Tuesday, May 12, 2015

மழை - Rain

பெய்யெனப் பெய்யும் மழை

(குரு அரவிந்தன்)

தமிழ் நாட்டில் தண்ணீர் பற்றாக் குறையால் வாடிக் கொண்டிருந்தவர்களுக்கு சமீபத்தில் அதிஸ்டம் அடித்தது எப்படித் தெரியுமா? அணைக்கட்டைத் திறந்து மேலதிக தண்ணீரைத் தமிழ் நாட்டிற்குக் கொடுப்பதற்கு அயல் மாநிலங்கள் தயக்கம் காட்டிக் கொண்டிருந்தன. அதனால் தமிழ் நாட்டில் குடிநீர் பற்றாக்குறை மட்டுமல்ல விவசாயப் பயிர்களும் வாடத் தொடங்கின. இச் சந்தர்ப்பத்தில்தான் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் செயற்கை மழையைப் பெறுவதற்கு முயற்சி செய்தார்கள். அதற்காக அவர்கள் மேகத்தில் மழைக்குரிய விதைகளை விதைத்ததும் ஒரு காரணமாகும். மேகத்தில் விதைப்பது என்றால் என்னவென்று ஆச்சரியப்படாதீர்கள். மழை பெய்வதற்காக விமானத்தில் உயரே பறந்து டிரைஐஸ்(Dry Ice), சில்வர் ஐயோட் (Silver iodide) போன்றவற்றை மேகக் கூட்டங்களில் தூவுவதாகும். இது பனித்துகள்களாய் மாறி மேகத்தில் கலக்கும்போது சிறிய நீர்த்துளிகளாக மாறும். பல துளிகள் ஒன்றாகியதும் மழைத் துளிகளாக மாறித் தரையை அடைகின்றன. உண்மையிலே கர்நாடக மாநிலம் தனக்குத் தேவையான மழையைப் பெறுவதற்காகத்தான் பெருவாரியான பணத்தைச் செலவழித்து விசேட விமானத்தின் மூலம் மேகத்தில் விதைகளை விதைத்திருந்தார்கள். ஆனால் அதன் பலன் கர்நாடகாவிற்கு மட்டுமல்ல, அருகே இருந்த தமிழ் நாட்டிற்கும் கிடைத்திருந்தது. 31 சதவிகிதம் கர்நாடகாவிலும் அதைச்சுற்றியுள்ள பகுதியிலும்,  மிகுதி 69 சதவிகிதம் மழை தமிழ் நாட்டிற்கும் பொழிந்திருக்கிறது. எதிர்பாராமல் கொஞ்சம் அதிகமாகவே தமிழ் நாட்டில் மழை பொழிந்து விட்டதால் நடைபெற இருந்த பல நிகழ்ச்சிகள் கூடத் தடைப்பட்டுப் போய்விட்டன.

பூனேயில் உள்ள வெப்பமண்டல வானிலை இயல் நிறுவனத்தின் உதவியுடன் இதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டிருந்தது. செயற்கை முறையில் மழையை வரவழைப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டாலும் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே விண்ணப்பித்திருந்தது. செயற்கை முறையில் மழையை வரவழைப்பற்கான செலவு அதிகமாகையால் ஏனைய நிறுவனங்கள் இந்த விண்ணப்பத்தில் அதிக அக்கறை காட்டவில்லை.
செயற்கை முறையிலான மழை பெய்யும் திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட பகுதிகளிலோ அல்லது அணைக்கட்டுப் பகுதிகளிலோ மழையை வரவழைக்க முடியம். ஏனென்றால் மேகக்கூட்டங்களில் எப்பொழுதும் சுத்தமான நீர் இருக்கவே செய்யும். அந்த நீரை மழைத் துளிகளாக மாற்றுவதே செயற்கை முறையாகும். இதற்கு செயற்கைக் கோள்களும், ராடர் கருவிகளும் துணைபுரிகின்றன. விமானத்தில் சென்று குறிப்பிட்ட இடங்களில் விதைகளைத் துவுவதன் முலமோ அல்லது ரொக்கட் மூலம் தரையில் இருந்து ஏவுவதன் மூலமோ இவற்றைச் செய்ய முடியும். ரொக்கட் மூலம் ஏவுவது பணச் செலவைக் கட்டுப்படுத்தினாலும் குறிப்பிட்ட பலனைத் தருமா என்பது சந்தேகமே. விமான மூலம் செயற்கை மழையை வரவழைப்பதில் செலவு அதிகமானாலும் அதனால் கிடைக்கும் பலனும் ஓரளவு எதிர்பார்த்தாக இருக்கும். செயற்கை மழை மூலம் இம்முறை காவேரி, ஹேமாவதி நதிகளின் நீர்த் தேக்கங்களுக்குப் போதுமான நீர் கிடைத்திருக்கிறது. இதனால் சாதாரண மழையைவிட 18-22 வீதம் வரையிலான மழை அதிகரித்திருந்தது. இதற்கான ஆயத்தங்களுடன் மைசூர் விமான நிலையத்திலிருந்து விசேட விமானங்கள் புறப்பட்டுப் பறப்பில் ஈடுபட்டிருந்தன.

கிளவுட் சீடிங் (Cloud Seeding) என்று சொல்லப்படுகின்ற செயற்கை முறையில் மழையை வரைவழைக்கலாம் என்பதை முதன் முதலாக 1946ம் ஆண்டளவில் வின்சென்ட்; (Vincent Schaefer) என்பவர் தனது ஆராய்ச்சி மூலம் கண்டறிந்ததாகத் தெரியப்படுத்தினார். 1903ம் ஆண்டு தொடக்கம் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், 1957ல் அவுஸ்ரேலிய வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனம் இதை உறுதிப்படுத்தியிருந்தது.

மேகக்கூட்டங்கள் பொதுவாக குளிரடையும்போது பெரும்பாலும் 80 சதவிகிதம் கடற்பகுதியிலேயே மழையைப் பெய்கின்றன. இதனால் நன்னீர் உப்புக்கடல் நீரோடு சேர்ந்து பயனற்றுப் போகிறது. தரைப்பகுதியில் இந்த மழை பெய்யுமானால் குடிநீராகவும், மரம்செடி கொடிகளுக்கு நீராகவும், அணைக்கட்டுகளில் தேக்கி வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யவும் பயன்படக்கூடும். எனவேதான் செயற்கை முறையில் மழையை வரவழைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வளைகுடாப் பகுதியில் ஏற்கனவே சுமார் ஐம்பது தடவைகளுக்கு மேல் செயற்கை முறையில் மழை பெய்வதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியும் கிடைத்திருக்கின்றன. தூபாய், அபுதூபாய் பாலைவனங்களுக்கு இத்தகைய செயற்கை மழை மூலம் நல்ல பலன் கிடைத்திருக்கின்றது. 2008ம் ஆண்டு சீனாவில் நடந்த கோடைகால ஒலிம்பிக் போட்டியின் போது ஆரம்ப நாளன்றும் இறுதி நாளன்றும் மழை பெய்யக்கூடாது என்பதற்காக செயற்கைக் கோளின் உதவியுடன் வேண்டாத மழையை விமானமூலம் செயற்கை முறையில் மேகத்தைக் கலைத்து வேறு இடத்தில் அந்த மழையைப் பெய்ய வைத்ததாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

சீனதேசத்தில் இதுபோன்ற செயற்கை மழை அடிக்கடி பெய்ய வைக்கப்படுவதால், மேகங்களைத் திருடுவதால் அயல் நாடுகளுக்கு இயற்கை மழை கிடைக்காமல் போவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் சில மாகாணங்களும், கனடாவில் அல்பேட்டா மாகாணமும் இம் முறையைப் பரீட்சித்துப் பார்த்திருக்கின்றன. இனி வருங்காலங்களில் பெய்யெனப் பெய்யும் மழைபோல காலநிலையை மாற்றி விரும்பியபடி மழையைப் பெய்ய வைக்க முடியும் என்று நம்புகின்றார்கள். நவீன தொழில் நுட்ப வளர்ச்சி இதற்குக் காரணமாக இருக்கின்றது.

No comments:

Post a Comment