Thursday, March 13, 2014

Singapore 1 - சிங்கப்பூர் -1

அனுபவம் புதுமை..!

குரு அரவிந்தன்

அயலகம் நோக்கி… (11)

Singapore 1 - சிங்கப்பூர் -1

சிங்கப்பூர் டவுன் ரவுண் ஒரு நாளும் இரவில் தூங்கியது கிடையாது என்றே நினைக்கின்றேன். அங்கே இரவு பகல் வித்தியாசத்தை நான் பார்த்ததில்லை. இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் என்ற சினிமாப் பாடலுக்குப் பொருத்தமான இடம் அதுவாகத்தான் இருக்க முடியும். இரவு பத்து பதினொரு மணிக்கு இளவட்டங்களின் குறிப்பாகப் பதும வயதினரின் கூட்டம் அங்கே ஒன்று கூடத் தொடங்கிவிடும். சுற்றி உள்ள பல நாடுகளில் இருந்தும் இளவயதினர் உல்லாசப் பயணிகளாக இங்கே அடிக்கடி வருகின்றார்கள். தென் கொரிய நாட்டு இளம் சோடி ஒன்றிடம் விசாரித்த போது, இரவு பதினொரு மணிக்குத்தான் தங்களுக்கு நாளே தொடங்குவதாகச் சொன்னார்கள். விடிய விடிய எங்கு பார்த்தாலும் பாட்டும் கூத்துமாய்த் தான் இருக்கும். சுப்பசிங்கர் பாடகர்ளான பார்வதி, திவாகர், சையத் ஆகியோர் இங்கே உள்ள மேடையில் தான் சமீபத்தில் தங்களுடைய இசை நிகழ்ச்சியை நடத்தி இருந்தார்கள். வேலாயுதம் படத்தில் நடித்த சினிமா நடிகை ஹன்சிகாவைச் சிங்கப்பூருக்கு அழைத்து ‘கனவுக்கன்னி’ பட்டம் கொடுத்தவர்களும் இங்குள்ள சினிமா ரசிகர்கள்தான். நாங்கள் அங்கே நின்ற போது வேறு இனத்தவர்களின் இசை நிகழ்ச்சி ஒன்று இதே இடத்தில் நடந்தது.

 இரவு நேரத்திலே இங்கு சென்றால் பல்லின மக்களின் நிகழ்ச்சிகளும் மூலைக்கு மூலை விடிய விடிய நடந்து கொண்டிருப்பதைக் காணலாம். அங்கே நின்ற போது இரவிலே உல்லாசப் பயணிகளைக் கவரக் கூடிய பல வித்தியாசமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிந்தது. அப்போது எனக்கு எங்கவூர் சிவராத்திரி நினைவு வந்தது. இரவிரவாக அலைவதற்கு வீட்டிலே அனுமதி கிடைப்பது அந்த ஒரு இரவுதான். கடவுளின் பெயரைச் சொல்லிக் கூத்தடிப்பதும் அந்த ஒரு இரவுதான். நண்பர்களுடன் நடேஸ்வராக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அண்ணாவி வைரமுத்துவின் மயாணகாண்டம் பார்த்து, அதன்பின் காங்கேசந்துறை வீதியில் இருந்த இராஜநாயகி திரையரங்கில் மூன்றாவது காட்சி படம் பார்த்து விடியும் போது கீரிமலைக்கு ஈருருளியில் சென்று தலை மூழ்கித் திரும்பி வந்த அந்த இனிய நாட்கள் மறக்க முடியாதன. பக்தர் கூட்டம் நிரம்பி வழிந்த கீரிமலை இப்போது அநாதரவாய் நிற்பதை எனது பயணத்தின் போது பார்த்த போது யுத்தத்தின் கொடுமை என்வென்று புரிந்தது. யுத்தம் தின்று, விட்ட எச்சம் மட்டும் எங்கள் நினைவுகளில் இன்றும் தேங்கி நிற்கின்றது.


நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து நடந்து செல்லக் கூடிய இடத்தில்தான் சிங்கப்பூர் டவுண்ரவுண் அமைந்து இருந்தது. இரவு நேரத்தில் மிகவும் அழகாக மின் விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தார்கள். அந்த அலங்காரத்தைப் பார்த்த போது, சொர்க்க லோகம் அப்படித்தான் இருக்குமோ என்று எண்ணத் தோன்றியது. அருகே இருந்ததால், நினைத்த நேரமெல்லாம் அங்கு சென்று வருவதற்கு எங்களுக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. நீரோடையில் படகுச் சவாரி செய்தோம். ஹோட்டலுடன் சேர்ந்தபடி பெரிய அங்காடி இருந்தது. இருபத்தி நாலு மணி நேரமும் திறந்திருந்த அந்த அங்காடியில் பல நாட்டு உணவகங்களும் இருந்தன. மக்டொனால் கூட அங்கே இருந்தது. எனவே எங்களுக்கு உணவுப் பிரச்சனை பெரிதாக இருக்கவில்லை. சிங்கப்பூரில் இருக்கும் எனது மனைவியின் சினேகிதி குடும்பத்தினர் ஒரு நாள் எங்களை அழைத்துச் சென்று எங்களுக்கு மதிய விருந்து படைத்திருந்தனர். இப்படியாக எங்கே சென்றாலும் எங்களுக்குப் பிடித்தமான உணவு கிடைத்துக் கொண்டே இருந்தது. அன்று இரவு ஹோட்டலில் உறங்கிவிட்டு மறுநாள் காலையில் எழுந்து சிங்கப்பூரில் உள்ள மிருகக் காட்சி அகத்திற்குச் சென்றிருந்தோம்.


1973 ஆம் ஆண்டு யூன் மாதம் சிங்கப்பூர் மிருகக்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவிலேயே மிகச் சிறந்த காட்சியகமாக இது இருக்கின்றது. சுமார் 70 ஏக்கர் நிலப் பரப்பைக் கொண்டது. இந்தக் காட்சி அகம் அமைக்கப்பட்ட போது இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்த மிருகக் காட்சி அகத்தில் அதிபராக இருந்த லின் டி அல்விஸ் என்பவரின் ஆலோசனை முக்கியமாகப் பெறப்பட்டது. தற்போது சுமார் 1600 மிருகங்கள், பறவைகள் இங்கே இருக்கின்றன. உராங்ஊட்டான் என்ற மனிதக் குரங்குகளும் இந்தக் காட்சியகத்தில் அதிகம் இருக்கின்றன. இதைவிடச் சுற்றிப் பார்ப்பதற்குச் சிறிய தொடர் வண்டிகள் இருக்கின்றன. படகுச் சவாரியும் உண்டு. யானைச்சவாரி, குதிரைச்சவாரி, கோவேறு குதிரைச் சவாரி என்று மிருகச் சவாரிகள் உண்டு. இங்கே வரும் எல்லோருடைய கவனத்தையும் அதிகம் கவருவது பெங்கோல் வெள்ளைப் புலிகளாகும். சாதுவாக அவை இருப்பது போல இருந்தாலும், 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அங்கே தொழில் பார்த்த தொழிலாளி ஒருவரை அவை தாக்கியிருந்தன. இங்கே உல்லாசப் பயணிகளுக்காக இரவுச் சவாரி என்று ஒன்றும் இருக்கின்றது. மிருகங்கள் பறவைகளை விரும்புபவர்கள் இயற்கைச் சூழலில் அவற்றைப் பார்ப்பதற்காக வசதிகள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். வாடகை வண்டிகளை எங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடனே வீதியில் நிறுத்தி அவற்றில் ஏறிச் செல்ல முடியாது. வரிசையாக நின்று எங்கள் முறை வரும் போது தான் அவற்றில் ஏறிச் செல்ல முடியம். சிங்கப்பூர் டவுண்ரவுணில் இருந்து கேபிள்கார் என்று சொல்லப்படுகின்ற மேலால் செல்லும் பெட்டியில் ஏறி அருகே உள்ள தீவுக்குச் செல்லக் கூடிய வசதிகளைச் செய்திருக்கின்றார்கள். அந்தத் தீவில் பல பொழுது போக்குச் சாலைகள் அமைந்திருக்கின்றன. உணவு விடுதிகளும் இருக்கின்றன. அதனால் பல உல்லாசப் பயணிகள் அங்கே வந்து பொழுதைப் போக்குகின்றார்கள். நிறையவே பணம் இருந்தால் நிறையவே செலவு செய்யலாம். வீதிகள் மிகவும் துப்புரவாக இருக்கின்றன. லிட்டில் இந்தியா பகுதிகளில் அனேகமான வியாபரர நிலையங்களில் பெயர்கள் தமிழில் பெரிய எழுத்தக்களால் பொறிக்கப் பட்டிருக்கின்றன.

சிங்கப்பூரின் பொருளாதாரம் பெரிதும் வியாபாரத்தை நம்பியே இருக்கின்றது. பொருளாதார சந்தையில் சிறந்து விளங்கும் நாடுகளான நான்கு ஆசியா புலிகளான ஹோங்காங், தென்கொரியா மற்றும் தைவான் உடன் சிங்கப்பூரும் அப்பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றது. அதனால் சிங்கப்பூர் ஆசியாவில் ஒரு பெருமை மிக்க நாடக விளங்குகிறது. ஆசிய நாடுகளில் அதிகமா எந்நேரமும் செய்யற்பட்டு கொண்டிருக்கும் பகுதி சிங்கப்பூர் ஆகும். அந்நிய செலாவணியை பொறுத்தவரை லண்டன், டோக்கியோ மற்றும் நியூயோர்கிற்கு அடுத்து உலகிலையே நான்காவது சிறந்த வர்த்தக மையமாகும். சிங்கப்பூரின் தேசிய தினம் ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி கொண்டாடப்படுகிறது சிங்கப்பூரின் முதலாவது அதிபராக யூசுப் பின் ஐஸாக் என்பவர் (1965-1970) பதவி ஏற்றார். செல்லப்பன் இராமநாதன் (1999-2011) என்ற தமிழர் சிங்கப்பூரின் ஆறாவது அதிபராகப் பதவியில் இருந்தார். சிங்கப்பூரின் அதிபராக டாக்டர் டோனி டான் கெங் யாம் இப்போது பதவி வகிக்கின்றார்.
இவர் செப்ரம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டு அதிபராகத் தெரிவு செய்யப்பட்டு பதவிக்கு வந்தார். லீ குவான் இயூ சிங்கப்பூரின் முதலாவது பிரமராகக் கடமையாற்றினார். இவர் நீண்ட காலம் பதவியில் இருந்தார். இவர் 1959 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரை பிரதமராகக் கடமையாற்றினார். இவரைத் தொடர்ந்து கோ சொக் தொங் (1990-2004) என்பவர் பிரதமராகக் கடமையாற்றினார். தற்போது பிரதமராக 2004 ஆம் ஆண்டு தெரிவு செய்யப் பட்ட லீசியன் லூங் என்பவர் பிரதமராகக் கடமையாற்று கின்றார். சிங்கப்பூருக்கொன்று தனியாக அவர்கள் விமான சேவையும் நடத்து கின்றார்கள். ஆசியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகச் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) தேர்வு செய்யப்பட்டிருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment