Sunday, February 28, 2016

Scott Kelly - Uthayan - Kuru's Page - 2
வானம் வசப்படும் - 2

எங்கள் முன்னோர்களின் வானியல் அறிவின்படி கோள்களைக் கணித்து நவக்கிரகங்கள் என்று சொன்னார்கள். பஞ்சாங்கம் என்று ஒன்று ஆவணமாக எங்களிடம் இருந்தபடியால் அது இன்றும் எங்கள் பாவனையில் இருந்து வருகின்றது. நவம் என்றால் ஒன்பது என்பதால் ஒன்பது கிரகங்கள் என்றார்கள். எங்களிடம் ஆவணமாக அது இருந்தாலும், அது தவறு கிரகங்கள் எட்டுத்தான் என்று இடையிலே நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு ஆராய்ந்து புரளி ஒன்றைக் கிளப்பிவிட்டார்கள். ஆனாலும் நம்மவர்கள் ஏமாறவில்லை. சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பதால், கோயிலில் இருந்த நவக்கிரகங்களில் எந்தக் கிரகத்தையும் அகற்றாமல் கிரகங்கள் ஒன்பதுதான் என்று பிடிவாதமாக இருந்தார்கள். காத்திருந்ததற்கு இப்போ பலன் கிடைத்திருக்கின்றது. தமிழன் அன்று சொன்னது சரிதான் என்று ஒருசாரார் சமீபத்தில் ஏற்றுக் கொண்டிருக் கின்றார்கள். 1846 ஆம் ஆண்டு நெப்ரியூன் கண்டு பிடிக்கப்பட்டபின் சூரிய குடும்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையான கிரகம் இது என்பதால் இதை ஒன்பதாவது கிரகம் என்று சொல்கிறார்கள். 1930 ஆம் ஆண்டு புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்டாலும் அது கிரகமல்ல என்ற காரணத்திற்காக 2006 ஆம் ஆண்டு பட்டியலில் இருந்து அதிகாரபூர்வமாக அதை நீக்கிவிட்டார்கள்.


கோயிலுக்குச் சென்று வழிபடும் எல்லோரும் நவக்கிரகங்களை ஒரேயடியாகப் பார்த்திருப்பீர்கள். ஆனால் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கிரகங்களை ஒரேயடியாக வானத்தில் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று இப்போது கிடைத்திருக்கின்றது. அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வானம் தெளிவாக இருந்தால் அவற்றைப் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை பார்க்க முடியும் என்று அறிவித்திருக்கின்றார்கள். இதே போன்றதொரு நிகழ்வு பத்து வருடங்களுக்கு முன் 2005 ஆம் ஆண்டும் நடந்தது. ஞாபகம் இருக்கட்டும், வானம் தெளிவாக இருந்தால்தான் பார்க்க முடியும்!


வானத்து நட்சத்திரங்களைப் பார்த்து ‘வெள்ளி பூப்பூவாய்ப் பூத்திருக்கிறது’ என்று கற்பனை செய்திருப்பார்கள். மேகம் மறைக்காத வானத்தை இரவில் பார்க்கும்போது வானத் தடாகத்தில் பூக்கள் மலர்ந்திருக்கிறதோ என்று பரவசமாய் அதிசயப்பட்ட நாட்களும் உண்டு. புராண, இதிகாச காலத்தில் வானத்தில் இருந்து தேவர்களால் பூக்கள் தூவப்பட்டது என்றெல்லாம் படித்திருப்பீர்கள். ஆனால் உண்மையாகவே வானத்தில் பூவொன்று பூத்திருக்கிறது என்று தெரிந்த போது அந்த மலரைப் பற்றி எனது தேடல் ஆரம்பமானது. இதற்காக நாங்கள் முதலில் ஸ்கொட் கெலி (Scott Kelly - ஐவெநசயெவழையெட ளுpயஉந ளுவயவழைn (ISS)  ) என்ற அமெரிக்க விண்வெளிப் பயணருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே’ என்று தனது மகிழ்ச்சியை எங்களோடு பகிர்ந்து கொள்ள முன்வந்தார். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் செடி ஒன்றை வளர்த்து வந்தார்கள். அந்தச் செடிதான் (ணுinnயை) இப்போ அரோஞ்சு நிறத்தில் அழகாகப் பூத்திருக்கின்றது. வானத்தில் பூத்த முதற் பூஞ்செடி என்பதால் அதைப் படம் பிடித்துப் போட்டிருக்கின்றார். அதிக நாள் விண்வெளியில் இருந்த அமெரிக்கர் என்ற சாதனையையும் ஸ்கொட் கெலி நிலைநாட்டி இருக்கின்றார். இவர்தான் சமீபத்தில் சேது அணைத்திட்டத்தையும் வானத்தில் இருந்து படம் பிடித்துப் போட்டிருந்தார். இதிகாசத்தில் வரும் 18 மைல் நீளமான இராமர் அணை கடல் நீருக்கு அடியில் அப்படியே தெரிகிறது என்று நண்பர் ஒருவர் அதை எனக்கு அனுப்பியிருந்தார். சுமார் 9 அடி உயரத்திற்கு கடல் நீரால் அந்த அணை இப்போது மூடப்பட்டிருந்தாலும் தெளிவாகத் தெரிகின்றது. அரசியல் காரணங்களால் சேது அணைத் திட்டத்தை உடனடியாகச் செயற்படுத்த முடியாமற் போய் விட்டது. எமது காலத்தில் ஆழிப்பேரலை என்று ஒன்று வந்து அழிவுகளை ஏற்படுத்தியிராவிட்டால் கடல் கொண்ட தமிழ்சங்கத்தையும், அப்படி ஒன்று இருந்தது என்பதையும் எம்மால் நம்பியிருக்க முடியாது.


தமிழ் மரபுத் திங்கள் விழா ரொறன்ரோ கல்விச் சபையால் சென்ற வாரம் முதற்தடவையாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திரு. பார்த்தி கந்தவேள் அவர்களுக்கும் அவரது குழவினருக்கும் எனது பாராட்டுக்கள். ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த போது அதிக காலம் சேவை செய்த ஆசிரியர்களைத் தெரிந்தெடுத்துக் கௌரவிக்கும்படி அவர்களிடம் கேட்டிருந்தேன். ஏதோ காரணத்தால் அது நடைமுறைப்படுத்தப் படவில்லை. இம்முறை 20 வருடகாலம் ஆசிரியராக கல்விச் சபையில் பணியாற்றியவர்களைத் தெரிந்தெடுத்து மேடையில் பாராட்டியிருந்தார்கள். அதேபோல தமிழ் மொழியை முதன் முதலாக கல்விச் சபைகளில் ஒரு பாடமாகக் கொண்டு வருவதில் முன்னின்று உழைத்த அமரர் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களை மறந்திடாது அவரது பிள்ளைகளை அழைத்து மேடையில் நினைவு கூர்ந்ததும் பாராட்டப்பட வேண்டியதே! தொடரட்டும் உங்கள் ஆக்க பூர்வமான முயற்சி என்று பாராட்டி, தற்போது நீதன் சண்முகராஜா அவர்களும் கல்விச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றார். தமிழ் ஆசிரியர் சங்கக் காப்பாளர் என்ற முறையில் அவருக்கும் எமது சங்கத்தின் வாழ்த்துக்கள்.


 ‘வானம் வசப்படும்’ என்ற தலைப்பை சான்பிரான்ஸிஸ்கோவில் நான் எடுத்த ஒரு புகைப்படத்திற்குக் கொடுத்திருந்தேன். இந்தப் புகைப்படத்தை வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் 2015 ஆம் ஆண்டு புகைப்படப் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். FeTNA 2015 ஆம் ஆண்டு ஆல்பத்தில் இடம் பெற்ற அந்தப் புகைப்படத்தை ரசனையிருந்தால், நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

No comments:

Post a Comment