Thursday, December 29, 2016

Happy New year - 2017

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்
குரு அரவிந்தன் குடும்பத்தினர்.

2017
மகாஜனக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கு நினைவு அஞ்சலி.

24-12-2016

நடமாடிய பல்கலைக்கழகம் எம்மைவிட்டுப் பிரிந்ததேன்?

Nadeswara OSA Dinner - 2016

NADESWARA COLLEGE OSA - CANADA

Dear Friends,

I would like to extend my thank you for all of those who could attend our 2016 Nadeswara OSA Dinner.
The event was entertaining, well organized, and there was a large attendance. I would specially like to thank everyone who helped with organizing this event.
A special thanks to our President, Secretary, event committee, the board, and volunteers for their contributions. Thank you all again for a great weekend and have a happy holiday.

With regards

 Kuru Aravinthan.நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்க விருந்துபசாரம் - 2016 போது காப்பாளர், எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி:

வணக்கம்

முதலில் என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன். எனது பெயர் குரு அரவிந்தன். நடேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவன். கனடா பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளர்களில் ஒருவனாக இருக்கின்றேன். இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.அதிபாதுகாப்பு வலையத்திற்குள் அகப்பட்டிருந்த நடேஸ்வராக் கல்லூரி எங்களுக்கு ஒரு போதும் திரும்பக் கிடைக்க மாட்டாது என்றுதான் கடந்தகால அரசியல் நிலைமைகள் எங்களை நம்பவைத்தன. ஆனால் இன்று அரசியல் மாற்றங்கள் காரணமாக எங்கள் கல்லூரி எமக்குத் திரும்பவும் கிடைத்திருக்கின்றது. எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் மீளப்பெற்றுக் கொண்ட கல்லூரியின் எதிர்காலம் என்ன என்பதுதான் இப்போது எங்கள் மத்தியில் இருக்கும் முக்கிய கேள்வியாகும். கல்விச் செல்வம் தான் முதன்மையான செல்வம் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள். எங்களுக்கு அறிவூட்டிய, கடந்த காலங்களில் சாதனைகள் பல படைத்த நடேஸ்வராக் கல்லூரியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதுதான் இப்போது எங்கள் முக்கிய நோக்கம். அதற்கான முன்னெடுப்புக்களை தற்போதைய நிர்வாகசபை சிறப்பாகச் செயற்படுத்திக் கொண்டு வருவதையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.

இங்கே இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டங்களில் நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றிருப்பீர்கள். ஆனாலும் ‘நடேஸ்வரா’ என்ற அந்தத் தாரக மந்திரம் தான் எங்களை ஒரே கூரையின் கீழ் இன்று ஒன்று சேர வைத்திருக்கின்றது. இது எப்படி சாத்தியமாயிற்று, நல்ல உள்ளம் கொண்ட பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் என்ற ஒன்றை இந்த மண்ணில் ஆரம்பித்து வைத்ததே காரணமாகும். தன்னலம் அற்ற அங்கத்தவர்கள், கல்லூரிமீது மாறாத பக்தி கொண்டவர்கள், கல்லூரியைக் கோயிலாகக் கொண்ட ஊர்மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டதால்தான் எங்களால் எங்கள் கல்லூரியைத் திரும்பவும் பெற்றுக் கொள்ள முடிந்தது. முக்கியமாக கல்லூரியைச் சுற்றிய பகுதிகளில் மீண்டும் மக்கள் குடியேறுவதன் மூலம் மாணவர் தொகையைக் கல்லூரியில் அதிகரிக்க முடியும்.இதுவரை காலமும் இந்த மண்ணில் பழைய மாணவர் சங்கத்தைப் பொறுப்பேற்று மிகவும் சிறப்பாகக் கொண்டு நடத்திய முன்னாள் தலைவர்களுக்கும், கடந்தகால நிர்வாக சபையினருக்கும், தற்சமயம் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் தலைவர் திரு.குமாரகுலதேவன் அவர்களுக்கும், செயலாளர் திரு.யோகரட்ணம் அவர்களுக்கும் தற்போதைய நிர்வாக சபை அங்கத்தவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் மன்றத்தின் காப்பாளர்கள் சார்பில் நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
இச்சந்தர்ப்பத்தில் நடேஸ்வராக் கல்லூரியின் கடந்த காலம் பற்றிச் சிறிது குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். எனது தந்தையார் திரு. அ. குருநாதபிள்ளை அவர்கள் நடேஸ்வராக் கல்லூரி அதிபராகவும், காங்கேசந்துறை பட்டினசபை முதல்வராகவும் கடமையாற்றியதால் நான் வாழ்ந்த எனது ஊர் பற்றியும், நான் கல்விகற்ற கல்லூரிபற்றியும் நிறையவே அறிந்து கொள்ள எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.நடேஸ்வராக் கல்லூரியின் ஆரம்பத்தில் சைவப்பிரகாச வித்தியாலயம் என்று பெயர் சூட்டப்பட்டது. அரசிடம் இருந்து மானியம் பெறவேண்டுமானால் குறைந்தது 50 பிள்ளைகளாவது படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அப்போது இருந்ததால், வன்னித்தம்பி என்பவர் புளியடியில் (கைகாட்டி மரம்) படிப்பித்த 12 மாணவர்களையும், ரேவதி தாமோதரம்பிள்ளை என்பவர் குரு வீதியில் (மரக்காலை) படிப்பித்த 10 மாணவர்களையும், தையிட்டி குளத்தடியில் படித்த 12 மாணவர்களையும் ஒன்றிணைத்து புதிய மாணவர்கள் சிலரையும் சேர்த்து 52 மாணவர்களுடன் சைவப்பிரகாச வித்தியாலயம் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.
எனது தந்தையார் அங்கே படித்து அங்கேயே ஆசிரியராகவும் கடமையாற்றினார். அவரது 25 வருடகால சேவைக்காக வெள்ளிவிழா கொண்டாடினார்கள். அந்த வட்டாரத்திலே பிரபலமான பாடசாலையாக இருந்தபடியால் அயல் ஊர்களில் இருந்தும் பல மாணவர்கள் இங்கு வந்து கல்வி கற்றனர். கல்வியில் மட்டுமல்ல, விளையாட்டுத்துறை, கலைத்துறை போன்றவற்றிலும் நடேஸ்வரா சிறந்து விளங்கியது. தமிழகத்தில் இருந்து கிருவானந்தவாரியார், கி.வா.ஜெகநாதன் போன்ற கல்விமான்கள் எல்லாம் வந்து அவ்வப்போது சொற்பொழிவாற்றிய ஞாபகம் இருக்கின்றது.நடேஸ்வராக் கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் இன்று உயர் பதவி வகிப்பவர்களாகவும், புகழ் பெற்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.


சபாபதிப்பிள்ளை மாஸ்டர், சின்னத்தம்பி மாஸ்டர், மாவை கந்தையா மாஸ்டர், திருநாவுக்கரசு மாஸ்டர், குருநாதபிள்ளை மாஸ்டர், தையிட்டி கந்தையா மாஸ்டர், நடராசா மாஸ்டர், திருமதி சச்சிதானந்தம் ஆகியோர் தொடக்க காலத்தில் கனிஷ்ட பாடசாலை அதிபர்களாக இருந்தது பற்றி ஆசிரியரான அமரர் வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் எனது நேர்காணலின்போது குறிப்பிட்டிருந்தார்.

சிரேஷ்ட பாடசாலை அதிபர்களாக கந்தசாமி மாஸ்டர், மார்க்கண்டு மாஸ்டர், கிருஷ்ணபிள்ளை மாஸ்டர், சிவப்பிரகாசம் மாஸ்டர், சோமசுந்தரம் மாஸ்டர், குலசேகரம் மாஸ்டர், கனகநாயகம் மாஸ்டர், பாலசிங்கம் மாஸ்டர், சுந்தரமூர்த்தி மாஸ்டர் ஆகியோரை எனக்குத் தெரிந்த படியால் அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றேன்.எங்கள் கல்லூரி பற்றிய விபரங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்பதால் அதற்கான விபரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கின்றேன். கல்லூரி பற்றி உங்களுக்கு ஏதாவது விபரங்கள் தெரிந்தால் எழுத்து மூலமும், கல்லூரி சம்பந்தமான புகைப்படங்கள் இருந்தால் அவற்றைத் தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். ஒன்றுமே இல்லாமல் இருப்பதைவிட எதையாவது பதிவு செய்து வைத்தால் இனி வரும் தலைமுறைக்குக் கனடாவில் இருக்கும் பழைய மாணவர்கள் செய்த உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். தொடர்புகளுக்கு:

 Email: kuruaravinthan@hotmail.comஎங்களுக்குள் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம், அதற்காகத் தனிப்பட்ட கோபதாபங்களைத் தள்ளி வைப்போம். கல்லூரிக்கு எது நன்மை என்று கருதுகின்றோமோ அதை ஒன்றுபட்டு முன்னெடுத்துச் செல்வோம். அடுத்த தலைமுறையினரை உள்வாங்குவோம். இங்கிருந்து எம்மால் முடிந்ததைச் செய்வதே கல்லூரியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்று குறிப்பிட்டு உங்கள் அன்பும் ஆதரவும் எங்கள் பழைய மாணவர் சங்கத்தின் வளர்ச்சிக்கு என்றென்றும் உதவும் என்று கூறி விடைபெறுகின்றேன்.Friday, November 25, 2016

Canadian Short Story - By Kuru Aravinthan

                               Kuru Aravinthan
Tuesday, November 22, 2016

Balamurali Krishna.- பாலமுரளி கிருஷ்ணா

                                     Balamurali Krishna.


" ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா "


பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 86. கர்நாடக இசையில் வல்லுனரான இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உட்பட பல மொழிப் படங்களுக்காக பாடல்களை பாடவும் செய்திருக்கிறார்.

. Legendary Carnatic singer and recipient of India’s 2nd highest civilian award Padma Vibhushan, passed away in Chennai at the age of 86 years today, the 22nd November

Thursday, November 17, 2016

Tamil Short Story - Kumudam


            மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா

Kankesanturai- Temples

  இந்துக் கோயில்களுக்குப் புகழ் பெற்றது காங்கேசந்துறை. தொன்று தொட்டு வாழ்ந்த தமிழ் மக்களால் இதுவரைகாலமும் அழியாது பாதுகாக்கப்பட்டது. யுத்தம் என்;ற கொடிய அரக்கன் இந்துக் கோயில்களை எல்லாம் அழிப்பதில் முன்னின்றது. இன்று அழிந்த  நிலையில் பல இந்துக் கோயில்கள் இருப்பதைக் காண முடியும். ஆனால் இதற்கும் மேலாகப் புதிதாக பௌத்த கோயில்கள் புதிது புதிதாய் காளான் போல அங்கே எழும்புகின்றன.

KKS- Kumarakovil - Front of Cement Factory

Nadeswara Kaali Kovil

KKS- Koothiyawattapillar Temple

KKs- Chelappilliar Temple - Nadeswara grounds


Friday, November 11, 2016

Vikatan- Short Story - விகடன் தீபாவளி மலர்

மாவீரர் நினைவாக...

விகடன் தீபாவளி மலர்

            

இம்மாதக் கதை

1983ம் ஆண்டு யூலை மாதம் நடந்த சம்பவத்தை எழுத்தாளர் குரு அரவிந்தன்
கதையாக்கியிருக்கின்றார். விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த இக்கதையை
வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.  1983ம் ஆண்டு யூலை மாதம்
   1983ம் ஆண்டு யூலை மாதம்   
                            
' என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண்    முன்னாலேயே…’
இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது.


குரு அரவிந்தன்

 
அது கொழும்பு துறைமுகம்…

வ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்காக துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலின் படிகளில் ஏறும்போது நங்கூரி என்ற பெயர் பெரிதாக அந்தக் கப்பலில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்ததை அவதானித்தேன். 1983ம் ஆண்டு யூலை மாதம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவில் இருந்து நல்லெண்ண விஜயத்தில் வந்திருந்தது. நீண்ட நாட்களின்பின் சிரித்த முகத்தோடு ‘வாங்க வாங்க’ என்று கப்பலின் வாசலில் நின்றவர்கள் எங்களை அன்போடு வரவேற்றார்கள். அவர்களின் சிரித்த முகத்தையும், அந்த அன்பான உபசரிப்பையும் பார்த்ததும் மருண்டு போயிருந்த எங்கள் மனசுக்குச் சற்று ஆறதலாக இருந்தது மட்டுமல்ல, பாதுகாப்பான ஒரு இடத்திற்கு வந்துவிட்ட நிம்மதியும் அந்தக் கணமே ஏற்பட்டது. சொந்த மண்ணிலேயே அகதியாக்கப்பட்ட துரதிர்ஷ்டத்தை நினைத்தபடி அருகே நின்ற அக்காவின் முகத்தைப் பார்த்தேன், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாய் ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்ற கவலை அவள் முகத்தில் படர்ந்து கிடந்தது. கடந்த ஒரு வாரமாக நடந்த கலவரத்தின் பாதிப்பால், உயிர் தப்பினால் போதும் என்ற பயத்தில் அக்காவின் பாதியுயிரே போயிருந்தது. கப்பலின் கீழ்த்தளத்தில் வரிசையாக இருந்த படுக்கைகளில் அக்காவிற்கு ஒரு படுக்கையை ஏற்பாடு செய்து கொடுத்து, நிம்மதியாகப் படுக்கச் சொன்னேன். தூக்கமில்லாத இரவுகளாலோ என்னவோ படுத்த உடனேயே அக்கா அயர்ந்து தூங்கிவிட்டாள்.
அக்கா தூங்கியதும், அப்போது மாணவப் பருவத்தில் இருந்த நானும் எனது நண்பர்களும் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றோம். கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலரும் மேற்தளத்தில் உட்கார்ந்திருந்தார்கள். யாரை நம்பி ஒன்றாக, ஒற்றுமையாக வாழலாம் என்று நினைத்தார்களோ, அவர்களே கைவிட்டு விட்டபோது, வேலியே பயிரை மேய்ந்துவிட்ட ஏமாற்றம் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்திருந்தது. இனியும் இவர்களோடு ஒற்றுமையாக வாழமுடியாது, வாழவிடமாட்டாரகள் என்ற உண்மையும் இந்த இனக் கலவரத்தின்போது தெளிவாகப் புரிந்தது. உறவை, உயிரை, உடமையை, மானத்தை என்று பலவிதமான இழப்புகளின் பாதிப்பு ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தாலும், அந்த சோகத்திலும் உயிர்தப்பி சொந்த மண்ணை நோக்கிப் பாதுகாப்பாய்ப் போகிறோமே என்ற நிம்மதி அவர்கள் முகத்தில் பிரதிபலித்தது.யாரோ அழும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு அருகே நின்ற அவன் விறைத்தபடி அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். கணவனாய் இருக்குமோ என்று நினைத்துப் பார்த்தேன். கணவனாய் இருந்தால் அவளை அணைத்து அவளுக்கு ஆறுதலாவது சொல்லியிருப்பானே, ஏன் இப்படி வேண்டாத யாரோபோல எட்டநிற்கிறான். அவளோ வெறி பிடித்தவள்போல ஓவென்று கத்தி அழுவதும் பின் அடங்கிப் போவதுமாய் இருந்தாள். அங்கே நடப்பது ஏதோ அசாதாரண நிகழ்வுபோல எனக்குத் தெரிந்தது. அவசரமாக கீழ்த்தளத்திற்கு ஓடிவந்து தூங்கிக் கொண்டிருந்த அக்காவை எழுப்பி அங்கே நடந்ததை மெதுவாக சொன்னேன். பெண்களின் துயரத்தைப் பார்த்துக் கொண்டு ஆசிரியையான அக்கா ஒருபோதும் மௌனமாய் இருந்ததில்லை. பதட்டத்தோடு அக்கா துள்ளி எழுந்து மேற்தளத்தில் இருந்த அவர்களை நோக்கிச் சென்றாள். நானும் கூடவே சென்றேன்.


அவர்களுக்குள் வாக்குவாதம் சூடேறியிருந்தது. அவள் கைகளை அகல விரித்து அவனைத் தடுத்தபடி ஏதோ உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொல்வதைக் கேட்கும் நிலையில் அவனோ இல்லை. ஆவேசம் கொண்டவளாய் திடீரென அவளைத் தள்ளிவிட்டு கப்பலின் ஓரம் நோக்கி ஓடிவந்தான். எங்களைக் கடந்து செல்ல முற்பட்டபோது, எதாவது விபரீதம் நடந்து விடுமோ என்ற பயத்தில் எதிரே வந்த அக்கா அவனைத் தடுத்து நிறுத்தினாள்.


‘என்ன, என்னாச்சு..?’


‘என்னை விடுங்கோக்கா’


‘அப்படி என்ன கோபம், அவள் உன்னை ஏசினாளா?’


‘இல்லையக்கா, என்னை விடுங்கோ’


‘ஏன் என்ன செய்யப் போகிறாய்?’


‘நான் தற்கொலை செய்யப் போறேன். மானம் போச்சு, என்னால இனி உயிரோட இருக்க முடியாது.’ அவன் ஆவேசமாக கைகளை விடுவிக்க உதறினான்.

       


தற்கொலையா? எனக்கு உதறல் எடுத்தது, வாக்குவாதப் படும்போது அவள் ஏதாவது மனம் நோகக்கூடியதாகச் சொல்லியிருப்பாளோ? அந்த ஆத்திரம் தாங்கமுடியாமல் இப்படி முடிவு எடுத்திருப்பானோ என்று என் மனசு அலைபாய்ந்து கொண்டிருக்கையில்,


‘சரி நான் விடுகிறேன், எனக்கு என்ன நடந்தது என்று சொல்லலிவிட்டு அப்புறம் குதி’ என்றாள் அக்கா.


அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை., சட்டென்று அடங்கிப் போய்விட்டான். அவனது இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது. தற்கொலை என்பது ஒரு கணத்தில் சடுதியாக எடுக்கும் சந்தர்ப்பம் சார்ந்த முடிவு. சிந்திக்க நேரம் கிடைத்தால் அந்த முடிவை மாற்றிக் கொள்ள நிறையவே சந்தர்ப்பம் இருக்கிறது.


அவள் இப்போது தயங்கித் தயங்கி அருகே வந்தாள்.


‘நீங்க..?’ என்றாள் அக்கா.


‘நான் தான் இவருடைய மனைவி’ அவனைப் பாரத்துக் கொண்டே தயக்கத்தோடு சொன்னான்.


‘இல்லை, இல்லை இல்லை..!’ அவன் மீண்டும் ஆத்திரத்தில் கத்தினான்.


‘இது உன்னுடைய மனைவி இல்லையா?’ அவளைக் காட்டி அக்கா கேட்டாள்.


‘இவள் எல்லாம் ஒரு பெண்டாட்டியா? மானம் கெட்டவள், சொல்லவே வெட்கமாயிருக்கு!’ வெறுப்பால் அருவருப்போடு அவள்மீது ‘தூ’ என்று எச்சில் துப்பினான்.


அவளோ சற்றும் எதிர்பார்க்கவில்லை. அடிபட்ட மான்போல, ஒரு கணம் கூனிக்குறுகி அதிர்ச்சியில் அப்படியே ஒடுங்கிப் போய்விட்டாள்.


‘பாவி, உன்னுடைய உயிரைக் காப்பாற்றத்தானே என்னை நானே பலி கொடுத்தேன், இப்ப என்மேல பழிபோடுறியே..!’ அவள் ஓவென்று தலையில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாள். இருவரும் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டித் தங்களின் இயலாமையை வெளிப்படுத்தத் தொடங்கவே, அவனது பழிச்சொல் தாங்கமுடியாமல் அவளும் கடலில் குதித்து விடுவாளோ என்ற பீதி அக்காவின் முகத்தில் தெரிந்தது.


மனசில் உள்ளதைக் கொட்டித் தீர்க்கட்டும் என்று அவர்களுக்காக அக்கா காத்திருந்தாள். அவளது கன்னத்திலும் கழுத்திலும் பிறாண்டியது போன்ற கீறல் காயம் காய்ந்து சிவந்து போயிருந்தது. மானம் போனபின் எதற்காக உயிர்வாழவேண்டும் என்று அவர்கள்; நினைத்திருக்கலாம். அவர்களின் தற்கொலை முயற்சிக்குக் காரணம் என்னவாய் இருக்குமென்று ஓரளவு புரியலாயிற்று.


அவள் விம்மி விம்மி அழுவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், அவளை மெல்லத் தாங்கி அழைத்துச் சென்று ஆசுவாசப் படுத்தி ஓரிடத்தில் அமரவைத்தாள் அக்கா. அவளைக் கண்காணிக்கும்படி என்னிடம் சைகை செய்துவிட்டு கணவனிடம் சென்று விசாரித்தாள்.


இனக்கலவரத்தின்போது காடையர் கூட்டம் அவனைப் பிடித்துக் கொள்ள, அவனுக்கு முன்பாகவே அவளைத் துகிலுரிந்து மானபங்கப்படுத்தி விட்டதாக அவன் முறையிட்டான்.


‘நீ ஒரு ஆண்பிள்ளைதானே, அவளைக் காப்பாற்றியிருக்கலாமே?’ என்றாள் அக்கா.


‘என்னாலே முடியலையே!’


‘அவளைக் காப்பாற்ற ஏதாவது முயற்சியாவது நீ செய்திருக்கலாமே?’


‘எப்படியம்மா முடியும், அவங்க கூட்டமாய் வந்தாங்க, கையிலே கத்தி, துப்பாக்கி, சைக்கிள் செயின் என்று எல்லாம் கொண்டு வந்தாங்க’


‘இரண்டுபேரும் தப்பியாவது ஓடியிருக்கலாமே’


‘ஊரடங்கு சட்ட நேரம் தெரு முனையிலே இராணுவம் கடமையில் இருந்தாங்க, அந்தப் பக்கம் ஓடிப்போனால் சுட்டுப் போடுவாங்க, அதனாலே..!’


‘அதனாலே..?’
‘மகனையும் தூக்கிக் கொண்டு பின்பக்க வாசல் கதவால் ஓடி ஒளியப் போனபோதுதான் அவங்கள் எங்களைப் பிடிச்சுக் கொண்டாங்கள். என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண் முன்னாலேயே…’


மேற்கொண்டு எதையும் கேட்க அக்கா விரும்பவில்லை. ஆனாலும் அவன் தொடர்ந்தான்.


‘நான் திமிறினேன், துப்பாக்கியாலே எனது மண்டையிலே ஒரு போடு போட்டாங்க, நான் மயங்கிப் போயிட்டேன். அப்புறம் என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது..!’


‘அப்புறம் எப்படித் தப்பி வந்தீங்க..?’


‘நான் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது, கசக்கிப்போட்ட மலர்போல கலைந்த முடியோடு அவள் அழுதபடி மூலையிலே உட்கார்ந்திருந்தாள், காலையிலே ஊரங்குச் சட்டத்தை ஒரு மணிநேரம் தளர்த்தினாங்க, அப்போ தப்பி ஓடிவந்து அகதிகள் முகாமிலே தஞ்சம் புகுந்தோம்..’


அக்கா பதில் ஏதும் சொல்லவில்லை.


யார்மீதும் பிழை சொல்ல முடியாத நிலமை. அவர்களின் பையனைத் தூக்கிக் கொண்டு, அவளையும் அணைத்து ஆசுவாசப் படுத்தியபடி கீழ் தளத்திற்கு அழைத்துச் சென்றாள். அவளுக்கு ஆறதல் சொல்லி அவளை அமைதிப் படுத்தினாள். சோகமும், வலியும் வேதனையும் வெறுப்பும் மிக்கதாய் அந்தக் கப்பல் பயணம் இரண்டு நாட்கள் தொடர்ந்தது.


தமிழர்கள் வாழ்ந்த பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்றான வடபகுதியில் உள்ள காங்கேயன்துறை துறைமுகத்தில் நாங்கள் வந்து இறங்கியபோது அவளும் எங்களுடன் இறங்கினாள். அக்காவின் ஆலோசனையை ஏற்று மனம் தெளிந்து, தற்கொலை முயற்ச்சியைக் கைவிட்டிருந்தாள். தற்காலிக அகதிகள் முகாமில் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மாணவியான அக்காவின் மகள் ரோசாவிடம் அவர்களுக்கு நடந்ததைகூறி அவர்களை அவளிடம் ஒப்படைத்தோம்.


அந்தக் கப்பலில் வந்த ஒவ்வொரு பயணிகளும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப் பட்டிருந்தார்கள். அது போன்ற பல உண்மைச் சம்பவங்களை அவலப்பட்டு வந்த பலரிடம் நேரில் கேட்டு அறிந்து கொண்டதாலோ என்னவோ கொஞ்ச நாட்களாக எதிலும் நாட்டமில்லாமல் ரோசா மனம் கலங்கிப் போயிருந்தாள். சில நாட்களின்பின் தானும் ஒரு போராளியாக மாறப்போவதாக வீட்டிலே சொல்லிவிட்டு அக்காவின் மகள் ரோசாவும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டாள்.

அப்போதைய சந்தர்ப்ப சூழ்நிலையில் அவளைப் போன்ற பலர் சென்ற பாதை சரியானதா தவறானதா என்பதைச் சிந்திக்க இடம் தரவில்லை. தமிழர்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏதாவது தற்பாதுகாப்பு முறை ஒன்று வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட எல்லோரது குறிக்கோளாகவும் இருந்தது. அதை அடைவதற்குத் தற்பாதுகாப்புப் போராட்டமே ஏற்றதாகவும் இருந்தது. ஆயுதம் தாங்கி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட எதிரிக்கு அகிம்சை என்றால் என்னவென்று புரியவில்லை. அகிம்சை மூலம் புரியவைக்கப் பலமுறை முயன்றபோதும் அது தோல்வியிலேயே முடிந்தது. தமிழ் இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றப் போராளியாகத் தன்னை அர்ப்பணித்த ரோசாவின் மரணச்செய்தி வந்தபோதும் அக்கா கலங்கவில்லை. ஆக்கரமிப்பு இராணுவத்திடம் அகப்பட்டு, மானமிழந்து கோழை போலச் சாவதைவிட, தனது மகள் மாவீரராய் களத்தில் போராடி இறந்து போனதில் பெருமைப்பட்டுக் கொண்டாள் அக்கா.

எந்தப் பெண்ணைத் தற்கொலை முயற்சியில் இருந்து அக்கா காப்பாற்றினாவோ அந்தப் பெண் இப்போது வன்னியில் உள்ள முதியோர் காப்பகத்தின் காப்பாளராகக் கடமையாற்றுகின்றார். அவளது கணவனோ மனநோயாளியாய் மனநோயாளர் காப்பகத்தில் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அன்று சிறுவனாக இருந்த அவர்களின் மகன் இன்று மணலாறு களமுனையில் முனைப்போடு போராடும் ஒரு தற்பாதுகாப்புப் போராளியாகத் தன்னைத்தானே அர்ப்பணித்து நிற்கின்றான். அந்த வலியும், வேதனையும் அனுபவித்த அவர்களுக்குத்தான் புரியும்.


இனக் கலவரங்களின் போது மட்டுமல்ல, மதம் பிடித்த யானைபோல, வெறிபிடித்த ஒருசில அரசியல் வாதிகளால் எத்தனை தமிழ் குடும்பங்கள் இன்று சீரழிந்து போயின. வேண்டாத விதி அவ்வப்போது வலியவந்து ஒவ்வோர் குடும்பத்திலும் விளையாடிக் கொண்டே இருக்கிறது. மனிதநேயமற்ற ஆயுத விற்பனையாளர்களால் அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டு இழப்புக்கள் இரண்டு பக்கமும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சரி, பிழை யாரறிவார்?
நன்றி:   விகடன் தீபாவளி மலர்

Feedback:

 நட்புடன் குரு அரவிந்தன்

தங்களின் திறமைக்கு கிடைக்கும் பாராட்டுகள் கண்டு மகிழ்கிறேன்.
அவ்வப்போது தங்களுடைய இணைய பக்கத்தின் தகவல்களையும் படிப்பதுண்டு.
கதைகளில் உண்மைத்தன்மை நிறையவே இருக்கின்றபடியால் அனைவரையும் படிப்பதற்குத் தூண்டும். தொடரட்டும் எழுத்துப் பணி.

வரதன்

Kalki Short Story - கல்கி - சிறுகதை

மாவீரர் நினைவாக...


போதி மரம்

குரு அரவிந்தன்

'அவள் கசக்கப்பட்ட மலராய் அலங்கோலமாய் கட்டிலில் மயங்கிக் கிடந்தாள். மார்பகம் நனைந்திருந்தது. ‘அம்மா’ என்று அவள் அப்போது எழுப்பிய அந்த அவலக் குரல் கூட குழந்தையின் அழுகைக்குள் புதைந்து போயிற்று...'
.திகாலையின் மங்கிய இருட்டில் பனிக்குளிரைக் கிழித்துக் கொண்டு அருகே உள்ள பௌத்த விஹாரையிலிருந்து ஒலிபெருக்கியில் 'பிரித்" ஓதும் சத்தம் அந்த இராணுவ மருத்துவமனைக்குள் எதிரொலித்தது.

புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி..!

அந்த மருத்துவ மனையில் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த பண்டா ‘நான் ஒரு நல்ல பௌத்தனா?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். ‘இல்லை’ என்ற அவனது மனச்சாட்சியின் பதில் அவன் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது.
‘நான் ஏன் இப்படிச் சாக்கடைப் புழுவாய் மாறினேன்? நாட்டுப்பற்றா? மதவெறியா? இல்லை மொழிவெறியா?’

எதுவுமே இல்லை! குடும்பத்தின் வறுமை தான் அவனை இராணுவத்தில் தொழில் புரிய இழுத்து வந்தது என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்குப் பள்ளிப் படிப்பு அதிகம் வரவில்லை. அவனது கட்டுமஸ்தான உடம்பிற்கு இந்தத் தொழில் ஒன்றுதான் அந்த நேரம் ஏற்றதாக இருந்தது. எனவே தான் வேறுவழியில்லாமல் இராணுவத்தில் சேர்ந்தான். அவன் இராணுவத்தில் சேர்ந்த காலத்தில் தினமும் பயிற்சி செய்வதுஇ சாப்பிடுவதுஇ தூங்குவதுஇ போன்றவை தான் இராணுவத்தின் தொழிலாக இருந்தது. எப்போதாவது எங்கேயாவது மழை வெள்ளமென்றால் அங்கே போய் மக்களுக்கு உதவி செய்வார்கள். அவ்வளவுதான். எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் இப்படித்தான் அவனது இராணுவ வாழ்க்கை ஆரம்பமானது.


 ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் நடைபெற்ற இனக்கலவரம் அவனால் மறக்க முடியாத ஒரு சம்பவமாகிவிட்டது. தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட போது வீதிக்காவல் கடமையில் அவன் நின்றிருக்கிறான். கொள்ளை அடித்தவர்கள் தனது இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவற்றைக் கண்டும் காணாதது போல அவன் இருந்திருக்கிறான். அன்றுதான் முதன்முதலாக அவனும் இப்படியான அநியாயத்திற்குத் துணைபோனான். அப்புறம் எத்தனையோ தடவைகள் இப்படியான அநியாயங்கள் நடக்கும் போதெல்லாம் தவறு என்று தெரிந்தும் வாய்மூடி மௌனமாய் இருந்திருக்கிறான்.மண்ணாசைஇ பொன்னாசைஇ பெண்ணாசை இவையெல்லாம் மனிதனின் அழிவிற்காக ஏற்பட்ட ஆசைகள்தான் என்பது அவனுக்குத் தெரியும். மாற்றான் வீட்டு  மண்ணை ஆக்கிரமிக்க அரசு ஆசைப்பட்ட போது சேவை காரணமாக மறுக்க முடியாமல் அவனும் அங்கே கடமைக்குப் போனான். ஆக்கிரமித்த நிலத்தில் கால் பதித்த கட்டுப்பாடற்ற இராணுவம் தான்தோன்றித் தனமாய் அங்கே நடக்க முற்பட்டது. வறுமையில் வாடிய அப்பாவி மக்கள் துப்பாக்கி முனையில் பலவந்தமாய் அடக்கப்பட்டனர். காய்ந்து கிடந்த இளமைகள் அடங்காத ஆசைகளோடு பொன்னுக்கும் பெண்ணுக்கும் ஆசைப்பட்டு அலைந்தன. ஆகமொத்தமாக தீராத ஆசைகளோடுதான் அந்த இராணுவம் அங்கே களம் புகுந்தது.

அன்று வீதிச் சோதனைக்காக உயர் அதிகாரியோடு அவனும் வேறு சிலரும் சென்ற போது தான் அந்தச் சம்பவம் நடந்தது. வீதிக்குக் குறுக்கே யாரோ கற்பாறை ஒன்றை நகர்த்தி இருந்தார்கள். பாதைத் தடை காரணமாக சந்தேகத்தின் பேரில் அருகே உள்ள வீடுகளைச் சோதனை போட்டார்கள். அப்போது தான் மங்கிய வெளிச்சத்தில் ஜன்னல் வழியாக அவள் முகம் அங்கே தெரிந்தது. கட்டில் விளிம்பில் தலை குனிந்தபடி அவள் உட்கார்ந்திருந்தாள். பார்த்த மாத்திரத்திலேயே அவளிடம் ஒரு கவர்ச்சி தெரிந்தது. அந்த அழகை அவளுக்குத் தெரியாமல் வெளியே நின்றபடி அவன் ரசித்துக் கொண்டிருந்தான்.

திடீரென வாசற் கதவை உதைத்துக் கொண்டு உயரதிகாரி உள்ளே நுழைவதையும் அவள் பயத்தோடு திடுக்கிட்டு எழுந்து நிற்பதையும் அவனால் பார்க்க முடிந்தது. அவள் மடியில் இருந்த குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள். அவன் நல்ல நோக்கத்தோடு உள்ளே வரவில்லை என்பதை அவனது பார்வையில் இருந்தே அவள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவசரமாக முந்தானையை இழுத்து திறந்த மார்பை மறைக்க முயற்சி செய்தாள். அவள் இருந்த கோலமும் தனிமையும் உயரதிகாரியை வெறி கொள்ளச் செய்திருக்க வேண்டும். அவளைப் பிடித்திழுத்து மூர்க்கத் தனமாய் கட்டிலில் உயரதிகாரி தள்ளிய போதுதான் ‘மது குடித்தால் தான் வெறிக்கும் மாது பார்த்தாலே வெறிக்கும்’ என்று அந்த உயரதிகாரி அடிக்கடி சொல்வது அவனுக்கு நினைவிற்கு வந்தது. ‘அம்மா’ என்று அவள் அப்போது எழுப்பிய அந்த அவலக் குரல் கூட குழந்தையின் அழுகைக்குள் புதைந்து போயிற்று.

உயரதிகாரி காரியம் முடிந்து வெளியேறியதும் அவன் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். அவள் கசக்கப்பட்ட மலராய் அலங்கோலமாய் கட்டிலில் மயங்கிக் கிடந்தாள். மார்பகம் நனைந்திருந்தது. பால்வடிந்த வாயோடு பச்சைக்குழந்தை தரையில் வீரிட்டுக் கொண்டிருந்தது. இதையெல்லாம் சகிக்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டவன் ‘லெட்ஸ் கோ’ என்ற உயரதிகாரியின் கட்டளைக்குப் பணிய வேண்டிவந்தது. ஆனாலும் கடமையின் நிமிர்த்தம் அவன் மீண்டும் மௌனம் காத்தான்.

அந்தத் தாய் அன்று போட்ட சாபமோ என்னவோ ஆனையிறவுச் சமரின் போது அவர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த முகாம் முற்றுகை இடப்பட்டது. அவர்கள் தண்ணீரில்லாமல் நாவறண்டு உயிருக்குப் போராடியதும் முகாமை விட்டுத் தப்பிப் பின்பக்கமாய் ஓடும்போது தாங்களே முகாமின் பாதுகாப்பிற்காக புதைத்து வைத்த கண்ணி வெடியில் சிக்கி உயரதிகாரி பலியானதும்இ அவனது கால் ஊனமானதும் அவனால் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.

முகாமை விட்டுத் தப்பி ஓடும் போது தான் மரணம் அவனைப் பின்னால் துரத்துவது அவனுக்குப் புரிந்தது. இந்த உலகில் வாழப்போவது சிறிது காலம் தான் என்று அவனுக்கு தெரிந்த அடுத்த நிமிடமே மரணபயமும் அவனைப் பிடித்துக் கொண்டது. அது கூட அவனது ஒரு கால் கண்ணிவெடியில் சிக்கி ஊனமுற்ற போது தான் அப்படி அவனுக்குச் சிந்திக்கத் தோன்றியது. காலின் வலியை விட மனசுதான் அதிகம் வலித்தது.

இந்தக் குறுகிய காலத்திற்குள் மொழிவேற்றுமை மதவேற்றுமை ஜாதிவேற்றுமை போன்ற பல விதமான வேற்றுமைகளை அவன் சந்தித்து இருக்கிறான். இந்த வேற்றுமை உணர்வுகள் தானே மனிதனை மிருகமாக்கி ரத்த வெறி பிடித்து அவர்களை அலைய வைக்கிறது. வேண்டாம் வேற்றுமை ஒன்றுமே வேண்டாம்! இப்போதைக்கு அன்பு என்கிற இயற்கையின் மொழியைப் புரிந்து கொண்டாலே அவனுக்குப் போதும் போல இருந்தது!

‘அன்பு’ என்றதும் அவனது உடம்பு சிலிர்த்துக் கொண்டது. அன்பாலே முடியாதது ஒன்றுமில்லை. அது ஒரு இன்ப ஊற்று. என்றுமே வற்றாத ஒரு ஜீவநதி. போதிமரத்தின் கீழ் உட்காராமலே அவனுக்கு சிறிது சிறிதாக ஞானம் பிறந்தது.

இராணுவத்திடம் இருந்து வந்த ‘விரும்பினால் மறுபடியும் சேவைக்கு வரலாம்’ என்ற அழைப்புக் கடிதம் அவனை மீண்டும் சிந்திக்க வைத்தது. யுத்தம் என்ற போர்வையில் ஒன்றுமே அறியாத அப்பாவிகளின் உயிரைப் பலி எடுக்கவா இந்த அழைப்பு?

சின்ன வயதில் படித்த யுத்த வெறி பிடித்த அசோகச் சக்கரவர்த்தியின் சரித்திரம் கண் முன்னால் விரிந்து நின்றது. புத்தபிரானும் பிறப்பால் ஒரு இந்து தானே! அவர் புனித பூமியில் அவதரிக் காவிட்டால் நானும் ஒரு இந்துவாக இருந்திருப்பேனோ? அன்று அந்தப் பெண் ‘அம்மா’ என்று கத்தாமல் ‘அம்மே’ என்று எனது மொழியில் அவலக்குரல் எழுப்பி இருந்தால் உதவிக்கு ஓடியிருப்பேனோ? ஒருவேளை ஊமையாகப் பிறந்திருந்தால் நான் என்ன மொழி பேசியிருப்பேன்? மொழி எல்லாம் ஊமையானால்;;;..? அவனது சிந்தனைகள் விரிந்து கொண்டே போகக் கலங்கிக் கிடந்த மனம் தெளிவானது.

அவன் தனது இராணுவ உடையைக் கழைந்து விட்டு காவி உடை அணிந்து கொண்டான். ஆயுதத்தைக் கிழே போட்டுவிட்டு அகிம்சையைக் கைகளில் எடுத்துக் கொண்டான். கறை படிந்த உடம்பு தூய்மையானது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. இனி மனிதநேயம் ஒன்றே தனது லட்சியம் என்று எண்ணியவனாய் அருகே உள்ள பௌத்தசாலையை நோக்கி நொண்டிக் கொண்டே நடந்தான்.

வானத்தைப் பார்த்துப் பழகிப்போன அவன் அனிச்சையாக நிமிர்ந்து பார்த்தான். யுத்த மேகங்கள் கலைந்து போக வானத்து இரைச்சல் அடங்கிப் போயிருந்தது. அவனது மனதைப் போல நீண்ட நாட்களின் பின் கீழ்வானம் வெளித்திருந்தது. தொலைவானத்தில் காலைச் சூரியனின் கதிரெளியில் வெள்ளைப் புறாக்கள் சுதந்திரமாய் சிறகடித்துப் பறப்பதைப் பார்க்கக் காயப்பட்ட மனதிற்கு இதமாக இருந்தது.

பௌத்த மடத்தை அடைந்த போது அதன் வாசற் கதவு இழுத்து மூடப்பட்டிருந்தது. போதி மரத்தின் கீழ் காவி உடை ஒன்று மடித்து வைக்கப் பட்டிருந்தது. பௌத்த பிக்குவினால் எழுதப் பட்ட வாசகம் ஒன்றும் அங்கே பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தது.

‘தமிழர்களை வென்றெடுக்கும் யுத்தத்தில் பங்கு கொள்வதற்காக நான் இராணுவத்தில் சேர்ந்து ஆயுதம் ஏந்திப் போராடப் போகிறேன்.’

நிழல் நிஜமாக  நிஜம் நிழலானது!


Feedback:


Dear Kuru Anna,
Congratulations for  all your  great achievements,  world wide praise and recognition.
 I have read your  writings with keen interest. 
Very touching stories and  high light the plight of our tamils.
 Wishing you for more and more  success in future.
Thank you.
Kind Regards
Velalagan

Kuramahal - குறமகள்

மாவீரரின் தாயாரான குறமகளின் மறைவு குறித்து எழுதப்பட்ட இரங்கலுரை:Kurumahal


வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்) எழுத்தாளர் குறமகள் பற்றிய ‘நினைவழியா நினைவுகள்’ என்ற நூலில் இருந்து…

குரு அரவிந்தன் -

திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களைப் பிரிந்து இன்று ஒரு மாதமாகிவிட்டது.

இலக்கிய உலகில் குறமகள் என்று சொன்னாலே இவரைத் தெரிந்து கொள்வார்கள். சிலர் இவரைப் பெண்ணிய வாதியாகப் பார்த்திருந்தார்கள். ஆனால் பிறந்ததில் இருந்து இவருடன் கூட வளர்ந்ததாலோ என்னவே அன்புள்ளம் கொண்ட அக்காவாகவும், பாசமுள்ள தாயாகவும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட ஒருவருமாகத்தான் நான் எப்பொழுதும் இவரைப் பார்த்தேன். பொறுமையாக எதையும் ஏற்றுக் கொள்வதால், அக்கா தனது மரணத்தையும் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டார். எப்பொழுதுமே கலகலப்பாக இருப்பதையே விரும்பினார். எங்கள் குடும்பங்களுக்குள் என்ன நடந்தாலும் எங்கள் அத்தான் அதிபர் கனகசபாபதியும், இராசாத்தி அக்காவும்தான் (குறமகள்) உடனே எங்களுக்கு அறிவிப்பார்கள். இவர்கள் இருவரும் எங்களுக்கு வழிகாட்டியாக மட்டுமல்ல, எங்களைத் தாங்கும் தூணாகவும் இருந்தார்கள்.


இவர் எனது தந்தையின் அண்ணாவின் முத்த மகள். எங்கள் இருவரின் வீடும் ஒரே காணியில் இருந்தது. நடுவில் ஒரு வேலிபோட்டு போய்வருவதற்கு வசதியாக இடம் விடப்பட்டிருந்தது. நாங்கள் வாழ்ந்த குருவீதியில், குரு விளையாட்டுக் கழகத்தை ஆரம்பிக்கும்வரை இராசாத்தி அக்கா வீட்டு முற்றமே எங்கள் விளையாட்டுத் திடலாக அமைந்தது. அவரிடம் தலைமைத்துவம் இருப்பதை அப்போதே கவனித்திருக்கின்றேன்.


எனது தந்தையார் குருநாதபிள்ளை காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி அதிபராகவும், காங்கேசந்துறை உள்ளுராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். அக்காவிற்குச் சிறியதந்தையான எனது தந்தையே பாடம் சொல்லிக் கொடுப்பதில் தனக்கு வழிகாட்டியாக இருந்ததாக அக்கா அடிக்கடி சொல்வார். தனது நூலான ‘மாலை சூட்டும் மணநாள்’ என்ற நூலை அவருக்கே சமர்ப்பணம் செய்து அதில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எங்கேயாவது வெளியே போவதானால் வீட்டிலே விடமாட்டார்களாம், அப்போதெல்லாம் எனது தந்தைதான் அனுமதி பெற்றுத் தருவதாகவும் சொல்வார். உறவு என்பதைவிட, வழிகாட்டி அறிவூட்டிய ஆசிரியர் என்பதற்கான நன்றிக்கடனே அவர் செய்த இந்தச் சமர்பணம்.


எனது பெரியப்பாவான மு.அ. சின்னத்தம்பியின் மூத்த புதல்விதான் இராசாத்தி அக்கா. அடுத்துப் பிறந்த நான்கு பெண் குழந்தைகளுக்கு ராணி, அரசி, தேவி, ரதி என்று பெயர் சூட்டினார்கள். கடைசி ஆண் குழந்தைக்கு நவநீதன் என்று பெயர் சூட்டினர். அருகே இருந்த குலதெய்வமான குருநாதசுவாமி கோயில் வீதியில் பக்தர்கள் தங்குவதற்காக ஒரு மடம் கட்டி அக்காவின் நட்சத்திரமான ரோகிணி என்ற பெயரிலே ‘ரோகிணிமடம்’ என்ற பெயரைச் சூட்டி, திருவிழாக் காலங்களில் வருடாவருடம் அந்த மடத்தில் அன்னதானமும் நடைபெற்றதை இன்றும் மறக்க முடியாது. இன்று இருந்த இடமே தெரியாமல் எல்லாமே தரைமட்டமாக்கப் பட்டு விட்டது. மூலஸ்தானத்திற்குப் பின்னால் இருந்த அரசமரம் மட்டும் அந்த இடத்தில் நிமிர்ந்து நிற்கின்றது.


விகடன் ஆசிரியர் உண்மைச் சம்பவம் ஒன்றை விகடன் தீபாவளி மலருக்காக எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தார். அப்போது அக்காவின் பாத்திரம்தான் கண்ணுக்குள் வந்தது. 1983 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தில் அகதிகளாக நாங்கள் நங்கூரி என்ற கப்பலில் காங்கேசந்துறை நோக்கித் திரும்பி வந்தபோது, மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆண் கடலில் குதிக்க முயன்றார். அக்காவை உடனே அழைத்து வந்து அவருக்கு ஆறுதல் சொல்ல வைத்தேன். அக்கா சொன்னதை அவர்கள் கேட்டார்கள். அக்காவின் ஆளுமையை அங்கே அவதானித்தேன். அந்த சம்பவத்தின் கருவில் பிறந்ததுதான் ‘நங்கூரி’ என்ற ஈழத்தமிழரின் அவலத்தை எடுத்துச் சொன்ன கதை.


இராசாத்தி அக்காவின் கணவர் பெரியத்தான் இராமலிங்கம் அவர்கள் மிகவும் அன்பானவர். சிறுவனாக இருந்தபோது. மழையில் நனைந்ததால் எனக்குக் காய்ச்சல் வந்து படுத்திருந்தேன். அத்தான் காலையில் மெயில் வண்டியில் கடமையில் வந்திருந்தார். மாலை மெயில் வண்டியில் திரும்பிச் செல்ல வேண்டும். அப்படியிருந்தும் வாடகை வண்டி ஒன்றைப் பிடித்து மூளாய் வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றதை என்னால் என்றும் மறக்க முடியாது. அதேபோல, அக்காவின் கடைசி மகள் ‘ரோசா’ என்னாலே மறக்க முடியாத முகம்.

1983 ஆம் ஆண்டு கொழும்பிலே அடிபட்டு சொந்த மண்ணிலே அனாதையாக வந்த போது நடேஸ்வராக் கல்லூரியில் பதிவு செய்வதற்காக நின்ற போது என்னிடம் ஓடிவந்து முதலில் ஆறுதல் சொன்னது ரோசாதான். தன்னார்வத் தொண்டர்களாக அப்போது சசிகலாவும், ரோசாவும் இனக்கலவரத்தில் அடிபட்டு வந்தவர்களுக்கு அங்கே நின்று உதவிக் கொண்டிருந்தார்கள். அகதிகள் பலரின் வாக்கு  மூலத்தைக் கேட்டதாலோ என்னவோ, ரோசா இயக்கத்திற்குச் சென்றதற்கு அதுவும் ஒரு காரணமாகும். அவர் மறைந்த போது ‘மறந்தாலும் நெஞ்சம் மறக்காதமா’ என்று 31 வது நாள் நினைவு அஞ்சலிக்காக அவரைப்பற்றிய ஒரு கதையை எழுதித் தமிழகத்தில் இருந்து வெளிவரும் குமுதத்திற்கு அனுப்பியிருந்தேன். அதனால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்களுக்கு குகபாலிகா என்ற மாவீரரான மேஜர் துளசியின் தியாகத்தை எடுத்துச் சொன்ன கதையாகியது. எனது உள்ளத்தில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது ரோசாவின் மறைவுதான்.


அக்கா தான் படித்த கல்லூரியான நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் (கனடா) மலருக்காக நடேஸ்வராக் கல்லூரியின் ஆரம்ப காலம் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தந்திருக்கின்றார். அவரது ஆக்கத்தை அவர் நினைவாக எப்படியும் ஆவணப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். அவரது இன்னுமொரு விருப்பம் பிறந்த மண்ணான மாவிட்டபுரம் பற்றிய சரித்திரத்தை ஆவணப்படுத்த வேண்டும் என்பது. மகாஜனாக்கல்லூரியில் எனது தமிழ் ஆசிரியரான தமிழ் ஒளி த. சண்முகசுந்தரத்திடம் இருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு சில அத்தியாயங்களை எழுதிவிட்டு அதுபற்றி அக்காவிடம் ஆலோசனை கேட்டேன். எனக்குத் தெரிந்திராத, அவரது தாயார் சொன்னதாகப் பல விடையங்களை அவர் அப்போது என்னிடம் குறிப்பிட்டிருந்தார். அவரது விருப்பப்படி அந்த நாவலையும் பூர்த்தி செய்ய வேண்டும். அக்கா எங்களை விட்டுப் பிரிந்தாலும் அவரது ஆக்கங்கள் தமிழ் மொழி இருக்கும்வரை மறையாது என்பதைக் கூறி அவரது மறைவினால் துயருறும் குடுப்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதல் கூறி, அவரது ஆத்மா சாந்தியடையக் குருநாதரை வேண்டுகிறேன்.


பெயர்: வள்ளிநாயகி இராமலிங்கம் - 1933-2016

புனைப்பெயர்: குறமகள்

இடம்: மாவிட்டபுரம், காங்கேசந்துறை

தகப்பன்: மு.அ. சின்னத்தம்பி
தாய்: செல்லமுத்து
கணவர்: வே. இராமலிங்கம்

பிள்ளைகள்:
சசிகலா
கலைவாணி
குருமோகன்
துளசிராம்
குகபாலிகா
கனடாவிற்கு வந்தது: 1991

ஆக்கங்கள்:
ஊள்ளக்கமலமடி
மாலை சூட்டும் மணநாள்
குதிர்காலக் குலவல்கள்
இராமபாணம்
யாழ்ப்பாண  சமூகத்தில் பெண்கள் கல்வி
அகநிதன்-மிதுனம்