Thursday, March 13, 2014

Crocodile Bank - முதலைகள் காட்சியகம்

அனுபவம் புதுமை..!

(குரு அரவிந்தன்)

அயலகம் நோக்கி… (15)

Crocodile Bank - முதலைகள் காட்சியகம்


தமிழ் நாட்டில் உள்ள சில கோயில்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்று எனது மனைவியும் மகனும் விரும்பியதால் நானும் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கினேன். அடுத்த தலைமுறையினர் இவற்றைப் பார்க்க வேண்டும் என்பதால், முக்கியமாக மகனை இப்படியான இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டவே விரும்பினேன். தமிழ் நாட்டுக் கோயில்களுக்குச் சென்று வந்த நம்மவர்கள் பலர் அங்குள்ள கோயில்களின் பராமரிப்பு பற்றிப் பல முறைப்பாடுகளைச் சொல்லியிருந்தனர். அது அவர்களின் சொந்த அனுபவம் என்பதால் குறைகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பல்வேறு போக்குவரத்து வசதிகள் இருந்ததால் எப்படிச் செல்வது என்று தீர்மானிக்க வேண்டி இருந்தது. மோட்டார் வண்டியில் செல்வதா, மற்றவர்களுடன் சேர்ந்து கூட்டமாகப் பேருந்தில் செல்வதா அல்லது தொடர் வண்டி மூலம் செல்வதா என்றெல்லாம் ஆராயப்பட்டது.

V G P Universal
மோட்டார் வண்டியில் செல்வதால் அதிக நன்மை இருப்பதாக ஆனந்தி அண்ணி எடுத்துச் சொன்னார். அவர்கள்; அங்கே நீண்ட காலமாக இருப்பதால் இப்படியான பயணங்களில் நிறையவே அனுபவப்பட்டிருந்தார். எனக்கும் அதுவே பிடித்திருந்தது. நேரத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்பதாலும், விரும்பிய இடங்களுக்குச் செல்வது மட்டுமல்ல, போதிய நேரம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்பதாலும் நான் மோட்டார் வண்டிப் பயணத்தையே விரும்பி இருந்தேன். எனவே மோட்டார் வண்டியில் செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அவர்களுக்குத் தெரிந்த தனிப்பட்ட ஒருவர் தன்னுடைய வண்டியிலே அழைத்துச் செல்வதாக ஒப்புக் கொண்டார், ஆனால் அவர் கேட்ட தொகை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. எனவே தமிழ்நாடு சுற்றுலா அமைப்பினரிடம் இது பற்றி விசாரித்தோம். அவர்கள் நேரே வந்தால் இலகுவாக இருக்கும் என்று சொன்னார்கள் எனவே நேரே அங்கு சென்று நாங்கள் செல்ல வேண்டிய இடங்களைத் தெரிவு செய்தோம். அவர்களிடம் இருந்த பயண அட்டையில் குறிப்பிட்ட இடங்களில் சிலவற்றுக்கு ஏற்கனவே நான் சென்றிருக்கின்றேன். இதுவரை செல்லாத இடங்களுக்குச் செல்ல விரும்பியதால் எமக்கு ஏற்ற மாதிரி புதிய இடங்களைத் தெரிவு செய்தோம். அதைவிட அனுபவம் உளள்ள ஒரு ஓட்டுனர் வேண்டும் எனவும் கேட்டிருந்தோம். பயணிகளின் பாதுகாப்புக் கருதி இரவிலே பயணம் செய்வதை அவர்கள் தவிர்த்திருந்தார்கள். ஆகவே அதற்கு ஏற்றபடி தினமும் பாதுகாப்பான தங்கும் இடங்களையும் ஏற்பாடு செய்திருந்தோம்.

குறிப்பிட்ட நேரத்திற்கு மறுநாள் காலை புதிய வண்டி ஒன்று வாசலில் வந்து நின்றது. பயணத்திற்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். வண்டி ஓட்டுனர் மிகவும் அனுபவம் கொண்ட இளைஞராக இருந்தார். எங்களுடன் மிகவும் மரியாதையாகப் பழகினார். அங்கே வெய்யில் அதிகமானதால் குளிரூட்டப்பட்ட வண்டியையே நாங்கள் தெரிவு செய்திருந்தோம். நீண்ட பயணங்களின்போது குளிரூட்டப்பட்ட வண்டிகளில் செல்லும்போது பயணக் களைப்புத் தெரிவதில்லை. போகும் வழிகளில் நாங்கள் விரும்பிப் பார்க்கக்கூடிய இடங்கள் ஏதாவது இருந்தால் எங்களுக்குச் சொல்லும்படி நான் அவரிடம் கூறியிருந்தேன். எனவே வண்டி ஓட்டுனர் பயணத்தின் போது அருகே உள்ள புது இடங்களைப் பற்றி அவ்வப்போது தனது கருத்தைச் சொன்னாலும் முடிவெடுக்கும் உரிமையை எங்களிடமே விட்டிருந்தார். முதலில் மாமல்லபுரம் செல்வதாக முடிவெடுத்தோம். சென்னையில் இருந்து மகாபலிபுரம் வழியாகப் பாண்டிச்சேரிக்குச் செல்லும் பெரும்தெரு மிகவும் நல்ல நிலையில் இருந்தது. சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு பெருந்தெரு திணைக்களம் இதை அமைத்திருக்கின்றது. வங்காள விரிகுடாவின் கரையோரமாகச் செல்லும் சுமார் 100 மைல் நீளமான இருவழிப் பாதை கொண்ட இந்த பெரும் தெருவை எஸ். எச் 49 என்று சொல்வார்கள். அதில் பயணிக்கும்போது இலங்கையில் உள்ள ஏ-9 பாதை நினைவில் வந்தது. எத்தனை தடவைகள் உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு அந்த வீதியில் நான் பயணம் செய்திருக்கின்றேன்.

பல வருடங்களுக்கு முன் இலங்கையில் இருந்து நான் சென்ற போது கிழக்குக் கரையோரத் தெரு என்ற பெயரில் இந்தப் பெருந்தெரு இருந்தது. அப்போது ஒவ்வொரு மீன்பிடிக் கிராமங்களைத் தொடுக்கும் சாதாரண பாதையாகவே இருந்தது. இன்று உல்லாசப் பயணிகளைக் கவருவதற்காக நல்ல நிலையில் இந்த வீதிகளைப் பராமரிக்கின்றார்கள். அதனால் விரைவாகவும் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்ல முடிகின்றது.

இப்படியான இடங்களுக்குச் செல்லும் போது சுகாதார வசதிகளோடு கூடிய உணவு வகைகளில் கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாகக் குடி தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். போத்தலில் அடைத்து விற்பனைக்கு வரும் தண்ணீரைப் பாவியுங்கள். இல்லாவிட்டால் போத்தலில் அடைத்த பானங்களைப் பாவியுங்கள். அதைவிட உங்கள் பாதுகாப்பு போன்ற விடையங்களை முக்கியமாகக் கவனத்தில் எடுக்கப்படவேண்டும். முக்கியமாக சில உணவுகளைச் சாப்பிடும் போது உங்களுக்கு அவை ஏற்றவையா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வந்தோரை வரவேற்கும் தமிழ் நாடுதானே என்று கண்டதையும் வாயில் போட்டுக் கொள்ளவேண்டாம். அங்கே அவர்கள் கடலை எண்ணெய்யைத்தான் அதிகம் பாவிப்பார்கள். சுடச்சுட வாய்க்கு ருசியாக இருந்தாலும் சில சமயங்களில் அவை உங்களுக்கு ஒத்துப் போகமாட்டாது. ஏற்காத உணவு வகைகளை உட்கொண்ட பலர் வயிற்றுக் கோளாறு காரணமாகத் திட்டமிட்ட படி தங்கள் பயணத்தையே பல சந்தர்ப்பங்களில் ரத்துச் செய்த கதைகளும் உண்டு. அப்படி அவர்களது வயிற்றுக் கோளாறு காரணமாக அவர்கள் மட்டுமல்ல அவர்களுடன் கூடச் சென்றவர்களும் பயணத்தைத் தெடரமுடியாமற் போய்விட்டது.


பெரும் தெருவில் செல்லும் போது விரும்பினால் உங்கள் நேரத்தைப் பொறுத்துச் சில இடங்களை நீங்கள் பார்த்துக் கொண்டு செல்லலாம். பல கோயில்களும், (VGP Universal Kingdom)  விஜிபி கடற்கரையில் தங்கும் விடுதி, சென்னை பீச்கவுஸ் போன்றவை வழியில் இருக்கின்றன. இந்தப் பெரும் தெருவில் சுமார் 25 மைல்கள் தெற்கு நோக்கிச் செல்லும் போது குறிப்பாக ஊர்வன காட்சியகம் ((Madras Crocodile Bank Trust )  என்று ஒன்று உள்ளது. 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் காட்சியகத்தில், முதலைகள், ஆமைகள், பலவேறு இனப் பாம்புகள் போன்றவற்றை வளர்க்கின்றார்கள். ஆழிப் பேரலையின் போது இந்தக் காப்பகமும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் இதைப் புதுப்பித்திருக்கின்றார்கள். அருகே சென்று பார்ப்பதற்கு வசதிகள் இருக்கின்றன. சுமார் 2500 ஊர்வன இங்கே இருக்கின்றன. இவற்றில் சுமார் 2300 முதலை இனங்கள், சுமார் 150 ஆமையினங்கள், சுமார் 30 பெரிய பாம்பு இனங்களும் அடங்கும்.


ஊர்வன காட்சியகத்தைப் பார்த்துவிட்டு மாமல்லபுரம் நோக்கிச் சென்றோம். கடற்கரையோரமாக வீதி செல்வதால் இயற்கையான கடற்கரைக் காட்சிகளை இரசிக்க முடிந்தது. வெளியே வெய்யில் சுட்டாலும் வண்டியில் குளிரூட்டி இருந்ததால் வெய்யிலின் பாதிப்பு அதிகமாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள கசூர்னா பீச் போலவே இங்கும் சவுக்கம் மரங்கள் கடற்கரை ஓரத்தில் நிறைந்திருக்கின்றன. மாமல்லபுரத்தை அடைந்ததும் வண்டியை பாதுகாப்பான இடத்தில் விட்டு விட்டு நுழைவுச் சீட்டு எடுக்கச் சென்றோம். உள்ளுர் வாசிகளுக்கு விலை குறைவாகவும், வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கு விலை கூடுதலாகவும் நுழைவுச் சீட்டுக்ள் இருக்கின்றன. இப்படியான இடங்களில் இதை நாங்கள் எதிர் பார்த்தே சென்றிருந்தோம். எனவே நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்றோம். முதலில் எங்கள் கண்ணில் பட்டது குன்றின் உச்சியில் இருந்த கண்ணனின் வெண்நெய் உருண்டை என்று சொல்லப் படுகின்ற பந்து போன்ற உருவ அமைப்பைக் கொண்ட பெரியதொரு உருண்டைக் கல்லாகும்.


No comments:

Post a Comment