Friday, February 27, 2015

FeTNA - Toronto

திரைகடல் ஓடிச் சாதனை படைத்த தமிழர்கள்.

குரு அரவிந்தன், கனடா

வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை மலரில் வெளிவந்த கட்டுரை.


‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற ஒளவையின் வாக்கைத் தொன்று தொட்டுத் தமிழர்கள் கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ, மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதற்கு அதை இப்பொழுதும் பயன்படுத்துகிறார்கள். பல தமிழர்கள் இன்று புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்வதற்குப் பொருளாதார தேவையும், தாய் நாட்டுச் சூழ்நிலையும் ஒரு காரணமாய் இருக்கின்றது. .பூமியில் எழுபது வீதமான நிலம் தண்ணீரால் மூடப்பட்டிருக்கின்றது என்பது யாவரும் அறிந்ததே. தமிழர்கள் வாழ்ந்த, வாழும் பிரதேசங்களில் அதிகமான இடங்கள் கடலால் சூழப்பட்டிருக்கின்றன. எனவே போக்குவரத்து வசதிகள் அற்ற காலங்களில் தண்ணீரையும் போக்கு வரத்திற்குப் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் அவர்கள் சிந்தையில் எழுந்திருக்கிறது. எப்படி எல்லையில்லா வானத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி அறிவதில் எங்கள் முன்னோரின் பார்வை திரும்பியதோ, அதேபோல கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் தண்ணீர்ப் பரப்புக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதை அறிவதில் அன்றைய தமிழர்கள் ஆர்வம் காட்டினர். இயற்கையை இரசிக்கப் பழகிக்கொண்ட தமிழர் தமக்குக் கிடைத்த வசதிகளைக் கொண்டு தண்ணீரில் நடமாட முயற்சி செய்து பார்த்தனர். அதனால் தான் புயலில் அடிபட்டுத் தண்ணீரில் மிதந்து சென்ற மரங்கள்மீது அவர்கள் பார்வை திரும்பியது. இயற்தை தந்த பாடத்தைக் கொண்டு பெரியமரத் துண்டுகளைத் தண்ணீரில் மிதக்க வைக்க முடியும் என்பதைக் கண்டறிந்தனர். போக்குவரத்து மட்டுமல்ல, உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய, கடலுணவு சேகரிப்பதற்காகவும் அவர்களுக்கு மிதவை தேவைப்பட்டது. மரக்குற்றிகளை மிதக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படவே, அவற்றை ஒன்றோடு ஒன்றாக இணைத்து தண்ணீரில் மிதக்க விட்டுச் சாதனை படைத்தனர். அப்படிக் கட்டி மிதக்கவிடப்பட்ட மரங்களுக்குக்; கட்டுமரம் என்றும் பெயரிட்டனர். அதனால்தான் தமிழில் இருந்து இந்த கட்டுமரம் (ஊயுவுயுஆயுசுயுN) என்ற வார்த்தை ஆங்கிலத்திற்கும், அதிலிருந்து ஏனைய மொழிகளுக்கும் சென்றன. 

17ம் நூற்றாண்டளவில் ஆங்கிலத்தில் கட்டுமரம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கின்றது. 1690ல் வில்லியம் டம்பியர் என்ற கடலோடி தமிழர்களின் கட்டுமரம் பற்றித் தனது ஆங்கிலக்குறிப்பில் எழுதியுள்ளார். பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பாகவே கடற்பயணம் ஆரம்பிக்கப்பட்டதாக மேலை நாட்டு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சுமேரியர், கிரேக்கர், அரேபியர், சீனர் என்று பல வெளிநாட்டவர்களும் தங்கள் வல்லமையால் கடற்பயணங்களை மேற்கொண்டு தமிழர் வாழ்ந்த பிரதேசங்களுக்கு வர்த்தக நோக்கத்தோடு வந்து சென்றனர். அதனால் தமிழர் அறிந்து வைத்திருந்த கப்பல் கட்டும் கலை மேலும் விருத்தியடைய வாய்ப்பு ஏற்பட்டது. தமிழரின் கப்பல் கட்டும் கலையைப்பற்றி நாம் முறையாக ஓரிடத்திலும் ஆவணப்படுத்தவில்லை என்பது பெரும் குறையாக இருக்கின்றது. கல்வெட்டுகள் மற்றம் வெளிநாட்டு குறிப்புக்கள் என்பவற்றுக்கூடாக இவை ஓரளவு ஆவணப்படுத்தப் பட்டாலும் அது போதுமானதாக இல்லை. தமிழரின் கப்பல் கட்டும் கலை என்பது, கப்பல் கட்டுவது, கடலோடுவது, நெடுந்தூரக் கடற்பயணம் செய்வது, கடற்றொழில் செய்வது, கடல் வணிகம் செய்வது, கப்பல்களைப் பராமரிப்பது, கப்பலோட்டிகளுக்குப் பயிற்சி அளிப்பது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் குறிக்கின்றது. இவை யாவும் கப்பல் கலையோடு நெருங்கிய தொடர்புடையனவாகும். கடல் சூழ்ந்த நிலப்பரப்பில் அனேக தமிழர்கள் வாழ்ந்து வந்ததால், இத்தகைய கடற் பயணங்களில் அவர்கள் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் முறையாகப் பதிவுசெய்வதன் மூலம், எமது எதிர்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தமிழர் கப்பல் கலையை சிறந்த முறையில் ஆவணப்படுத்த முடியும்.


தமிழர்கள் கப்பல் கட்டிய, கப்பலோட்டிய வரலாற்றை பார்ப்போமேயானால் புராதன காலம், இடைக்காலம், நவீனகாலம் என நாங்கள் எடுத்து ஆராய முடியம். புராதன குகைச் சிற்பங்கள், சுவர் ஓவியகளிலும் இருந்து இது பற்றிய விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியம். இத்தகைய ஆவணங்கள் முறையாகப் பாதுகாக்கப்படமையால் அனேகமானவை அழிந்து போய்விட்டன. அதேபோல இடைக்காலம் என்பதை சோழ சாம்ராச்சிய காலமாக எடுத்துக் கொள்ளலாம். பாண்டியர் காலத் துறைமுகங்கள் பற்றிய தகவல்களும், பல்லவர் காலத்து நாணயத்தில் கப்பல் படமும் இருப்பதைக் கவனத்தில் கொள்ளலாம்.. இக்காலம் பற்றிய தகவல்கள் நிறையவே இருக்கின்றன. சோழருடைய தூரதேச கடற் பயணங்கள், அவர்களின் பலம் வாய்ந்த கடற்படை, கப்பல் கட்டும்துறை, இறங்குதுறை போன்ற விபரங்களை பழைய, சங்ககால இலக்கியங்களில் இருந்தும், கல்வெட்டுக்கள், செப்பேடுகள் போன்றவற்றில் இருந்தும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றன. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சோழரின் கடற்படை வலிமை பற்றிக் கூறுகின்றன. இதைவிட தாலமி, பிளினி, மார்க்கோபோலோ போன்றவர்களின் குறிப்புக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. அடுத்தாக நவீன காலக் கப்பல் கட்டும் கலை பற்றி அறிவதற்கு எங்களிடம் நிறைய ஆவணங்கள் தற்போது இருக்கின்றன. ஒரு காலத்தில் கப்பற்படையே வலிமை மிக்கதாக இருந்ததால் போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஸ்பானியர் பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என்று பலரும் தங்கள் கடற்படை வலிமையைக் கொண்டு நாடு பிடிப்பதில் தங்கள் கவனத்தைச் செலுத்தினர். 16ம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டு வரை இவர்களின் இந்த ஆதிக்கம் கடற்பரப்பில் இருந்தது. விமானப்படை அறிமுகமாகுமுன், யாரிடம் பலம் மிக்க கப்பற்படை இருந்ததோ அவர்களே மற்றவர்களைவிட வலிமை மிக்கவர்களாகக் கணிக்கப்பட்டனர்.

கப்பற்கலையில் சோழர்கள் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாக இருந்தார்கள். கரிகாலசோழன் 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். இவனது முன்னோர்கள் கடல் கடந்து கப்பல் ஓட்டிய வரலாற்றை புறநானூறு (புறம்.66) கூறுகிறது. 5ம் நூற்றாண்டளவில் கட்டுமரம் பாவனையில் இருந்ததாகத் தெரியவருகின்றது. பிற்காலத்தில் சோழரின் கடற்படைகள் பர்மா, மலேசியா, யாவா, சுமத்திரா, லட்சதீவுகள் போன்ற கீழத்தேசங்களுக்கும், தெற்கே உள்ள இலங்கைத்தீவு, மாலைதீவு போன்ற இடங்களுக்கும் கடற்பாதை வழியாகச் சென்றதற்கான சான்றுகள் இருக்கின்றன. மலாய் தீபகற்பத்தில் உள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் போன்ற இடங்களைக் கைப்பற்றிதாகவும், இலங்கை முழுவதையும் சோழரின் கடற்படை கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் சரித்திச் சான்றுகள் கூறுகின்றன. பலம் மிக்க கடற்படையைக் கொண்டதாகவும், கடல் கடந்த பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரசாகவும் 10ஆம், 12ஆம் நூற்றாண்டுகளில் சோழவரசு இருந்திருக்கிறது. 


பெரும் கப்பல்களைக் கட்டி, நெடுந்தூரம் பயணம் செல்ல வளம் பெற்று இருந்த தமிழரின்; கப்பற்கலை நலிந்து போவதற்கு இந்தியாவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரித்தானியர்களால் அனுமதி மறுக்கப்பட்டதும் ஒரு காரணமாகும். கப்பல் ஓட்டிய தமிழன் என்று தமிழரின் பெருமையை உலகறியச் செய்தவர் வ.உ. சிதம்பரனார். 1906ம் ஆண்டு கப்பல் ஓட்டியே தீரவேண்டும் என்று துணிந்து நின்று செயற்ப்பட்டார். இந்திய தச்சர்களோ, பணிமனையினரோ, கொல்லரோ கப்பல்களில் வேலை செய்ய முடியாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், தமிழர் கப்பற்கலை மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல், ஆக்கபூர்வமான எந்த முன்னேற்றமும் இல்லாமல் நின்று போய்விட்டது. ஆனாலும் வ.உ. சிதம்பரனார் கொடை வள்ளல்களிடம் கடன் பெற்று கப்பல் ஒன்றை விலைக்கு வாங்கி கடலில் பாவனையில் விட்டார். அப்படி அவர் துணிந்து செயற்பட்டதைப் பொறுக்கமுடியாத பிரிட்டிஷ் இந்திய கம்பெனியினர் அதைத் தடுக்க முற்பட்டனர். அவரது கப்பலுக்கு வருமானம் இல்லாமற் செய்வதற்கு பல வகையாகவும் முயற்சி செய்தனர். போதாக்குறைக்கு அவரைக் கைது செய்து சிறையிலும் அடைத்தனர். 
இந்த சம்பவத்தை ஆய்வாளர் கடலோடி நரசையா அவர்கள் குறிப்பிடுமபோது, ‘1906 இல் ஆரம்பிக்கப்பட்ட வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சுதேசிக் கப்பல் கம்பெனி பிரிட்டிஷ் இந்தியா கம்பெனியினதும் அன்றைய காலனித்துவ அரசின் கூட்டுச் சதியினால் அழிவுற்றது. பிரிட்டிஷ் இந்தியா கம்பெனி சுதேசி கம்பெனியைவிடக் குறைவாகக் கட்டணம் விதித்து, துறைமுக அதிகாரிகளின் தயவால், சுதேசி கம்பெனி கப்பலின் முன்பே சென்று, சிதம்பரம் பிள்ளையின் கப்பலுக்கு வருமானம் இல்லாதவாறு செய்தது. மேலும், சிதம்பரம் பிள்ளையவர்களை கைது செய்தது’ (நரசய்யா, 155).

கப்பல் கட்டும் மரபில் பெரிதும் வழிவந்து ஈழத்தின் வடபகுதியில் இருக்கும் வல்வெட்டித்துறையில் 19ம் நூற்றாண்டிலும், 20ம் நூற்றாண்டிலும் பல கப்பல்கள்; கட்டப்பட்டதாக அறிய முடிகிறது. சமீபத்தில் நியூசிலாந்து பகுதியல் கண்டெடுக்க்ப்பட்ட ஒரு மணியில் தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்டிருந்ததையும் இங்கே குறிப்பிடலாம். மிகப் பழைய காலத்தில் இத்தகைய வடிவத்தைக் கொண்ட மணிகள் கப்பலில் கட்டப்பட்டுப் பாவனையில் இருந்ததாகத் தெரியவருகின்றது. தமிழரின் வணிகக்கப்பல்கள் அந்தப் பகுதியில் மூழ்கியிருக்கலாம் எனவும் நம்ப இடமுண்டு.

சலங்கு எனப்படும் பாய்மரக்கப்பல்கள் இலங்கையில் வடக்குப்பக்கத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் உள்ள துறைமுகத்தில் ஒரு காலத்தில் பாவனையில் இருந்தன. இக்கப்பல்கள் மூன்று நான்கு பாய்மரங்களைக் கொண்டது. வாடைக்காற்றடிக்கும் காலங்களில் பாதுகாப்பக் கருதி இக்கப்பல்களை மேற்குத் திசையில் இருக்கும் புங்குடுதீவுப் பகுதியில் உள்ள ஊர்காவற்றுறைத் துறைமுகத்திற்குக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. இதைவிட கடற்றொழிலில் ஈடுபட்டவர்களும் அப்பகுதிக்குச் சென்று தற்காலிகமாகத் தங்குவது வழக்கமாக இருந்தது. அதுமட்டுமன்றி விற்பனைக்கான உணவுப்பொருட்களையும் இக்கப்பல்கள் மூலம் அங்கே கொண்டு செல்வதுண்டு. இச்சம்பவத்தை பற்றிய விளக்கத்தை பழைமையான ஒரு நாட்டார் பாடல் தெளிவாக விளக்குகின்றது. 

வல்வெட்டித்துறைப் பாய்மரக்கப்பலில்
வந்து குவியுது பண்டமடி
வாய் நிறையத் திண்டு வெத்திலை போடலாம்
வாருங்கோ கும்மி அடியுங்கடி
வத்தை சலங்கு கட்டுமரம் தோணி
வள்ளங்கள் வந்து குவியுதடி
எத்தனை பண்டங்கள் ஏந்தி வருகுது
எல்லாமே கொள்ளை லாபமடி!

கப்பல் கட்டும் கலையில் சிறந்து விளங்கிய தமிழர்கள், அதன் வடிவத்திற்கும், பாவனைக்கும் ஏற்ப அவற்றுக்குக் குறியீட்டுப் பெயர்களைச் சூடினர். அவற்றை முறையே கட்டுமரம், நாவாய், தோணி, வத்தை, வள்ளம், மிதவை, ஓடம், தெப்பம், டிங்கி, பட்டுவா, வங்கம், அம்பி, திமில், புணை, கலம், படகு, கைப்பந்தல், வஞ்சி, நீள்மரம், மரக்கலம் என்றெல்லாம் அழைத்தனர். கப்பல் கட்டுவதற்கு ஏற்ற மரங்கள் தமிழர் வாழ்ந்த பகுதிகளிலே இருந்ததால் அந்த மரங்களையே பாவித்தனர். வேப்பமரம், இலுப்பை, நாவல், புன்னை, வெண்தேக்கு, தேக்கு போன்ற மரங்களே கப்பல் கட்டுவதற்குச் சிறந்தனவாகவும், 

பாவனைக்குரியதாகவும் இருந்தன. தண்ணீரில் நீண்ட காலத்திற்குத் தாக்குப் பிடிக்கக் கூடியனவாகவும், தமிழர் வாழ்ந்த பகுதிகளில் இலகுவில் பெறக்கூடியதாகவும் இந்த மரங்கள் இருந்தன.

சிவசுப்பிரமணிய புரவி என்பது வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு 1918 ஆம் ஆண்டுவரைக்கும் சேவையில் ஈடுபட்டிருந்த கப்பலாகும். இதன் உரிமையாளர்கள் ஏரம்பமூர்த்தி, சிதம்பரப்பிள்ளை, நாகமுத்து ஆகியோர் ஆவர். இக் கப்பலில் அ. ஆறுமுகம், கு. சரவணமுத்து ஆகியோர் தண்டையல்களாக பணி புரிந்துள்ளார்கள். அன்னபூரணி என்ற பெயரைக் கொண்ட கப்பல் தமிழர்களால் வல்வெட்டித்துறையில் 1930ம் ஆண்டளவில் கட்டப்பட்டது. ஈழத்தில் வல்வெட்டித்துறையில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் மசாசுசெட்சு மாநிலம் வரைக்கும பயணம் செய்த கப்பல் ஆகும். இக்கப்பலை நாகப்பசெட்டியாரிடம் இருந்து 1937 ஆம் ஆண்டளவில் அமெரிக்காரான வில்லியம் றொபின்சன் வாங்கினார். இந்தக் கப்பலைத் தமிழ் கடலோடிகள் வல்வெட்டித்துறையில் இருந்து ஓட்டிச்சென்று அமெரிக்காவில் கையளித்தனர். இது வேம்பு, இலுப்பை மரங்களைக் கொண்டு தமிழர் கப்பல் கட்டும் கலையைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட ஒரு பாய்க்கப்பலாகும். இதன் நீளம் 133 அடிகள் என்றும், அகலம் 19 அடி என்றும் தெரியவருகின்றது. இக்கப்பலில் புவிப்படம், திசையறிகருவி, ஆழமானி ஆகியவை மட்டுமே இருந்தன. கடலோடிகளாக கனகரெத்தினம் தம்பிப்பிள்ளை, (தண்டையல்), சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை, தாமோதிரம்பிள்ளை சபாரெத்தினம், பூரணவேலுப்பிள்ளை சுப்பிரமணியம், ஐயாத்துரை இரத்தினசாமி ஆகியோர் கடமையாற்றியதாகத் தெரியவருகின்றது. பர்வதபத்தினி என்பது வல்வெட்டித்துறையில் கடைசியாகக் கட்டப்பட்ட மூன்று பாய்மரங்களைக் கொண்ட பெரிய கப்பல் ஆகும். இது 1943 ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியம் என்ற கப்பல் கட்டும் கலைஞரின் மேற்பார்வையில் இந்தக் கப்பல் கட்டப்பட்டது. இதன் உரிமையாளர் சி. குமாரசாமி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் சரித்திரத்தை எடுத்துப் பார்த்தாலும் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து விஜயன் வந்தபோது அவனையும் அவனது தோழர்களையும் படகில் ஏற்றி அனுப்பி வைத்ததாகத்தான் குறிப்பிடுகிறார்கள். அதாவது கட்டுமரக் காலத்தின் பின்தான் படகு கட்டும் காலம் வந்தது என்பது யாவரும் அறிந்ததே. எனவே கட்டுமரம் என்ற சொல் தமிழ் சொல்லாகையால் அதன் பாவனையாளர்களான தமிழர்கள் அந்த மண்ணில் முன்பே இருந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் ஓரளவு ஊகிக்க வாய்ப்புண்டு.

தமிழரின் கப்பல் கட்டும் கலையில் வியத்தகு மாற்றங்கள் சமீபத்தில் ஏற்பட்டிருந்தன. பாதுகாப்புக் காரணங்களுக்காக இவை வெளியே கொண்டு வரப்படவில்லை. முல்லைத்தீவில் உள்ள யுத்தகால பொருட்காட்சிச் சாலையில் சமீபத்தில் வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் பலரையும் அதிசயிக்க வைத்ததில் வியப்பில்லை. இதற்குக் காரணம் அவை யாவும் தமிழர்களாலே உருவாக்கப்பட்ட சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல்களாகும். எந்தவித ஓசையும் இன்றித் தண்ணீருக்கடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய நீர்மூழ்கிகள், தனி ஒரு மாலுமி அமர்ந்து விரைவாகச் செல்லக்கூடிய நீர்மூழ்கிகள் போன்றவற்றை முல்லைத் தீவு தொழிற்சாலையில் கண்டெடுத்திருக்கிறார்கள். அவற்றில் சில பாவனையில் இருந்ததாகவும் தெரிய வருகின்றது. அவையெல்லாம் தமிழனின் கைவண்ணத்தில் உருவானவையாகும். எதிரியின் கப்பல்களைத் தாக்கியழிக்கும் வல்லமை கொண்டவையாக முல்லைத்தீவ தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் அமைந்திருந்தன. தமிழரின் கப்பல் கட்டும் கலையில் மிகப்பெரியதொரு மாற்றத்தை இது கொண்டு வந்திருக்கிறது. வசதிகள் இருந்தால் தமிழரின் கப்பல்கட்டும் கலை மேன்மேலும் ஆக்கபூர்வமான பாதையில் விருத்தியடையும் என்பதில் சந்தேகமே இல்லை.

உசாத்துணைகள் :

ஈழத்துப்பூராடனார். (2011). வல்வெட்டித்துறை கடலோடிகள். ரொறன்ரோ: நிப்ளக்ஸ் அச்சகம்.
பா. மீனாட்சிசுந்தரம். (2006). வரலாற்றில் வல்வெட்டித்துறை. . யாழ்ப்பாணம்: அரும்பொருள் காப்பகம்.
கடல்வழி வணிகம் – கடலோடி நரசையா (இணையத்தளம்)
நாட்டார்பாடல்: தகவல்: கலாநிதி காரை.செ.சுந்தரம்பிள்ளை, சிதம்பரக் கல்லூரி நூற்றாண்டு மலர்.


No comments:

Post a Comment