Thursday, March 13, 2014

Malaysia -1 - மலேசியா - 1

அனுபவம் புதுமை..! 

குரு அரவிந்தன்


அயலகம் நோக்கி… (6)

Malaysia -1 - மலேசியா - 1


மலேசியாவில் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. சுமார் இரண்டு கோடி சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு வருடமும் இங்கு சுற்றுலா செல்வதாகக் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் தமது ரசனைக்கு ஏற்பத்தான் இடங்களைத் தெரிவு செய்வர். எனவே சில இடங்களை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். நேரம், காலம், வசதி எல்லாம் பொருந்தி இருந்தால் நீங்களும்; மலேசியாவில் பார்க்க விரும்பும் இது போன்ற இடங்களைத் தெரிவு செய்யலாம்.


The Cameron Highlands :  

கமறூன் ஹைலாண்ட் காடுகள் சூழ்ந்த மலைப்பகுதி. இலங்கையின் மலைநாட்டுப் பகுதியில் பயணம் செய்வது போன்ற அனுபவம் கிடைக்கும். முக்கியமாக தேயிலைத் தோட்டங்கள் இங்கே இருக்கின்றன. அதனால் மலே, சீன, இந்திய இனத்தவர்கள் இங்கே வாழ்கிறார்கள். இப்பகுதி பிரித்தானியர்காலத்தில் 1920 களில் முன்னேற்றமடைந்து இன்று உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாக இருக்கின்றது.

Tioman island :
ரெயோமான் தீவு என்பது மலேசியாவின் கிழக்கப் பக்கத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும். 1970 ஆம் ஆண்டு ரைம் பத்திரிகை இந்தத் தீவைச் சிறந்ததொரு உல்லாசப் பயணிகளைக் கவரும் தீவாகத் தெரிவு செய்திருந்தது. சுற்றிவர வெள்ளைநிற சுண்ணக்கற் பாறைகள் அடங்கிய இத் தீவின் உள்பகுதி சிறிய காடுகளைக் கொண்டது.

 Langkawi  :

இந்த லங்காவி என்பது மலேசியாவின் அந்தமான் கடற்பரப்பில் உள்ள உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய ஒரு சிறிய தீவாகும். தாய்லாந்தின் எல்லை ஓரமாக இருக்கின்றது. வெள்ளை மணற் பரப்பைக் கொண்ட இத் தீவின் உள்பகுதிகள் சிறுகாடுகளையும், சிறு குன்றுகளையும் கொண்டது. பலவேறு வகையான உணவகங்களும் இங்கே உண்டு.

Mount Kinabalu :
கினாபாலு மலை போர்ணியோவில் இருக்கின்றது  இந்த மலை 13435 அடி உயரமானது. இச் சுற்றாடலில் சுமார் 600 வகையான பல விதமான மரங்களும், சுமார் 325 வகையான பறவைகளும், சுமார் 100 பாலூட்டி வகைகளும் இருக்கின்றன. மலை ஏறுவதில் பயிற்சி பெறாதவர்கள் கூட இலகுவில் ஏறக்கூடிய வகையில் இந்த மலை அமைந்துள்ளது.

Perhentian Islands  :

 இந்தத் தீவு மலேசியாவின் வடகிழக்குப் பகுதியில் தாய்லாந்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. அதிகம் பணச் செலவில்லாத உல்லாசப் பயணிகளின் இடமாக இது இருக்கின்றது. அழகான வெண் மணற் பரப்பைக் கொண்ட கடற்கரைகளைக் கொண்டது. நீரில் மூழ்கிப் பயிற்சி பெறுபவர்களுக்கும் இது ஏற்ற இடமாக அமைந்துள்ளது.

Mulu Caves :  

 போரணியோ தீவில் உள்ள கணுங்முளு தேசிய புங்காவில் இந்த முளு குகைகள் அமைந்திருக்கின்றன. அடிமட்டத்தில் செல்லும் இந்தக் குகை உலகிலே உள்ள பெரிய குகைகளில் ஒன்றாகக் கணிக்கப்படுகின்றது. மான்களும், பறவைகளும் இரைதேடுவதற்காக வெளியே வருவதைக் காண்பதற்காக இயற்கையை ரசிக்கும் பல உல்லாசப் பயணிகள் இங்கே செல்வதுண்டு.

இந்த இடங்கள் எல்லாவற்றுக்கும் போவதற்கு எங்களுக்குச் சந்தர்ப்பமும் நேரமும் கிடைக்கவில்லை. கனடாவில் உள்ள சீஎன் கோபுரம் போல கோலாலம்பூரில் உள்ள ஒற்றைக் கோபுரத்தை கேஎல் டவர் என்று அழைக்கிறார்கள். வானுயர்ந்து நிற்கும் இந்தக் கோபுரம் வர்ண விளக்குகளின் வெளிச்சத்தில் இரவு நேரங்களில் அழகாகக் காட்சி தருகின்றது. 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. ஜலான் புங்கா என்ற இடத்தில் அமைந்துள்ள இந்தக் கோபுரம் 335 மீற்ரர் உயரம் கொண்டது. தொலை தொடர்பு அன்டனாவின் உயரத்தையும் சேர்த்து 421 மீற்ரர் உயரமானது. 1991 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இதற்கான அத்திவாரம் அப்போதைய மலேசியாவின் நாலாவது பிரதமரான டாக்டர் மகாதீர் கின் மொகமட் என்பவரால் போடப்பட்டது. உல்லாசப் பயணிகளைக் கவரும் கோபுரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. துபாயில் உள்ள அதி உயரமான கோபுரமான பூர்கலிபா கோபுரம் 2722 அடி உயரமானது. கனடாவில் உள்ள சீஎன் டவர் 1815 அடி உயரமானது. இ.ப்படியான கோபுரங்களை ஒவ்வொரு நாட்டிலும் பார்க்கும் போது அந்த நாட்டின் நினைவுச் சின்னங்களாக மனதில் பதிந்து விடுகின்றன.

ரொறன்ரோவில் ஜெராட்வீதியில் லிட்டில் இந்தியா என்று இருப்பதுபோல, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் லிட்டில் இந்தியா என்ற இடங்கள் இருக்கின்றன. ரொறன்ரோவில் கிறீன்வூட் அவெனியுவிற்கும் கொக்ஸ்வெல் அவெனியுவிற்கு மிடையே ஜெராட் வீதியில் இந்த இடம் அமைந்திருக்கின்றது. தெற்காசிய, குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, அப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாட்டு மக்களின் கடைகள் இங்கே இருப்பதல் லிட்டில் இந்தியா என்று இந்த இடத்தை அழைக்கிறார்கள்.. இதே போல கோலாலம்பூரின் மத்தியில் பிறிக்பீல்ட் என்ற இடத்தில் அதிக இந்தியர்களின் வீடுகளும், வியாபார நிறுவனங்களும் இருப்பதால் அந்த இடத்தை லிட்டில் இந்தியா என்று அழைக்கிறார்கள். 1881 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து மலேசிய தொடர்வண்டி நிலைய வேலைக்காக இலங்கைத் தமிழர்களும், அதன் பின் இந்தியத் தமிழர்களும் இங்கு வந்து படிப்படியாகக் குடியேறியதால் இந்த இடம் அந்தப் பெயரைப் பெற்றுக் கொண்டது. ஜலான் ஸ்கொட் என்ற இடத்தில் சுமார் 100 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு கந்தசுவாமி கோயில் ஒன்று அமைந்திருக்கின்றது. இதைவிட சுவாமி விவேகானந்தரின் நினைவு ஆச்சிரமம் ஒன்றும் இங்கே அமைந்திருக்கின்றது. தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய பணக்காரரில் ஒருவராக ஆனந்த கிருஸ்ணண் இங்கேதான் பிறந்து வளர்ந்தது மட்டுமல்ல, இங்கே உள்ள விவேகானந்தாக் கல்லூரியில்தான் கல்வியும் கற்றார். இந்தியாவில் ஒரு சிறிய நகரத்தை எப்படிப் பார்க்கிறோமோ அதே போலத்தான் இந்த லிட்டில் இந்தியா அமைந்திருக்கிறது. ஆனால் துப்பரவாக நடுத்தர வரக்கத்தினருக்கு ஏற்ற இடம் போலக் காட்சி தருகின்றது.


 இந்தியர்கள் அணியும் ஆடைகளைக் கொண்ட கடைகள், இந்தியர்களின் உணவு கைகளைக் கொண்ட உணவகங்கள் போன்ற வற்றை இங்கே காணமுடியும். குறிப்பாகச் சைவ உணவகங்கள், வாழையிலைச் சபப்பாடு போன்றவை குறிப்பிடத்தக்கன. இந்துக்கள் வாழும் நாடுகளில் தீபாவளி பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தியர்கள் அதிகமாக வாழும் மலேசியாவில் அனேகமான இந்துக்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தைச் சிறப்பாக கொண்டாடுகின்றார்கள். லிட்டில் இந்தியாவிலும் தீபாவளி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முக்கிய நகரங்களில் தீபாவளிச் சந்தைகள் விசேடமாக அமைக்கப்படுகின்றன. தொலைக் காட்சிகளிலும் தீபாவளி  கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இந்தியாவில் கொண்டாடுவது போலவே அதிகாலையில் துயிலெழுந்து, எண்ணெய்த் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார்கள். குடும்பமாக பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளையும் வாழ்த்துகளையும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

கடல் வாழ் உயிரினங்களின் காட்சியகம் ஒன்று கோலாலம்பூரின் கொன்வென்ஷன் சென்ரரில் அமைந்துள்ளது. 5000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்தக் காட்சியகம் உலகிலேயே பெரிய கடல் வாழ் காட்சியகமாகக் கணிக்கப்படுகின்றது. சுமார் 150 கும் மேற்பட்ட உள்ளுர் உயிரினங்கள் இங்கே இருப்பதாகத் தெரிகின்றது. ரைக்கர்சாக், புளுறேய்ஸ், கோறல்பிஷ் போன்ற பல கடல்வாழ் இனங்கள் இங்கே காட்சிக்கு இருக்கின்றன. கடல் நீரிலும் நன்னீரிலும் வாழும் உயிரினங்களை வௌ;வேறு பிரிவாக இங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

மறுநாள் வெள்ளிக்கிழமை ஹரியும் சுபாவும் விடுப்பு எடுத்திருந்தார்கள். மலாக்காவிற்புப் போவதற்கு விருப்பமா என்று கேட்டார்கள்.  சில மணி நேரங்கள் வண்டியில் பயணித்தால் அங்கே செல்லாம் என்று குறிப்பிட்டார்கள.


No comments:

Post a Comment