Thursday, March 13, 2014

Malacca -2 - மலாக்கா - 2

அனுபவம் புதுமை..!

(குரு அரவிந்தன்)

அயலகம் நோக்கி… (8)

Malacca -2 - மலாக்கா - 2

நாங்கள் சிவசங்கர வால்முனி வண்ணமுனி ஆலயத்தில் வழி பாடு செய்து விட்டு மலாக்கா நோக்கி மோட்டார் வண்டியில் பயணமானோம். மலாக்கா நகரத்து சிகப்பு நிறக் கட்டிடங்கள் எங்களை வரவேற்றன. கோலாலம்பூரில் இருந்து மலாக்கா மாறுபட்ட சூழலில் இருந்தது. வண்ண அலங்காரத்தோடு கூடிய சைக்கிள் ரிக்சோக்கள் இப்பொழுதும் அங்கே பாவனையில் இருக்கின்றன. மலாக்கா நகரத்தை 1511இல் போத்துக்கேயரும், 1641இல் ஒல்லாந்தரும், 1824இல் ஆங்கிலேயரும், 1942இல் யப்பானியரும்; தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். 1942ம் ஆண்டு தொடக்கம் 1946 ஆம் ஆண்டுவரை யப்பானின் கட்டுப்பாட்டுக்குள் மலாக்கா இருந்தது. சுமார் 638 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட மலாக்கா 1948இல் மலாயா கூட்டமைப்பில் இணைந்து கொண்டது. இங்கே மலாய்க்காரர்கள் 57 வீதமும் சீனர்கள் 32 வீதமும் இந்தியர்கள் 7 வீதமும் போத்துக்கேயர்கள் 1 வீதமும் மற்ற இனத்தவர் 3 வீதமும் வசிக்கிறார்கள்.


போத்துக்கேயரைத் தொடர்ந்து மலாக்கா வந்த டச்சுக்காரர்கள் மலாக்காவில் பல கத்தோலிக்க ஆலயங்களையும், பள்ளிக்கூடங்களையும், பொது மண்டபங்களையும் கட்டினார்கள். மலாக்காவின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் ‘ஸ்தாடைஸ்’ எனும் சிகப்பு நிறக்கட்டிடத்தைக் கட்டியவர்களும் டச்சுக்காரர்களே. 1511ல் போத்துகேயர்களால் கட்டப்பட்ட ஆ பாமோசா கோட்டையை அவர்களுக்குப் பின்னர் மலாக்காவை ஆட்சி செய்த டச்சுக்காரர்கள் உடைத்து விட முனைந்தபோது, சிங்கப்பூரை உருவாக்கிய சர் ஸ்டான்பர்ட் ராபிள்ஸ் என்பவர் அதை நிறுத்தி அந்தக் கோட்டையை அவர்களிடம் இருந்து காப்பாற்றினார். அவருடைய சுயநலமற்ற செயலை இன்றும் மலாக்கா வாழ் மக்கள் பெருமையுடன் நினைத்துப் பார்க்கின்றார்கள். மலாக்காவின் பிரதான சுற்றுலா மையமாக விளங்கும் மணிக்கூண்டு வளாகத்திலும் சிகப்பு நிறக் கட்டிடங்கள் நிறைய இருக்கின்றன. யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை போன்ற இடங்களில் இருக்கும் கோட்டையின் அமைப்பிலேயே இங்கே உள்ள கோட்டையும் தூர்ந்துபோன நிலையில் அமைந்திருக்கின்றது. காங்கேசந்துறையில் அப்போது பாரம்பரியமாய் வாழ்ந்த உள்ளுர் தமிழ் மக்களின் எதிர்ப்பு காரணமாக இத்தகைய கோட்டை அத்திவாரத்தோடு மேற்கொண்டு அங்கே கட்ட முடியாமல் கைவிடப்பட்டது. யாழ்ப்பாணக் கோட்டைகள் கறுப்பு நிறக் கற்களால் சுண்ணாம்பின் உதவியோடு கட்டப்பட்டவை. சுண்ணக்கல் காங்கேசந்துறைப் பகுதியில் நிறையவே கிடைப்பதும் ஒரு காரணமாகும். உள்நாட்டு யுத்தத்தின்போது எத்தனையோ குண்டு வீச்சுக்களைத் தாங்கியும் அந்தக் கோட்டைகள் அப்படியே நிற்கின்றன. ஆனால் மலாக்காவில் இருந்த கோட்டை சிகப்புநிறச் செங்கட்டிகளால் கட்டப்பட்டிருக்கின்றது. அந்தக் கோட்டை மதில்கள் அதிக பலம் கொண்டவையாகத் தெரியவில்லை. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகையால், மீதியிருக்கும் கோட்டையின் பகுதிகளை அங்கே மிகவும் கவனமாகப் பாதுகாத்து வருகின்றார்கள்.


1824 ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு உடன்படிக்கையின் படி சுமத்திராவில் இருந்த பென்கூலன் என்ற இடம் டச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்குப் பதிலாக மலாக்கா நகரம் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆங்கிலேய வணிக நிறுவனமான பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி மலாக்காவை 1826 இல் இருந்து 1946 வரை நிர்வாகம் செய்தது. அதன் பின்னர் மலாக்காவின் நிர்வாகம் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்தது. 1946இல் நீரிணைக் குடியேற்றப் பிரதேசம் உருவானது. இந்த அமைப்பில் சிங்கப்பூர், பினாங்கு பிரதேசங்களுடன் மலாக்காவும் இணைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மலாயன் யூனியன் என்னும் ஐக்கிய மலாயா அமைப்பின் கீழ் மலாக்கா சேர்க்கப்பட்டது. மலாக்கா மத்திய மாவட்டம், அலோர்காஜா மாவட்டம், ஜாசின் மாவட்டம் என மலாக்கா மாநிலம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் சிறப்பாகச் செயற்பட இப்பிரிவுகள் உதவியாக இருக்கின்றன. மலாக்கா மாநிலத்தின்; மாநில, மாவட்ட பிரதிநிதிகளாக இந்திய வம்சாவழியினரும் இருக்கின்றார்கள்.
இங்கேயுள்ள செயிண்ட் பால் தேவாலயம் போர்த்துகேயத் தலைமை மாலுமி டுவார்த்தே கோயெல்ஹோ என்பவரால் கட்டப்பட்டது.


போர்த்துகேயர்களுக்குப் பின்னர் வந்த டச்சுக்காரர்கள் இந்தத் தேவாலயத்தைக் கல்லறையாக மாற்றி விட்டார்கள். இப்பொது அந்த தேவாலயம் மலாக்கா அரும் பொருள் காட்சியகமாக விளங்குகிறது. இங்கேயுள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயம் 1710இல் டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. செயிண்ட் ஜான் குன்றில் உள்ள செயிண்ட் ஜான் கோட்டையைப் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டச்சுக்காரர்கள் புனரமைப்புச் செய்திருந்தனர். இங்கே அமைந்துள்ள 1753ல் கட்டப்பட்ட கிறிஸ்து தேவாலயம் டச்சுக்காரர்களின் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் தேவாலயமாக இருக்கின்றது. பிரான்சிஸ் சேவியர் தேவாலயம்: பிரென்சு பாதிரியார் பெப்ரே என்பவரால் 1849ல் கட்டப்பட்டது. புகழ் பெற்ற சிகப்புநிற நகரமண்டபம் ஸ்தாடைஸ் ((Stadthuys)  மலாக்காவிலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் குருபோங் எனும் ஒரு சிறு நகரம் இருக்கிறது. இங்கே தான் புகழ்பெற்ற அருள்மிகு சன்னாசிமலை ஆண்டவர் ஆலயம் உள்ளது. இது 150 ஆண்டு காலம் பழைமை வாய்ந்த ஓர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் சன்னாசிமலைத் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுகின்றது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானுக்கு காவடிகள் எடுத்து சிறப்புகள் செய்கின்றனர். இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஏராளமான சீனர்களும் காவடிகள் எடுக்கிறார்கள். சன்னாசிமலைத் திருவிழாவில் சுமார் ஓர் இலட்சம் பக்தர்கள் திரண்டு தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். தற்பொழுது மலாக்காவில் வசித்துவரும் மலாக்கா செட்டி சமூகத்தவர் ஐந்தாவது தலை முறையைச் சேர்ந்தவர்களாவர். மலாக்காவில் குடியேறிய செட்டி சமூகத்தவர் தங்கள் வழிபாட்டிற்காக அப்பகுதியில் சில இந்துக் கோயில்களை அமைத்து வழிபட்டனர். மிகப் பழமை வாய்ந்த சில கோயிகளின் பெயரை இங்கே குறிப்பிடுகின்றேன். சிறீ பொய்யாத விநாயகர் கோவில் (1781) சிறீ முத்து மாரியம்மன் (1822) கைலாசநாதர் சிவன் ஆலயம் (1887)  சிறீ அங்காளம்மன் பரமேசுவரி ஆலயம் ( 1888 ) சிறீ காளியம்மன் ஆலயம் ( 1804 ) இந்த ஆலயங்களை நிர்வகிப்பதற்கு மலாக்கா செட்டிகளிடம் பொருளாதார வலு இல்லாமையால் மலாக்காவில் வசித்துவரும் வசதியுள்ள இலங்கைத்; தமிழர்களரால் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருகிறது.


சாத்தே செலுப் என்னும் சாத்தே உணவு மலாக்காவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரு தென்னை ஓலைக் குச்சியில் (ஈர்க்கில்) நான்கைந்து கோழி இறைச்சித் துண்டுகளைச் செருகி, அவற்றை அனலில் வாட்டி எடுத்து கச்சான் கடலைக் குழம்பில் தோய்த்து விருந்தினருக்குப் பரிமாறுவார்கள். பொதுவாக மலாய்க்காரர்கள் கடல் உணவுப் பிரியர்கள். அவர்களின் ‘ஈக்கான் அசாம் பெடாஸ்’ எனும் புளிப்பு மீன் கறி, சம்பால் பெலாச்சான், செஞ்சாலுக் போன்றவை எல்லா சமூகத்தவரையும் கவர்ந்த உணவாக இருக்கின்றது. இந்த உணவு வகைகள் மலேசியாவிலேயே மிகவும் புகழ் பெற்றவை. நோஞ்ஞா லாக்சா எனும் கறிக் குழம்பும் இவர்கள் விரும்பிச் சாப்பிடும் சுவையான உணவாகும். இவற்றை எல்லாம் எங்களுக்குப் பரிமாறியபோது எதைச் சாப்பிடுவது எதை விடுவது என்ற நிலையில் நாங்கள் இருந்தாலும் அவர்களின் விருந்தோம்பல் பண்பு எங்களை நெகிழ வைத்தது.

No comments:

Post a Comment