Wednesday, April 23, 2014

Sandilipay United Society-கனடிய தமிழ் சமூகத்தின் எதிர்காலம்கனடிய தமிழ் சமூகத்தின் எதிர்காலம் என்ன?

 குரு அரவிந்தன்


இலங்கையில் இருந்து நாங்கள் தமிழர்களாகத்தான் கனடாவிற்குப் புலம் பெயர்ந்து வந்தோம். உள்நாட்டுப் போர்ச் சூழ்நிலை காரணமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களைப் பூர்வீகமாகக் கொண்ட அனேகமான தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டைவிட்டுப் புலம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை அப்போது ஏற்பட்டிருந்தது. எம்மைப் போலவே அந்த காலகட்டத்தில் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இலங்கைத் தமிழர்கள்; அடைக்கலம் புகுந்தனர். கனடாவில் தஞ்சம் புகுந்தவர்களுக்குக் கனடா முடிந்த வரை எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கின்றது. குறிப்பாகத் தமிழர்கள் தங்கள் சொத்தாக நினைக்கும்  கல்வி வசதிகளைக்கூட கனடா ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. கனடா ஒரு பல்கலாச்சார நாடாக இருப்பது இதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் எந்த இலட்சியத்தோடு தமிழர்களாகிய நாங்கள் நாட்டை விட்டு வந்தோமோ அந்த இலட்சியத்தை மறந்து விட்டோம் என்பதே கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.

கனடாவிற்கு வந்த தொடக்கத்திலே அனேகமானவர்களின் விருப்பமும் ஆர்வமும் எப்படியாவது எங்கள் மொழியையும் இனத்தையும் இந்த மண்ணிலே காப்பாற்றி விடவேண்டும் என்பதாகவே இருந்தது. அதற்கான முயற்சிகளைக் கூடப் பலர் முன்னெடுத்துச் செய்தார்கள், செய்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் போதிய ஆதரவு கிடைக்காததால் நிறைவேற்ற முடியாத நிலையில் பின் தங்கிவிட்டன. கவனமாகத் திட்டம் இடப்பட்டுச் சில சமூக விரோதிகளாலும், எம்மினத்தவர் சிலரின் அலட்சியத்தாலும் காலப்போக்கில் இத்தகைய நல்ல முயற்சிகள் எல்லாம் உடைத்து எறியப் பட்டுவிட்டன. எமது மொழி எமது பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் திட்டமிடப்பட்டே இந்த மண்ணில் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பலரும் அவதானித்திருப்பீர்கள். தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒரு விதத்திலே நாங்கள் ஒவ்வொருவரும் அதற்குக் காரணமாகவும் இருக்கின்றோம்.


சுமார் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் புலம் பெயர்ந்த இந்த மண்ணில் வாழ்கின்றார்கள். 2009 ஆம் ஆண்டு வரையும் சுமார் 5000 மேற்பட்ட பிள்ளைகள் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கல்விச்சபையின் உதவியோடு எடுத்து வந்தார்கள். இதற்கான வசதிகளை இங்கே உள்ள கல்விச் சபைகளே இலவசமாக ஏற்பாடு செய்திருந்தன. இலவசம் என்பதாலோ என்னவோ அந்த வசதிகளைக்கூட எமது பிள்ளைகள் பாவிப்பதில் இப்போது பின் நிற்கின்றார்கள். இன்று தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுக்கும் மாணவர் தொகை வெகுவாகக் குறைந்து விட்டது. கடந்த ஐந்து வருடங்களில் இந்த வீழ்ச்சியை  அவதானிக்க முடிகின்றது. தொடக்கத்தில் தமிழ் மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு தமிழில் கதைக்க, வாசிக்க, எழுதத் தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் இந்தக் குறுகிய காலத்தில் எமது மாணவர்கள் தமிழில் எழுதுவதைப் படிப்படியாக மறந்து விட்டார்கள். அதைத் தொடர்ந்து வாசிப்பை மறந்தார்கள். இன்று குறிக்கப்பட்ட அளவு தமிழ் மாணவர்களால் தமிழில் பேசுவதற்கு மட்டும் முடிகின்றது. ஆயிரம் காரணம் சொல்லித் தங்கள் இனத்திற்குச் செய்ய வேண்டிய கடமையைச் சில பெற்றோர்கள் தட்டிக் கழிக்கப் பார்க்கின்றார்கள். இது அவர்களின் சொந்த விடையம், எப்படியும் வாழலாம் என்ற இன உணர்வு இல்லாதவர்களிடம் நாங்கள் இதை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் ஒரு தலை முறையிலேயே எங்கள் மொழி அழிந்து விடுமோ என்ற பொதுவான பயம் ஏற்படுவது இயற்கையானதே. சமீபத்தில் மலேசியா சென்ற போது ஐந்தாவது தலை முறையினர் அங்கே வெகு சரளமாகத் தமிழ் கதைப்பதைப் பார்த்து அதிசயித்தேன். ஏன் கனடாவிற்கு வந்த எங்களால் மட்டும் இதைச் சாதிக்க முடியாமல் இருக்கின்றது, எங்கே தவறு நடந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்த போது நடைமுறைப் படுத்தலில் உள்ள சிக்கல் புரிந்தது. எல்லா விடையத்தையும் குறிப்பிட்டுச் சொல்லா விட்டாலும் ஒரு சில விடையங்களை மட்டும்; இங்கே குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.

புலம் பெயர்ந்து வந்த மண்ணில் எமது சமுதாயக் கடமைகள் சிலவற்றிலாவது நாம் கவனம் செலுத்தினால் எமது இனம் இந்த மண்ணில் தொடர்ந்து நிலைத்து வாழும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்த மண்ணில் சில இனத்தவர்கள் வேகமாக முன்னேற்றம் காண்பதற்கு அச்சமூகத்தவரின் ஒன்றுபட்டுச் செயலாற்றும் தன்மையும், அவர்களின் அளப்பரிய பங்களிப்புமே காரணமாகும் என்பதை முதலில் நாம் புரிந்து கொளள்ள வேண்டும்;. எமது இனமும் அவ்வாறு முன்னேற்றம் காணவேண்டுமானால், .சமுதாய முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்களும், எமது மொழி, எமது இனத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களும் விரும்பினால் குறிப்பிட்ட சில சமுதாயக் கடமைகளைத் தாமாகவே முன் எடுத்துச் செல்ல முடியும். குறிப்பாக உங்கள் பிள்ளைகளுக்கு ஆர்வம் இருக்கும் பட்சத்தில் அவர்களைக் குறிப்பிட்ட சில துறைகளில் படிப்பதற்கு அவர்களாக முன் வரச்செய்வதற்கு நீங்கள் தூண்டுதல் அளிக்கலாம். தாய் மண்ணில்தான் சில குறிப்பிட்ட துறைகளில் தங்கள் பிள்ளைகளைப் படிப்பிப்பதில் பெற்றோர்கள் பெருமைப்பட்டார்கள். சில பெற்றோர்கள் அத்தகைய கனவுகளோடு இப்பொழுதும் இங்கே இருக்கின்றார்கள். எவ்வளவு பணச் செலவானாலும் கரீபியன் தீவுகளுக்காவது பிள்ளைகளை அனுப்பி அவர்களுக்கு சமூகத்தில் ஒரு கல்வித் தராதரத்தை எடுத்துக் கொடுக்க முனைப்பாக இருக்கின்றார்கள். இவை எல்லாம் குடும்ப நலன் கருதிச் செய்ய முற்பட்டாலும் ஒரு வகையில் சமுதாயத்தின் உயர்வுக்கும் காரணமாகி விடுகின்றது. சமுதாயமும் அதை மனமுவர்ந்து ஏற்றுக் கொள்கிறது. ஏனெனில் அதனால் சமுதாயமும் பலனடைகின்றது. ஆனால் இவை எல்லாம் இங்கே உள்ள எமது சமுதாயத்தைப் பொறுத்த வகையில் குறிப்பிட்ட வட்டத்திற்குள் நின்று விடுகின்றன. அதனால் புலம் பெயர்ந்த இந்த மண்ணில் நிலைமை வேறுபட்டதாக இருக்கின்றது.


இந்த மண்ணிலே எங்கள் இனத்தில் குரல் மேலே ஒலிக்க வேண்டுமானால் அதற்கான குறிப்பிட்ட சில துறைகளில் எமது அடுத்த தலைமுறையினர் நுழைய வேண்டும். குறிப்பாக சமுதாய நலன் கருதி எமது இனத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடக்கூடிய தன்னலமற்ற கல்வியாளர்கள் இந்த மண்ணில் தோன்ற வேண்டும். காலம் தாழ்த்தாது அவர்களை இத்தகைய துறைகளில் உருவாக்கி விட்டால்தான் எமது இனத்தின் எதிர்காலம் இந்த மண்ணில் சிறப்பாக அமையும். பல துறைகள் இருந்தாலும் உடனடியாக எமது சமுதாயத்திற்குப் பலன் தரக்கூடிய சில துறைகளில் எம்மவர்கள் கவனம் செலுத்தினால் இந்த மண்ணிலே எமது இனம் நிலைத்து நிற்கக்கூடிய நல்ல சந்தர்ப்பம் விரைவில் எமக்குக் கிடைக்கும். முக்கியமாக அரசியல் துறை, மக்கள் தொடர்பு சாதனத்துறை, சட்டத்துறை, வர்த்தகத்துறை போன்ற துறைகளில் முக்கியமாகக் கவனம் செலுத்தலாம். எங்கள் இனத்தின் குரல் வெளியே வருவதற்கு முக்கியமாக அரசியலில் ஈடுபாடு அவசியம். ஏனென்றால் இந்த மண்ணில் இறுதி முடிவை அரசியல் வாதிகளே எடுக்கின்றார்கள். அடுத்தாக மக்கள் தொடர்பு சாதனங்கள். எமது குறைகளை வெளியே தெரியப்படுத்த மக்கள் தொடர்பு சாதனங்களில் உயர்ந்த பதவிகளில் நம்மவர் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சர்வதேசத்திற்கு எங்கள் பிரச்சனை என்ன என்பதைத் தொடர்பு சாதனங்கள் மூலம் அவர்களால் எடுத்துச் சென்று மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியும். அடுத்தது சட்டத்துறை. சமுதாய நலன் கருதி இதில் ஈடுபாடு கொண்டால் சட்ட ரீதியான பல அணுகுமுறைகளை எமது இனத்திற்காக மேற்கொள்ள முடியும். இல்லாவிட்டால் எமது இனத்தின் மீது அக்கறை இல்லாத ஒருவருக்குப் பணம் கொடுத்து எமது இனத்திற்காக வாதாடச் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். அவரே எம்மினத்தவராக, பொது நலனில் அக்கறை கொண்டவராக இருந்தால் கூடிய புரிந்துணர்வு உள்ளவராக, உண்மையான பிரச்சனையைப் புரிந்து கொண்டவராக இருக்கலாம். அடுத்ததாக முக்கிய இடம் வகிப்பது வர்த்தகத்துறை. எம்மவர்கள் வர்த்தகத் துறையில் சிறந்து விளங்குவார்களேயானால் அவர்களிடம் இருந்து பொருளாதார உதவிகளை எதிர்பார்க்கலாம்.


எனவே உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் இத்துறைகளில் திட்மிட்டு அடுத்த தலைமுறையினரை உருவாக்கினால் விரைவாக அதன் பலனை எதிர் பார்க்க முடியும். இப்போது ஒவ்வொரு விடையத்திற்கும் நாங்கள் மற்றவர்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டி இருக்கின்றது. அதை நிவர்த்தி செய்ய எமது இனத்தின் எதிர்காலம் சிறப்பாக அமைய பெற்றொர்களே சிந்தியுங்கள், செயற்படுங்கள். சிந்தித்துச் செயற்பட்டால், நாளை நமதே என்ற நம்பிக்கையைப் புலம் பெயர்ந்த இந்த மண்ணில் நிஜமாக்கலாம். மொழி இல்லாமல் இனம் இல்லை. நம் மொழி அழிந்தால் நம் இனமும் அழிந்து விடும் என்பதை நினைவில் கொள்வோமாக!

நன்றி: கலைச்சங்கமம்
              சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றம். 
             கனடா.

No comments:

Post a Comment