Wednesday, September 23, 2015

நூல் வெளியீடு - Kuru Aravinthan

Invitation:

பாராட்டு விழாவும் நூல் வெளியீடும்
---------------------------------------------------------

அன்புடன் அழைக்கின்றோம்.

 கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன்
 
 எழுத்தாளர் குரு அரவிந்தனின் (Kuru Aravinthan)
 
 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டும்
 
 முகமாகப் பாராட்டு விழாவும், நூல் வெளியீடும் எழுத்தாளர்

 இணையத் தலைவர் திரு. எஸ். சிவநாயகமூர்த்தி
 
 தலைமையில் நடைபெற இருக்கின்றது.
 
 
 காலம்: அக்ரோபர் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை.
                   October 16th 2015 - Friday
 

 நேரம்: மாலை 6: 45 P.M
 
 இடம்: Location: BABA Banquet Hall
 3300 McNicoll Avenue
 Toronto. On. M1V 5J6.
 
> இலக்கிய ஆர்வலர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
 
> The Canadian Tamil Writers Association would like friends and members to attend this event and please share this message with others.

 விழாக் குழுவினர்
 
905 861 9323
416 312 5047
kurusilver25@gmail.com
 

Friday, September 11, 2015

சுவாமி விபுலானந்தர் - Vipulananther Swami

சுவாமி விபுலானந்தர் 

குரு அரவிந்தன்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலை காரைதீவு முச்சந்தியில் உள்ள விபுலாநந்த சதுக்கத்தில் மிகவும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது. 12 அடி உயரமான இந்த அடிகளாரின் சிலை 2014 ஆம் ஆண்டு பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது. சென்ற மே மாதம் 3 ஆம்திகதி 2015 இல் சுவாமி விபுலானந்தரின் 123வது பிறந்த தினவிழா மட்டக்களப்பில் கொண்டாடப்பட்ட போது அவரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் சுவாமி விபுலானந்தர் பற்றிய சிறப்பு சொற்பொழிவும் அப்போது இடம் பெற்றது. உலகின் பல பாகங்களிலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அவரது 123 ஆவது பிறந்ததின விழாவை வெகுவிமர்சையாகக் கொண்டாடினர்.

ஈழத்தின் கிழக்குக் கரையில் உள்ள காரைதீவு என்ற சிற்றூரிலே மார்ச் மாதம் 27 ஆம் திகதி  1892 ஆம் ஆண்டு பிறந்த அடிகளாரது இயற் பெயர் மயில்வாகனம், இவர் கல்முனை மெதடிஸ்ட் பாடசாலை, மட்டக்களப்பு செயின்ற் மைக்கேல் உயர்தர ஆங்கில பாடசாலை ஆகியவற்றில் கல்விகற்று தனது 16 வது வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதலாவது வரிசையில் தேர்ச்சி பெற்றார். 1911 ஆம் ஆண்டு கொழும்பு சென்று ஆங்கில ஆசிரியர் பயிற்சிக்கழகத்தில் ஆசிரியப் பட்டமும், லண்டன் பல்கலைக்கழக பி.எஸ்.ஸி பட்டதாரியாகவும், 1916 ஆம் ஆண்டு விஞ்ஞானக் கலையில் டிப்ளோமா பட்டமும் பெற்றார். பின்னர் யாழ்ப்பாணத்தில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றினார். 1931 ஆம் ஆண்டில் தமிழ் நாடு சென்று, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். பின்னர் தாய்நாடு திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். இவர் மதுரை தமிழ் சங்கம் நடத்திய தேர்வில் தோன்றி பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். 1924 ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சிவானந்தரால் சுவாமி விபுலானந்தர் என்ற துறவறப்பெயர் இவருக்கு வழங்கப்பட்டது.

தமிழ் மொழி மீது கொண்ட ஆழ்ந்த பற்றுக் காரணமாக தமிழ் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். தமிழ் மாணவர்களின் எதிர்காலக் கல்வியைக் கவனத்தில் கொண்டு மட்டக்களப்பு உப்போடையில் சிவானந்த வித்தியாலயம், திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக்கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், கொழும்பில் விவேகானந்த வித்தியாலயம் என்பன போன்ற கல்வி நிறுவனங்களை அவர் முன்னின்று நிறுவினார். இதைவிட கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் இராமகிருஷ்ண ஆச்சிரமங்களையும் நிறுவினார். ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்த இவருக்கு மெல்பன் தமிழ்ச்சங்கம் 2006 ஆம் ஆண்டில் முத்திரை வெளியிட்டுக் கௌரவித்திருந்தது. கனடாவில் வாழ்ந்த ஈழத்துப் பூராடனார், 1983 ஆம் ஆண்டில் விபுலாந்த அடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ‘விபுலாநந்தர் பிள்ளைத் தமிழ்’ என்ற பிரபந்த நூலை வெளியிட்டிருந்தார். பஞ்ச கிருத்திய நுட்பத்தைக் கூறும் நடராஜ வடிவத்தைப் பற்றியு ஒரு நூலையும் இவர் வெளியிட்டுள்ளார். கர்மயோகம், ஞான யோகம், விவேகானந்த ஞானதீபம் முதலியன அவரது மொழிபெயர்ப்பு நூல்களாகும். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில்யாழ், பேரியாழ், மகரயாழ் செங்கோட்டியாழ் சகோடயாழ், என்பன பற்றி இவரது யாழ் நூல் கூறுகின்றது. அடிகளாரின் ஆராய்ச்சியின் பயனாக யாழ் நூல் தமிழுக்குக் கிடைத்தது. கரந்தை தமிழ்ச்சங்க ஆதரவில் திருக்கொள்ளம்புதூர்த் திருக்கோயிலில் 1947 ஆம் ஆண்டு இந்த ‘யாழ் நூல்’ வெளியிடப்பட்டது. இவர் எழுதிய இன்னுமொரு நூல் ‘மதங்க சூளாமணி’. இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கை அரசு இவரைத் தேசிய வீரர் பட்டியலில் சேர்த்துள்ளது.

பாரிசவாத்தினால் பீடிக்கப்பட்ட சுவாமிகள் 1947 ஆம் ஆண்டு ஆடி மாதம் 19 ஆம் திகதி விண்ணுலகம் அடைந்தார். சிவானந்த வித்தியாலய முன்றலில் இவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் கல்லறை மேல்,

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது’  

என்ற அவரால் பாடப்பட்ட அவரது கவிதா வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. உண்மையான இதய சுத்தியோடு வாழ்ந்தவர்கள் மறைந்தாலும் மறக்கப்படமாட்டார்கள் என்பதற்கு சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை வரலாறு சிறந்த உதாரணமாகும்.

நன்றி: தமிழர் தகவல்

Tuesday, September 1, 2015

Abiramy Dance Academy - அபிராமி நடனக் கல்லூரி

அபிராமி நடனக் கல்லூரியின் 20வது ஆண்டு விழா

மாலினி அரவிந்தன்

NATYAKALABAM

Sri Abiramy Academy was formed by Smt.  Senthil Selvi Sureswaran in 1975. The Academy's Silver Medal for two consecutive years in Ontario Dance Festival, and the title 'Aadal Arasi' to Senthilselvi Sureswaran are considered outstanding.


Abiramy Dance Academy’s 20th anniversary function was held on August 30th 2015 at Don Bosco Catholic School, St. Andrew Blvd, Toronto. This organization was formed by ‘Adal Arasi’ Senthilselvi Sureswaran in 1995. Smt. Selvi Sureswaran was a fully trained professional teacher in Sri Lanka before migrating to Canada. Originally, the organization coached students in the city of Toronto and slowly expanded its branch to Waterloo, Ontario. Due to popularity of the dance among fellow Canadians Smt. Selvi started dance classes in Mississauga and Scarborough. The students of her academy performing contemporary dances took the South Indian art form to elevated status on Toronto stages. In this anniversary function about one hundred students participated and performed a variety of different dance styles.



The Chief Guest speech was delivered by Dr. Kathir Thuraisingham. Smt. Selvi Sureswaran delivered the vote of thanks. In her speech she thanked all the parents of her students who have brought their children from different places to participate in this event. Also she expressed her sincere gratitude towards their sponsors and audience.



சென்ற ஞயிற்றுக்கிழமை 
ஆகஸ்ட் 30 ஆம் திகதி 2015 இல் அபிராமி நடனக் கல்லூரியின்
 20 வது ஆண்டுவிழாவான நாட்டியகலாபம்  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. டொன்பொஸ்கோ கத்தோலிக்க பாடசாலை பார்வையாளர் மண்டபத்தில் அரங்கம் நிறைந்த பார்வையாளர் மத்தியில் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. தமிழ்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், மௌன அஞ்சலியைத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.


கல்லூரி அதிபர் ஸ்ரீமதி செந்தில்செல்வி சுரேஸ்வரன் நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பாகத் தயாரித்திருந்தார். அவருக்கு உதவியாக இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த ஸ்ரீமதி திவ்யசிவா சுந்தர் அவர்கள் மாணவிகளுக்குப்; பயிற்சி கொடுத்து சிறப்பாக இந்த நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிரதம விருந்தினர்களாக மகாஜனக்கல்லுர்ரி பழைய மாணவர் சங்கத்தின் (கனடா) முன்னால் தலைவரான டாக்டர். கதிர் துரைசிங்கம் அவர்களும் பாரியாரும் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வில் நேரடியாகப் பங்கு பற்றியவர்களும் தன்னார்வத் தொண்டர்களுமாகச் சுமார் நூறு மாணவ, மாணவிகள் வரை அடங்குவர். இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்ததற்குச் சில காரணங்கள் பின்னணியில் இருந்ததை நான்; அவதானித்தேன். பார்வையாளர்கள் அனேகமானவர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருந்ததால் அவர்களுக்குப் பிடித்தமான பாடல்கள் தமிழில் இருந்தது முக்கியமாக அவதானிக்கப்பட்டது. அடுத்து கோகிலத்துக் கண்ணனைப் பற்றிய பாடல்கள் அதிகமான இடம் பெற்றிருந்தன,


அதிலும் பாரதியின் பாடல்கள் எல்லோரையும் கவர்ந்திருந்தன. குறிப்பாகத் தீராதவிளையாட்டுப் பிள்ளை என்ற பாடலுக்கு அவர்கள் சிறப்பாக அபிநயம் பிடித்தது மட்டுமல்ல அந்த முகபாவங்கள் அப்படியே ரசிகர்களை உள்வாங்கிவிட்டது. ஸ்ரீமதி செந்தில் செல்வியின் சோலே நடனமும், ஸ்ரீமதி திவ்யாவின் நடனமும் அப்படியே பார்வையாளர்களைக் கட்டிப் போட்டிருந்தது.



மகாஜனக்கல்லூரி ஆண்டு விழாக்களில் ஸ்ரீமதி செந்தில்செல்வியின் மாணவிகளின் நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக இடம் பெற்றாலும் நானும் மேடையில் உதவிக்கு நிற்பதால் அரங்கில் இருந்து நேரடியாகப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தமிருந்தது. அந்த மனக்குறை நீங்கியது போன்ற உணர்வு இந்த நிகழ்ச்சியின் பின் எனக்குள் ஏற்பட்டிருக்கின்றது. அதனால் செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை 2015 இல் நடைபெற இருக்கும் முத்தமிழ் விழா நிகழ்ச்சியின்போது, செந்தில் செல்வியின் நிகழ்ச்சியை  நானும் அரங்கில் இருந்து பார்க்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன்.



பிரதம விருந்தினர் டாக்டர் கதிர் துரைசிங்கத்தின் உரையைத் தொடர்ந்து நன்றியுரை இடம் பெற்றது. கல்லூரி அதிபர் ஸ்ரீமதி செந்தில்செல்வி சுரேஸ்வரன் அவர்கள் தனது நன்றி உரையில் மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டு தனது நன்றிக்கடனை நிவர்த்தி செய்தது, பார்வையாளர்கள் மத்தியில் ஒரு நிறைவான உணர்வை ஏற்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்த திரு. சுரேஸ்வரனுக்கும் எமது பாராட்டுக்கள்.