Thursday, March 13, 2014

லிட்டில் இந்தியா - Little India

அனுபவம் புதுமை..!

குரு அரவிந்தன்

அயலகம் நோக்கி… (10)

லிட்டில் இந்தியா  - Little India

மலேசிய பயணத்தை முடித்துக் கொண்டு நாங்கள் விமானத்தில் சிங்கப்பூருக்குச் சென்றோம். நெடுஞ்சாலை வழியாகவும் சிங்கப்பூருக்குச் செல்ல முடியும். ஆனாலும் நேரம் கருதி விமானப் பயணத்தை மேற்கொண்டோம். முன்பு மலேசியாவும் சிங்கப்பூரும் ஒன்றாகவே இருந்தன. பின் அரசியல் காரணங்களுக்காக அவை இரண்டு நாடுகளாகப் பிரிந்து விட்டன. உல்லாசப் பயணிகளின் வருகையை அவர்கள் வரவேற்பதால் எந்த ஒரு தாமதமும் இன்றிச் சிங்கப்பூர் விமான நிலையத்தை விட்டு விரைவாக வெளியே வரமுடிந்தது. தென்கிழக்கு ஆசியாவில் மலேசியா நாட்டிற்குத் தெற்கே உள்ள தீவில் சிங்கப்பூர் ஒரு நாடாக இருக்கின்றது.


மலேசியாவையும் சிங்கப்பூரையும் ஜொகூர் நிரணை பிரிக்கின்றது. தெற்கே சிங்கப்பூர் நீரணை சிங்கப்பூரையும் இந்தோனேசியாவின் ரியா தீவுகளையும் பிரிக்கின்றது. தோற்றத்தில் சிறிய நாடான சிங்கப்பூர் சுமார் 272 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. இங்கே சுமார் 5.3 கோடி மக்கள் வாழ்கின்றார்கள். அரசாங்க மொழியாக ஆங்கிலம், மலேய், தமிழ், மன்டரின் ஆகியன இருக்கின்றன. ஜொகூர் சுல்தானிடம் இருந்த சிங்கப்பூர் 1826 இல் பிரித்தானியரின் கட்டுப்பாட்டில் வந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது சிறிது காலம் அதாவது 1942 தொடக்கம் 1945 ஆம் ஆண்டுவரை யப்பானியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. மீண்டும் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்த சிங்கப்பூர் 1963 ஆம் ஆண்டு பிரித்தானிய கட்டுப்பாட்டில் இருந்து விலகி மலேசிய கூட்டாட்சியில் இணைந்து சுதந்திரமடைந்தது. 1965 ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி மலேசியாவில் இருந்து பிரிந்து தனி நாடாகப் பிரகடனப் படுத்கியது. 1965 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் லீகுவான்யூ முதலாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1819 ஆம் ஆண்டளவில் சுமார் 1,000 குடிமக்களே இங்கு குடியிருந்தனர். அதன்பின் இறப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காகப் பல தொழிலாளர் இங்கு கொண்டு வரப்பட்டனர். அதனால் 1870 இல் இறப்பர் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகச் சிங்கப்பூர் மாறியிருந்தது. இன்று சிங்கப்பூர் உலகின் 14வது பெரிய ஏற்றுமதி நாடாகவும் 15வது பெரிய இறக்குமதி நாடாகவும் உள்ளது.


சிங்கப்பூரின் பழைய வரலாற்றை எடுத்து ஆராய்ந்தால், 14 ஆம் நூற்றாண்டிலிருந்து அதன் வரலாறு குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று சரித்திரச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. 14ம் நூற்றாண்டில் அது துமாசிக் என்ற பெயர் கொண்ட நகரமாக இருந்திருக்கிறது. ஒரு காலத்தில் சுமாத்திராவில் இருந்து இயங்கிய ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததாகவும் தெரிகின்றது. சிங்கை தீவில் ஒரு வர்த்தக நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்றும் மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது. சிங்கப்பூர் 63 சிறிய தீவகளைத் தன்னகத்தே கொண்டது.


மலேசியாவோடு வடக்கிலும், மேற்கிலும் இரண்டு மேம்பாலங்களால் தொடுக்கப்பட்டிருக்கின்றது.  சுமார் 250 ஏக்கர் நிலம் மட்டுமே விவசாயத்திற்காகப் பாவிக்கப்படுகின்றது. அந்த நாட்டின் அசுர வளர்ச்சிக்கு நிலப்பரப்பு போதுமானதாக இல்லை என்பதால், கடலில் இருந்து நிலத்தை மீட்கும் திட்டம் ஒன்றை இப்போது அங்கே செயற்படுத்துகிறார்கள். இதன் காரணமாக 1960ல் 224 சதுர மைலாக இருந்த நிலப்பரப்பை தற்போது 272 சதுர மைலாக மாற்றி உள்ளார்கள். 2030ம் ஆண்டளவில் மேலும் 100 சதுர கிலோ மீற்றர் நிலம் மீட்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது அதனால் சிறு தீவுகளை மண் கொண்டு நிரப்பி அவற்றை ஒன்றாக்கி நாட்டின் நிலப்பரப்பை அதிகமாக்குவதற்கு முயற்சி செய்கின்றார்கள். சிங்கப்பூரும் இலங்கையைப் போலவே, அயனமண்டல தட்பவெப்பநிலை உள்ள நாடாகும். ஆண்டு முழுவதும் வெப்பநிலையில் பெரிதாக மாறுதல்கள் ஏற்படுவதில்லை. அதிகளவு ஈரப்பதம், மழைப்பொழிவு இருக்கும். சித்திரை வைகாசி மாதங்கள் மிகவும் வெப்பமான மாதங்களாகவும், கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் மழைக் காலமாகவும் இருக்கின்றன. சராசரி பத்துக் கோடிக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு வருடமும் இங்கே வந்து போகிறார்கள். இதனால் சுற்றுலாப் பயணிகள் மூலம் நல்ல வருமானம் அவர்களுக்குக் கிடைக்கின்றது.


சிங்கப்பூரில் உள்ள மக்களில் 34 வீதமானவர்கள் பௌத்தர்களாகவும், 14 வீதமானவர்கள் முஸ்லீம்களாகவும், 6 வீதமானவர்கள் கத்தோலிக்கராகவும், 5 வீதமானவர்கள் இந்துக்களாகவும், ஏனைய மதத்தவர்கள் சிறு சிறு தொகையினராகவும் இருக்கின்றனர். இவர்களது நாணயம் சிங்கப்பூர் வெள்ளி என்று அழைக்கப்படுகின்றது. சுமார் 1500 சீன, இந்திய நிறுவனங்களின் கிளைகளும், 7,000க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகளும் இங்கே வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. சிங்கப்பூர் உலகின் நான்காது முன்னனி நிதி மையமாக மட்டுமல்ல, சூதாட்டத்திற்கான இரண்டாவது பெரிய சந்தையாகவும் திகழ்கிறது. அதிக பொருட்களை கையாளும் உலகின் முன்னனி துறைமுகங்களில் சிங்கப்பூர் துறைமுகமும் ஒன்றாகும். வணிகம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் மிகக்குறைந்த இடம் என சிங்கப்பூரை உலக வங்கி தெரிவு செய்துள்ளது. இலண்டன், நியுயோர்க், டோக்கியோவிற்கு அடுத்ததாக சிங்கப்பூர் நான்காவது பெரிய வெளிநாட்டு நாணய பரிமாற்று மையமாகத் திகழ்கிறது.


மலாய் குடிமக்கள், சீனர்கள், இந்தியர்கள் போன்றவர்களின் பண்பாடுகள் இந்த நாட்டில் ஓரளவு பின்பற்றப்படுகின்றன. சிங்கப்பூரின் வெற்றிக்கும் அதன் தனித்துவத்துக்கும் அரசாங்கத்தின் சமய, இன நல்லுறவுக் கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 42 வீதமானவர்கள் வெளிநாட்டினராக உள்ளனர். அவர்கள் சிங்கப்பூரின் கலாசாரத்தில் பாரிய செல்வாக்குச் செலுத்துகின்றனர். தமிழ் மொழி அரச மொழிகளில் ஒன்றாக இருக்கின்றது. தமிழர்களின் கடைகளின் பெயர்கள் தமிழில் பெரிதாக எழுதப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. முக்கியமாகத் தமிழர்களின் உணவகங்கள் நிறைந்து வழிவதை அங்கே காண முடிந்தது. சிறாங்கூன் வீதியில் உள்ள பனானாலீவ் அப்பலோ என்ற உணவகத்தில் ஒரு நாள் மதியம் வாழையிலைச் சாப்பாடு சாப்பிட்டோம். இந்திய, இலங்கை உணவுகள் இங்கே கிடைக்கின்றன.


சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி உள்ளது. சிங்கப்பூரில் சுமார் 10 சதவிகிதம் தமிழர்கள் உள்ளனர். அங்குள்ள தமிழர்கள் உள்பட இந்தியர்கள் அனைவரும் பொதுவாக அங்குள்ள லிட்டில் இந்தியா பகுதியில் ஒன்று கூடுவது வழக்கம். மலேசியாவில் இருப்பது போலவே இங்கேயும் ஒரு லிட்டில் இந்தியா இருக்கிறது. சமீபத்தில் லிட்டில் இந்தியா பகுதியில் புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் இறந்து போயிருந்தார். இந்த விபத்துப் பற்றிய செய்தி அங்குள்ள மக்களிடையே பரவவே, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஒன்றுகூடினர். தவறு யார் மீது என்றுகூடத் தெரியாமல் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரத்தின் போது சாலையில் சென்ற வாகனங்களை அடித்து நொருக்கினர். கடமையில் ஈடுபட்டிருந்த போலீசாரும் அப்போது பாதிக்கப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பெயரில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்தது. கைது செய்யப்பட்டவர்ளில் பலர் மது அருந்தி இருந்ததே இந்தக் கலவரத்திற்குக் காரணம் என்று போலீசார் குற்றம் சாட்டியிருந்தனர். விசாரணையின் பின் 56 இந்தியர்களும், வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவரும் உடனடியாக நாடுகடத்தப்பட்டனர். இதையடுத்து லிட்டில் இந்தியா பகுதியில் சில கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு கொண்டு வந்திருந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதி மீண்டும் களைகட்ட தொடங்கி இருந்தது. வழமைபோல தமிழர்களின் திருநாளாம் பொங்கல் திருநாளை லிட்டில் இந்தியாவில் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்ததாகத் தெரிய வருகின்றது. (தொடரும்)

No comments:

Post a Comment