடும் சக்தி பல்கலைக் கழக மாணவர்களிடையே இருக்கின்றது. மாணவர்கள் மனசு வைத்தால் எதையும் சாதிப்பார்கள் என்ற பயமும் அங்குள்ள அரசியல் வாதிகளிடையே நிலவுகின்றது. குறிப்பிட்ட ஒரு குழுவினரே அரசியலை மாறிமாறித் தமது கைக்குள் வைத்திருப்பதால் புதுமையாக எதையும் அவர்கள் சாதித்து விடப் போவதில்லை.

தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்கிற நிலை இன்றைய தமிழகத்தில் உருவாகி இருக்கின்றது. சினிமா துறையில் உள்ளவர்களும் அரசியலில் பிரகாசிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் நடிகர் எம். ஜி. ஆர். அவர்களாகும். அரசியல்வாதிகளுக்கே சிறந்த முன்னோடியாக இருந்தவரும் எம். ஜி. ஆர் தான். எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசத்தைத் தொடர்ந்து அரசியலில் குதித்த என். டி. ராமராவ் ஆந்திரா தேர்தலில் நின்று வெற்றிபெற்றார். சுகவீனம் காரணமாக அமெரிக்காவில் படுக்கையில் இருந்த போது தேர்தல் பிரசாரத்திற்கே செல்லாமல் தொகுதியில் நின்று வெற்றிப்பெற்றவர் என்ற பெருமையும் எம். ஜி. ஆர்ருக்கே சாரும். அதே போல சினிமாவில் பிரபல நடிமையாகத் திகழ்ந்த ஜெயலலிதாவும் அரசியலில் நுழைந்து அமோக வெற்றிகளைப் பெற்றார். தொடர்ந்து சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த விஜயகாந்தும் தமிழ் நாட்டின் எதிர்க் கட்சித் தலைவரானார். 2011 ஆம் ஆண்டு  நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்து, தேர்தலில் போட்டியிட்ட இவருடைய கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் தி.மு.க கட்சியைப் பின்னுக்குத் தள்ளி, இவருடைய தேசிய முற்போக்கு திராவிட கழகம் பிரதான எதிர்க் கட்சியாக மாறியது.


திராவிடக் கட்சிகள் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வரவும், சுமார் நாற்பத்தேழு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் நீடிக்கவும் தமிழ்த் திரைப்படங்கள் பெரிதும் உதவியுள்ளன. திராவிடக் கொள்ளைகளைப் பட்டி தொட்டி எல்லாம் பரப்புவதற்குச் சினிமா பெரும் துணையாக நின்றது. அறிஞர் அண்ணாதுரை, மு. கருணாநிதி, எம். ஜி. இராமச்சந்திரன், ஜானகி இராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா என திரைப்படத் துறையுடன் தொடர்புடைய ஐந்து பேர் அரசியலில் குதித்து தேர்தலிலி போட்டி போட்டு வெற்றி பெற்று இதுவரை தமிழ்நாட்டு முதலமைச்சராகவும், நடிகர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவம் பொறுப்பு வகித்துள்ளனர் அக்காலகட்டத்தில் கவிஞர் கண்ணதாசன் போன்றவர்களின் திராவிட எழுச்சிப் பாடல்களும் இவர்களுக்கு உறுதுணையாக அமைந்திருந்தன. 1951இல் கே. பி. சுந்தராம்பாள், தமிழ்நாட்டு மேல்சபையில் உறுப்பினராக்கப்பட்டு, சட்ட சபையில் நுழைந்த முதல் திரைப்படக் கலைஞர் என்ற சிறப்பையும் பெற்றிருந்தார். அரசியல் ஈடுபாடு காரணமாக வேறு சில சினிமா நடிகர்கள் தமிழ் நாட்டில் கட்சிகளைத் தொடங்கினாலும் அவை மக்களிடையே அதிகம் எடுபடவில்லை.


மெரினாவுக்குப் போவோமா என்று கேட்ட போது ‘பார்த்து விட்டோமே’ என்று மனைவி சொன்னார். அருகே சாந்தி திரையரங்கு இருந்ததால் அவருக்குத் திரைப்பட ஞாபகம் வந்திருக்கலாம். மெரினா என்றதும் சினிமா ரசிகர்களுக்கு ஞபகம் வருவது 2012இல் சிவகாத்திகேயனும் ஓவியாவும் நடித்து பாண்டிராஜின் நெறியாள்கையில் வெளிவந்த படமாய்த்தான் இருக்க முடியும். காரணம் விஜே தொலைக்காட்சி மூலம் சிவகாத்திகேயன் பலருக்கும் அறிமுகமானவராக இருந்தார். நான் மனைவியிடம் கேட்டதோ மரீனா பீச் என்று தமிழ் நாட்டில் சொல்லப்படுகின்ற கடற்கரையை நினைவில் வைத்துத்தான் ‘போவோமா’ என்று கேட்டேன். கடற்கரையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. உலகின் நீளமான கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இதன் நீளம் சுமார் பதின் மூன்று கிலோ மீட்டராகும். சென் ஜோர்ச் கோட்டையில் இருந்து பெசன்ட் நகர்வரை இந்தக் கடற்கரை நீண்டு இருக்கின்றது. சராசரி ஆயிரம் அடி வரை அகலமானது. கடல் நீரோட்டத்தில் சுழிகள் இருப்பதால் இங்கே சட்டப்படி நீந்துவதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.  2004 ஆம் ஆண்டு மார்கழி மாதம் காலையில் ஏற்பட்ட ஆழிப் போரலையால் இந்தக் கடற்கரையில் நின்ற சுமார் 200 பேர்வரை காணாமல் போயிருந்தனர்.

அங்கேயிருந்த உணவு வண்டிகள், பலூன்கள், பட்டங்களைப் பார்த்த போது காலிமுகத்திடல் ஞாபகத்தில் வந்தது. மரீனா கடற்கரையில்தான் அண்ணா நினைவாலயம், எம்.ஜி.ஆர். நினைவாலயம், உழைப்பாளர் சிலை, கலங்கரைவிளக்கம் போன்றவை இருக்கின்றன. அண்ணா சதுக்கத்தில் இருந்து பேருந்துக்கள் சென்னையின் பல பாகங்களுக்கம் செல்கின்றன. இதனால் இது உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாகவும் இருக்கின்றது. இதைவிட பாரதியார், பாரதிதாசன், ஒளவையார், கம்பர், இளங்கோவடிகள், திருவள்ளுவர், மகாத்மா காந்தி, வீரமாமுனிவர், விவேகானந்தர், சுபாஸ்சந்திரபோஸ், தந்தை பெரியார், சிவாஜிகணேசன், காமராஜர் ஆகியோரின் சிலைகளும் இங்கே இருக்கின்றன. இங்கே இருந்த கண்ணகி சிலைதான் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாகக் கருதி 2001 ஆம் ஆண்டு அகற்றப்பட்டு, பலரின் எதிர்ப்புக் காரணமாக மீண்டும் 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் அரச அணிவகுப்புக்கள் இங்கே நடைபெறுவதுண்டு.


மரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் இன் நினைவாலயம் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றது. எம்ஜிஆர் ரசிகர்கள் இந்த நினைவாலயத்தை ஒரு கோயில் போலத்தான் பாவிக்கின்றார்கள். மிகவும் துப்பரவாக, அமைதியான இடமாக அந்த இடத்தை வைத்திருக்கிறார்கள். பல்வேறு பாகங்களில் இருந்தும் அவரது ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக நினைவாலயத்தைப் பார்ப்பதற்கு வந்து கொண்டே இருந்தார்கள். அங்கே வந்த உல்லாசப் பயணிகளை அவதானித்தேன். சிலர் அவரது உருவச் சிலைக்கு மலர் வைத்து கிழே விழுந்து கும்பிட்டார்கள். சிலர் கண்கள் கலங்க அவரது உருவச் சிலையைப் பார்த்துக் கொண்டே நின்றார்கள். சோடியாக வந்தவர்கள் அவரது சிலைக்கு இரண்டு பக்கமும் நின்று கொண்டு படம் எடுத்தார்கள். அவர்கள் எல்லாம் உண்மையான ரசிகர்களாக, அவரது பக்தர்கள் போல நடந்து கொண்டார்கள். எம்.ஜி.ஆர். இலங்கையில் உள்ள மலையகத்தில், நாவலப்பிட்டியில் 1917 ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது சிலருக்குத் தெரியாது. எம்.ஜி. ஆருக்கும் ஈழத்தமிழருக்கும் உள்ள உறவு அப்பொழுதே அங்கேயே ஆரம்பமாகிவிட்டது. முதலமைச்சராக இருந்தபோது கடைசிவரை ஈழத்தமிழர் நலனைக் கருத்தில் கொண்டு இதய சுத்தியோடு தன்னை அர்ப்பணித்தவர் இவர். திராவிட கழகத்தில் இணையும்வரை இவர் முருகபக்தராக இருந்தார். இவரைப் பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர், வாத்தியார், இதயக்கனி என்றெல்லாம் ரசிகர்கள் அழைப்பர். சக நடிகையான வி. என். ஜானகியை இவர் திருமணம் செய்திருந்தார். 1987 ஆம் ஆண்டு தனது 70 வது வயதில் எம்.ஜி.ஆர் காலமானாதைத் தொடர்ந்து அவரது இடத்தில் சில நாட்கள் வி.என். ஜானகி முதலமைச்சராகக் கடமையாற்றியிருந்தார். ஆனால் அரசியல் சூதாட்டம் தெரியாததால் அந்தப் பதவியைப் பறிகொடுத்து விட்டார். எம்.ஜி. ஆரின் மறைவுக்குப் பின்புதான் அவருக்கே பாரதரத்னா பட்டம் கிடைத்தது.No comments:

Post a Comment