Friday, September 11, 2015

சுவாமி விபுலானந்தர் - Vipulananther Swami

சுவாமி விபுலானந்தர் 

குரு அரவிந்தன்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலை காரைதீவு முச்சந்தியில் உள்ள விபுலாநந்த சதுக்கத்தில் மிகவும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது. 12 அடி உயரமான இந்த அடிகளாரின் சிலை 2014 ஆம் ஆண்டு பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது. சென்ற மே மாதம் 3 ஆம்திகதி 2015 இல் சுவாமி விபுலானந்தரின் 123வது பிறந்த தினவிழா மட்டக்களப்பில் கொண்டாடப்பட்ட போது அவரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் சுவாமி விபுலானந்தர் பற்றிய சிறப்பு சொற்பொழிவும் அப்போது இடம் பெற்றது. உலகின் பல பாகங்களிலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அவரது 123 ஆவது பிறந்ததின விழாவை வெகுவிமர்சையாகக் கொண்டாடினர்.

ஈழத்தின் கிழக்குக் கரையில் உள்ள காரைதீவு என்ற சிற்றூரிலே மார்ச் மாதம் 27 ஆம் திகதி  1892 ஆம் ஆண்டு பிறந்த அடிகளாரது இயற் பெயர் மயில்வாகனம், இவர் கல்முனை மெதடிஸ்ட் பாடசாலை, மட்டக்களப்பு செயின்ற் மைக்கேல் உயர்தர ஆங்கில பாடசாலை ஆகியவற்றில் கல்விகற்று தனது 16 வது வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதலாவது வரிசையில் தேர்ச்சி பெற்றார். 1911 ஆம் ஆண்டு கொழும்பு சென்று ஆங்கில ஆசிரியர் பயிற்சிக்கழகத்தில் ஆசிரியப் பட்டமும், லண்டன் பல்கலைக்கழக பி.எஸ்.ஸி பட்டதாரியாகவும், 1916 ஆம் ஆண்டு விஞ்ஞானக் கலையில் டிப்ளோமா பட்டமும் பெற்றார். பின்னர் யாழ்ப்பாணத்தில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றினார். 1931 ஆம் ஆண்டில் தமிழ் நாடு சென்று, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். பின்னர் தாய்நாடு திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். இவர் மதுரை தமிழ் சங்கம் நடத்திய தேர்வில் தோன்றி பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். 1924 ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சிவானந்தரால் சுவாமி விபுலானந்தர் என்ற துறவறப்பெயர் இவருக்கு வழங்கப்பட்டது.

தமிழ் மொழி மீது கொண்ட ஆழ்ந்த பற்றுக் காரணமாக தமிழ் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். தமிழ் மாணவர்களின் எதிர்காலக் கல்வியைக் கவனத்தில் கொண்டு மட்டக்களப்பு உப்போடையில் சிவானந்த வித்தியாலயம், திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக்கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், கொழும்பில் விவேகானந்த வித்தியாலயம் என்பன போன்ற கல்வி நிறுவனங்களை அவர் முன்னின்று நிறுவினார். இதைவிட கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் இராமகிருஷ்ண ஆச்சிரமங்களையும் நிறுவினார். ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்த இவருக்கு மெல்பன் தமிழ்ச்சங்கம் 2006 ஆம் ஆண்டில் முத்திரை வெளியிட்டுக் கௌரவித்திருந்தது. கனடாவில் வாழ்ந்த ஈழத்துப் பூராடனார், 1983 ஆம் ஆண்டில் விபுலாந்த அடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ‘விபுலாநந்தர் பிள்ளைத் தமிழ்’ என்ற பிரபந்த நூலை வெளியிட்டிருந்தார். பஞ்ச கிருத்திய நுட்பத்தைக் கூறும் நடராஜ வடிவத்தைப் பற்றியு ஒரு நூலையும் இவர் வெளியிட்டுள்ளார். கர்மயோகம், ஞான யோகம், விவேகானந்த ஞானதீபம் முதலியன அவரது மொழிபெயர்ப்பு நூல்களாகும். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில்யாழ், பேரியாழ், மகரயாழ் செங்கோட்டியாழ் சகோடயாழ், என்பன பற்றி இவரது யாழ் நூல் கூறுகின்றது. அடிகளாரின் ஆராய்ச்சியின் பயனாக யாழ் நூல் தமிழுக்குக் கிடைத்தது. கரந்தை தமிழ்ச்சங்க ஆதரவில் திருக்கொள்ளம்புதூர்த் திருக்கோயிலில் 1947 ஆம் ஆண்டு இந்த ‘யாழ் நூல்’ வெளியிடப்பட்டது. இவர் எழுதிய இன்னுமொரு நூல் ‘மதங்க சூளாமணி’. இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கை அரசு இவரைத் தேசிய வீரர் பட்டியலில் சேர்த்துள்ளது.

பாரிசவாத்தினால் பீடிக்கப்பட்ட சுவாமிகள் 1947 ஆம் ஆண்டு ஆடி மாதம் 19 ஆம் திகதி விண்ணுலகம் அடைந்தார். சிவானந்த வித்தியாலய முன்றலில் இவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் கல்லறை மேல்,

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது’  

என்ற அவரால் பாடப்பட்ட அவரது கவிதா வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. உண்மையான இதய சுத்தியோடு வாழ்ந்தவர்கள் மறைந்தாலும் மறக்கப்படமாட்டார்கள் என்பதற்கு சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை வரலாறு சிறந்த உதாரணமாகும்.

நன்றி: தமிழர் தகவல்

No comments:

Post a Comment