Thursday, March 13, 2014

Kanchipuram - காஞ்சிபுரம்

அனுபவம் புதுமை..!

குரு அரவிந்தன்

அயலகம் நோக்கி… (17)

Kanchipuram - காஞ்சிபும்

நான் பயணம் செய்த அனேகமான இடங்களில் மிகப்பழையகால அரசபரம்பரையினர் வாழ்ந்த அரண்மனைகளை ஆவலோடு தேடிப் பார்த்தேன். மிகப் பழைய அரண்மனைகளைக் காணமுடியவில்லை. அக்காலத்தில் அரசர்களும் கற்குகைகளில்தான் வாழ்ந்தார்களா, அல்லது அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் எதிரிகளால் அழிக்கப்பட்டு விட்டனவா என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியவில்லை. பல்லவர் காலத்தில் இவ்வளவு அதிசயக்கத்தக்க கற்கோயில்களைக் கட்டியவர்கள் எங்கே வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்த்தேன். சில சமயங்களிளில் அவர்களும் மக்களோடு மக்களாக வாழ்ந்திருக்கலாம். கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட சில அரண்மனைகளை வேறு சில இடங்களில் காணமுடிந்தது. மாமல்லபுரத்தில் உள்ள தருமராசர் மண்டபமும், கொடிக்கால் மண்டபமும் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. நரசிம்மவர்மனால் அமைக்கப்பட்ட பஞ்சபாண்டவர் தேர்கள் ஒரே கல்லில் அமைக்கப்பட்ட கோயிலாக இருப்பது பண்டைக்காலக் கட்டடக் கலையின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது.

திரௌபதியம்மன் தேர் என்றழைக்கப்படும் கோயில் தூங்காணைமாட அமைப்பைச் சேர்ந்ததாகும். பல்லவ மன்னர்கள் தாம் அமைத்த குகைக் கோயில்களில்; துவாரபாலகர், சிவன், விஷ்ணு, லிங்கம், வராக அவதாரம், வாமன அவதாரம், போன்ற சிற்பங்களை அமைத்துள்ளனர். பல்லவர் அமைத்த கோயில்களின் தூண்களும், சுவர்களும், விமானங்களும் கண்கவரும் சிற்பங்களைக் கொண்டதாக இருக்கின்றன. மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் காலத்தில் இவை அமைக்கப்பட்டதாகத் தெரிகின்றது. மகாபலிபுரம் பல்லவரின் சிற்பக்கலைக் கூடமாகவே திகழ்கின்றது. இங்கே உள்ள கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் இயற்கை வனப்புகளையும், அக்காலத்துச் சமூக நிகழ்வுகளையும் ஓரளவு படம்பிடித்துக் காட்டுவதுபோல இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாகவே காணப்படுகின்றன. புடைப்புச் சிற்பங்கள் எனப்படுவன சுவரோடு ஒட்டியபடி சுவரிலிருந்து வெளியே தள்ளிக் கொண்டிருப்பது போன்ற அமைப்பைக் கொண்டவை.


மாமல்லபுரத்தில் உள்ள இன்னுமொரு தனிப்பாறையில் பல்வேறுவிதமான விலங்குகளின் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.  பறவைகள், யானைகள், குரங்குகள், சிங்கம், புலி, மான், அன்னப் பறவை, உடும்பு போன்றவை இந்தப் பாறையில் செதுக்கப்பட்டிருக்கின்றன. அக்காலத்தில் உயிரோடு இருந்த சில மிருகங்கள் பறவைகளாக இவை இருக்கலாம். குரங்குகளில் இரண்டு விதமான குரங்குகளின் உருவங்கள் இருக்கின்றன. பழைய காலத்தில் செதுக்கப்பட்ட சிங்கங்களின் முகங்கள் எல்லாம் இக்காலச் சிங்கங்களின் முகத் தோற்றத்தைவிட வித்தியாசமாக இருப்பதை நான் அவதானித்தேன். இங்கு மட்டுமல்ல நான் சென்ற வேறுபல இடங்களிலும் இப்படியான வித்தியாசமான சிங்கமுக உருவங்களைக் கண்டிருக்கிறேன். இதே போன்ற சிங்க முகங்களைப் புராதன கோயில் தூண்களிலும் அவதானித் திருக்கின்றேன். அங்கே உள்ள பெரியவர்களிடம் இதைப்பற்றி விசாரித்த போது அது ‘நரசிம்ம அவதாரம்’ என்று சொன்னார்கள். நரசிம்ம அவதாரக் கதையைச் சொல்வதாக அந்தத் தூண்கள் அமைந்திருந்தன.  ‘தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’ என்பதைக் குறிப்பதாகச் சொன்னார்கள்.


இயற்கைச் சூழலில் குரங்குகள் அமர்ந்திருக்கும் விதம், மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொரிந்து கொள்ளும் அழகு, யானைகள் நீரோடையில் நீர் அருந்துவது போன்ற காட்சி, குட்டி யானைகள் ஒன்று சேர்ந்து விளையாடுவது போன்ற இயற்கைக் காட்சிகள் மிக அற்புதமாக இந்தக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. கோவர்த்தன சிற்பத் தொகுதி என்று சொல்லப்படுகின்ற இன்னுமொரு பெரிய பாறையில் முல்லை நிலக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. மாடுகள் புல் மேய்வது, பசுக்களில் பால் கறப்பது போன்ற காட்சிகளும் இக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. கோவர்த்தன மலையைக் கண்ணன் குடையாகப் பிடித்திருப்பது போன்ற காட்சிகளையும் இங்கே உள்ள கல்லில் செதுக்கியிருக்கின்றார்கள்.


அங்கிருந்து பார்த்தபோது போது கலங்கரை விளக்கம் கண்ணில் பட்டது. கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் சற்றுத் தூரம் சென்றால், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் என்று ஒரு மண்டபம் இருப்பதா வண்டி ஓட்டுணர் குறிப்பிட்டார். மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் பத்துக் கைகளைக் கொண்ட பெண் தெய்வம், மகிஷாசுரனை வதம் செய்வது போன்ற காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி மிகவும் அழகாகக் கல்லிலே செதுக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சிற்பங்கள் அனேகமாகப் புராணக் கதைகளை எடுத்துச் சொல்வனவாக இருக்கின்றன. கோயில்களிலும் சரி, இங்கே உள்ள கற்குகைகளிலும் சரி மிருகத் தலைகளோடு கூடிய மனித உருவங்கள் நிறையவே சிலை வடிவில் இருப்பதை அவதானிக்க முடிந்தது. மிருகத் தலை என்பது சிற்பிகளின் கற்பனையா அல்லது அப்படியான அதிசய உருவத்தோடு ஒருசில மக்கள் நடமாடினார்களா என்பது தெரியவில்லை.

மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயிலிலே ஒரு கற்சிலை என்னைச் சிந்திக்க வைத்தது. தலை வெட்டப்பட்ட நிலையில் ஒரு மிருகம் கீழோ விழுந்து கிடப்பது போலக் கல்லிலே செதுக்கப்பட்டிருந்தது. அருகே வெட்டப்பட்ட தலை எப்படி விழுந்து கிடக்குமோ அப்படியே வேறு ஒரு கல்லில் செதுக்கப்பட்டிருந்தது. எதிரே துர்க்கை அம்மன் சிங்கத்தில் உட்கார்ந்து இருப்பது போன்ற ஒரு சிலையும் இருக்கின்றது. அப்படியானால் பல்லவர் காலத்தில் கோயில்களிலே மிருகபலி கொடுக்கப்பட்டதா? கல்லிலே செதுக்கப்பட்டிருப்பதால் ஏதோ ஒரு சம்பவத்தை அது குறிப்பதாக இருக்கலாம். இது வெறும் ஊகம்தான், சரி பிழை தெரியவில்லை. இங்கிருந்து வடக்கே சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் சாளுவன் குப்பம் என்ற இடத்தில் புலிக்குகை என்று ஒன்று இருக்கின்றது. பாறையில் பெரிதாகவும் சின்னதாகவும் புலி முகங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு அருகே இன்னும் சில புதைந்து கிடந்த இடங்களை ஆழிப் பேரலையின்பின் கண்டு பிடித்திருக்கிறார்கள். தோண்டி எடுக்கப்பட்ட சில கற்சிலைகளையும், தூர்ந்துபோன அத்திவாரங்களையும் அங்கே காணமுடிந்தது.

 மாமல்லபுரத்துச் சிற்பங்கள் எல்லாம் பரமேஸ்வரப்பல்லவன், மகேந்திரவர்மன், நந்திவர்மப்பல்லவன், விஷ்ணு வர்மன், நரசிம்மன் மற்றும் இராஜசிம்மவர்மன் காலத்தில் உருவாக்கப் பட்டதாகக் கதைகள் கூறுகின்றன. இந்தப் புலிக்குகைக்கும் புலிகேசி மன்னனுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்பது தெரியவில்லை. புலிகேசியுடன் போர் புரிந்து வாட்போரில் அவனைக் கொன்றது, நரசிம்ம வர்மரின் தளபதியான பரஞ்சோதி என்றும், வாதபிப் போருக்குப் பின்னர் இவர் சாமியாராகிச் சிறுதொண்டர் என்ற பெயரில் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவராகி விட்டார் என்றும் சொல்கிறார்கள்.
பல்லவர்களின் காலத்து அரசசின்னமாக நந்தி உருவம் இருந்திருக்கிறது. இவர்கள் காலத்து நாணயத்திலும் நந்திச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.


பல்லவர்களின் சில நாணயங்களில் கப்பல் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கின்றது. வலிமை மிக்க கப்பற்படையை இவர்கள் வைத்திருந்ததைச் சரித்திரம் மட்டுமல்ல, இந்த நாணயங்களும் தெரிவிக்கின்றன. இவர்கள் காலத்தில் காஞ்சிபுரம் தலைநகராக இருந்ததாக சீன வரலாற்று ஆசிரியரான யுவான் சுவாங் என்பவர் தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். காஞ்சிபுரம் புகழ்பெற்ற பாடற்தலமாகவும் இருக்கின்றது. இதைவிட காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்ற இடமாகவும் இன்று இருக்கின்றது. பரம்பரை பரம்பரையாக பட்டுப்புடவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை. ‘காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்’ என்று கவிஞர்கள் கற்பனை செய்து பார்க்குமளவிற்கு அந்தப் பட்டுச் சேலைகள் விலை உயர்ந்தனவாகவும், அழகானவையாகவும் இருக்கின்றன. விதம் விதமான வடிவமைப்பைக் கொண்ட பலவிதமான வண்ணத்தில் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளை அங்கே உள்ள காட்சிச்சாலையில் காணமுடிந்தது, ஆனால் கஸ்தூரிப் பொட்டு வைத்த தேவதைகளைத்தான் எங்கே தேடியும் காணமுடியவில்லை!

(14-03-2014)


No comments:

Post a Comment