Thursday, July 23, 2015

AWEYIAR - ஒளவையார்

ஒளவையார் சிலை

 (குருஅரவிந்தன்)

தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடம் பெறும் புலவர்களில் ஒளவையாரும் ஒருவர். தமிழரின் புகழை உலகெல்லாம் பரப்பி நிற்பவர்களில் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் போல ஒளவையாரும் முக்கியமானவர். இவர் தமிழ் சிறுவர், சிறுமிகளுக்குக்கூட நன்கு அறிமுகமான ஒரு பெண்பாற் புலவராவார். ஓளவைப்பாட்டி என்று குழந்தைகள் இவரை பாசத்தோடு சொல்வதுண்டு. இவரது பெருமையைப் பாராட்டி மெரினா கடற்கரையில் இவருக்குச் சிலை அமைத்திருக்கின்றார்கள். இந்தச் சிலை உருவாக்குவதற்கான செலவை சென்னை மாநகராட்சியினர் ஏற்றுக் கொண்டனர். ஒளவையாரின் வலது கையிலே ஊன்றுகோலும், இடது கையிலே ஏடும் இருக்கின்றது. பொருளுக்கு ஆசைப்படாதவர் என்பதால், அவரது கழுத்திலே, கையிலே, காதிலே எதுவும் இல்லை. ‘சோம்பித் திரியேல்’ என்ற அவரது வாக்கியத்தை நிரூபிப்பது போல, இடதுகாலை முன்வைத்து, தடியூன்றி நடப்பது போன்ற தோற்றத்தில் இந்த ஒளவையாரின் சிலை அமைந்திருக்கின்றது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இத்தகைய பிரபலங்களின் சிலைகள் அமைவதால் பலருடைய கவனத்தையும் ஈர்ப்பதாக இருக்கின்றன. இதனால் அடுத்த தலைமுறையினரும், சுற்றுலாப் பயணிகளும் சிலைக்கு உரியவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்த முடிகின்றது. கலை என்பதே ஐதீகமும் நம்பிக்கையும்தான் என்பதால், அந்த வகையில் ஒளவையார் பற்றியும், அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றியும் பலர் அறிந்து கொள்ள இந்த ஒளவையார் சிலை உதவியாக இருந்திருக்கின்றது. தமிழ்நாட்டிற்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள், முக்கியமாகத் தமிழர்கள் மெரினா கடற்கரைக்குச் செல்லும்போது, ஆர்வத்தோடு பார்க்கும் முக்கிய நினைவுச் சின்னமாக ஒளவையாரின் சிலையும் அமைந்திருக்கின்றது. அதனால் இன்று ஒளவையார் பற்றிய தேடல்களும் அதிகரித்திருக்கின்றன. இதே போலவே யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களிலும் ஒளவையார் சிலையைக் கண்டிருக்கின்றேன்.

ஒளவையார் என்னும் பெயர் பூண்ட, வௌ;வேறு காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பலர் இருந்ததாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. சங்ககாலம், இடைக்காலம், சோழர்காலம் என்று ஒவ்வொரு காலகட்டத்தில் இருந்த பெண் புலவர்களையும் ஒளவையார் என்றே அழைத்தனர். ஒளவை என்பது மூதாட்டி என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி குறிப்பிட்டாலும், பிற்காலத்தில் ஒளவை என்ற சொல், அறிவில் முதிர்ச்சி அடைந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகவும் கருதப்பட்டது. ஒளவையாரின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியான முறையில் வரையறுக்கப் படவில்லை. சங்கநூல்களான குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் ஒளவையாரின் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. சிறுவர்களுக்காக அகரவரிசையில் எழுதப்பட்ட ‘ஆத்திசூடி’ மற்றும் முக்கியமாகக் கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை போன்ற அவரது நூல்களையும் இங்கே குறிப்பிடலாம். சங்கப் பாடல்கள், தனிப்பாடல்கள், நீதி நூல்கள், சமய நூல்கள், சிற்றிலக்கியம் என்று இவற்றை வகைப்படுத்தலாம். ஓளவையாரின் புலமையை மெச்சிய அதியமான் மன்னன் தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியை அவருக்கு வழங்கியதாகவும் கதை உண்டு.
தமிழ் இலக்கியத்திற்கு ஒளவையார் ஆற்றிய தொண்டைப் பாராட்டி ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் சதய நட்சத்திரத்திலன்று தமிழ் நாட்டில் நாகபட்டினத்தில் உள்ள வேதாரணியத்தில் உள்ள கோயிலில் உள்ளுர் மக்களால் நீண்ட காலமாக விழா எடுக்கப்படுகின்றது. இங்கேதான் ஒளவையாரிடம் முருகக்கடவுள் சிறுவனாக வந்து ‘சுட்டபழம் வேண்டுமா சுடாதபழம் வேண்டுமா’ என்று கேட்டதாக ஐதிக கதையுண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பாண்டல் என்ற கிராமத்தில் ஒளவையாருக்கு ஒரு பழமைவாய்ந்த கோயிலும் உண்டு.
தமிழ் நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் உத்தமசோழபுரம் என்ற இடத்தில் பழமைவாய்ந்த கரபுரநாதர் திருக்கோயில் முகப்பு வாசலுக்கு அருகே ஒளவையார் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே பெரிய ஒளவையார் சிலை ஆகும். கொல்லிமலையை ஆண்ட பாரி மன்னனின் மக்கள் அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் ஒளவையார் கரபுரநாதர் கோயிலுக்கு அழைத்து வந்து, எப்போதுமே பகைவர்களாக இருந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பகையை நீக்கி, பாரியின் மக்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததாகவும் ஐதிகக் கதை உண்டு.
2009 ஆம் ஆண்டு ரெட்ஹென் அச்சகத்தினர் மனித வாழ்வுக்கேற்ற மகத்தான தத்துவங்களை எடுத்துச் சொல்லும் ஒளவையாரின் படைப்புக்களைத் தெரிவு செய்து ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டிருந்தனர். மகளிர் தினத்திலன்று ஒளவையாரின் பெயரில் சிறந்த பெண்மணி ஒருவருக்குத் தமிழ்நாட்டில் விருதும் வழங்கப் படுகின்றது.
(நன்றி: தமிழர் தகவல்)

No comments:

Post a Comment