Wednesday, December 30, 2015

Mahajana College - Mr.P. Kanagasabapathy

Remembrance day - 24-12-2015


Principal Mr.P. Kanagasabapathy & Kuru Aravinthan


1st year
Remembrance day meeting at Toronto to Late Mr P.Kanagasabapathy. - Mahajana Principal.


Writer Kuru Aravinthan, Mr.V. Kanthavanam, Mr.N.Santhinathan.

மகாஜனக்கல்லூரி அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்களின் முதலாவது நினைவு தினம் ரொறன்ரோவில் இடம்பெற்றது.


அமரர் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் நினைவு தினம்.


திரு. பொ. கனகசபாபதி அவர்கள் மகாஜனாக்கல்லூரியில் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றியிருந்தார். அதேபோல ஏழாலை மத்திய மகாவித்தியாலயத்திலும், புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியிலும் அதிபராகக் கடமையாற்றியிருந்தார். அதன் பின் நைஜீரியாவில் கடமையாற்றி விட்டு அங்கிருந்து 1987 இல் கனடா வந்த இவர் 1988ஆம் ஆண்டு கூட்டுறவுச் சங்க வீட்டுத்திட்டத்தில் கட்டப்பட்ட தமிழ் கூட்டுறவு தொடர்மாடி வீடு ஒன்றில் (Apartment))  ஆறாம் மாடியில் குடியேறியிருந்தார். பெரும்பாலும் தமிழர்களே குடியிருந்ததால் அங்கு ஒரு நூல் நிலையம் தேவை என்பதை உணர்ந்து அப்போது இருந்த நிர்வாக சபையின் ஆதரவுடன் இந்த நூல் நிலையத்தை மூன்றாம் மாடியில் ஆரம்பித்து வைத்தார். முக்கியமாக ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களையும், சங்க இலக்கிய நூல்களையும் கொண்டதாக இந்த நூல் நிலையம் அமைந்திருக்கிறது. ஈழத்தில் இருந்து வெளிவரும் தினக்குரல், வீரகேசரி போன்ற வாராந்த பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இந்த நூல்நிலையத்தில் இடம் பெற்றிருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. 

அதிபர் அமரர் திரு பொ. கனகசபாபதி அவர்களைக் கௌரவிக்கும் முகமாக ரொறன்ரோவில் உள்ள இந்த தமிழ் கூட்டுறவு சங்க கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இயங்கும் நூல் நிலையத்திற்கு ‘அதிபர் கனகசபாபதி படிப்பகம்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு 11-09-2013 தமிழ் கூட்டுறவு மன்ற நூல் நிலையத்தில் அவர்களின் 25வது ஆண்டு நிறைவு வெள்ளிவிழாவை முன்னிட்டு நடைபெற்றது. நூலகத்தில் அதிபர் பொ. கனகசபாபதியின் புகைப்படம் ஒன்றும் அவரது சேவையைப்பாராட்டி பெரிய அளவில் வைக்கப்பட்டது. கனடாவில் உள்ள நூல் நிலையம் ஒன்றிற்குத் ஈழத்தமிழர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது எம்மினத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.


அதிபர் அவர்கள் புலம் பெயர்ந்த கனடாவில் பல நூல்களை வெளியிட்டிருந்தார். அமரர் திரு.பொ.கனகசபாபதி அவர்கள் கடைசியாக ஆக்கியளித்த இரண்டு நூல்களான ‘எம்மை வாழ வைத்தவர்கள், ‘மரம் மாந்தர் மிருகம்’ என்ற நூல்களின் வாசிப்பு அனுபவங்களை திருமதி. பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள் ‘கல்வி வரலாற்றில் எம்மை வாழ வைத்த இருபத்து மூன்று அதிபர்களின் மகோன்னத பணிகளைக் கூறும் நூல் இது, ஒவ்வொருவருடைய வரலாறும் சுவை மிகுந்த செய்திகளால் நிரம்பியுள்ளது’ என்று குறிப்பிடுகின்றார். ‘உங்களிடம் ஒரு வேண்டுகோள் - ‘இந்த நூலுக்கு ஒரு இரண்டாம் பாகமாக அல்லது மறுபதிப்பிலே மேலும் சில கல்விமான்களைப்பற்றியும் சேர்ப்பது காலத்தின் கட்டாயம். மிஸ் தம்பையா, மிஸ் ராமநாதன், மிஸ் காசிப்பிள்ளை நடேஸ்வரா கல்லூரி அதிபர் கந்தசாமி போன்றோர் கல்வியையே தமது வாழ்வாக மாற்றிக்கொண்டவர்கள்.  இப்படி இன்னும் பலர் இலைமறைகாயாக தொண்டாற்றியிருப்பார்கள் இந்தத் தூண்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். குறை ஒன்றும் இல்லை’ என்று திருமதி. பராசக்தி சுந்தரலிங்கம் மேலும் குறிப்பிட்டிருந்தாலும், காலன் அதற்கு இடம் தரவில்லை.


அவர் மேலும் குறிப்பிடும் போது, ‘என்னை மிகவும் வசீகரித்த நூல் ‘மரம் மாந்தர் மிருகம்’ இந்த நூலின் நிகழ்வுகள் யாவும் எமது வீட்டிலும் அயலிலும் ஊரிலும் அப்படியே நடந்தவைபோல மிகவும் யதார்த்தமாக இருக்கின்றன பெரிய காணி என்று சொல்ல முடியாவிட்டாலும் எங்களுடைய வீட்டிலும் வேப்பமரமும் மாமரமும் நாவல் பலா புளி இலுப்பை தென்னை பனை கறிவேப்பிலை முருங்கை பூவரசு கிணற்றடியில் கமுகும் -இருந்தன பக்கத்து வீட்டிலே --- எல்லோரும் ஒரே வீடுபோலப் பழகிய காலம் அன்று -- செம்பருத்தியும் வாழையும் விளாத்தியும் நெல்லியும் அன்னமுன்னாவும் ஈரப்பலாவும் -இப்படி எல்லாமுமே எங்கள் ஒவ்வொருவரோடும் பிரிக்கமுடியாதபடி இணைந்திருந்தன.’ 


‘அதிபர் கனகசபாபதியின் காலத்தில் மகாஜன கல்லூரி முன்னணியில் இருந்தது என்பதை எல்லோருமே அறிவோம் இன்றும் அந்த அதிபரோடு மாணவரும் மாணவரோடு அதிபரும் இணைந்து கனடாவில் உலா வருவது கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய விருந்து’ என்று கலாநிதி ரகுபதி அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி பேராசிரியர்கள் இரகுபதி சண்முகலிங்கன் சிவகடாட்சம் சிவயோகநாதன் மற்றும் சிவநாதன், கோகிலா மகேந்திரன் போன்ற கல்விமான்கள் எழுதியதற்குமேல் எழுதுவதற்கு என்ன உள்ளது என்று திருமதி. பராசக்தி சுந்தரலிங்கம் மேலும் குறிப்பிடுகின்றார்.
‘நல்லாசிரியர் நல்லதோர் அதிபர் எனும் மேன்மைகளுக்கு அப்பால் விரிந்த சிந்தையுடன் நல்லதொரு சமூக மனிதராகப் பொலிந்த பூரணத்துவத்தின் பயனாகவே ஓய்வு, புலம்பெயர் வாழ்வு, என்ற நிலையிலும் எங்களை வாழவைப்பதற்கான அவரின் சமூகப் பணியும், படைப்பாக்கப் பணியும் தொடர்ந்தது என்றால் மிகையில்லை’. என்று பேராசிரியர் கலாநிதி சண்முகலிங்கன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.


இவற்றை எல்லாம் கடந்து எனக்கும் அவருக்குமான பந்தம் என்னவென்று நீங்கள் நினைக்கலாம்.ஆளுமை மிக்க ஆசிரியராய், அதிபராய், ஆலோசகராய், இத்தனைக்கும் மேலாக எனது மூத்த சகோதரி கௌரியின் கணவராக, எனக்கு அத்தானாக எங்கள் உயிர்த் துடிப்பில் கலந்திருந்த அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டு பிரிந்து இன்று ஒரு வருடமாகிவிட்டது. சின்ன வயதிலேயே தந்தையை இழந்த எனக்கு வழிகாட்டியாக இருவர் இருந்தார்கள். ஒன்று எனது மூத்த சகோதரர் இலங்கை வங்கியின் ஜென்றல் மனேச்சராக அதியுயர் பதவியில் இருந்த திரு. கு. சிவகணநாதன் அவர்கள். அடுத்தது எனது அத்தானாக 1963 ஆம் ஆண்டு எங்கள் வீட்டிற்கு வந்த அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள். 


அவர் என்னுடைய வாழ்க்கையில் இரண்டு பாத்திரங்களை ஏற்றிருந்தார். அதாவது மகாஜனாகல்லூரியில் அதிபராகவும், வீட்டிலே அத்தானாகவும் இருந்தார். அத்தான் எங்களுடன் ஒரேவீட்டில் உடனிருந்ததால் எனது மாணவப்பருவ இன்ப துன்பம் எல்லாவற்றையும் அத்தானுடன் என்னால் பகிர்ந்து கொள்ள முடிந்தது. சிறுவயதில் தந்தையை இழந்த எங்களுக்கு அவரே எல்லாமாக இருந்தார். எங்கள் படிப்பு முதற்கொண்டு எங்கள் திருமணம் வரை அவரே முன்னின்று நடத்தினார். புலம் பெயர்ந்த இந்த மண்ணிலும் கடைசிவரை எங்கள் உறவுப்பாலத்தை கட்டிக்காத்தார். எங்கள் குடும்பத்தில் மூத்தவராகையால் அவரது வீட்டில் நெருங்கிய உறவினர் எல்லோரும் புதுவருடம் பிறப்பதற்கு முன்பு 31 ஆம் திகதி சந்தித்து இரவு விருந்துண்டு அவரிடம் ஆசி பெறுவோம். சென்றமுறை அந்தப் பாக்கியம் எமக்குக் கிடைக்கவில்லை, இனி என்றும் கிடைக்கப் போவதுமில்லை.


அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டும் தெரியும் அவரது மனசு குழந்தை மனதென்பது. மூட நம்பிக்கைகளை அவர் வெறுத்தார். புலம் பெயர்ந்த மண்ணில் தமிழ் நிலைக்க வேண்டும் என்பதில் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டார். கனடாவில் உள்ள எந்த மேடையிலும்; நாங்கள் எடுத்த சிறுவர்களுக்கான ‘தமிழ் ஆரம்’ காணொளி பற்றி அவர் சொல்ல மறந்ததில்லை. யாருடைய மனதும் நோகாமல் எல்லோரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவர். குறித்த நேரத்திற்கு முன்பாகவே விழாவிற்கு வந்து நிற்பார். விழா முடியும் வரை காத்திருப்பார். எங்களுடைய பிறந்த நாட்களில் அதிகாலையில் எங்களை வாழ்த்துவதற்கு என்றும் அவர் மறந்ததில்லை. 1991 இல் தமிழ் மொழியை ஒரு பாடமாக கல்விச் சபையில் கற்பிப்பதற்கு முன்னின்று பாடுபட்டார். 1995 ஆம் ஆண்டு இவரது மணிவிழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார்கள். ‘ஒரு அதிபரின் கூரிய பார்வை’ என்ற நூல் அப்போது வெளியிடப்பட்டது. 1998 இல் ‘பெற்றோர் பிள்ளைகள் உளவியல்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. 2000 ஆண்டு மாறன் மணிக் கதைகள் நூல் வெளியிடப்பட்டது. 2008 ஆம் ஆண்டு மாறன் மணிக்கதைகள்-2, மனம் எங்கே போகிறது, திறவு கோல், ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. புலம் பெயர்ந்த சமூகத்திற்கு முக்;கியமான ஆலோசகராக இருந்த அவர் இன்று எங்கள் மத்தியில் இல்லை என்பது இந்த மண்ணில் நடக்கும் வேண்டாத சில நிகழ்வுகளில் இருந்து பலராலும் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.


அதிபர் மூலம்தான் எனக்குப் பல இலக்கிய நண்பர்கள் கிடைத்தார்கள். கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் எனது 25 வருட இலக்கிய சேவையைப் பாராட்டி விழா எடுத்த போது அரங்கம் நிறைந்த சபையில் என்னை வாழ்த்த வந்திருந்தவர்களில் ஏறத்தாள 50 வீதமானவர்கள் அவரது நண்பர்களே. அந்த அளவிற்கு அவர்மீது எல்லோரும் மதிப்பு வைத்திருந்தார்கள். சென்ற இடமெல்லாம அவரிடம் படித்த மாணவர்களே வரவேற்றார்கள். அவர் வாழும் பொழுதே அவரைக் கௌரவிக்க வேண்டும் என்ற விருப்பம் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கு இருந்தாலும் அது அப்போது சாத்தியப் படவில்லை. ஆனாலும் சென்ற வருடம் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கௌரவித்திருந்தது. இங்கே உள்ள ஒவ்வொரு வானொலிகளும், ஊடகங்களும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தன. லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் நடாமோகனின் வானொலியில் நகுலா சிவநாதன் அவர்கள் எங்கள் அதிபருக்கு கண்ணீர் அஞ்சலி என்ற ஒரு மணி நேர நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். அதே போல அவுஸ்ரேலியாவில் இளலிங்கம் அவர்கள் வானொலியில் அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார். பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியிலும் பிராஸ் பழையமாணவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தி அதிபரின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். இதுபோல நண்பர்கள், மாணவர்கள் என்று பலரும் இரங்கல் செய்தி அனுப்பியிருந்தார்கள். 25 வருடங்களுக்கு முன் இந்த மண்ணில் மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தை அதிபர் ஆரம்பித்து வைத்தார். இன்றும் சங்கம் சிறப்பாக இயங்கி வருகின்றது.


பிரிவுத் துயர் என்றால் என்ன என்பதை அவரது பிரிவைத் தொடர்ந்து  எனக்கு வந்த தொலைபேசி அழைப்புகளிலும், மின்னஞ்சலிலும், முகநூலிலும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. முதலில் மனைவியை, பின் மகனை அதன்பின் பெற்றதாயை அடுத்தடுத்து இழந்த போதும் அவர் மனம் தளர்ந்து போகவில்லை. அந்த சோகத்தை மறப்பதற்காகவே அவர் வெளியே வந்து பூந்தோட்டத்தில் தனது கவனத்தைச் செலுத்துவார் இல்லாவிட்டால், இலக்கிய ஒன்று கூடலில் கலந்து கொள்வார். வார இறுதி நாட்களில் விழாக்களுக்குச் செல்லும் போதும் திரும்பி வரும் போதும் நிறைய விடையங்களை நாங்கள் பேசிக் கொள்வோம். சின்ன வயதில் இருந்தே ஒன்றாய் பழகியதால், பலனுள்ள பல விடையங்களை அவரிடம் இருந்து நான் தெரிந்து கொண்டேன். எனது பிள்ளைகளோடு கூட ஒரு நண்பரைப் பேலவே பழகுவார். அவர்கள் செய்யும் சின்ன விடையங்களைக் கூட அவர் பாராட்டுவார். சினிமா பற்றி, விளையாட்டுத் துறை பற்றி, அரசியல் பற்றி எல்லாம் உரையாடல் அமைந்திருக்கும்.
‘தோன்றில் புகழோடு தோன்றுக’ என்று குறள் சொல்வது போல புகழோடு தோன்றிய ஒருவர்தான் எங்கள் அதிபர் பெர் கனகசபாபதி அவர்கள். ‘நேற்றிருந்தார் இன்னிறில்லை’ என்பது இயற்கையின் நியதி. ஆனாலும் அவர் எங்களோடுதான் இருப்பார். அவரது நினைவுகள் எம்மோடு, எங்கள் உயிர்த் துடிப்பில் எப்போதும் கலந்திருக்கும். அவர் எங்களோடு வாழ்கிறார் என்பதை என்றென்றும் உறுதிப்படுத்த ‘குறித் நேரத்திற்கு ஓரிடத்திற்குச் செல்வது’ என்ற அவரது கொள்கையை இந்த மண்ணில் நாமும் கடைப்பிடிக்க முயற்சிக்கின்றோம். அதுவே நாம் அவருக்குத் தரும் இறுதி மரியாதையாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றேன். அவரது ஆத்தமா சாந்தியடைய இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.(எழுத்தாளர் குரு அரவிந்தனின் அஞ்சலி உரையில் இருந்து)
kurusilver25@gmail.com
writer Kuru Aravinthan

Kanex's Daughters Manivillee - Manimoli

Student Dr. Senthilmohan

First Student Dr. Kathir Thurisingam

Uthayan editor R.N. Logendralingam

Canada OSA President Gowripalan.Mr.T. Sivapalu

Dr. Balasundram


No comments:

Post a Comment