Sunday, January 4, 2015

அதிபர் பொ. கனகசபாபதியின் கடைசி ஆசை

அமரர் அதிபர் பொ. கனகசபாபதியின் கடைசி ஆசை

குரு அரவிந்தன்

மரர் முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களுக்கு ஒரு ஆசை இருந்தது. அந்த ஆசையைத் தூண்டி விட்டவர் வேறுயாருமல்ல அவரது நண்பர் புனிதவேல் அவர்கள்தான். தானே நேரிலே சென்று அனுபவித்த ஒரு சம்பவத்தைப் பற்றித்தான் நண்பர் புனிதவேல் அவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பாக அதிபருடன் கதைக்கும் போது குறிப்பிட்டிருந்தார். அதாவது ஒன்ராறியோவில் உள்ள பேர்ளிங்டன் என்ற இடத்தில் ஒரு வீதியில் காரை நிறுத்தி நடுநிலைப்பல்லிணையில் ((Neutral Gear) விட்டால் அது தானாகவே குன்றை நோக்கி ஏறிச் செல்லும் என்று சொல்லியிருந்தார். முதலில் அதிபர் அதை நம்பவில்லை. ஆனால் நண்பர் புனிதவேல் அவர்கள் தானே தனது காரில் அதைப் பரிட்சித்துப் பார்த்தாகச் சொன்னார். அந்த நிமிடத்தில் இருந்தே அதிபரின் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. எப்படியாவது தானும் அங்கு சென்று அதைப் பார்த்துவிட வேண்டும், அதைப்பற்றி விரிவாக எழுத வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. அறிவியல் ரீதியாக அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிவதிலேயே அவரது கவனம் இருந்தது. எழுபத்தி ஒன்பது வயதான அவரோ, அவரது உடல் நிலை காரணமாக வெளியே செல்ல முடியாத நிலையில் இருந்தார். சற்றுத்தூரம் நடப்பதுகூட அவருக்குக் கடினமாக இருந்தது. இதைவிட வெளியே உறைய வைக்கும் பனிக்குளிர் வேறு உறைய வைத்துக் கொண்டிருந்தது. குளிருக்குள் வெளியே சென்று வேறு வருத்தத்தைத் தேடிக் கொள்ள வேண்டாம் என்று உறவுகளின் அன்புக்கட்ளையும் இருந்தது.

அவரது விருப்பத்தை அறிந்த நண்பர் புனிதவேல் அவர்கள் எப்படியாவது அவரை அங்கு அழைத்துச் சென்று அதை நேரடியாக அனுபவித்துப் பார்ப்பதற்கு ஒழுங்கு செய்வதாக உறுதி அளித்திருந்தார். வீர தீரச் செயல்கள் செய்வதில் நண்பர் புனிதவேல் அவர்களுக்கு அதிக ஆர்வம் உண்டு. பரசூட்டில் குதிப்பது, கடினமான மலைகளில் ஏறுவது போன்ற செயல்களை வசதி அற்றோருக்கு நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே இவர் செய்திருக்கின்றார். எனவே அவர் உறுதி அளித்தபடி ஞாயிற்றுக் கிழமை கவிஞர் கந்தவனம், அதிபர் பொ. கனகசபாபதி சகிதம் புனிதவேல் அவர்கள் பேர்ளிங்டன் நோக்கிப் பயணமானார். வண்டியில் இருந்து இறங்கத் தேவையில்லை வண்டிக்குள்ளேயே இவர் இருக்கலாம் என்பதால் பயணம் இலகுவானதாக இருந்தது. ரொறன்ரோவில் இருந்து சுமார் 55 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த இடம் அமைந்திருக்கின்றது. பேர்ளிங்டன் நகரத்தில் இருந்து சுமார் நாலு கிலோ மீற்ற்ர் தூரத்திரல் உள்ள கிங்வீதில் அமைந்துள்ள இந்த இடம் பற்றி 1990 ஆம் ஆண்டு பேர்ளிங்டன் போஸ்ட் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் அதைப் பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லையாதலால் அது பிரபலமாகவில்லை.

ஆர்வமிகுதி காரணமாக நானும் அங்கு சென்று பார்த்தேன். காரணம் அத்தான் ( என்து மூத்த சகோதரியின் கணவர்) எதையாவது செய்தால் அதில் ஏதாவது அர்த்தம் இருக்கும். மூடநம்பிக்கைகளில் அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை. சமயத்தைப் பொறுத்த வரையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. சமயச் சுதந்திரத்தில் என்றும் அவர் தலையிட்டதில்லை. அவரது இறுதி ஆசைகளில் இதைப்பற்றி அறிவியல் ரீதியாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதும் ஒன்றாக இருந்திருக்கிறது. வண்டி தானாகவே மேல் நோக்கிச் சென்றதை வண்டிக்குள் இருந்தபடியே அவதானித்தார்.

அன்று அது நிறைவேறியதில் மகிழ்ச்சியாக இருந்தார். போகும்போது, ரிம்கொட்டன் கோப்பி அவருக்கு விருப்பம் என்பதால் அதையும் வாங்கிக் கொடுத்தார்கள். திரும்பி வரும்போது நண்பரின் வீட்டில் கூழும், குரக்கன் பிட்டும் கிடைத்தது. உணவுக் கட்டுப்பாடு இல்லாத ஒரு சுதந்திரப் பறவைபோல அந்த நாளை நன்றாகவே அனுபவித்தார். கடந்த ஒரு மாதமாக அவருடைய ஈமோகுளோபின் மட்டம் 99 ஆகக் குறைந்தபோது, அந்தத் துறை அவருக்கு அத்துபடி என்பதால் அது ஏன் குறைந்தது என்பதை அறிவதில் ஆர்வமாக இருந்தார். எழும்பு மச்சையின் செயற்பாடு குறைந்திருக்கலாம் என்று அவரே சொன்னார். அதற்காக அவருக்குக் குருதி ஏற்றி இரும்புக் கரைசல் கொடுத்தார்கள். இரண்டு வாரங்களின்பின் ஈமோகுளோபின் மட்டம் 107 க்கு வந்தபோது மீண்டும் தெம்பாக இருந்தார். வைத்தியர்கள் சாக்குப்போக்குச் சொல்லிக் கடத்திவிடுகிறார்கள் என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது.
 ‘மேற்கொண்டு நாம் செய்வதற்கு எதுவும் இல்லை’ என்ற வைத்தியரின் வார்த்தை அவரை மிகவும் பாதித்திருந்தது. இன்னும் ஒரு வாரம்தான் உயிரோடு இருப்பேன் என்பது அப்போது அவருக்குத் தெரியாது. ஆனாலும் மரணிப்பதற்கு ஒரு வாரத்தின் முன்பாக வேடிக்கையாக ‘எல்லோரும் என்னைக் கைகழுவி விட்டு விட்டார்கள்’ என்று அவர் சொன்ன வார்த்தை மனமுடைந்து வந்த வார்த்தையாகவே எனக்குப்பட்டது. அதிபர் இதைப்பற்றி எழுத விரும்பினார் ஆனால் அதற்கிடையில் காலன் அவரை அழைத்துச் சென்றுவிட்டான்.

No comments:

Post a Comment