Wednesday, April 1, 2015

Book Review - Valvai Zagara

நூல் விமர்சனம் 

குரு அரவிந்தன்

வல்வை சகாறாவின் 
1. வேங்கையன் பூங்கொடி 
2. காவியத் தூது


வணக்கம்.

ரொறன்ரோ தமிழ் சங்கத்தின் ஆதரவில் 28-03-2015 அன்று நடந்த சிறுகதைப் பட்டறைக்குச் சென்றிருந்தேன். கனடிய தமிழ் சிறுகதைகளின் கருப்பொருட்கள் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றைத் தயாரித்து அங்கே வாசிக்கும்படி கேட்டிருந்தார்கள். மிகவும் கடினமான கட்டுரை என்றாலும் கனடிய இலக்கிய முயற்சிகளை ஆவணப்படுத்த வேண்டும் என்ற பெருவிருப்பின் காரணமாகவே இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டு முடிந்த அளவு தகவல்களைத் திரட்டிக் கொடுத்திருந்தேன். ஒரு சிறுகதை எழுதியவர்களே தங்களைச் சிறுகதை எழுத்தாளர் என்று சொல்லும் இலக்கிய உலகில் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாததாலும், சிறுகதையா அல்லது கட்டுரையா என்ற விவாதம் கனடாவில் தொடர்ந்து கொண்டிருந்ததாலும், ‘நான் வாசித்த கனடிய சிறுகதைகள’ என்று தலைப்பில் சிறு திருத்தம் செய்து கொண்டேன். பல இலக்கிய நண்பர்களும் ஆர்வலர்களும் வந்திருந்தனர். எழுத்தாளர் அ.முத்துலிங்கம், பேராசிரியர் பசுபதி, பேராசிரியர் அமுது யோசவ்வாஸ் சந்திரகாந்தன், வைத்திய கலாநிதி லம்போதரன், எழுத்தாளர் அகில், சின்னையா சிவநேசன், திருமதி. கனனேஸ்வரி நடராஜா, அனலை இராஜேந்திரம், இராஜலிங்கம், அருள் சுப்ரமணியம், அகணி சுரேஸ் போன்றவர்களை அப்போது அங்கே சந்தித்து உரையாட முடிந்தது. கட்டுரை சிறப்பாக, பாரபட்சம் அற்றதாக அமைந்ததாக வாழ்த்தினார்கள். பட்டறை முடிவுற்றபின் சகோதரி வல்வை சகாறா அவர்கள் அருகே வந்து ‘அரவிந்தனண்ணா இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்’ என்று அழகான அட்டைப் படங்களைக் கொண்ட இரண்டு புத்தகங்களை என்னிடம் கொடுத்தார்.உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கூட நான் பார்க்கவில்லை, ஆனாலும் அந்த அன்பான வேண்டுகோளைத் தட்டமுடியாமல் ஏற்றுக் கொண்டேன்.
வளர்ந்து வரும் இலக்கிய ஆர்வலர்களைப், படைப்பாளிகளைப் பாராட்ட நான் என்றும் பின் நின்றதில்லை. எனவே தொழில் விடையமாகப் பயணம் மேற்கொண்ட போது இந்த இரண்டு புத்தகங்களையும் பயணத்தின்போது வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. ‘காவியத்தூது,(கவிதை)’ ‘வேங்கையன் பூங்கொடி, (காப்பியம்)’ ஆகிய இரண்டு நூல்களுமே கவிதைத் தொகுப்புகளாக இருந்தன. ஊரையும் உறவுகளையும் பிரிந்த ஏக்கமும் துயரமும் கவிதைகளில் பளிச்சென்று தெரிகின்றது. மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி சிதைகளை மூட்டிய வரலாறு கவிதையில் தெறிக்கின்றது. அழுவதற்கும் மறுக்கப்பட்டவர்கள் என்ற விரக்தியின் உச்சத்தைச் சகோதரி சகாறா வார்த்தைகளால் கொட்டியிருக்கின்றார். ‘விழுகை என்பது விதிப்படியும் எழுகை என்பது வினைப்படியும் நிகழ்ந்தே ஆகவேண்டும்’ என்று அவர் ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார். விழுவது ஒன்றும் தோல்வி அல்ல, விழுந்தபின் எழும்பாது இருப்பதுதான் தோல்வி என்பதைச் சகோதரி சகாறா புரிந்து கொண்டிருப்பார் என நினைக்கின்றேன்.
வேங்கையன் பூங்கொடி, காவியத்தூது ஆகிய இரண்டு நூல்களும் 2014 ஆண்டு செப்டெம்பர் மாதம் பானு வெளியீடாக வெளிவந்திருக்கின்றன. சென்னையில் உள்ள அம்மன் பிரிண்டிங் ஒர்க்ஸ் என்ற அச்சகத்தினர் இந்த நூல்களை அச்சேற்றி இருக்கின்றார்கள். காவியத்தூது என்ற நூலின் அட்டைப்படத்திற்கு ஓவியர் புகழேந்தி ஓவியம் வரைந்திருக்கின்றார்.


பெயரில் சகாராவைக் கொண்டதாலோ என்னவே ‘பாலைவனக் குயிலே நீ சோலைவனம் சேர்ந்ததனால் மாலைகளெல்லாம் உந்தன் தோளில்’ என்று காவலூர் கண்மணி பாராட்டியிருந்தார். ‘ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக் கூண்டுக்குள் அடைக்க இனியும் எம்மால் முடியாது. உங்கள் தாகம் தீர்க்காது ஊமைக் காயங்களுடன் உமைவிட்டுச் செல்வது இதுவே இறுதியாகட்டும்.’ எனும் கவிதையை மீண்டும் மீண்டும் கண்ணீருடன் சகோதரி சகாறா வாசித்ததை நிழலி என்ற வாசகர் குறிப்பிட்டிருந்தது மனதைத் தொட்டது. இன்னுமொரு வாசகர் குறிப்பிட்டதுபோல, ஆர்ப்பரித்த சுமைசுமந்த காலமதை வென்ற நொந்த கணங்களின் பிரதிபலிப்புத்தான் இந்த நூலின் பதிப்பு என்பதால், சகோதரி சகாறாவின் நீண்ட நாளாசை இன்று நிறைவேறி இருக்கின்றது. வாசகர்களே குறுகிய வட்டத்திற்குள் நின்று பிசைந்த மாவையே பிசைந்து கொண்டிராமல், உங்கள் தேடல்களை விரிவு படுத்திக் கொள்ளுங்கள். வல்வை சகாறா போன்ற படைப்பாளிகளைத் தேடிப் பாராட்டி ஊக்குவிப்பதால் எங்கள் தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடையப் பெரிதும் உதவியவர்களாக இருப்பீர்கள்.

No comments:

Post a Comment