Tuesday, June 30, 2015

Canada Day SOPCA - 2015 கனடாதினம்

சொப்கா மன்றத்தின் கனடாதின விழா – 2015

மணிமாலா


புலம்பெயர்ந்த மண்ணில் பீல் பிரதேச தமிழர்களின் பெருமுயற்சியால் சொப்கா (SOPCA) என்ற பெயரில் பீல்பிரதேச தமிழர்களின் அமைப்பு ஒன்று கடந்த ஆறு வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கிவருகின்றது. இந்த அமைப்பினால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (28-06-2015) கனடாதினம் கொண்டாடப்பட்டது.


கனடா தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம், தமிழ் வாழ்த்து, மன்றக் கீதம் ஆகியன இசைக்கப்பட்டன. பிரதம விருந்தினர் வைத்திய கலாநிதி செந்தில்மோகன் அவர்களால் கனடா பிறந்ததின கேக் வெட்டப்பட்டது. மன்றத்தின் தற்போதைய தலைவரும் சட்டத்தரணியுமான வாணி செந்தூரன் அவர்களால் தலைவர் உரை நிகழ்த்தப்பட்டது.


பிரதம விருந்தினராக மகாஜனக் கல்லூரி பழைய மாணவரும் வைத்திய கலாநிதியுமான செந்தில்மோகன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அரங்கம் நிறைந்த கனடாவிழாவில் மன்ற அங்கத்தவர்களால் மேடையேற்றப்பட்ட பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கனடா தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி அடைந்தவர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. இந்த மேடையில் சொப்கா தன்னார்வத் தொண்டர்களும் பாராட்டப்பட்டனர்.பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வின்போது உபதலைவரும் எழுத்தாளருமான குரு அரவிந்தன் தொகுத்து வெளியிட்ட சொப்கா மஞ்சரி 2015 வெளியிடப்பட்டது. குரு அரவிந்தன் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு சொப்கா மன்றத்தால் வெளியிடப்பட்ட நாலாவது மலர் இதுவாகும். இந்த மலரில் வழமைபோல சுமார் முப்பதுக்கு மேற்பட்ட தமிழ் இளம் தலைமுறையினர் எழுதிய தமிழ் ஆங்கில ஆக்கங்கள் இடம் பெற்றிருந்தன.

கடந்த காலங்களில் சொப்கா அங்கத்தவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் பற்றிய புகைப்படங்களும், ஆவணங்களும் இந்த மலரில் இடம் பெற்றிருந்தது சிறப்பான அம்சமாகும்.


சிறார்கள் இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள், ரிறிலிம் (Trillium) வைத்தியசாலைக்கு நிதி சேகரிப்பதற்கான நடைபவனி, இசை, நடன பயிற்சி வருப்புகள், உணவு வங்கிக்கான உணவு தானம், இரத்தவங்கிக்கான இரத்ததானம், வருமானவரிச் சேவை, பூங்காவைத் துப்பரவு செய்தல் போன்ற சேவைகள் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டன.


நிர்வாக சபை அங்கத்தவர் தனுஷா இராஜதுரை நடக்கவிருக்கும் நடைபவனி பற்றி விளக்கம் தந்தார். முன்னாள் தலைவர் ஏ.ஜேசுதாசன் அவர்கள் கடந்த ஆறு வருடங்களாக மன்றத்திற்கு ஆற்றிய தன்னலமற்ற சேவைக்காக அங்கத்தவர்களால் விருது கொடுக்கப்பட்டுப் பாராட்டப்பட்டார்.
கனடா தினம் பற்றிய சிறார்களின் உரை, நடனம், பாடல்கள், சொப்கா இளைஞர்களின் இசை நிகழ்ச்சி போன்றவை கனடா தின விழாவின் போது இடம் பெற்றன.புலம் பெயர்ந்த இந்த மண்ணில் சொப்கா மஞ்சரி 2015 போன்ற மலர் சிறப்பாக வெளிவருவதற்கும், கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடப்பதற்கும் உதவிய அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். செயலாளர் யாழினி விஜயகுமார் அவர்களின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
Sunday, June 14, 2015

விமானங்களின் புதைகுழி

விமானங்களின் புதைகுழி ஆசியாவா?

குரு அரவிந்தன்
கடந்த ஆண்டு விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு சோகமான ஆண்டாகவே இருந்தது. விமானத்தில் ஏறும்போது பயணிகளுக்கு என்ன நடக்குமோ என்ற பயத்தை சமீபத்தில் நடந்த விபத்துக்கள் ஏற்படுத்தியிருந்தன. அந்தப் பயம் இந்த ஆண்டும் தொடருகின்றதோ என்பதை நம்பவேண்டியே இருக்கின்றது. காரணம் குறிப்பாக ஆசியாவில் திடீரெனப் பல விமான விபத்துக்கள் அடிக்கடி இடம் பெற்றிருந்தன. சமீபகாலமாக ஆசியாக் கண்டப் பகுதியில் விமான விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதை நீங்கள் அவதானித்து இருக்கலாம். மலேசியா, நேபாளம், இந்தோனேஷியாவைத் தொடர்ந்து தைவானிலும் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. இவை எல்லாம் பாவனைக்கு அற்ற விமானங்களா அல்லது விமானிகளின் கவலையீனமா என்பதைக்கூட சரியான முறையில் அறிய முடியவில்லை.

பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி 2015 புதன்கிழமை 54 பயணிகளுடனும் 4 விமான சிப்பந்திகளுடனும் தைவான் தலைநகரான தைபே ஸொங்ஸங் விமான நிலையத்தில் இருந்து கின்மென் என்ற தீவிற்கு சென்ற ஜிஇ 235 என்ற டிறான்ஸ் ஏசியா விமானம் ஒன்று தைவானில் விபத்திற்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த விமானம் நகருக்கு வெளியில் இருந்த ஆற்று பாலத்தில் மோதியதால் கீலங் ஆற்றுக்குள் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக அந்த இடத்திற்;கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பயணிகளில் பலர் இறந்துவிட்டதாக இதுவரை உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த விபத்தில் 10 பயணிகள் வரை உயிர் தப்பியிருக்கிறார்கள். காணாமல்போன சிலர் விமானத்தில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்திருக்கின்றது.

சென்ற வருடம் 8 ஆம் திகதி மார்ச் மாதம் 2014 ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கான பயணிகளுடன் பயணித்த மலேசியன் ஏயர்லைன்ஸ் விமானம் ஒன்று திடீரென காணாமல் போய்விட்டது. மலேசியாவில் இருந்து 239 பயணிகளுடன் சீனாவுக்குப் பயணித்த மலேசியா எயர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 தான் காணாமல் போயிருந்தது. அந்த விமானத்திற்கு என்ன நடந்தது, அதில் பயணித்தவர்களின் நிலை என்ன என்று இதுவரை தெரியவில்லை. விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பிலிருந்து விலகிய விமானம், திட்டமிடப்பட்ட பாதையில் இருந்தும் விலகிச் சென்றதாகத் தெரிகின்றது. ராடரால் கண்காணிக்கப்பட முடியாமல் மறைந்த இந்த விமானம் விபத்திற்குள்ளானதாக சமீபத்தில் தான் மலேசிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த விமானத்தைத் தேடும் பணி தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

இந்த அதிர்ச்சியை மலேசிய மக்கள் தாங்கிக் கொள்ளுமுன் இன்னுமொரு மலேசியன் எயர்லைன்ஸ் விமானம் விபத்திற்குள்ளானது. கோலாலம்பூரில் இருந்து ஜூலை 17 ஆம் திகதி 2014 இல் புறப்பட்டுச் சென்ற எம்.எச்.17 என்ற விமானம் ரஷ்ய - உக்ரைன் எல்லைக்கருகில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்திருந்தது. இந்த விமானம் உக்ரைன் எல்லையில் இனம் தெரியாதோரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிகின்றது. இந்த விமானத்தில் சுமார் 283 பயணிகளும் 15 விமானச் சிப்பந்திகளும் பயணம் செய்தனர். விமானத்தில் பயணம் செய்த எவரும் தப்பவில்லை என்றும், அத்தனை பேரும் இறந்து விட்டதாகவும் அறிவிக்கப் பட்டிருக்கின்றது.

இந்த விமான விபத்தைத் தொடர்ந்து சமீபத்தில் இந்தோனேஷிய பயணிகள் விமானம் ஒன்றும் காணாமல் போய்விட்டது. சென்ற வருடம் 2014 டிசெம்பர் மாதம் 28 ஆம் திகதி ஏர்ஏசியா கியூ இசட் 8501 என்ற விமானம் இந்தோனேஷியா, கிழக்கு ஜாவாவின் சுரபாயா என்ற இடத்திலிருந்து 155 பயணிகளுடனும் 7 விமானச் சிப்பந்திகளுடனும் புறப்பட்டு சிங்கப்பூ+ர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பயணிகளில் 17 பிள்ளைகளும் அடங்குவர். சீரற்ற காலநிலை காரணமாக 32 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 38 ஆயிரம் அடி உயரத்திற்குச் செல்வதற்கு விமானி அனுமதி கேட்ட போது அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் விமானம் மேல் நோக்கிச் செலுத்தப்பட்டது. திடீரென 40 நிமிடங்களால் இந்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவசரகாலங்களில் இவ்விமானத்தின்;, அபாய எச்சரிக்கைகளை அனுப்பும் சாதனங்களில் இருந்து எந்தவொரு சமிக்கையும் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திற்குக் கிடைக்கவில்லை. காணாமல் போய்விட்ட இந்த விமானத்தைத் தேடிய போது, இந்தோனேஷியாவிற்கு அருகே உள்ள தீவு ஒன்றின் கடல் பகுதியில் வீழ்ந்து நொருங்கியது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் பல பயணிகள் பலியாகியுள்ளதாகத் தெரிகின்றது. இதுவரை 101 பயணிகளின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13 ஆம் திகதி இந்த விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது.

பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி 2014 ஆம் ஆண்டு நேபாளத்திலும் இதே மாதிரியான விபத்து பிளைட் 183 என்ற விமானத்திற்கு நடந்தது. 15 பயணிகளும் 3 விமானச் சிப்பந்திகளும் இந்த விமானத்தில் யுமியா விமான நிலையம் நோக்கிப் பயணம் செய்தனர். பொக்காரா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மலைப் பகுதியான நேபாளை நோக்கிச் சென்று கொண்டிருந்த உள்நாட்டு விமானமான எயர்லைன்ஸ் பிளைட் 183, 40 மைல் தொலைவில் உள்ள திகுரா மலைக் காடுகளில் மோதி வெடித்துச் சிதறியது. தேடுதல் நடத்த வந்த கண்காணிப்பு ஹெலிகாப்டர் விமானிகள் இடிபாடுகளுக்கிடையில் எரிந்து போய்க் கிடந்த விமானத்தைக் கண்டு பிடித்தனர். அவர்கள் பயணிகளின் 18 உடல்களை அடையாளம் கண்டு பிடித்தனர். விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டதால், காலநிலை காரணமாகவும் விமானிகளின் கவலையீனம் காரணமாகவும் விபத்து நடந்ததாகத் தெரிய வந்துள்ளது.

விமானப் பயணங்கள் அதிகரித்ததால், சமீப காலங்களில் இதுபோன்ற விமான விபத்துக்களும் பெருகிவருவது குறிப்பிடதக்கது. தொழில்நுட்பக் கோளாறுகள், விமானிகளின் கவனக்குறைவு, வானிலை மாற்றங்கள், விமானம் தன் கட்டுப்பாட்டை இழப்பது, காரணங்கள் தெரியாத நிலை போன்றவைகளால் விமானம் விபத்துக்குள்ளாவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வாறு அடிக்கடி விபத்துக்களில் சிக்கும் விமானங்களின் கறுப்புப் பெட்டிகள் கிடைத்தால் மட்டுமே என்ன நடந்தது என்பது தெரியவரும். விமானம் பறக்கும்போது விடுக்கப்படும் முன்னறிவிப்புகள், காற்றின் வேகம், பறக்கும் உயரம், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு எல்லாம் தானாகவே கருப்புப்பெட்டியில் பதிவாகிவிடும், விமானிகள் எச்சரிக்கைகளைப் புறக்கணித்து செயற்பட்டால் கறுப்புப் பெட்டி தவறுகளைக் காட்டிக்கொடுத்து விடும், எனவே தான் விபத்துக்கான காரணம் கண்டறிய கருப்புப் பெட்டியை தேடி எடுக்கின்றார்கள்.

விமானங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாவதை தடுக்கும் வகையில், ஆட்டோமேட்டிக் டிராக்கிங் வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் நன்மை கருதி விமானம் புறப்பட்டதில் இருந்து அது சென்றடைய வேண்டிய இடத்தை அடையும் வரை தானாகவே தன் இருப்பிடத்தைத் தெரிவிக்கும்; வசதியைத் தங்கள் விமானங்களில் அறிமுகப்படுத்த சில விமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதன் மூலம் மிக எளிதாக விமானங்கள் பறக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும் என நம்பப்படுகிறது.

தென் ஆசியாவில் பாதுகாப்பான விமானச் சேவை வழங்கும் நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. ஆசியாவில் 34 நாடுகளிடையே இலங்கை 4 ஆவது இடத்திலும் உலக அளவில் 19 ஆவது இடத்திலும் இலங்கை காணப்படுகிறது. இந்த வருடம் இலங்கை விமானச் சேவை 100 வருடத்தை பூர்த்தி செய்கின்றது. இலங்கை விமானச் சேவையிடம் 21 விமானங்களும் மிஹின்எயர் நிறுவனத்திடம் 3 விமானங்களும் உள்ளன.  2006 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையில் விமான விபத்து எதுவும் நடைபெறவில்லை.

நன்றி: தாய்வீடு