Wednesday, December 31, 2014

Mahajana - P. Kanagasabapathyவணக்கம்.
அமரர் பொ.கனகசபாபதி அவர்களுக்காக ரொறன்ரோவில் (29, 30 December 2014)  நடைபெற்ற இரங்கல் உரையில் உற்றார் உறவினர் நண்பர்கள், பழைய மாணவர் சங்கங்கள், ஊர் ஒன்றியங்கள் கலந்து கொண்டன. குறிப்பாக மகாஜனக் கல்லூரி, நடேஸ்வராக் கல்லூரி, ஸ்கந்தவரோதயா கல்லூரி, சோமஸ்கந்தா கல்லூரி, ஏழாலை மகாவித்தியாலயம் போன்றவற்றின் பழைய மாணவர் சங்கங்களின் அங்கத்தவர்கள் இரங்கலுரை நிகழ்த்தினர். மேலும் புகுந்த இடமான காங்கேசந்துறை, பிறந்த இடமான சண்டிலிப்பாய் போன்ற ஊர் ஒன்றியங்களின் பிரதிநிதிகளும் இரங்கலுரை நிகழ்த்தினர்.  இதைவிட ரொறன்ரோவின் முக்கிய பிரமுகர்களும் இந்த நிகழ்வில் இரங்கலுரை ஆற்றினர்.

அமரர் பொ. கனகசபாதி அவர்களின் எழுபத்தைந்தாவது அகவையின் போது 
எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தினக்குரலுக்கான நேர்காணலில் 
இருந்து சில பகுதிகளைத் தருகின்றோம்:

அறிமுகம்
எழுபத்தைந்தாவது (75) அகவையில் காலடி எடுத்து வைக்கும் தங்களுக்கு முதற்கண் எனது பணிவன்பான வணக்கம். ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ என்று கற்றறிந்தோரால் அன்போடு அழைக்கப்படும் தங்களின் கடந்தகால அனுபவங்களைத் தினக்குரல் பத்திரிகை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். தொடக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்…
1-கேள்வி: ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே’ என்று பாரதி பாடியது போல, நீங்கள் பிறந்து வளர்ந்த மண்ணான சண்டிலிப்பாய் பற்றியும், புகுந்த மண்ணான காங்கேசன்துறை பற்றியும் குறிப்பிட முடியுமா? அந்த மண்ணால் நீங்கள் பெருமை அடைந்தீர்களா, அல்லது உங்களால் அந்த மண் பெருமை அடைந்ததா?
பதில்: ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என எழுதிய கணியன் பூங்குன்றனுக்கே தனது ஊர் அபிமானம் விட்டபாடில்லை எனக் கலைஞர் கருணாநிதி ஒரு சமயம் வேடிக்கையாகச் சொன்னார்கள். கணியன் பூங்குன்றனுடைய இயற்பெயர் தெரியாது
ஆனால் இன்றும் நிலைத்து நிற்பது அவரது ஊர்ப் பெயரும் அவர் செய்த தொழில் பெயருமே. ஆகவே எவருக்கும் நிலைத்து நிற்பவை ஒருவரது பிறந்த ஊரும் செய்த தொழிலுமே.
ஆகவே நான் பிறந்து வளர்ந்த மண் என்றுமே என் வணக்கத்துக்குரியது. சண்டிலிப்பாய் போன்ற ஒரு தன்னிறைவான கிராமம் யாழ்ப்பாணத்தில் வேறு இடங்களில் காண்பது அரிது.
காங்கேசந்துறை நான் புகுந்த மண். என்னைத் தன் உயிரினும் மேலாக நேசித்த என் அன்பு மனைவியின் ஊர். அதை மறப்பேனா.. ?
கனடா வாழ் தமிழர் யாபேருக்கும் அதிபர் என்றால் யாரைச் சுட்டும் என்பது தெரிந்த விசயம்..
2-கேள்வி: நான் பிறந்து வளர்ந்த ஊர்களும் அவைதான் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இலங்கை, இந்தியா, நைஜீரியா, கனடா என்று உங்கள் கடந்தகால வாழ்க்கை அமைந்துவிட்டதே, இது எந்த வகையிலாவது உங்கள் இலட்சியக் கனவுகளைப் பாதித்ததா?
பதில்: உண்மையைச் சொல்வதானால் இலங்கையை விட்டு வெளியேறியது எனது இலட்சியக் கனவினைப் பாதித்து விட்டது என்றே கூறுவேன். எனக்குக் கல்வி அளித்து உயர்த்தியது இந்தியா. மாகாணத்தில் முதல் மாணவனாகத் தேறி தங்கப் பதக்கம் பெற்றது இந்தியாவில். இலங்கையில் எனது இளமைக் காலத்தில் இலக்கியத் தாகம் ஏற்படச் செய்தவை இந்திய சஞ்சிகைகளும் நாவல்களும். இந்தியாவில் போய் வாழ்ந்த ஐந்து வருடங்கள் எனது இலக்கிய தாகத்துக்கு தீனி போட்டது மாத்திரமல்லாமல் திராவிட முன்னேற்க் கழகத்து பேச்சாளர்கள், பொதுவுடமைக்ககட்சிப் பேச்சாளர்கள் பலரின் உரைகளைக் கேட்டு எனது அரசியல் ஞானத்தையும் வளர்க்க முடிந்தது. தமிழ் அறிவையும் விரிவாக்க முடிந்தது.எனக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்க வைத்தது இலங்கை. ஒரு சிறந்த விலங்கியல் ஆசிரியர் என்று மாணவர் சமூகத்திலே பெயர் பெற வைத்தது மகாஜனா. ஒரு சிறந்த அதிபர் என பெயர் பெறவைத்தது புத்தூர் ஸ்ரீசோமாஸ்கந்தக் கல்லூரியும் மகாஜனாவும்.
நைஜீரியா வாழ்க்கை வசதியான வாழ்க்கை. எனது தேடல்களுக்கு எந்த விதமான அனுகூலமும் கிட்டாதபோதும் எனது மகளின் மருத்துவ உதவிக்கு வேண்டிய பொருளாதாரத்தைப் பெற உதவியது அந்த வாழ்க்கை. மேலும் எனக்கு கல்வியியலில் ஏனைய துறைகளில் அனுபவம் பெறுவதற்கு நைஜீரியா வாழ்க்கை உதவியது எனலாம். சிலகாலம் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றியமையால் வயதானோருக்கு கல்வி புகட்டுவது பற்றி அனுபவ இரீதியாக அறிய முடிந்தது.
நான் உயிரியல் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் அங்கே என்னை விவசாய கல்வி அதிகாரியாக நியமித்தனர். அப்போது பல முற்போக்கான திட்டங்களை நான் செயற்படுத்தியதால் சொக்கற்றோ மாநிலத்தில் விவசாயக் கல்வியில் என்பெயர் நிலைத்து நிற்கும். அதே போன்று மரம் நடுதலிலும் நான் எடுத்த அக்கறை காரணமாக நான் வசித்த கிராமத்தில் நிறையவே மரங்கள் என் பெயரைச் சொல்லி நிற்கும். எல்லாவற்றுக்கும் மேலாக நைஜீரியாவில் வாழ்ந்தமையால் தான் சுலபமாகக் கனடா வரமுடிந்தது எனவும் கூறலாம.
கனடா வாழ்க்கை எனது வாழ்வில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது எனலாம். எனது மனைவியையும் மகனையும் இழந்தேன். தாயாகவும் தந்தையாகவும் இருந்து பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்பதை அறிந்தேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் சோகங்களைச் சந்தித்த போதும் என்னால் சமூகத்துக்கு நிறையவே சேவை ஆற்ற முடிந்ததால் நிம்மதி பெற்றேன்.
நான் முதலில் வசித்த தமிழர் கூட்டுறவு இல்லத்தில் பாரிய தமிழ் நூல் நிலையம் ஒன்றினை ஸ்தாபித்து வாசிப்புப் பழக்கத்தினை ஊக்குவித்தேன்.
ரொறன்ரோ பாடசாலைச் சபையினிலே பல்கலாசார ஆலோசகர் பதவி கிடைத்தமையால் புலம் பெயர்ந்து வந்த தமிழ்ப் பிள்ளகைளுக்கு தனிப்பட்ட ஆசிரியர்கள் மூலம் பிரத்தியேக போதனை செய்ய வழிவகுத்தேன். அவர்களுககு எவ்விதமாகப் பாடசாலையும் ஆசிரியர்களும் உதவ முடியும் என்பதை எடுத்துக் கூறிச் செயற்படுத்த வைத்தேன்.
இரண்டாம் நிலைப் பாடசாலைகளின் தமிழ்துறைத் தலைமைப் பதவி பெற்றமையால் தமிழினை பல்கலைக்கழகம் புகுவதற்கான பாடமாக அங்கீகாரம் பெற்று அதனைக் கற்பிப்பதற்கான பாடத்திட்டத்தனை திருமதி நடராசா மற்றம் திருமதி கணபதிப்பிளை ஆகியோரின் உதவியுடன் தயாரித்துக் கொடுத்தேன்.
வடக்கு யோர்க்கில் மாத்திரம் ஏறக்குறைய 20 பாடசாலைகளில் தமிழை வார இறுதி நாட்களிலோ, வாரநாட்களில் மாலை வேளைகளிலோ கற்பிப்பதற்கான வகுப்புக்களை 1-8ஆம் தரம் வரை தமிழ் பாடத்திற்கு செயல்முறை நூல்களை சில ஆசிரியர்கள்pன் உதவியுடன் தயாரித்தேன்.
மகாஜனாவில் அதிபர் பதவியை விட வேறு எதுவும் எனக்குப் பெரிதாக இல்லை. நான் ஆசிரியராக இருந்த ஒரு ஆண்டிலும், அதிபராக இருந்த இன்னொரு ஆண்டிலும் பெரும் தொகையான மாணவர்களை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பியதில் முதலிடத்தில் மகாஜனா நின்றது. நாட்டை விட்டு நான் வெளியேற வேண்டி வந்து விட்டது அதனால் பல சமயங்களில் அதற்காக மனதில் குமைந்துள்ளேன்.
3-கேள்வி: தாய் என்பவள் பொறுமையின் பிறப்பிடம் என்பார்கள். குடும்பம் என்று எடுத்துக் கொண்டால், நீங்கள் ஒரு தந்தையாக மட்டுமல்ல, தாயாகவும் இருக்கிறீர்கள். உங்கள் உணர்வுகளை எப்போதாவது அது பாதித்திருக்கிறதா?
பதில்: எனது மனைவி கௌரி இறக்கும் பொழுது எனது பெண்குழந்தைகள் சிறுவர். முதல் மகள் மணிமொழிக்கு 11 வயது இளையவள் மணிவிழிக்கு 9 வயது. மனைவி உயிருடன் இருந்த போது எனக்கு காப்பியே தயாரிக்கத் தெரியாது. அவர் மறைவினால் திக்கு முக்காடிவிட்டேன். அவர் வைத்தியசாலையில் இருக்கும் பொழுது எனது நண்பர்கள் சிலர் எமக்கு உணவு கொண்டு வந்து தர முன்வந்தார்கள். எனது மனைவி அதனை விரும்பவில்லை. நான் சொல்லித் தருகிறேன் நீங்கள் சமையுங்கள் எனத் தொலைபேசி மூலம் சொல்வார்கள். பழகிவிட்டேன். அவர் இறந்ததும் எனது இரு ஆண்பிள்ளைக‌ளும் மணிவண்ணனும் மணிமாறனும் எம்முடன் வந்து சேர்ந்தமையால் சமாளித்தோம். நண்பர்களினதும் சில உறவினர்களினதும் உதவி இருந்து கொண்டேயிருந்தது. எனது காலம் சென்ற இரண்டாவது மகன் நணா மிக நன்றாய்ச் சமைப்பார். அவரது உதவி பெரிதாக இருந்தாலும் ஆண்பிள்ளைகள் இருவரும் தமது படிப்பையும் கவனிக்க வேண்டும். அத்துடன் அவர்கள் வார இறுதி நாட்களில் வேலைக்குப் போவார்கள். பெண்குழந்தைகள் வளர்ந்த பின்னர் வீடு நடத்தும் பொறுப்பினை அவர்கள் ஏற்றார்கள்.
மனைவி இருந்திருந்தால் எனது பிள்ளைகளின் வாழ்வு மேலும் சிறந்திருக்கும் என்பதை உணர்கிறேன். அதே சமயம் நான் இன்னும் கூடுதலாக எனது சமூகத்திற்கு உதவியிருக்க முடியும் என்பதையும் உணராமலில்லை.
4-கேள்வி: நீங்கள் விலங்கியல் ஆசிரியராக இருந்தபோது பல வைத்திய கலாநிதிகளை உருவாக்குவதில் உங்கள் பங்களிப்பும் கணிசமான அளவு இருந்திருக்கிறது. சென்ற இடமெல்லாம் உங்களிடம் பயின்ற மாணவ, மாணவிகளைச் சந்திக்கும்போது எப்படியான உணர்வு உங்களை ஆட்கொள்கிறது?பதில்: எனது மாணவன் சண்முகலிங்கம் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். அவரை நான் தான் முதல் முதலாக நடிகனாக்கினேன். எனது இன்னொரு மாணவன் வைத்திய கலாநிதி சிவபாலன் யாழ்; மருத்துவக் கல்லூரியின் மருத்துவ பீடத்தின் தலைவர். எனது இன்னொரு மாணவன் வைத்தியதிய கலாநிதி அருள்குமார் இராணியின் பிறந்தநாள் கௌரவமாக சேர் பட்டம் கிடைத்துள்ளது. பேராசிரியர் சிவயோகநாதன், பேராசிரியர் சிவகணேசன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில். இப்படி எத்தனையோ பேரைக்கூறமுடியும். சொல்லவே வாய் இனிக்கிறதே. நேரில் காணும் போது எப்படி இருக்கும். எனது மாணவர் குறைந்தது 100 பேர்களாவது இங்கிலாந்தில் மாத்திரம் வைத்திய கலாநிதிகளாக உள்ளனரே. கோகிலா மகேந்திரன் ஸ்ரீலங்காவில், ஆசி கந்தராசா ஆஸ்திரேலியாவில், கருணாகரமூர்த்தி ஜெர்மனியில் சேரன், சாந்திநாதன் கனடாவில் இப்படி இலக்கியத் துறையில் ஈடுபட்டிருக்கும் பலர் என்னிடம் படித்த மாணவர்கள். எல்லோரையும் தனித்தனியே குறிப்பிட முடியவில்லை. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் என வள்ளுவன் எனக்காகத்தான் சொல்லிப் போனானோ?
5-கேள்வி: மகாஜனாவில் படித்தாலும் உங்களிடம் விலங்கியல் படிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் மகாஜனாவின் ஐந்து அதிபர்களிடம் படிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அதிபர்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் ஏற்பட்டது? அந்தத் துறையில் நீங்களும் இருந்தபடியால் அதை எப்படியாவது ஆவணப்படுத்திவிட வேண்டும் என்று நினைத்தீர்களா?
பதில்: நான் மாணவராயிருந்த காலத்திலும் ஆசிரியராக இருந்த காலத்திலும், அதாவது அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் பல அதிபர்கள் பாடசாலைகளுக்காக உழைத்த உழைப்பினைக் கண்டு வியந்துள்ளேன். அவர்களுடைய தன்னலமற்ற சேவையால்த் தான் யாழப்பாணத்து மாணவர்களின் கல்வித்தரத்தினை இந்த உயரத்துக்குக் கொண்டு வர முடிந்தது. அவர்கள் ஆற்றிய சேவை என்றுமே எமது நாட்டின் சரித்திரத்தில் பதியப்பட வேண்டியது. ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் பற்றித் திரு. செபரத்தினம் அவர்களும், பண்டிதர் அப்புத்துரை அவர்களும் நூல்கள் எழுதியுள்ளனர். ஆனால் யாழ்ப்பாணத்து அதிபர்கள் பற்றி எவருமே எழுதவில்லை. எனவே தான் எனது மனதில் இடம் பிடித்த அதிபர்கள் பற்றி எழுதலாம் என எண்ணினேன். இங்கு ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் பரமேஸ்வரன் அதற்கான ஊக்கம் கொடுத்தார். அதே போன்று தினக்குரலிலும் பதிப்பதற்கு பாரதி இசைந்தார். தான் அதனை நூல் வடிவு கொடுக்க விரும்புவதாக சேமமடு பிரசுலாயத்தின் அதிபர் கேட்டுள்ளார். விரைவில் அது கைகூடும் என எண்ணுகிறேன்.
6-கேள்வி: இலக்கியத்துறையில் ஆர்வம் எப்படி ஏற்பட்டது? புலம் பெயர் இலக்கியத்தில் கனடிய தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதில் உங்கள் பங்களிப்பு என்ன?
பதில்: நான் எப்பொழுதுமே ஒரு வாசகனாகவே இருந்தேன். இந்தியாவில் நான் கற்கின்ற சமயம் எனது அறை நிறைய வாரஏடுகளும் சஞ்சிகைகளும் நிரம்பியிருக்கும் எங்கள் குடும்பமே வாசிப்பில் பைத்தியமானவர்கள் எனலாம். இங்கே கூட என மகள்மார் ஆங்கில நூல்களைக் கொண்ட பெரிய நூல் நிலையமும் மகன் தமிழ் நூல்களைக் கொண்ட ஒரு நூல் நிலையமும் வைத்துள்ளார்கள். நாம் இந்தியா போனால் ஒரு 50 நூல்களாவது வாங்காமல் வருவதற்கு மகன் விடமாட்டான்.
நான் வாசகனே அன்றி எழுத்தாளனாகும் முயற்சி என்றுமே ஏற்பட்டதில்லை. இலங்கையில் வாழ்ந்த போது ஒரு விஞ்ஞானக் கட்டுரையை எழுதி வீரகேசரிக்கு அனுப்பி வைத்தேன். அவர்களோ அதனை முற்றாகப் பிரசுரிக்காமல் முகவுரையை மாத்திரம் பிரசுரித்தார்கள். ஆசை போய்விட்டது.
கனடா வந்ததும் ஆரம்பத்தில் மூன்று வேலைகள் செய்தேன். சனிக்கிழமைகளில் இராக்காலங்களில் பாதுகாப்பு அலுவலர் வேலை. அந்தப் பணியில் உள்ள போது நித்திரை கொள்ளப்படாது. ஏதாவது வாசிக்க எடுத்துச் செல்வேன். சில வாரப்பத்திரிகைகள் பிரசுரமாயின. பாரதிதாசன் நூற்றாண்டு வந்தது. ஆகவே அவர் பற்றி ஒரு கட்டுரை எழுதி ‘தாயகம்’ என்ற சஞ்சிகைக்கு அனுப்பினேன். பிரசுரமானது. இதுவே எனது முதல் முயற்சி. நான் வசித்த அடுக்குமாடித் தொடரில் “ஈழநாடு” எனும் பத்திரிகை ஆசிரியர் பரமேஸ்வரன் வசித்தார். அவரது வேண்டு கோளுக்கு அமைய சுவாமி விபுலானந்தர் பற்றி அவருக்காக எழுதினேன். அவர் வற்புறுத்தியதன் விளைவாக அவருக்கு இந்திய அரசியல், மற்றும் அரங்கேற்ற விமர்சனங்கள் எழுதி வந்தேன். “தமிழர் தகவல்” ஆசிரியர் திருச்செல்வத்தின் வேண்டுகோளுக்காக எமது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உதவக் கூடிய விதத்தில் பாடசாலை நடைமுறைகள் பெற்றோரியம் சம்பந்தமாக எழுதினேன். ஏறக்குறைய 20 வருடங்களாக மாதாமாதம் அவருக்கு எழுதி வந்துள்ளேன்.

எனது 60 வது பிறந்தநாள் விழாவினுக்கு எனது முதல் நூலாக ‘ஒரு அதிபரின் கூரிய பார்வையில்” என்ற நூல் அகிலன் அசோசியேற்ஸ் வெளியீடாக வந்தது. எனது மனைவியின் மறைவின் 10 ஆண்டு நிறைவாக “ பெற்றோர் பிள்ளை உளவியல்” என்ற நூலும் அகிலன் அசோசியேற்ஸ் வெளியீடாக வெளிவந்தது. அந்த வெளியீட்டின் போது கிடைத்த நன்கொடை அத்தனையும் கனடா புற்று நோய் மையத்துக்கு வழங்கப்பட்டது.
சு. சிவகுமார் ஜெர்மனியில் வசிப்பவர். எனது பாடசாலையின் பழைய மாணவர். தனது தந்தையால் நடத்தப்பட்ட “வெற்றிமணி’ப் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். அத்துடன் மூன்று மாதத்துக்கொரு முறையாக “சிவத் தமிழ்” எனும் சஞ்சிகையையும் நடத்தி வருகிறார். அவர் கோட்டதற்கிணங்க சிறுவர்களுக்கான கதைகளையும் விஞ்ஞானக் கட்டுரைகள் மற்றும் ஆன்மீகத்துக்கு விஞ்ஞான இரீதியான விளக்கக் கட்டுரைகள் எழுதினேன். அவை “மாறன் மணிக்கதைகள் -1” மற்றும் “திறவுகோல்” என வெற்றிமணி வெளியீடாக ஜெர்மனியிலும் கோகிலா மகேந்திரனின் முயற்சியால் அம்பனை கலைக்கழகத்தின் வெளியீடாக “மாறன் மணிக்கதைகள்-2” மற்றும் “திறவு கோல்” இரண்டாம் பதிப்புடன் மனம் ‘எங்கே போகிறது’ என உளவியல் கட்டுரைகளும் பிரசுரமாகி உள்ளன. எனது கதைகளில் சில தீராநதியிலும் தினகரனிலும் வீரகேசரியிலும் பிரசுரமாகி உள்ளன. கனடாவில் வெளியாகும் உதயன் பத்திரிகையில் ‘உலகம் போகிற போக்கு’ எனவும் விளையாட்டுக்கள் பற்றியும் பத்தி எழுத்து வாராவாரம் எழுதுகிறேன். தாய் வீடு, விளம்பரம், தூறல், ஆகிய பத்திரிகைகளிலும் வெவ்வேறு துறைகளில் எழுதுகிறேன். செம்மொழி மகாநாட்டினில் கனடாவின் தமிழக் கல்வி பற்றி ஆய்வுக் கட்டுரை வாசித்துள்ளேன்.
7-கேள்வி: புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களைச் சில பத்திரிகைகள் வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்வதாகப் பரவலான குற்றச்சாட்டு இங்கே முன்வைக்கப்படுகிறதே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் எந்தவகையிலாவது பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?.
பதில்: இலங்கைச் சஞ்சிகைகளை அந்த விதமான குற்றச் சாட்டுக்கு ஆளாக்கினால் அது அபத்தம். அவை அயல் நாடுகளிலே வாழ்கின்ற ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பிரசுரிப்பதில் மிக்க ஆர்வம் காட்டுகின்றன.
இந்தியச் சஞ்சிகைகளை அப்படி ஓரளவுக்குச் சொல்லலாம். அவை கூட வியாபார நோக்கம் கருதி புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களை ஓரளவுக்கேனும் பிரசுரிக்கின்றன. ஈழத்து எழுத்தாளர்கள் யதார்த்தமாய் எழுதுபவர்கள். அவர்களின் இத்தகைய எழுத்தக்களை தமிழகத்தின் ஜனரஞ்சகப் பத்திரிகைகள் அவ்வளவு தூரம் ஊக்கப் படுத்துவதில்லை. ஆனால் ஓரளவுக்கு அ. முத்துலிங்கம், குரு அரவிந்தன் போன்றவர்களின் ஆக்கங்கள் தமிழக ஜனரஞ்சக சஞ்சிகைகளில் இப்பொழுதும் பிரசுரமாகின்றன. ஜெயபாலன், சேரன் கவிதைகளும், வரவேற்கப்படுகின்றன.
8-கேள்வி: கனடிய மண்ணில் தமிழ் மொழி வளர்ச்சியில் ஆரம்பகாலத்தில் நீங்கள் அதிக அக்கறை காட்டினீர்கள். இப்போ தமிழ் மொழி வளர்ச்சியில் திடீரென ஒரு மந்த நிலை ஏற்பட்டிருக்கிறதே அதற்குக் காரணம் என்ன? எனது பாடல் ஒன்றில் ‘மொழி அழிந்தால் நம் இனம் அழிந்து விடும்’ என்ற பாடல் வரிகளை முன்பு குறிப்பிட்டிருந்தேன், மொழி அழிந்தால் எங்கள் இனம் அழிந்து விடும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில்: மொழி அழிந்தால் இனம் அழியும் என்பது உண்மைதான். ஆரம்ப காலத்தில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வீட்டு மொழி தமிழாக இருந்தது.தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்தகாலம். பெற்றோர்களுக்கும் தமிழ் உணர்வு மிகையாகவே இருந்தது. தம் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது. ஆகவே பிள்ளைகள் தமிழ் கற்பனை ஊக்குவித்தனர். ஆண்டுகள் கடந்தன. புலம் பெயர்ந்தவர்கள் இந்நாட்டின் பிரஜைகள் ஆயினர். மெல்ல வீட்டு மொழியும் தமிழில் இருந்து ஆங்கிலமாக மாறிற்று. பிள்ளைகள் தமிழ் கற்பதால் ஏதாவது பிரயோசனம் உள்ளதா என வினவினர். அவர்களை வேறு கலைகள், தற்காப்புக் கலைகள், விளையாட்டுக்கள், எனப் பல்வேறு துறைகளில் திறமை பெறுதற்கான பயிற்சிகளைப் பெற்றோர்கள் வழங்கினர். தமிழின் தேவை பின் தள்ளப்பட்டது.
தென் ஆபிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள தமிழர்களை வெறும் பெயரினை வைத்துக் கொண்டே தமிழர்கள் என இனம் காண முடிகிறது அவர்களுக்கு மொழி தெரியாமையால் பெயர்கள் வெவ்வேறு ரூபத்தில் காட்சி தருகின்றன. இந்த நூற்றாண்டில் அழியப் போகும் மொழிகள் 200 வரை உள்ளன என்கிறார்கள். அதில் பெரும்பாலானவை ஆசிய ஆபிரிக்க மொழிகளாக அமையலாம் என்பது மொழியியல் அறிஞர் கருத்து. தமிழ் மெழியும் அதில் ஒன்றாக இருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.
கனடா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா போலல்லாது பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ்லாந்து போன்ற நாடுகளில் வாழும் தமிழ்க் குடும்பங்களில் கூட இப்போது வீட்டு மொழியாக அந்த அந்த நாட்டு மொழிகள் வந்து விட்டதைக் காண முடிகிறது.
அது மாத்திரமல்லாமல் நமது தமிழ்ப் பிள்ளைகள் வேற்று மொழி பேசுவோரினைக் கலப்புத் திருமணமும் செய்வது இப்போது அதிகரித்துக் கொண்டு வருகிறது. மொத்தத்தில் தமிழ் இனம் பற்றி ஒரு பயம் இருக்கவே செய்கிறது.
9-கேள்வி: நூறாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் மகாஜனக் கல்லூரியில் பல ஆண்டுகள் ஆசிரியராகவும், அதிபராகவும் இருந்திருக்கிறீர்கள். அந்த இரண்டு வெவ்வேறு பாத்திரங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முடியுமா?
பதில்: இப்போது அதிபர்களாக இருப்பவர்கள் ஓரளவுக்குப் பாக்கியம் செய்தவர்களாகவே கருதுவேன். அதிகமாக எல்லாப் பாடசாலைகளுக்கும் வெளிநாடுகளில் பழைய மாணவர் சங்கங்கள் உள்ளன. பாடசாலைகளின் தேவைகளை உணர்ந்து அதற்கான உதவிகளைச் செய்து வருகிறார்கள். அரசாங்கம் தமிழ்ப் பாடசாலைகளுக்குப் பாரபட்சம் காட்டினாலும் கூட பாடசாலைகள் சுமுகமாக இயங்குவதற்குப் பழைய மாணவர் சங்கங்களின் அனுசரணை மிக்க உதவிகள் கிடைத்த வண்ணம் இருந்தன.
நாம் அதிபர்களாக இருந்த பொழுது ஒவ்வொரு சதத்தினையும் திட்டமிட்டே செலவு செய் வேண்டி இருந்தது. மகாஜனா போன்ற பாடசாலைகளுக்கு விசுவாசமிக்க பழைய மாணவர்களினதும் பெற்றோர்களினதும் உதவி தாராளமாகக் கிடைத்தது. என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் வெளி நாட்டு உதவியுடன் ஒப்பிட்டால் அது எம்மாத்திரம். மகாஜனக் கல்லூரியின் வெள்ளி விழாவினை நான் காணவில்லை. ஆனால் அதன் பொன்விழா, வைரவிழா, ஆகியவற்றினை நேரடியாகக் கண்டவன் இப்போது நூற்றாண்டு விழாவினையும் காணப் போகிறேன். இந்தனை பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்.
நான் அப்பாடசாலையில் போய்ச் சேர்ந்த ஆண்டு ஒரு மாணவன் மாத்திரமே மருத்துவக் கல்லூரி புகுந்தான். நான் விட்டு விலகிய ஆண்டில் 9 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குள் புகுந்தார்கள்.
ஆசிரியராக இருக்கின்ற பொழுது மாணவர்களுடன் தோழமையுடன் பழகினேன் அதிபராக வந்த பொழுது நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த வேண்டும் என்பதால் சற்றுக கறாராக இருந்தாலும் மாணவர்களுடைய நலம் பேணி அதற்கானவை அத்தனையையும் செய்தேன். ஆகவே அவர்களுடைய அபிமானத்துக்கு ஆளானேன்.
அதிபரான பின்னரும் எனது பாடவேளைகளில் வகுப்பிற்கும் போகாமல் இருந்ததில்லை. என்னை நம்பி வந்த மாணவர்களுக்கு என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்து கடமையாற்றியமையால் மாணவர் என்னை மதித்தனர்.
காலையில் எட்டு மணிக்கு முன்னரேயே பாடசாலை சென்று எல்லோருக்கும் முன்னதாக ஆசிரியர் இடாப்பினில் ஒப்பமிடுவேன். மாலை விளையாட்டுப் பயிற்சி நடைபெறும். நான் அலுவகத்தில் இருப்பேன், மாலை விடுதிச்சாலை மேற்பார்வை பார்த்து 7:00 மணி வரையில் வீடேகுவேன் அதனால் பாடசாலையில் நடைபெறுவது அத்தனையையும் தெரிந்து வைத்திருக்க முடிந்தது.
10-கேள்வி: புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் அதிபராக இருந்தபோது உங்கள் அனுபவம் வேறுபட்டதாக இருந்ததா? அதேபோல நைஜீரியவில், கனடாவில் கற்பித்தல் முறை வேறுபட்டிருந்ததா? அவ்வாறாயின் எப்படி என்று கூறமுடியுமா?
பதில்: புத்தூர் கொஞ்சம் பின் தங்கிய கிராமம். பிள்ளைகள் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். பாடசாலை வரவு பாதிக்கப் படும். ஆகவே தண்டனை முறை கொஞ்சம் தீவிரமாகவே இருக்க வேண்டி வந்தது. ஆனால் பெற்றோர்கள் மிகவும் பண்புடையவர்கள். அதிபர் மேல் அத்தனை அபிமானம் உடையவர்களாக இருந்தனர்.
அங்கே ஒரு பிரச்சினை ஏற்பட்டது. புத்தூர் சாதிப் பாகுபாடு காட்டும் ஒரு கிராமம். நான் அங்கு 1971 டிசம்பர் மாதம் அதிபராகினேன். 1972 ஜனவரி மாதத்தில் சமுதாயத்தில் சற்றுப்பின் தங்கிய இனப்பையன் ஒருவனைப் பாடசாலையில் சேர்த்து விட்டேன். சில நாட்களின் பின்னர் பாடசாலையின் தருமகர்த்தாக்கள் சபையின் பொறுப்பாளர் பாடசாலை வந்தார். இனிமேல் சோமாஸ்கந்தர் விக்கிரகத்தினைப் பாடசாலைக்கு எடுத்து வரமாட்டோம் என்றார்.
பாடசாலையின் அத்திவாரமிட்டதினத்திலே அருகேயுள்ள சோமாஸ்கந்தர் ஆலயத்தின் திரு உருவத்தினைப் பாடசாலைக்குக் கொண்டு வருவார்கள். அன்று முழு நாளும் அங்கே திரு உருவம் இருக்கும் மாணவர்கள் யாபேருக்கும் மதிய போசனமும் வழங்குவார்கள்..
ஏன் அப்படி வரமாட்டார் என வினவினேன். பாடசாலை தீட்டுப் பட்டு விட்டது. நீங்கள் ஒரு மாணவனைப் பாடசாலையில் அனுமதித்து விட்டீர்கள் என்றார். அதுதான் உங்கள் தீர்மானம் என்றால் நான் சொல்வதற்கு ஒன்றம் இல்லை. நான் மணவனை எடுத்தது எடுத்தது தான் என்றேன். அவர் போய்விட்டார் அதன் பின்னரே சேமாஸ்கந்தாக் கல்லூரியில் நான் நிறுவியர் நாளினை ஆரம்பித்தேன்.
அப்பேது கோப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் திரு. கதிரைவேற்பிள்ளை அவர்கள். மிகவும் அனுசரணையாக இருந்தார். இந்த சாதிய உணர்வினை உடைக்க வேண்டும் எனக் கூறி அந்த இன ஆசிரியர்கள் இருவரைப் பாடசாலையில் ஆசிரியப் பணிக்கு அமர்த்துமாறு கேட்டார். செய்தேன். அங்கேயும் பிரச்சினை வந்தது. மக்கள் என்மேல் வைத்த அன்பின் காரணமாக அவை எல்லாம் மிகவும் சுலபமாகத் தீர்ந்தன.
நைஜீரியாவில் நான் வடபகுதியில் வேலை பார்த்தேன். அங்கும் மாணவர்களும் ஊர்வாசிகளும் மிகவும் பண்பானவர்கள்; மாணவர்களுக்குக் கல்வியில் அக்கறை இல்லை பாடசாலைக்கு வராமல் விட்டு விடுவார்கள் என்பதால் அரசாங்கம் விடுதிச் சாலைகள் உடைய பாடசாலைகளையே பெரும் பாலும் ஸ்தாபித்தன. ஒரு கிராமத்துப் பிள்ளைகளை வேறோர் கிராமத்து விடுதிச் சாலையில் வசிக்கக் செய்து பாடசாலைக்கு அனுப்பினார்கள் உணவு, உடை புத்தகம், போக்கு வரத்துச் செலவு என அத்தனையுமே அரசாங்கத்தின் பொறுப்பில். மாணவர்கள் படித்தால் தானே? என்னால் இயன்றதைச் செய்தேன். விவசாயத்துக்கு பாடத்திட்டம் இலங்கையின் விஞ்ஞான பாடத்திட்டம் போன்று செய்து கொடுத்தேன். 10 ஆண்டுக்கான 10ந்தரப் பரீட்சை வினாக்களுக்கு விடை எழுதி எல்லாப் பாடசாலைகளுக்கும் வழங்கினேன்.
கனடாவின் கல்வி முறை மாணவர் மையமானது. ஆசிரியர் வெறும் அணித்தலைவர் மாதிரியே மாணவர்களை வழி நடத்திச் செல்கிறார்
இலங்கையில் 12 ம் தரத்துக்கும் பல்கலைக் கழகத்தின் முதல் ஆண்டுக்குமிடையே பெரிய இடைவெளி இல்லை. சுமுகமாக செல்ல முடியும் ஆனால் கனடாவிலே இரண்டுக்கும் இடையே பெரிய இடை வெளி உள்ளது. இரண்டாம் நிலைப் பாடசாலைகள் தம்மை பல்கலைக்கழகக் கல்விக்குத் தயார்ப்படுத்தவில்லை என்ற குற்றச் சாட்டும் உள்ளது. எமது நாட்டினைப் போன்று இங்கே பொதுப் பரிட்சை 10ந் தரத்திலோ 12ந் தரத்திலோ நடப்பதில்லை. பாடசாலையில் ஆசிரியர்களின் மதிப்பீட்டின் படியே மாணவர்கள் சித்தி தீர்மானிக்கப் படுகிறது.
முன்னேனற்றம் அடைந்த நாடு என்பதால் மாணவர்களுக்குப் பாடத்தேர்வுக்கான பட்டியல் மிகப் பெரிது தனது விருபத் துறையினைத் தேர்வு செய்வது சுலபம்.
11-கேள்வி: உங்களுக்குப் பிடித்தது பிடிக்காதது என்று விருப்பு வெறுப்பு ஏதாவது இருக்கிறதா? ஒருவருடைய குணாதியத்தை இதிலிருந்து ஓரளவு ஊகிக்கமுடியுமாகையால் சிலவற்றைப் பட்டியலிடமுடியுமா?
பதில்: எனது விருப்பு என்று பார்த்தால்…
1. வாசிப்பது மிகவும் விருப்பமானது. அதிலும் தனிமனிதர் பற்றிய செய்திகள், கதைகள், நாவல்கள் விருப்பம்
2. விளையாட்டு:
அ) கிறிக்கட் மிக விருப்பமானது. இந்திய அணி என் அபிமானத்துக்குரியது. கிறிக்கட் போட்டிகள் அத்தனையையும் தொலைக்காட்சியில் பார்ப்பேன்.
ஆ) ரென்னிஸ் ஆட்டம். நான்கு கிறாண்ட ஸ்லாம் போட்டிகளும் தொலைக் காட்சியில் பார்ப்பேன்
இ) பேஸ்போல் ரொறன்ரோ அணியான Blue Jays என் அபிமானத்துக்குரிய அணி. அவர்கள் விளையாடும் 162 போட்டிகளில் ஒரு சிலவற்றினைத் தவிர ஏனையவை யாவும் பார்ப்பேன்.
ஈ) கூடைப் பந்து: நேரம் இருந்தால் பார்ப்பேன்.
3. அரங்கக்கலைகள் நடனம், வாய்ப்பாட்டு மற்றும் வாத்தியக் கலைகள் யாவும் இங்கே நடைபெற்றால் தவற விடுவதில்லை
முன்னர் திரைப்படம் பார்ப்பதுண்டு இப்போ குறைத்துக் கொண்டேன்
4. தோட்ட வேலை: பூக்கன்றுகள் எல்லாவகையும் தேடித் தேடி வாங்கி வளர்ப்பேன். காய்கறித் தோட்டமும் செய்வேன்.
முன்பு பெரும் தொகையினில் மீன் வளர்த்தேன். இப்போ விட்டு விட்டேன்.
காங்கேசந்துறை குருவீதியில் வாழ்ந்த போது வீட்டின் முன்னே 12 அடி வரையில் விட்டமுள்ள தொட்டி ஒன்று கட்டிப் பெரும் தொகையில் வண்ண வண்ண மீன்கள் வளர்த்தேன்.
வெறுப்பு என்று ஒன்றும் இல்லை கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களை வெறுக்கும். எனக்குப் பெரிதான கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் நான் நம்பிக்கை உடையவர்களின் மனத்தினைப் புண்படுத்துமாறு பேசுவதில்லை.
12. கேள்வி : 75வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நீங்கள் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் இருந்து மாணவர்களை நல்வழிப் படுத்தியிருக்கிறீர்கள். உங்கள் கடந்தகால அனுபவத்தைக் கொண்டு எமது இளம் சமுதாயத்திற்கு என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: இளைஞர்கள் நம்மிலும் பார்க்கப் புத்தி ஜீவிகளகாக உள்ளனர். எதனையும் ஏன், எதற்கு, எப்படி என்ற கண்ணோட்டத்தில தான் பார்க்கிறார்கள். கணினி அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். எதனையும் அதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அனுபவம் என்பது பட்டுத் தெளிந்தால் தான் வரும். ஆகவே முதியவர்களுடைய அனுபவத்தினைத் தயங்காது பெற்று தமது அறிவின் மூலம் வாழ்வில் வெற்றி பெற எல்லா இளைஞர்களும் முயலவேண்டும்.
‘நல்ல பெயரை வாங்க வேண்டும், நாடு போற்ற வாழவேண்டும்’

நேர்கண்டவர்:   எழுத்தாளர்   குரு அரவிந்தன்.

No comments:

Post a Comment