Thursday, March 13, 2014

Maamalapuram - மாமல்லபுரம்

அனுபவம் புதுமை..!

குரு அரவிந்தன்

அயலகம் நோக்கி… (16)

Maamalapuram - மாமல்லபுரம்

அந்தப் பெரிய உருண்டைக் கல் எப்படி அந்த குன்றின் உச்சியில் கீழே விழாமல் நிற்கிறது என்பதே எனக்கு முதலாவது ஆச்சரியமாக இருந்தது. அந்தக் கல்லின் நிழலில் ஆட்டுக் குட்டிகள் சில ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. தாயாடு சற்றுத்தள்ளி இரை மீட்டபடி படுத்திருந்தாலும் அதன் கவனம் முழுவதும் இந்தக் குட்டிகள் மீதே இருந்தது. குன்றில் ஏறி மேலே வந்த இளம் சோடி ஒன்று அந்தக் கல்லை உருட்டித் தள்ளிக் கீழே விழுத்திவிட முயற்சிப்பது போலப் பாவனை செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அங்கே வந்திருப்பது ஒவ்வொரு குழுவினரும் பேசிய மொழியில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. மகாபலிபுரத்தை மாமல்லபுரம் என்றும் அழைப்பதுண்டு. இது சென்னையில் இருந்து தெற்கே சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வங்காளவிரி குடாக் கரையோரமாக இருக்கின்றது. 7 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்து துறைமுகப் பட்டினமாக இது விளங்கியது. சங்ககாலத்தில் சொல்லப்பட்ட தொண்டைநாடு இங்கேதான் இருந்ததாகத் தெரிகின்றது. இப்பகுதியில் நில அகழ்வு செய்தபோது, 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோம, சீன நாணயங்கள் சில மண்ணுக்கடியில் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன.

3 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து ஆட்சி செய்ததாகச் சரித்திர ஆய்வுகளில் இருந்து தெரிகின்றது. அதற்கு ஆதாரமாகப் பல்லவ நாணயங்களும் அப்பகுதியில் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. பல்லவர் காலத்தில் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் அதைத் தொடர்ந்து இராஜசிம்மவர்மன் ஆகிNhரின் காலங்கள் சிறப்பாக இருந்ததாகத் தெரிகின்றது. மல்யுத்த்தில் சிறந்து விளங்கியதால் மாமல்லன் என்ற பெயரும் நரசிம்மவர்மனுக்கு உண்டு. நரசிம்மவர்மன் சிவபக்தனாகவும் இருந்திருப்பதகத் தெரிகின்றது. இக்காலகட்டத்தில்தான் அப்பர், சிறுதொண்டர், திருஞானசம்பந்தர் ஆகியோர் இறைதொண்டு செய்ததாகச் சான்றுகள் கூறுகின்றன. நரசிம்மவர்மனின் தளபதியாக இருந்த பரம்சோதி என்பவர்தான் பின்நாளில் சிறுதொண்டர் என்று அழைக்கப்பட்டார். சாளுக்கிய மன்னனான புலிகேசி மீது படையெடுத்து வாதாபியில் அவனை வெற்றி கொண்ட தளபதியாகப் பரம்சோதி திகழ்ந்தார் என்பதும்  சரித்திர ஆய்வாளர் கருத்தாகும். காரைக்கால் அம்மையார், சேரமான் பெருமாள் ஆகியோரும் இக்காலத்தைச் சேர்ந்தவர்களே. பல்லவர்காலத்தில் கோயில்களில் இசையும், கூத்தும் வளர்க்கப்பட்டதற்கான சான்றுகளை இங்கே உள்ள சிற்பங்களில் இருந்து அறிய முடிகின்றது.

இங்கே உள்ள கற்களால் உருவாக்கப்பட்ட ஐந்து தேர்களை மகாபாரதத்துடன் தொடர்பு படுத்திப் பஞ்சபாண்டவர் தேர்கள் என்று அழைப்பவர்களும் உண்டு. ஆனால் இந்த இரதங்களுக்கு மகாபாரதத்துடன் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இதைவிட பிடாரி இரதம், வலையன் குட்டை இரதம், கணேச இரதம் ஆகியனவும் இங்கே உண்டு. கல்லிலே கலை வண்ணம் கண்டதற்கு மாமல்லபுரம் சிறந்த எடுத்துக் காட்டாகும். சுமார் 100 அடி அகலமானதும், 45 அடி உயரமானதுமான குடைந்து எடுக்கப்பட்ட கற்கோயில்களும் இங்கே உண்டு. இப்பகுதியில் இருந்த சில கற்கோயில்கள் கடல் நீரில் மூழ்கிப் போயிருப்பதைக் காணமுடிகின்றது. நீண்ட காலமாகக் கவனிப்பார் அற்று இப்பிரதேசம் கைவிடப் பட்டிருந்தது. தற்சமயம் ஐக்கிய நாடுகளின் மரபுச் சின்னங்களைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக 1984 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த இடம் கவனமாகப் பாதுகாக்கப்படுகின்றது. இங்கே உள்ள கலங்கரை விளக்கம் 1894 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டு சென்றபோது, வீதி ஓரங்களில் சில கற்சிலைக் கலைக்கூடங்களைக் காணமுடிந்தது. இங்கு சிறிய அளவிலான கற்சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இப்படியான சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்களைப் பார்ப்பதற்காகப் பல இடங்களுக்கும்; பயணித்த போது பாடசாலைப் பிள்ளைகளும் ஆசிரியர்களுடன் அங்கு வந்து இத்தகைய கலைச்சின்னங்களை ஆர்வத்தோடு பார்ப்பதை அவதானித்தேன். எமது முன்னோர்கள் செய்த சாதனைகளைப் பற்றி இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் அந்த ஆசிரியர்கள் மனதாரப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.


மாமல்லபுரத்து கட்டடங்களைக் குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள் என மூன்று பிரிவாகப் பிரித்துப் பார்க்க முடியம். குடைவரைக் கோயில்கள் என்பது பெரிய கற்குன்றுகளைக் குடைந்து கோயில்களாக்குவது. ஓற்றைக்கல் கோயில் என்பது மிகப்பெரிய ஒற்றைக்கல்லைக் குடைந்து இரதம் அல்லது கோயில் போல வடிவமைப்பது. கட்டுமானக் கோயில்கள் என்பது பெரிய கற்துண்டுகளை அழகாகப் பொளிந்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டடங்களைக் கட்டுவது.

மகாபலிபுரத்தில் இருந்ததாகப் பழைய பதிவுகளில் கூறப்பட்டிருக்கும் ஏழு கோயில்கள் அக்காலத்தில் பிரசித்தி பெற்றனவாக இருந்திருக்கின்றன. மார்க்கோபோலோ போன்ற பழைய யாத்திரிகர்கள் தங்கள் நாட்குறிப்பில் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். காலாகாலமாய் கடற்கரை ஓரமாக இருந்ததால் இவற்றில் சில கோயிகளைக் கடல் கொண்டு விட்டது. 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் போது, திடீரென நீர்மட்டம் கூடிக் குறைந்ததால் கடலுக்கடியில் இக்கற்கோயில்களைக் காணக்கூடியதாக இருந்ததாகத் தெரிகின்றது. சிலர் கொடுத்த தகவலின்படி இந்திய கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது கற்கோயில்கள் சிலவற்றைக் கடலுக்கடியில் கண்டிருக்கின்றார்கள். ஆனால் முற்றாக அதற்கான ஆராய்ச்சியில் அவர்கள் தொடர்ந்தும் ஈடுபடவில்லை. இக்கடற்கரைக் கோயில்களை இரண்டாம் நரசிம்மவர்மன் கட்டியதாகத் தெரிகின்றது.


இங்கே உள்ள சுமார் 30 மீட்டர் உயரமும், சுமார் 60 மீட்டர் அகலமும் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட ஒற்றைப்பாறையை அருச்சுனன் தபசு என்று அழைக்கிறார்கள். மனிதர்கள், மிருகங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் இந்தப் பாறையில் காணப்படுகின்றன. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே கையில் ஓர் ஆயுதத்தை ஏந்தியபடி சிவன், பூதகணங்கள் சூழ நின்று, வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அருச்சுனன் சிவனை நோக்கித் தவம் செய்யும் காட்சியா அல்லது பகீரதன் கங்கையை வரவழைப்பதற்காகச் சிவனிடம் தவம் செய்யும் காட்சியா என்பது சரியாகத் தெரியவில்லை. மாமல்லபுரத்தின் அதிசயம் என்றே இந்தச் சிற்பத் தொகுதிகளைக் குறிப்பிடவேண்டும். இந்த ஒற்றைத் திறந்தவெளிப் பாறையில் பல்லவர் காலத்துச் சிற்பிகள் 150-க்கும் மேற்பட்ட அற்புதமான சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர். ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு புராணக்கதையைச் சொல்வனவாக, எங்களை அக்காலத்திற்கு அழைத்துச் செல்வனவாக இருக்கின்றன.


மாமல்லபுரக் குன்றுகளில் நின்ற போது எனக்கு மிகவும் பரிட்சயமான இடமாக இருப்பது போல மாமல்லபுரத்தை உணர்ந்தேன். இது எப்படி என்று கற்பனைக்குச் சிறிது இடம் கொடுத்துப் பார்த்த போதுதான் ஒரு உண்மை புரிந்தது. நான் உலாவந்த அந்த இடத்தில் நின்று பார்த்தபோது, அமரர் கல்கியின் கதாபாத்திரங்களை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்த முடிந்தது. கல்கியின் பார்த்தீபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற நாவல்கள் இங்கே வாழ்ந்த பாத்திரங்களால்தான் நிறைவு பெற்றன. சோழ மன்னன் பார்த்தீபன், மகன் விக்ரமன், பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் கற்பனைப் பாத்திரமான குந்தவை ஆகியோரைக் கல்கியின் வாசகர்களால் மறக்கமுடியாது. பார்த்தீபன் கனவு பல்லவருக்கும் சோழருக்குமான உறவு முறையையும், சிவகாமியின் சபதம் பல்லவர் மன்னன் மகேந்திரவர்மனின் காலமான 7ஆம் நூற்றாண்டையும் எடுத்துக் காட்டுகின்றது. சிவகாமியின் சபதத்து நாயகி சிவகாமி மாமல்லப்புரத்துச் சிற்பி ஆயனரின் மகளாகவும் மாமல்லனின் காதலியாகவும் சித்தரிக்கப்பட்டிருந்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். பொன்னியின் செல்வன் என்ற புதினம் பல்லவருக்குப் பின் மாமல்லபுரத்தை ஆண்ட சோழர் காலத்துச் சம்பவங்களை இத்தகைய பாத்திரங்கள் மூலம் எடுத்துக் காட்டியதும் நினைவிருக்கலாம்.


No comments:

Post a Comment