Thursday, July 23, 2015

மகாகவி சுப்ரமணியபாரதியார் - Mahakavi Subramaniya Bharathi

மகாகவி சுப்ரமணியபாரதியார் சிலை

 (குரு அரவிந்தன்)

மகாகவி பாரதியாரைத் தெரியாத தமிழர்கள் இந்தத் தலைமுறையில் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. இவர் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாட்டில் முக்கிய அங்கம் வகித்தவர். ஒரு கவிஞராக, சாத்வீக விடுதலைப் பேராளியாக எல்லோராலும் அறியப்பட்டவர். இவர் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளராக, பத்திரிக்கையாசிரியராக, சமூக சீர்திருத்தவாதியாக இருந்து தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தமிழ் மொழியின் எழுத்து நடையில் பெரியதொரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர். இன்று வசன நடையில் நாங்கள் எங்கள் தமிழ் மொழியைச் சிறப்பாக எழுதுவதற்கு வழிகோலியவர்களில் இவரும் ஒருவர். நான் சென்ற இடங்கள் சிலவற்றில் இவரது கம்பீரமான சிலையைக் கண்டிருக்கின்றேன். மகாகவி பாரதியாரை நினைவு கூருமுகமாகத் தமிழ்நாட்டில் உள்ள மரீனா கடற்கரையில் ஒரு சிலை அமைத்திருக்கின்றார்கள். தஞ்சாவூரில்; உள்ள பாரத் கலைக்கல்லூரிக்கு முன்பாகவும், புதுச்சேரியில் பாரதி பூங்காவிலும் இவருக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல யாழ்ப்பாணத்திலும் நல்லூர் கோயிலுக்கு அருகே பாரதியாருக்குச் சிலை ஒன்று அமைத்திருக்கின்றார்கள். இப்படியாக பாரதியை மதிப்பவர்கள் பல ஊர்களிலும் இவருக்குச் சிலை அமைத்திருக்கிறார்கள்.

மகாகவி பாரதியாரின் 133-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அவரது உருவ சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சென்ற டிசெம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாரதியின் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் பாரதி நினைவு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிச்சிறுவர்கள் பாரதியார் வேடமணிந்து பங்கேற்றனர். பாரதி மணிமண்டபத்தில் தொடங்கி பாரதிக்கு ‘பாரதி’ என்று பட்டம் வழங்கப்பட்ட எட்டையபுர அரண்மனை, பாரதியார் பிறந்த இல்லம் என எட்டையபுரம் முழுவதும் மகாகவியின் பாடல்களைப் பாடியவாறு மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அதேபோல திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில், அவரது உருவச் சிலைக்கு, பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பார்த்தசாரதி கோவில் வளாகம் அருகே நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், பாரதியாரின் சிலையை, அப்பகுதி மக்கள், பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதேபோல சேலத்திலும் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவை பெண் கல்வி, பெண் விடுதலை மற்றும் பெண் உரிமை நாளாக கொண்டாடினர். 

பாரதி என்று அழைக்கப்பட்ட இந்த முண்டாசுக் கவிஞன் 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினொராம் திகதி எட்டயபுரத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் சின்னச்சாமி அய்யர், தாயார் பெயர் லட்சுமி அம்மாள். இவருக்கு சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டினாலும் இவரது செல்லப் பெயர் சுப்பையா என்பதாகும். ‘பாரதி’ என்பது இவருக்குக் கிடைத்த பட்டப் பெயராகும். இவர் இன்றும் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் 1921 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி தனது 38 வது வயதில் மரணமானார். இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவில் தெருவில் உள்ள பாரதியார் வாழ்ந்த வீட்டைத் தமிழக அரசு 1993 ஆம் ஆண்டு அரசுடமையாக்கியதன் மூலம் அவரைக் கௌரவித்தனர். பாரதியின் நூற்றாண்டு விழாவை தமிழ் உலகெங்கும் சிறப்பாகக் கொண்டாடியிருந்தனர். 1982 ஆம் ஆண்டு பாரதியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதம ஆசிரியர் எஸ். திருச்செல்வம் அவர்கள் பாரதியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் ஒன்றை நூற்றாண்டு நினைவு மலராக யாழ்ப்பாணத்தில் வெளியிட்டிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பாரதியார் உயிரோடு இருக்கும் போது அவரது திறமையைப் பெரிதாக யாரும் மதிக்கவில்லை. இன்று அவரது ஆக்கங்கள் எல்லாம் பொதுவுடமை ஆக்கப்பட்டிருப்பதால் அவை பலரிடமும் சென்றடைய வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. அதனால் எல்லோரும் அறிந்த உலகப்புகழ் பெற்ற ஒரு கவிஞராக பாரதியார் இன்று திகழ்கின்றார். பாரதியின் பின் பல கவிஞர்கள் தமிழில் தோன்றினாலும் அவரைப் போன்ற உணர்வு பூர்வமான பாடல்களை யாரும் இதுவரை எமக்குத் தந்ததில்லை என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

(நன்றி: தமிழர் தகவல்)

No comments:

Post a Comment