Thursday, March 13, 2014

Chennai - சென்னை

அனுபவம் புதுமை..! 

குரு அரவிந்தன்

அயலகம் நோக்கி… (12)

Chennai - சென்னை

சிங்கப்பூர் அழகான நகரம். ஆசிய நாடுகளில் இருந்து செல்பவர்களுக்கு அது ஒரு சொர்க்க பூமியாகக் காட்சியளிக்கின்றது. ஏனென்றால் ஆசிய நாடுகளில் அது ஒரு செல்வந்த நாடாக இருக்கின்றது. ஆனால் மேலை நாடுகளில் இருந்து செல்லும் உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடியதாக பெரிதாக ஒன்றும் இல்லை என்றே சொல்ல முடியும். எனவே சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் தமிழ் நாடு நோக்கிப் பயணமானோம். நிறைய தமிழர்கள் தினமும் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கும் சென்னைக்கும் பயணித்துக் கொண்டே இருக்கின்றார்கள். நாங்கள் பயணித்த விமானமும் பயணிகளால் நிரம்பியிருந்தது. முன்பெல்லாம் இலங்கைக்கும் தென்னிந்தியாவில் இருந்து நிறையப் பயணிகள் வருவார்கள். ஒருகாலத்தில் காங்கேசந்துறையில் உள்ள பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கும் திருச்சிக்கும் விமானங்கள் தினமும் சென்று வந்து கொண்டிருந்தன. பலாலி விமான நிலையமும் பார்ப்பதற்கு அழகாக, மிகவும் அழகான பூச்செடிகளால் குறிப்பாக ரோஜாச் செடிகளால் நிறைந்திருந்தது. 


அந்த நாட்களில் பட்டப்படிப்பு படிப்பதற்காகப் பல தமிழ் மாணவர்கள் தென்னிந்திய பல்கலைக் கழகங்களுக்குச் சென்றிருந்தனர். சென்னையிலும் திருச்சியிலும் இருந்த பல்கலைக் கழகங்கள் அவர்களுக்குக் கைகொடுத்திருந்தன. எனது மூத்த சகோதரியும் திருச்சியில்தான் பட்டப்படிப்பை முடித்திருந்தார். ஒவ்வொரு முறையும் விடுமுறையில் வரும் போது கதைப் புதத்தகங்கள் கொண்டு வந்து தருவார். திரும்பிச் செல்லும்போது, சினேகிதிகளுக்காக இடியப்பமும் முட்டைக் கறியும் கட்டிக் கொண்டு செல்வார். அந்தச் சாப்பாட்டிற்கு குறிப்பாக அந்த முட்டைக் கறிக்கு அங்கே அப்போது அதிக வரவேற்பிருந்தது. அந்த நாட்களில் சமைத்த உணவு கொண்டு செல்ல அனுமதித்திருந்தார்கள். இந்த விசேடமான முட்டைக் கறியை எப்படிச் சமைப்பது என்பதைச் சண்டிலிப்பாயில் உள்ள உறவினரிடம் இருந்துதான் அவர் கற்றுக் கொண்டிருந்தார். இதைவிட தலைமன்னாரில் இருந்து தென்னிந்தியாவிற்குக் கப்பலில் சென்று வரக் கூடிய வசதிகளும் அப்போது இருந்தன. எல்லாப் பாகங்களில் இருந்தும் தலைமன்னாருக்குத் தொடர் வண்டிப்பாதைகளின் தொடர்பும் இருந்தன. இதனால் குறைந்த செலவில் செல்ல விரும்பியவர்கள் கப்பல் பாதையைப் பயன் படுத்தினர். யுத்தம் ஆரம்பித்ததால் அந்த வசதிகள் எல்லாம் தடைப்பட்டுப் போயின. இப்போது இலங்கையின் தலைநகரான கொழும்பிற்கு மட்டும் நேரடியாக விமானச் சேவைகள் நடைபெறுகின்றன.


தமிழ் நாட்டின் தலை நகரான சென்னை பட்டினத்தை மற்றாஸ் என்றும் அழைப்பார்கள். மற்றாஸ் கபே என்ற பெயரில் ஒரு படம் கூட வெளிவந்திருந்தது. ஆனால் அரசியல் காரணங்களுக்காகத் தமிழ் மக்கள் அந்தப் படத்தைப் புறக்கணித்திருந்தனர். சமீபத்தில் வெளி வந்த சாருக்கான் தீபிகா படுகோன் நடித்த நகைச்சுவைப் படமான சென்னை எக்ஸ்பிறஸ் உங்களுக்கு ஞாபகம் வரலாம். பண வசூல் விடையத்தில் சக்கை போடு போட்ட படமாக இருந்தது. சத்தியராஜ்யும் நடித்திருந்த இந்தப் படத்திற்கு சுமார் 63 கோடி அமெரிக்க டொலர் வசூல் கிடைத்திருந்தது. சென்னையை அண்மித்துக் கொண்டிருந்தபோது, விமானத்தில் வந்த பணிப்பெண் ஒரு புன்சிரிப்போடு என்னருகே வந்தார். ‘நாட்டிய நாடகம் பார்க்க விருப்பமா?’ என்று என்னிடம் கேட்டார். எனது முகபாவத்திலிருந்து எனது விருப்பம் தெரிந்திருக்க வேண்டும், சாருகானின் நிகழ்ச்சி ஒன்றிற்காக குறைந்த விலையில் நுழைவுச் சீட்டுப் பெறக்கூடிய கூப்பன் இரண்டை என்னிடம் கொடுத்தார். எதற்கும் வலிய வருவதை ஏன் விடுவான் என்று வாங்கிக் கவனமாக வைத்துக் கொண்டேன். விமானம் தரை இறங்கியதும் பிரத்தியேக பேருந்தில் ஏற்றிக் கொண்டு வந்து வாசலில் இறக்கி விட்டார்கள். சுங்க இலாக்காவால் வெளியே வந்து எமது பயணப் பொதிகளுக்காகக் காத்திருந்தோம். கொண்டு வந்த பொதிகளில் ஒரு பொதி குறைவாக இருந்தது. எனவே கடைசிவரை காத்திருந்தோம். அதிகாரிகளிடம் விசாரித்த போது எங்கள் விமானத்தில் அந்தப் பொதி வரவில்லை என்பது தெரிய வந்தது. பொதியில் நான் முகவரியும் தொலை பேசி எண்ணும் குறித்திருந்தேன். இப்படியாகத் தவறிப் போகும் பொதிகள் பொதுவாக அடுத்த விமானத்தில் வரும் என்றும் வந்ததும் அறிவிப்பதாகவும் அதிகாரிகள் சொன்னார்கள். இதனால் மீண்டும் ஒரு முறை விமான நிலையத்திற்குப் போகவேண்டிய வேலை ஏற்பட்டது. நல்ல காலமாக பெட்டியை அடுக்கும்போது உடுப்புகளைப் பகிர்ந்து அடுக்கியதால் தப்பிக் கொண்டோம். மறுநாள் பொதி கிடைத்து விட்டதாகவும், அங்கே வந்து பொதியை எடுத்துச் செல்லுமாறும் விமான நிலையத்தில் இருந்து தகவல் கொடுத்திருந்தார்கள். 


விமான நிலையத்திற்கு, எங்களை வரவேற்கச் சென்னையில் வைத்திய கலாநிதியாக இருக்கும் எனது ஒன்றுவிட்ட சகோதரரும் அவரது மனைவி ஆனந்தியும் வந்திருந்தனர். அவரின் விருப்பப்படியே மவுண்றோட் என்று சொல்லப்படுகின்ற அண்ணா சாலையில்  உள்ள அங்கத்தவர்களுக்கு மட்டுமான விடுதி ஒன்றில் தங்கினோம். சகல வசதிகளும் உள்ள இடமாக அது இருந்தது. குறிப்பாக நாங்களாகவே வெளிக்கிட்டுத் திரியக் கூடிய பாதுகாப்பான இடமாக மட்டுமல்ல, பாதுகாவலர்கள் கடமையில் இருக்கும் இடமாகவும் இருந்தது. சாந்தி திரையரங்கம், ஸ்பென்சர் பிளாஸா, சென்னை எக்ஸ்பிரஸ் மோல் போன்றவையும் மிக அருகே இருந்தன. நாங்கள் தங்கியிருந்த இடத்தில் சிறந்த உணவு வசதிகளும் அங்கேயே கிடைத்தன. மறுநாள் ஸ்பென்ஸர் பிளாசாவிற்குச் சென்றிருந்தோம். முன்பு இருந்த கலகலப்பு அந்த இடத்தில் இப்போது இருக்கவில்லை. ஏனோதானோ என்று வாடிக்கையாளர்கள் வந்து போவது போல இருந்தது. நாங்கள் குறிப்பாகத் தேடிச் சென்ற சில வியாபார நிலையங்கள்; அந்த இடத்தை விட்டு விலகிவிட்டிருந்தன. அண்ணா சாலையில் இருந்து சற்று உள்ளே இருக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் மோல் இப்போது பிரபலமடைந்து வருவதாகச் சொன்னார்கள். இது சென்னையிலே பெரிய அங்காடியாகவும் தென்னிந்தியாவிலே உள்ள இரண்டாவது பெரிய வியாபார அங்காடியாகவும் இருக்கின்றது. இது 900,000 சதுர அடி பரப்பைக் கொண்டது. நிலமட்டத்தின் கீழ் பகுதியில் சுமார் 1500 வண்டிகள் நிறுத்தக் கூடிய வசதிகள் இருக்கின்றன. இதைவிட திரை அரங்கு, ஐந்து நட்சத்திர விடுதி ஆகியனவும் இங்கே இருக்கின்றன. அங்கே சென்ற போது விடுமுறை நாளாக இருந்தாலும், அந்தப் பெரிய அங்காடி மிகவும் கலகலப்பாக இருந்தது. உயர் மட்டத்து இளவட்டங்கள் சந்திக்கும் இடமாகவும், அவர்கள் அங்கே உலா வருவதையும் காணக்கூடியதாக இருந்தது. பணமாற்றுச் செய்வதற்கு வசதியாக வங்கிகளும் அங்கே திறந்திருந்தன.


திரும்பி வரும் போது, சுவர்களில் ஒட்டியிருந்த விளம்பரங்கள் சில என்னைக் கவர்ந்தன. அதில் முக்கியமானது பாலகன் பாலச்சந்திரனுடையது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, தனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைக் கூட அறியாத நிலையில் பசி தாங்கமுடியாமல் யாரோ கொடுத்த சிற்றுண்டியை பசியோடு உண்பது போன்ற அப்பாவித் தனமான பார்வையோடு கூடிய அந்த புகைப்படக் கட்டவுட் மிகப் பெரிதாக எல்லோர் பார்வையையும் கவர்ந்து இழுத்த வண்ணம் இருந்தது. இதைவிட வீதிகள் எல்லாம் இப்படியான சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். வண்டி ஓட்டுனரிடம் விசாரித்த போது சில தினங்களுக்கு முன் மிகப் பெரிய அனுதாப ஊர்வலம் ஒன்று மாணவர்களால் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மிக நீண்ட மௌனத்தின் பின் அந்த மணவர் எழுச்சி இடம் பெற்றதாகவும், எவ்வளவு காலத்திற்கு இது தொடருமோ தெரியாது என்றும் குறிப்பிட்டார். ஆனால் அவர் குறிப்பிட்டது போலவே சில அரசியல் பிரமுகர்கள் நன்மை செய்வது போல அதில் தலையிட்டு எல்லாவற்றையும் குழப்பி அடித்து விட்டார்கள். காலா காலமாய் இப்படியான அரசியல்தான் தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. 

No comments:

Post a Comment