Sunday, February 28, 2016

White Stork-Uthayan - Kuru's Page - 3

                                                    நாரை விடு தூது - 3


யாழ் குடாநாட்டுப் பகுதியில் உள்ள நீர் ஏரிகளில் வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. பல ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து பறந்து வரும் இந்தப் பறவைகளைக் காலை 6 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை அங்கே காணமுடிகிறதாம். இப்படி வரும் பறவைகளை ‘வலசை போதல்’ என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடுவர். குறிப்பாக யாழ் பண்ணைக் கடற்கரைப் பகுதி, வடமராட்சியில் வல்வெட்டித்துறை, தொண்டமானாறு பகுதிகளில் உள்ள ஏரிகள், வயல் வெளிகளிலும், மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளிலும் இந்தப் பறவைகளைக் காணமுடிகின்றது. இந்தப் பறவைகளைப் பார்ப்பதற்காகத் தெற்கேயிருந்து பல சுற்றுலாப் பயணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுண்டிக்குளம் பகுதியில் உள்ள
Nature Park Holiday Resort
என்ற இடத்திற்கு வருகின்றார்கள். குடாநாட்டிற்கு வரும் சில பறவைகளின் (White  Stork) அலகைப் பார்த்தால்,

நாராய் நாராய் செங்கால் நாராய் 
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன 
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்! 

என்ற சத்திமுத்தப் புலவர் தனது மனைவிக்குத் தூது விட்ட பழைய பாடல் ஒன்று நினைவிற்கு வருகின்றது. அதே சமயம் சொந்த மண்ணை விட்டுப் பிரிந்தாலும், அந்தப் பனை மரங்களும், பனங்கிழங்கும் இன்றும் எங்கள் நினைவில் இருகின்றது. ஈழத்தமிழ் மக்களோடு ஒன்றி உறவாடிய அந்தப் பனை மரங்கள் பற்றி ஞானம் பாலச்சந்திரன் அவர்கள் தால விலாசம் என்ற நூலில் தெளிவாகத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றார். நான்கு நூற்றாண்டுகளாக ஒரு மரத்தைப் பற்றிய இத்தனை எண்ணிக்கையான இலக்கியங்கள் வேறெந்த மொழியிலோ அல்லது வேறெந்த தேசத்திலோ எழுந்திருக்க வாய்ப்பில்லை என்று ஞானம் இதழ் பிரதம ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்கள் தனது அறிமுக உரையில் குறிப்பிட்டிருக்கின்றார். உண்மைதான் ஒரு போராளிபோலத் தன்னைப் பலி; கொடுத்து எத்தனையோ குடும்பங்களையும், குடிமனைகளையும் செல்லடியில் இருந்து காப்பாற்றிய மரங்கள் அல்லவா இந்தப் பனை மரங்கள். தாலம், புற்பதி, போந்தை போன்ற பெயர்களும் இந்தப் பனைகளுக்குண்டு.


‘ஓதல், பகை, தூது இவை பிரிவே’ என்று தொல்காப்பிய நூற்பா சொல்கிறது. மேகத்தைத் தூது விட்ட காளிதாசன் போன்றவர்களும் இருக்கின்றார்கள். அரசர் காலத்தில் அன்னம், கிளி, புறா போன்ற பறவைகளைத் தூது விடுவார்களாம். பிசிராந்தையார் என்ற புலவர் அன்னச்சேவலைத் தூதுவிட்டிருக்கின்றார். அன்னத்தைவிட புறா விரைவாகச் செய்தியைக் கொண்டு சேர்த்து விடுமாம். எதிரி நாட்டைக் கடக்கும் போது அம்பெய்து வீழ்த்தப்பட்ட புறாக்களும் உண்டு. நவீன தொழில் நுட்ப வசதிகள் மூலம் செய்திப் பரிமாற்றம் இப்போது பல வழிகளில் விரைவாகவே நடைபெறுகின்றது. ஆனாலும் பழைய முறை எப்படிப் பயன்படுத்தப்பட்டது என்று சென்ற மாதம் இலங்கையில் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி மூலம் செய்து காட்டினார்கள். அனுராதபுரத்தில் இருந்து பத்து புறாக்கள் மூலம் அனுப்பப்பட்ட செய்திகள் வத்தளை ஹெந்தலை சந்தியை இரண்டேகால் மணித்தியாலத்தில் சென்றடைந்ததாம். இச்சம்பவம் கனடாபோஸ்ட் புறா வளர்த்தால் அதன் விரைவுச் சேவை நன்றாக இருக்குமே என்று என்னை நினைத்துப் பார்க்க வைத்தது.

ரிவியை தொலைக்காட்சியின் சுப்பஸ்ரார் யூனியர் எஸ் 4 இறுதிச் சுற்று நிகழ்ச்சி சென்ற வாரம் மிகவும் சிறப்பாக நடந்தது. இந்தப் போட்டியில் பங்குபற்றியவர்களில் சோபியா ராகுல் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். தாமிரா ரஜிவரன் இரண்டாவது இடத்தையும் கருன் சபேசன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தியவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் எனது பாராட்டுக்கள்.

விஜே தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இப்பொழுது ராஜகணபதி, ஆனந் அரவிந், பரிதா, சியாட், ஆகிய நால்வரும் இடம் பெற்றிருக்கின்றனர். அர்ஜ+ன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். இந்த நால்வரில் பரிதாவும் ராஜகணபதியும் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கின்றார்கள். ஆனந் அரவிந், சியாட் ஆகிய இருவரில் இன்னும் ஒருவர் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாக இருக்கின்றார். இவர்களுடன் ‘வைல்ட்காட்டில்’ வருபவர்களும் கலந்து கொண்டு போட்டியிடுவார்கள்.

நடிப்பு என்பது எல்லோராலும் ஆக்ககூடிய கலை அல்ல, அது இயற்கையாக வரவேண்டும். திறமை இருந்தால் அதைக் கட்டாயம் வெளிக் கொண்டு வரவேண்டும். தமிழ் ஆரம் காணொளியை நெறிப்படுத்தி வெளியிட்ட போது, சிறுவர் சிறுமியரின் நடிப்பைப் பார்த்துப் பலதடவை நான் வியந்திருக்கின்றேன். பலருக்கு அது தலைமைத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்ததால், அதில் நடித்தவர்கள் எல்லாம் இன்று பெரியவர்களாகச் சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். இம்முறை சிறந்த சிறுவர் நடிப்புக்கான ஆக்கடமிப் பரிசு றூம் (Room) என்ற ஆங்கிலப் படத்தில் மகனாக நடித்த கனடா வான்கூவரைச் சேர்ந்த ஒன்பது வயதான ஜேக்கப் றிம்பிளே (Jacob Tremblay) என்ற சிறுவனுக்குக் கிடைத்திருக்கின்றது. இந்தப் படத்தை லென்னி ஆப்பிரஹாம்ஸன் (Lenny) நெறிப்படுத்தியுள்ளார். பிற மொழிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழில் சிறுவர்களுக்கான படங்கள் வெளிவருவது மிகக் குறைவு என்றே நினைக்கின்றேன்.

No comments:

Post a Comment