Tuesday, April 8, 2014

உயர்ந்த கோபுரங்கள் - Towers

உயர்ந்த கோபுரங்கள் - 1  

(குரு அரவிந்தன்)


மிகவும் உயரமான கட்டிட அமைப்புக்களை நாம் கோபுரம் என்று அழைப்பது வழக்கம். பொதுவாகக் கோயில்களின் வாசலில் கட்டப்பட்டிருக்கும் பிரமீட் வடிவத்தில் உயர்ந்திருக்கும் கட்டிடங்களே தொன்று தொட்டுக் கோபுரங்கள் என்று எம்மால் அழைக்கப்பட்டு வந்தன. கோபுரங்கள் போல, வாழ்க்கையில் உயர்ந்த மனிதர்களையும் பார்த்து அவர்களை எங்கள் வழிகாட்டிகளாக நாங்களும் மதிக்கக் கற்றுக் கொண்டோம். என்னதான் தலைக்கனத்தில் தலை குனிந்திருந்தாலும், வானுயர்ந்த கோபுரங்களைப் பார்க்கும் போது அவர்களை அறியாமலே தலை நிமிர்ந்து விடுகின்றது. அந்த வகையில் எல்லோரையும் நிமிர்ந்து பார்க்க வைக்கும் மகிமை கோபுரங்களுக்கு உண்டு. ஆனால் நவீன கட்டிடக் கலையின் அறிமுகத்தால், கோயில் கோபுரம், மணிக்கூட்டுக் கோபுரம், நினைவுச்சின்ன கோபுரம் என்று பல நாடுகளிலும் பல விதமான உருவங்களில் பல கோபுரங்கள் இன்று உருவாகி இருக்கின்றன.
உல்லாசப் பயணிகளைக் கவரும் முக்கிய சாதனங்களாகவும் அவை இருக்கின்றன. இதனால் பழமை விரும்பிகள் பழைய கோபுரங்களைப் பார்ப்பதிலும், புதுமை விரும்பிகள் நவீன கோபுரங்களைப் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றார்கள். சில கோபுரங்கள் கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் வடிவமைப்பைக் கொண்டவை. சில கோபுரங்கள் தனிக்கட்டிடமாக உயர்ந்து நிற்பவை. சில உருண்டை வடிவமாக உயர்ந்தவை. அகேனமான நாடுகளில் இந்தக் கோபுரங்கள்தான் நகரத்தின் மத்தியில் எளிதில் தெரியும் முக்கியமான காட்சிப் பொருட்களாகவும், அடையாளச் சின்னங்களாகவும் இருக்கின்றன.

பத்தாம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் குறிப்பாகப் பல்லவர் காலத்து காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் கோபுரம் சிறிதாக இருந்தாலும் மிகப் பழைய கோபுரங்களில் இதுவும் ஒன்றாகும். தமிழரின் நீண்டகால வரலாற்றைச் சொல்லும் சின்னமாகவும் இந்தக் கோபுரம் அமைந்திருக்கின்றது.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோபுரங்களைச் சிலர் விமானம் என்றும் அழைப்பர். இதற்குச் சிறந்த உதாரணம் தஞ்சைப் பெரிய கோயில் விமானமாகும். கோபுரம் போல உயர்ந்து நின்றாலும் இதை விமானம் என்றே அழைத்தனர். இவை கருவறைக்கு மேலே உயரமாகக் கட்டப்பட்டதால் இதை விமானம் என்று அழைத்தனர். சோழர் காலத்துக் கட்டிடக் கலையின் உச்சத்தை எடுத்துக் காட்டுவதாக இது போன்ற உயர்ந்த விமானங்கள் அமைந்திருக்கின்றன. ஆனால் பாண்டியர் காலத்தில் குறிப்பாக கி.பி.1100 அளவில் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. விமானத்தையும் விடப் பெரிதாக வாயிலில் கோபுரங்கள் எழும்பத் தொடங்கின. ஒவ்வொரு வழிபாட்டுத் தலத்தையும் பார்த்தோமேயானால், அவை தனித்துவமான கட்டிட அமைப்பைக் கொண்ட கலைத்துவம் மிக்கதாக அமைந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இத்தகைய கோபுர அமைப்புக்களைப் பார்த்து அந்த நாட்களில் குறைந்த வசதிகளோடு எப்படி இந்தக் கோபுரங்களை அமைத்தார்கள் என்று நான் சிலசமயம் வியப்பதுண்டு.


சின்ன வயதிலே என்னை வியக்க வைத்த மூன்று கோபுரங்கள் இப்பொழுதும் என் நினைவை விட்டு அகலாமல் நிற்கின்றன. முதலாவது தினமும் நான் கடந்து செல்லும்போது என் கண்ணில் பட்டு என்னைப்  பரவசமாக்கிய மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் கோபுரம். இரண்டாவது காங்கேசந்துறைக் கடற்கரையில் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் வெள்ளைக் கொக்குப் போல உயர்ந்து நிற்கும் கலங்கரை விளக்கம். மூன்றாவது யாழ்ப்பாண நகரத்தில் கோட்டை மைதானத்திற்கு அருகே எல்லோரையும் நிமிர்ந்து நேரம் பார்க்க வைக்கும்; மணிக்கூட்டுக் கோபுரம். பல கோபுரங்களைப் பின்நாளில் நான் பார்த்திருந்தாலும் மனதைவிட்டு அகலாமல் இவை இன்றும் பசுமையாக நினைவில் நிற்கின்றன. நான் தவழ்ந்த மண் உயர் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் எங்களிடம் இருந்து பறித்தெடுக்கப் பட்டாலும், அந்த வலி தரும் வேதனையிலும் இந்தப் பழைய நினைவுகள் மனதுக்கு ஆறதல் தருவதாய், எனக்குள் ஓரளவு நிம்மதியைத் தருகின்றன.

எனவேதான் எமது அடுத்த தலைமுறையினர் சரித்திரப் பின்னணி கொண்ட இக்கோபுரங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு, முதலில் இந்த இதழில் இவற்றைப் பற்றி ஆவணப்படுத்த விரும்புகின்றேன். தமிழர்களாகிய நாம் விடுகின்ற பெரிய பிழை என்னவென்றால் எதையுமே அலட்சியத்தோடு ஆவணப்படுத்தத் தயங்குவதேயாகும். நம் முன்னோர்கள் இத்தகைய அலட்சியத்தோடு பல விடையங்களைத் தகுந்த முறையில் ஆவணப்படுத்தத் தயங்கியதால்தான்; இன்று எமது இனம் அடையாளம் அற்றவர்களாய் எமக்கான பலவற்றை இழந்தது நிற்கின்றது.நன்றி: தமிழர் தகவல்

உயர்ந்த கோபுரங்கள் - 2 (குரு அரவிந்தன்)
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் கோபுரம்.

நான் தினமும் தரிசித்த கோபுரம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் கோபுரமாகும். இலங்கையில் உள்ள திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த ஒரு திருத்தலமாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் மேற்குக் கோபுர வாசலில் அதாவது யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் இந்தப் புராதன ராஐகோபுரம் வானளாவி நிற்கின்றது. ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரை என்பது போல அந்தச் சுற்று வட்டாரத்தில் அன்று இதுவே உயர்ந்த கோபுரமாக இருந்தது. கோபுர வாசலில் நின்று பிரார்த்திக்கும் போது, மனதில் ஒருவித அமைதியை ஏற்படுத்தி ஆத்மீகப் பாதையில் மனதை நல்வழிப்படுத்த இந்தக் கோபுரம் பெரிதும் உதவியாக இருந்தது. கோபுரவாசலுக்குச் சற்றுத்தள்ளி காங்கேசந்துறை வீதி ஓரத்தில் ஒரு மகிழமரம் எப்பொழுதும் சுகந்த மணம் பரப்பிக் கொண்டே இருக்கும். நடேஸ்வராக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் திருவிழாக் காலங்களில் சாரணர் தன்னார்வத் தொண்டர்களாகவும், மகாஜனாக் கல்லூரியில் உயர் வகுப்பில் படிக்கும் காலங்களில் கல்லூரித் திருவிழாவின் போது உபயகாரர்களின் ஒரு மாணவப் பிரதிநிதியாகவும் கலந்து கொண்ட அனுபவங்கள் மனதைவிட்டு அகலாதவை. தேர் திருவிழா காலங்களில் சுற்று வட்டாரங்களில் இருந்து பக்தர் கூட்டம் நிரம்பி வழியும். அப்பொழுதெல்லாம் இதை ஒரு வழிபாட்டுத் தலமாகத்தான் நான் நினைத்தேன். ஆனால் அதன் பின்னால் எம்மோடு இணைந்த ஒரு சரித்திரமே இந்த ஆலயத்திற்கு இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியவர் அப்போது மகாஜனாக் கல்லூரி ஆசிரியராக இருந்த தமிழருவி திரு. த. சண்முகசுந்தரம் அவர்களாகும். சுற்று வட்டத்தில் உள்ள கோயில்களைப் பற்றி அவர் ஆவணப்படுத்த முனைந்தபோது அவரது மாணவன் என்ற வகையில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்கு வடக்கே குரு வீதியில் அமைந்திருந்த குருநாதசுவாமி கோயில் பற்றியும், அதன் அருகே சற்று வடக்குப் பக்கத்தில் இருந்த தொன்மை வாய்ந்த கேணியோடு அமைந்த நாச்சிமார் கோயில் பற்றிய குறிப்புக்களையும் புகைப்படங்களையும் சேகரித்துக் கொடுத்திருந்தேன். போர்ச் சூழல் காரணமாக நூல் வடிவில் அவை வெளிவந்தனவா, உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் அந்தக் கோயில்கள் அகப்பட்டுக் கொண்டதால் அந்தக் கோயில்கள் இன்றும் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.

காங்கேசந்துறைத் தேர்தல் தொகுதியில் மாவிட்டபுரம் முக்கிய இடம் வகிக்கின்றது. காங்கேசந்துறை, கீரிமலை, மாவிட்டபுரம், பலாலி எல்லாம் இந்தச் சுற்று வட்டத்திற்குள் அடங்கும். இவற்றில் முதலாவது இறங்கு துறையாகவும், அடுத்த இரண்டும் வழிபாட்டுத் தலங்களாகவும், பலாலி ஒரு விமானத் தளமாகவும் விளங்கியது. சோழர் குலத்து இளவரசியான மாருதப்புரவீகவல்லிக்கு ஏற்பட்ட குதிரை முகநோய் காரணமாக மருத்துவம் தேடி இங்கே வந்து வழிபட்டதாகவும், அதனால் பூரண குணமடைந்ததாகப் பூர்வீகக் கதை உண்டு. ஆதிமூலத்தில் வேல் மட்டுமே இருந்ததாகவும், அதனாலே இளவரசி மாருதப்புரவீகவல்லி சோழ நாட்டில் இருந்து முருகன் விக்கிரகத்தை இங்கே வரவழைத்துக் கோயில் கட்டிப் பூஜித்ததாகவும் தெரிகின்றது. குதிரைக்கு மா என்ற பெயரும் உண்டு. எனவே குதிரை முகம் விடுபட்ட இடம் என்பதால், மா விட்ட புரம் என்று இந்த இடத்திற்குப் பெயர் வந்தது. முருகனுக்குக் காங்கேயன் என்ற பெயரும் இருப்பதால், காங்கேயனின் விக்கிரகம் வந்து இறங்கிய துறையைக் காங்கேயன்துறை என்று அழைப்பர். போர்த்துகேயர் இலங்கையை ஆண்டபோது,  மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் பாதிக்கப்பட்டாலும் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் மீண்டும் ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டது.

இதற்கான புதிய விக்கிரகங்கள் சிதம்பரத்திலே இருந்து வருவிக்கப்பட்டு உரிய முறையிலே பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து கி.பி 1795 ஆம் ஆண்டு ஆனி உத்தர நட்சத்திரத்தில் மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. மூன்று சுற்று வீதிகளைக் கொண்ட இந்த ஆலயத்தில் நித்திய பூசைகள் இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆடி அமாவாசையை அந்தமாகக் கொண்டு மகோற்சவம் இருபத்தைந்து தினங்களுக்கு இங்கே இடம் பெறுகின்றது. தேர்த்திருவிழா அன்று ஐந்து தேர்களில் சுவாமி வீதி வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான நகுலேஸ்வரம் அருகே உள்ள கீரிமலையில் அமைந்துள்ளதால் தீர்த்தத் திருவிழாவான ஆடி அமாவாசை அன்று முருகன் கீரிமலைக்குச் சென்று அங்கே தீர்த்தமாடுவது வழக்கமாக உள்ளது.


உயர்ந்த கோபுரங்கள் - 3 (குரு அரவிந்தன்)
கலங்கரை விளக்கம்


வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்தவர்களை மட்டுமல்ல, உயர்ந்து நிற்கும் கோபுரங்களையும் நான் மதிப்பவன் என்பதால் உயர்ந்த கோபுரங்களில் அடுத்ததாக மனதில் இடம் பிடித்தது காங்கேசந்துறையில் (9° 48′ 57.38″ N 80° 2′ 46.57″ E)  உள்ள கலங்கரை விளக்கமாகும். மாணவர்களாக இருந்த காலத்தில் குரு வீதியில் உள்ள குரு விளையாட்டுக்கழக மைதானத்தில் நாங்கள் விளையாடிவிட்டு நண்பர்கள் எல்லோரும் துவிச்சக்கரவண்டியில் கடற்கரைக்குச் சென்று சற்று நேரம் அமர்ந்திருந்து பலதும் பத்தும் கதைப்பதுண்டு. கப்பல் வந்திருக்கும் நாட்களில் காங்கேசந்துறைக் கடற்கரை மிகவும் பரபரப்பாக இருக்கும். அப்பொழுதெல்லாம் காங்கேசந்துறைத் துறைமுகம் கலங்கரை விளக்கத்திற்கு அருகே, கிழக்குப் பக்கத்தில் கோட்டை வாசலில் இருந்தது. ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் வெள்ளை நிறக் கொக்குபோலக் கடற்கரையில் தவமிருக்கும் இந்தக் கலங்கரை விளக்கத்தை அதிசயமாக நான் அண்ணார்ந்து பார்ப்பதுண்டு. காங்கேசந்துறைச் சந்திக்கு அருகே இருக்கும் இந்தக் கலங்கரை விளக்கம் சரியாக ஆறு மணிகெல்லாம் ஒளி தரத் தொடங்கிவிடும். பருத்தித்துறை - கீரிமலை வீதியைக் காங்கேசந்துறை  - யாழ்ப்பாணம் வீதி சந்திக்கும் இடத்திற்கருகே (AB16 – AB21) இந்தக் கலங்கரை விளக்கம் அமைந்திருக்கிறது. எங்கள் காலத்தில் எங்க ஊர் மக்களால் மதிக்கப்பட்ட ‘வெளிச்சவீட்டு’ வல்லிபுரம் என்று அழைக்கப்பட்ட பெரியவர்தான் இந்தக் கலங்கரை விளக்கம் தினமும் ஒளிதரக் காரணமாய் இருந்தார். அவரிடம் உத்தரவு பெற்று நண்பர்கள் எல்லோரும் இரண்டு மூன்று தடவைகள் அந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சிக்கு உள்ளே இருந்த ஏணிப்படிகள் மூலம் ஏறிச் சென்று சுற்றிவர உள்ள ஊர்களின் அழகைப் பார்த்து இரசித்திருக்கின்றோம். குறிப்பாக வடக்கே பாக்கு நீரணை, கிழக்கே பலாலி, தெற்கே தெல்லிப்பளை, மேற்கே கீரிமலை என்று எல்லா ஊர்களையும் ஒரே இடத்தில் நின்று பார்க்க முடிந்தது. தொடக்கத்தில் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் எண்ணெய்யில் எரியும் பெரிய விளக்குத்தான் இருந்ததாம். பின் நாளில் மின்சார விளக்காக அதை மாற்றியிருந்தார்கள்.


‘அலைமேல் அலையடித்தால் கோட்டைச் சுவரும் இடியும்’ என்ற உண்மையை வாய்பிளந்து வானம் பார்த்துக் கரையோரத்தில் கிடக்கும் 16ம் நூற்றாண்டில் போத்துக்கேயரால் கட்டப்பட்ட கோட்டைச் சுவர் சொல்லாமல் சொல்லி நிற்கிறது. இந்தக் கோட்டைச் சுவருக்கு நடுவேதான் காங்கேசந்துறை கலங்கரை விளக்கம் இப்பொழுதும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது. பாரம்பரியமாய், ஆண்டாண்டு காலமாய் தமிழனால் ஆளப்பட்டு வந்த அந்த மண், முதலில் 1505 இல் போத்துக்கேயராலும், அதைத் தொடர்ந்து 1660களில் ஒல்லாந்தராலும், அதன்பின் 1798 இல் ஆங்கிலேயராலும் ஆக்கிரமிக்கப்பட்டது. இலங்கையில் உள்ள அதிகமான கலங்கரை விளக்கங்கள் ஆங்கிலேயர் காலத்தில்தான் கட்டப்பட்டன. கொழும்பில் உள்ள பழைய மணிக்கூட்டுக் கோபுர வெளிச்ச வீடுதான் 1860 இல் ஆங்கிலேயரால் முதன் முதலாக இலங்கையில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கமாகும். சுமார் 25 கலங்கரை விளக்கங்கள் இலங்கையில் இருந்தாலும், இவற்றில் சுமார் 14 கலங்கரை விளக்கங்களே தற்போது செயற்பட்டு வருகின்றன. இவற்றில் சில இலங்கை துறைமுகக் கட்டுப்பாட்டு சபையின் கீழும், வேறு சில இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன. ஒவ்வொரு கலங்கரை விளக்கத்திற்கும் ஒவ்வொரு தனித்தன்மையுண்டு. பதினைந்து வினாடிகளுக்கு ஒருதடவை என்ற கணக்கில் அடுத்தடுத்து ஒன்றின்பின் ஒன்றாக மூன்றுதடவை மின்னுவதுதான், இந்தக் கலங்கரைவிளக்கத்தின் தனித்தன்மை! இந்தக் கலங்கரைவிளக்கம் காங்கேசந்துறையில், பாக்குநீரிணையின் தென்கரையில், 73அடி உயரத்திற்கு வானளாவி நிற்கிறது. கோட்டை அத்திவாரத்திற்குள், ஆங்கிலேயரால் 1893;ம் ஆண்டு கட்டி எழுப்பப்பட்ட இந்தக் கலங்கரை விளக்கத்தின் வெளிச்சம் 14 கடல்மைல் தூரம்வரை தெரியக்கூடியது. வடபகுதிக் கடலில் கடற்தொழில் செய்யும் மீனவர்களுக்கு இந்தக் கலங்கரை விளக்கம் பெரிதும் நன்மை பயக்குவதாக, வழிகாட்டியாக  இருந்தது. அதிபாதுகாப்பு வலயத்திற்குள் அகப்பட்டு இருக்கும் இந்தக் கலங்கரை விளக்கம் உள்நாட்டுப் போர் காரணமாக, பராமரிக்க முடியாமல் சில வருடங்கள் இயங்காமல் இருந்தது. இப்போது இந்தக் கலங்கரை விளக்கம் திருத்தப்பட்டு மீண்டும் ஒளிதரத் தொடங்கி இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உயர்ந்த கோபுரங்கள் - 4 (குரு அரவிந்தன்)
மணிக்கூட்டுக் கோபுரம். 

நேரம் என்பது எங்கள் வாழ்க்கையோடு ஒன்றாக இணைந்திருப்பது. நேரம் எவ்வளவு முக்கியமானது என்பதை ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கட்டாயம் உணர்ந்திருப்பார்கள். ‘கடந்து போன நேரமும், தவறவிட்ட சந்தர்ப்பமும் திரும்பக் கிடைப்பதில்லை’ என்றொரு பழமொழிகூட உண்டு. நேரத்தைத் தவறவிட்டவர்கள் அதனால் தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைச் சொல்லி அழுததைப் பார்த்திருக்கிறேன். இப்பொழுதெல்லாம் தொழில் நுட்ப வசதிகள் காரணமாக நேரம் பார்ப்பதற்குப் பல வழிகள் இருக்கின்றன. ஆனால் அன்று அந்த வசதிகள் எல்லாம் இருக்கவில்லை. எல்லோரிடமும் கைக்கடிகாரம் இருக்கவில்லை. இப்போது இருப்பது போன்ற அலைபேசிகள் அந்த நாட்களில் பாவனையில் இருக்கவில்லை. யாழ்ப்பாண நகர மக்களுக்கும், ஏதாவது வேலை நிமிர்த்தம் அங்கு சென்று வருவோருக்கும் நேரத்தை அறிந்து கொள்ள அந்த நாட்களில் பெரிதும் உதவியாக இருந்தது யாழ்ப்பாண நகரத்தில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரம்தான். 

இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு அருகே, பருத்துறை வீதி தொடங்கும் சந்தியில் இந்த மணிக் கூட்டுக் கோபுரம் தலை நிமிர்ந்து நிற்கின்றது. நகரத்தின் முக்கிய இடங்களான வேம்படி மகளிர் கல்லூரி, வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம் நூலகம், துரையப்பா விளையாட்டு மைதானம், 1625 ஆம் ஆண்டு போத்துக்கீசரால் கட்டப்பட்டு, 1658 இல் ஒல்லாந்தரால் திருத்தி அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கோட்டை ஆகியன இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சுற்றிவர இருக்கின்றன. யாழ் நகரின் வரலாற்றை பிரதிபலிக்கும் இந்த மணிக்கூட்டுக்கோபுரம் தமிழ் மக்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து நிற்கின்றது. இந்த மணிக்கூட்டுக்கோபுரம் யாழ் நகரின் முக்கிய கேந்திர நிலையத்தில் அமைந்து இருப்பது மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தின் ஒரு அடையாளச் சின்னமாகவும் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலமான 1875 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் இலங்கைக்கு வருகை தருவதாக இருந்தபோது அவரது வருகையின் ஞாபகமாக ஏதாவது நினைவுச்சின்னம் ஒன்றை எழுப்ப அதற்காக அமைக்கப்பட்ட குழு தீர்மானித்தது. அதன்படி மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்று கட்டுவதாகத் தீர்மானித்து 1880ல் மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்று கட்டப்பட்டது. இக் கோபுரத்திற்கான வடிவமைப்பை அப்போது அரசாங்க கட்டிடக் கலைஞராக இருந்த ஜே.ஜி. சிமித்தர் என்பவர் செய்திருந்தார். 


அதற்கான மணிக்கூடு ஒன்று 1882 ஆம் ஆண்டு செய்யப்பட்டது. அப்போது தேசாதிபதியாக இருந்த ஜேம்ஸ் லோங்டன் என்பவரே இந்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கான மணிக்கூட்டை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். உள்ளுர் யுத்தம் காரணமாக கோட்டையில் தங்கியிருந்த இராணுவம் ஏவிய செல் குண்டுகள் காரணமாக இந்த மணிக்கூட்டுக் கோபுரம் பாதிக்கப்பட்டு அதனால் சேதமடைந்திருந்தது. குடிமனைகள் மீது செல் குண்டுகள் விழுந்து உயிர் சேதங்கள் ஏற்பட்டதால் அதைத் தடுக்கப் போராளிகள் முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் முறை ஒன்றை நகரம் முழுவதும் நடைமுறைப்படுத்தினார்கள். அதன் படி எப்பொழுதும் தன்னார்வத் தொண்டர் ஒருவர் இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தில் காவலிருந்து கோட்டைப் பகுதியை அவதானித்த வண்ணம் இருப்பார். இராணுவத்தினர் செல்லடிக்க ஆயத்தங்கள் செய்யும் போது அவர் முன்கூட்டியே அவசர ஒலியை எழுப்புவார். அதனால் பொதுமக்கள் பாதுகாப்பைத் தேடிக்கொள்ளக் கூடியதாக இருந்தது. இதனால் உயிர் சேதங்கள் ஓரளவு தடுக்கப்பட்டன. உயிருக்கும் உடமைக்குமான சேதங்களைத் தடுப்பதில் எப்படி கற்பகதரு என்று சொல்லப்பட்ட பனை மரங்கள் யாழ்ப்பாணத்து மக்களுக்குப் பாதுகாப்பாக இருந்தனவோ அதே போல இந்த மணிக்கூட்டுக் கோபுரமும் ஒரு வகையில் பாதுகாப்பாக இருந்தது. 

1998 இல் துப்பாக்கிச் சன்னங்களால் சித்திரங்கள் வரையப்பட்ட இந்த மண்pக்கூட்டுக் கோபுரத்தைத் திருத்துவதற்கான செலவை பிரித்தானிய அரசு ஏற்றுத் தேவையான திருத்த வேலைகளைச் செய்திருந்தது. 2002 ஆம் ஆண்டு மீண்டும் பாவனைக்காக பிரித்தானிய உயர் அதிகாரியினால் இது திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில்  அந்த மணிக்கூடு பழுதடைந்ததைத் தொடர்ந்து, புதிதாகப் பதவியேற்ற மாநகர சபை அந்த மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு டிஜிற்றல் கடிகாரங்களை பொருத்தும் பணியை டயலொக் நிறுவனத்திடம் வழங்கியிருந்தது. அந்த டிஜிற்றல் கடிகாரமும் அடிக்கடி இயங்காமல் போனதால், டிஜிற்றல் கடிகாரத்தைத் தவிர்த்து மீண்டும் முள் உள்ள கடிகாரத்தைப் பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உயர்ந்த கோபுரங்கள் - 5 (குரு அரவிந்தன்)
சி. என். கோபுரம்

சொந்த மண்ணை விட்டு வந்து, புகுந்த மண்ணான ரொறன்ரோவில் சீ.என். கோபுரம் என்ற உயர்ந்த கோபுரத்தைப் பார்த்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏற்கனவே கனடாவில் உள்ள சீ என் கோபுரம் தான் உலகத்திலேயே ஒரு காலத்தில் உயர்ந்த தனிக் கோபுரமாக இருந்தது எனப் பத்திரிகையில் படித்திருந்தேன். கண்முன்னால் நிஜமாகவே அந்தக் கோபுரம் உயர்ந்து நின்ற போது என்னால் அதைப் பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
ரொறன்ரோ டவுன்ரவுனில் உள்ள சி. என். கோபுரம் 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1815 அடி உயரமான இக்கோபுரத்தில் ஏறிப்பார்க்க விரும்புபவர்கள் காலை 9:00 மணியில் இருந்து இரவு 10:30 மணிவரை பார்வையிட முடியும். நத்தார் தினத்தைத் தவிர ஏனைய தினங்களில் அனேகமாகத் திறந்திருக்கும். 58 வினாடிகளில் உங்களை 1136 அடி உயரத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய விரைவான எலிவேற்ரர்கள் இக் கோபுரத்தில் பொருத்தப் பட்டிருக்கின்றன. இதன் உச்சியிலே உணவு விடுதி ஒன்றும் இருக்கின்றது. இந்த உணவு விடுதியின் விசேடம் என்னவென்றால் விருந்தினர்கள் உணவருந்தும் போது, மெல்ல மெல்ல சுற்றி வந்து மேலே இருந்தபடியே  எல்லாப் பக்கமும் அவர்கள் பார்க்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. 1465 அடி உயரத்தில் ஸ்கைபொட் என்ற தளம் இருக்கின்றது. இந்த தளத்திற்குச் செல்வதற்குப் பிரத்தியேகமாக அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும்.


உங்களுக்கு அதிஷ்டம் இருந்தால், காலநிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் இத்தளத்தில் இருந்து நயாகரா நீர்வீழ்ச்சியை மட்டுமல்ல, அமெரிக்காவின் நியூயோர்க் பகுதியையும் பார்க்க முடியும்.
1972 ஆம் ஆண்டு இந்தக் கோபுரத்தின் கட்டுமான வேலைகள் ஆரம்பமாகின. 1974 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இந்தக் கோபுரத்தின் கட்டுமான வேலைகள் முடிந்தாலும், அன்ரனா பொருத்தும் வேலை முடியாமல் இருந்தது. 335 அடி நீளமான அன்ரனாவை கோபுரத்தின் உச்சியில் பொருத்துவதற்கு சுமார் மூன்று கிழமைகள் எடுத்தன. 44 துண்டுகளாகப் பிரிக்கப் பட்டிருந்த இந்த அன்ரனா வானூர்தியின் உதவியோடு மேலே கொண்டு செல்லப்பட்டுப் பொருத்தப்பட்டது. இவ்வாறு பொருத்தப்பட்ட இந்த அன்ரனா இன்று முப்பதுக்கும் மேற்பட்ட தெலைக்காட்சி அலைகள் ஒளிபரப்பு செய்ய உதவியாக இருக்கின்றது. இதைவிட அதிக வானொலி அலைகளை ஒலிபரப்பவும், குறிக்கப்பட்ட தூரத்திற்கு அலைபேசிகள் இயங்கவும் உதவுகின்றது.
1168 அடி உயரத்தில் சி. என் கோபுரத்தைச் சுற்றி வெளியே உள்ள நடைபாதையில் நடந்து செல்வது என்பது மிகவும் பயத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியது. இதைவிட கண்ணாடியால் போடப்பட்ட தரை ஒன்றும் உயரத்தில் இருக்கின்றது. 1122 அடி உயரத்தில், 256 சதுர அடி பரப்பளவைக் கொண்ட கண்ணாடித் தரையாக இது இருக்கிறது. இத்தரையின் தாங்கு சக்தியைப் பரிசோதித்துப் பார்த்தவர்களின் அறிக்கையின்படி, சுமார் பதின்னான்கு நீர்யானைகளின் பாரத்தைத் தாங்கக் கூடிய சக்தியை இக் கண்ணாடிகள் கொண்டிருக்கின்றன. இரண்டரை அங்குல தடிப்பைக் கொண்ட இக் கண்ணாடிகளின் மேல் அத்தனை உயரத்தில் நடக்கும் போது தலையைச் சுற்றுவது போன்ற உணர்வு கட்டாயம் உங்களுக்கு ஏற்படலாம். ஆனாலும் கண்ணாடியில் நிற்கிறோமே என்ற பயத்தைத் தவிர்த்தால், இயற்கைக் காட்சிகளை இங்கிருந்து நன்றாக ரசிக்க முடியம்.
குறிப்பிட்ட சில நாட்களில் இரவு நேரத்தில் சி. என் கோபுரத்தின் நிறம் வெளிச்ச விளக்குகள் மூலம் மாற்றப்படுவது உண்டு. குறிப்பாக கனடா தினத்திலன்று இரவு நேரத்தில் சிகப்பும் வெள்ளையும் கலந்த நிறமாகக் கோபுரம் காட்சி தரும். உல்லாசப் பயணிகளைக் கவருவதற்காகச் ‘சி. என். கோபுர கோடைகால புகைப்படப் போட்டி’ என்று சிஎன் கோபுரம் பற்றிய புகைப்பட போட்டி ஒன்றை  நிர்வாகத்தினர் தற்போது அறிவித்திருக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டு வரை அதி உயரமான தனிக் கோபுரமாக இருந்த சி. என். கோபுரம் துபாயில் 2722 அடி உயரத்தில் கட்டப்பட்ட (டீரசத முhயடகைய) கோபுரம் காரணமாக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

உயர்ந்த கோபுரங்கள் - 6 (குரு அரவிந்தன்)
புர்ஜ் கலீபா 

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்சியில் உள்ள துபாயில் தான் இன்று உலகிலே உயர்ந்த கோபுரமான  புர்ஜ் கலீபா (டீரசத முhயடகைய)  என்ற கோபுரம் அமைந்திருக்கின்றது. 2,722 அடி உயரமான இந்தக் கட்டிடம் இன்று உல்லாசப் பயணிகள் விரும்பிச் சென்று பார்க்கும் இடங்களில் முக்கிமானதொரு இடமாக இருக்கின்றது. ஏற்கனவே உலகில் இருந்த உயரமான கோபுரங்கள் எல்லாவற்றையும் விட இன்று இதுதான் வானம் தொட்டு நிற்கும் உயரமான கோபுரமாக இருக்கின்றது.
2004 ஆம் ஆண்டு இந்தக் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சுங் இஞ்சினியறிங் கம்பனி இந்தக் கட்டிடத்தைக் கட்டும் பொறுப்பை ஏற்றிருந்தது. சுமார் ஐந்து வருட கால இடைவெளியின் பின் இந்தக் கட்டிடத்தின் வேலைகள் 2009 ஆம் ஆண்டு முடிவடைந்தது. ஆனாலும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி தான் உத்தியோக பூர்வமாக இந்தக்கோபுரம் திறந்து வைக்கப்பட்டது. 163 மாடிகளைக் கொண்ட இந்தக் கோபுரத்திற்கு இரண்டு நிலக்கீழ் வாகனத் தரிப்பிடங்களும் உண்டு. சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பின் நடுவே இந்தக் கோபும் அமைந்திருக்கிறது. ஆறு நீர்த் தடாகங்களும் பூந்தோட்டங்களும், பாம் மரங்களும் இந்த நிலப்பரப்பை அழகு செய்கின்றன.இந்தக் கோபுரத்தின் 124 வது மாடியில் 1483 அடி உயரத்தில் பார்வையாளர்கள் வெளியே நின்று பார்ப்பதற்குரிய வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. உலகத்திலேயே அதி உயரத்தில் பார்வையாளர்கள் நின்று பார்க்கக் கூடிய மூன்றாவது இடமாக இந்ததட்டு இருக்கின்றது. அதே சமயம் பார்வையாளர்கள் வெளியே நின்று பார்க்கக் கூடிய வகையில் அமைந்ததாக இரண்டாவது இடத்தில் இந்தப் பார்வையாளர் தட்டு இருக்கின்றது. 24,348 யன்னல்கள் இந்தக் கட்டிடத்தில் அமைக்கப் பட்டிருக்கின்றன. 1,290,000 சதுர அடி கண்ணாடிகள் இந்த யன்னல்களுக்காகப் பாவிக்கப் பட்டிருக்கின்றன.
இதுவரை காலமும் அதி உயர்ந்த கோபுரமாக இருந்தவற்றைப் பின் தள்ளி விட்டு உயர்ந்த கோபுரமாக இன்று முன் நிற்கின்றது துபாய் கோபுரம். கட்டப்படும் போது படிப்படியாக இதன் உயரம் கூடியபோது 2007 ஆம் ஆண்டு யூலை மாதம் ரைப்பி 101 என்ற கோபுரத்தைவிட உயர்ந்து நின்றது. 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சியேர்ஸ் கோபுரத்தைவிட உயரமாக நின்றது. 2007 செப்ரெம்பர் மாதம் கனடாவின் சீ.என். கோபுரத்தைவிட உயரமாகக் காட்சி அளித்தது. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேவிஎல்வை தொலைக்காட்சி கோபுரத்தை விட உயரமாகக் கட்டப்பட்டது. இப்படியே படிப்படியாக உயர்ந்து இன்று உலகிலே அதி உயர்ந்த கோபுரமாகக் காட்சியளிக்கின்றது.
உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்பதைவிட, அதிக மாடிகளைக் கொண்ட இதைக் கவனமாகப் பராமரிப்பது முக்கியமாகும் என்பதைக் கருத்திற் கொண்டு இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதி உயரமான இடத்திற்கு ஒரு நொடியில் 18 மீட்டர் வேகத்தில் செல்லும் லிப்டுகள் இங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே மிக உயரத்திற்கு அமைக்கப்பட்ட லிப்ட் வசதிகள் இதுவாகத்தான் இருக்கும், இதைவிட முழுக் கட்டிடமும் குளிரூட்டப் பட்டிருக்கின்றது. நகரும் படிக்கட்டுக்கள், லிப்ட் சேவை, குடிநீர் வசதிகள், குளிரூட்டி வசதிகள் என்று பல சேவைகள் இங்கே உள்ளடக்கப் பட்டிருக்கின்றன.
இந்தக் கட்டிடத்தில் பல உணவகங்களும், பெரிய அங்காடிகளும், வர்த்தக நிறுவனங்களும், ஹோட்டல்களும் அமைக்கப்பட்டுள்ளன. 900 குடியிருப்பு வசதிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் 122 வது மாடியில் சிறந்ததொரு உணவு விடுதியும் உண்டு. இதில் 37 மாடிகள் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, விருந்தினர் தங்குவதற்கான 160 அறைகளும் உண்டு. நீச்சல் தடாகம், நூல் நிலையம், உடற்பயிற்சி நிலையம் என்று பல வசதிகளும் இங்கே கிடைக்கின்றன. இதைவிட சுமார் 3,000 வண்டிகள் தரித்து நிற்கக் கூடிய வசதிகளும் இங்கே உண்டு. இன்னும் ஒரு உயர்ந்த கட்டிடம் மனிதனால் கட்டப்படும் வரை துபாயில் உள்ள ‘புர்ஜ் கலீபா’ கட்டிடம்தான் உலகிலே உயர்ந்த கோபுரம் என்ற சாதனையைத் தனதாக்கி நிற்கும்.


உயர்ந்த கோபுரங்கள் - 7 (குரு அரவிந்தன்)
 ஈபெல் கோபுரம்

இந்த ஈபெல் கோபுரம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் அமைந்திருக்கிறது. இதைச் சிலர் ஐபெல் கோபுரம் என்றும் அழைப்பர். இது உல்லாசப் பயணிகளின் பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகின்றது. பாரிஸ் என்று சொன்னால் எல்லோர் மனக்கண் முன்னாலும் வந்து நிற்பது இந்த ஈபெல் கோபுரம்தான். இந்தக் கோபுரத்தை 1832 ஆம் ஆண்டு பிறந்த ஈபெல் என்பவரே வடிவமைத்ததனால் 1671 படிகளைக் கொண்ட இந்தக் கோபுரத்துக்கு அவரது பெயரையே சூடியுள்ளனர். வருடந்தோறும் சுமார் ஐம்பது லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கோபுரத்தைப் பார்ப்பதற்காக பரிஸிற்கு வருகின்றார்கள். பாரிஸில் நடைபெற்ற உலகக் கண்காட்சி விழாவிற்கு நுழைவாயிலாக இந்தக் கோபுரம் 1887 இல் தொடங்கி 1889 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. சுமார் 300 தொழிலாளர்களின் இரண்டு வருட கடின உழைப்பில் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கோபுரம் சுமார் 986 அடி உயரமானது. சுமார் 40 தொன்கள் வண்ணக்கலவை இந்தக் கோபுரத்திற்குப் பாவிக்கப்பட்டது. 1959 இல் தொலைத்தொடர்பு அன்ரனாக்கள் கோபுரத்தின் உச்சியில் பூட்டப்பட்டதால் அதன் உயரம் 1052 அடியாக உயர்ந்தது. சுமார் 18,000 உருக்குத் துண்டுகளைப் பொருத்தியே இந்தக் கோபுரத்தை அமைத்தார்கள். இதன் நிறை சுமார் 8092 தொன்களாக இருக்கின்றன. இந்த உருக்குத் துண்டுகளைப் பொருத்துவதற்கு சுமார் ஐந்து லட்சம் ஆணிகள் பாவிக்கப்பட்டனவாம். இந்தக் கோபுரத்தைக் கட்டுவதற்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அன்று செலவாகின. வருடத்தில் எல்லா நாட்களிலும் இந்தக் கோபுத்தைச் சென்று பார்க்கக்கூடிய வசதிகளைச் செய்திருக்கின்றார்கள். உல்லாசப் பயணிகளிடம் இருந்து இதனால் பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரத்திற்கு நிறைய வருவாய் கிடைக்கின்றது. பாரிஸ் நகராட்சி மன்றத்தின் கட்டுப்பாட்டில் இந்தக் கோபுரத்தின் பராமரிப்பு இருக்கின்றது. சுமார் 500 தொழிலாளர்கள் இந்தக் கோபுரத்தில் கடமையாற்றுகின்றார்கள்.1929 ஆம் ஆண்டுவரை இந்த ஈபெல் கோபுரமே உலகில் உயர்ந்த கோபுரமாக இருந்தது. இந்தக் கோபுரம் வடிவமைக்கப்பட்டு தொடங்கிய போது பாரிஸில் உள்ள பலரிடம் இருந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்த எதிர்ப்புக்களைத் தாண்டி கோபும் கட்டி முடிக்கப்பட்டது. 20 வருடம் மட்டுமே அதாவது 1909 ஆம் ஆண்டுவரை மட்டுமே இந்தக் கோபுரம் பாவனையில் இருக்கும் என்ற நிபந்தனையும் அப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தக் கோபுரம் காலப்போக்கில் உலகப்பிரசித்தி பெற்று விட்டதால் அதை உடைத்தெறியாமல் தொடர்ந்தும் பாதுகாத்து வருகின்றார்கள். 1929 இல் நியூயோர்க்கில் கிறிஸ்லெர் கட்டிடம் கட்டப்பட்டதால் ஈபெல் கோபுரம் அதி உயர்ந்த கோபுரம் என்ற தகுதியை இழந்தது. இந்த ஈபெல் கோபுரம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. முதலாவது தளம் சுமார் 189 அடி உயரத்திலும், இரண்டாவது தளம் சுமார் 379 அடி உயரத்திலும் மூன்றாவது தளம் சுமார் 905 அடி உயரத்திலும் இருக்கின்றன. முதலாவது தளத்தில் உணவு விடுதியும், நினைவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையும், ஈபெல் கோபுரப் படம் போட்ட தபால்தலை விற்பனை செய்யும் தபாலகமும் முக்கியமாக இடம் பெற்றிருக்கின்றன. இரண்டாவது தளத்தில் உணவு விடுதி, கடைகள், தொலைநோக்கிக் கருவிகள் போன்றவை அமைந்திருக்கின்றன. மூன்றாவது தளம்தான் மிகச் சிறந்த பார்வையாளர் தளமாக இருக்கின்றது. இரவிலும், பகலிலும் பாரிஸ் முழுவதையும் இங்கிருந்து பார்க்க கூடிய வசதிகளைக் கொண்டது. இரவிலே தங்கநிற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்தக் கோபுரம் பார்ப்பது மிகவும் அற்புதமாக இருக்கும். இரவில் அதன் அழகை இரசிப்பதற்காகவே பலர் அங்கு வந்து இரவில் தங்கியிருந்து இரசிப்பதுண்டு. 1954 ஆம் ஆண்டு ஒருவர் மலை ஏறுவது போல இந்தக் கோபுரத்தில் ஏறியிருந்தார். கோபுரத்தின் உச்சியில் இருந்து இருவர் பரசூட்டில் குதித்த சம்பவங்களும் உண்டு. இருபது வருடத்தில் தனது ஆயுட்காலத்தை முடிக்க இருந்த ஈபெல் கோபுரம் 1989 ஆம் ஆண்டு தனது 100 வது ஆண்டைக் கொண்டாடியது மட்டுமல்ல, 125 வது ஆண்டைத் தொட்டு விட்டதும் பெரிய அதிசயமே! மனதில் பதிந்துவிட்ட மறக்க முடியாத கோபுரங்களில் பாரிஸில் உள்ள ஈபெல் கோபுரமும் ஒன்றாகும்.

No comments:

Post a Comment