Sunday, February 28, 2016

Siobhan Gnanakulendran - Kuru's Page - 4

                       விண்வெளிக்குத் தமிழ்த் தூது - 4

பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத் தமிழ் மாணவியான சியோபன் ஞானகுலேந்திரன் என்பவருடன் கல்வி கற்கும் இன்னும் ஐவரின் நுண்ணியல் உயிர்களைப் பற்றிய ஆராய்ச்சி முயற்சிகளுக்கான பொருட்கள் விண்வெளி நிலையத்திற்கு மேலதிக ஆராய்ச்சிக்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தன.
Siobhan Gnanakulendran (from team Daffodils, who’s experiment is going to examine slime mould’s reaction to zero gravity
சென்ற வருடம் பி.பி.சி பிறேக்பாஸ்ட் நிகழ்ச்சியில் சியோபன் ஞானகுலேந்திரன் கலந்து கொண்ட போது இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. லண்டனில் கல்வி கற்கும் இந்த ஈழத்து மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி விசேடமாகக் கற்று அதில் திறமை பெற்றிருக்கிறார். விண்வெளிச் சரித்திரத்தில் இத்தகைய விண்வெளி ஆராய்ச்சிக்கு ஈழத்தமிழரின் சார்பில் உதவிய கல்லூரி மாணவிகளில் முதல் தமிழராகவும், முதல் தமிழ் பெண்மணியாகவும் இவர் இருப்பார்.


இலங்கைப் பாடசாலைகள் கால்பந்தாட்டச் சங்கம் நடத்திய 2015 ஆம் ஆண்டுக்கான 15 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கால்பந்தாட்ட போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி அணியினர் அதிசிறந்த ஆற்றலை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டனர். எஸ். செந்தூரனால் பயிற்றப்பட்ட இந்த அணிக்கு கௌரி சுரேந்திரன் தலைமை தாங்கினார். அகில இலங்கைப் பாடசாலைகள் கால்பந்தாட்டச் சங்க, பெண்கள் கால்பந்தாட்ட வரலாற்றில் வடபகுதியில் இருந்து முதலில் சாம்பியனான சாதனையை மகாஜனக்கல்லூரி பெற்றுக் கொண்டது. 70பது களில் கால்பந்தாட்டத்தில் மகாஜனாவின் ஆண்கள் அணியினர் இந்தச் சாதனையை தொடர்ந்து நிலைநாட்டியிருந்தனர். பல வருடங்கள் கழித்துப் பெண்கள் அணி மூலம் அந்த சாதனையை மீண்டும் மகாஜனா நிலைநாட்டியிருப்பது பெருமைக்குரியது.


இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் பங்கு பற்றும் 13வது ஆசிய கிண்ண துடுப்பாட்டத்தொடர் பங்களாதேஷில் நடைபெறுகின்றது. இந்தியா பங்களாதேஷ் அணிகள் பங்கு பற்றிய முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.


காதலர் தினத்திலன்று பொதுவாகக் காதலர்கள் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வார்கள். ஆனால் இலங்கையில்  Scottishorbit  என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி பெப்ரவரி 14 ஆம் திகதி மாத்திரம் இலங்கையில் உள்ள மருந்தகங்களில் கருத்தடை மாத்திரைகள், அதற்கான உபகரணங்கள் இரு மடங்காக விற்பனை ஆகியிருக்கின்றதாம். அதுமட்டுமல்ல தொடர்ந்து வந்த சில நாட்களாகக் கருக்கலைப்பு நிலையங்களுக்கு சென்ற பெண்களின் தொகையும் அதிகமாக இருந்ததாகத் தெரிகின்றது. கொழும்பு, நீர்கொழும்பு, கம்பஹா, மாத்தளை, கண்டி, களுத்துறை ஆகிய இடங்களிலேயே அதிக கருக்கலைப்புக்குரிய சோதனைகள் மேற்கொள்ளப்படதாகத் தெரிகின்றது. இப்பகுதிகளில் உள்ள விடுதிகளில் பெப்ரவரி 14 ஆம் திகதி காதல் ஜோடிகளுக்காகவே அதிக அறைகள் வாடகைக்குக் கொடுக்கப்பட்டதாகவும் ஆய்வு தெரிவிக்கின்றது. பேஸ்புக், சமூகவலைத்தளங்கள் போன்றவற்றை அதிகமாகப் பாவிக்கும் சில மாணவ, மாணவிகளும் இதில் அடங்குவர்.

இலங்கையில் 22,254 தமிழ் பௌத்தர்கள் இருப்பதாகவும், இவர்களில் வடமாகாணத்தில் 470 பேர் இருப்பதாகவும், தமிழ் பிக்குகள் பதினொரு பேர் இருப்பதாகவும், பௌத்தசாசன அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழ் பௌத்தர்கள் முன்பும் கந்தரோடையில் இருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் ஏற்கனவே அங்கு இருப்பதை மறுப்பதற்கில்லை.


புங்கிடுதீவுப் பகுதியில் நடந்த கல்லூரி மாணவியான வித்தியாவின் பாலியல் படுகொலை சம்பந்தமாக நீதி கேட்டுப் போராடியவர்கள் இன்னும் ஓய்ந்து போகவில்லை, அதற்கிடையில் வவுனியா பகுதியில் பட்டப் பகலில் இன்னுமொரு மாணவியான ஹரிஷ்ணவியின் பாலியல் படுகொலை அம்பலத்திற்கு வந்திருக்கின்றது. இப்பகுதிகளில் போதை மருந்துப் பாவனையும் அதிகரித்திருக்கின்றது என்ற செய்தியும் அதிர்ச்சியைத் தருகின்றது. ஒரு சமூகத்தை அழிக்க இதுவே போதுமானது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற நிலை எவ்வளவு காலத்திற்கு நீடிக்குமோ தெரியவில்லை. யுத்தம் நடந்து முடிந்த நாட்டில் இப்படித்தான் இருக்கும் என்று என்னதான் சமாதானம் சொன்னாலும், ஒரு காலத்தில் இந்தப் பகுதிகளில் ஒரு பெண் எந்தவித பயமும் இல்லாமல் இரவில்கூட நடமாட முடிந்ததை எங்களால் மறக்கவும் முடியவில்லை. நீதி கேட்டு, சென்ற செவ்வாய்க் கிழமை வடபகுதி ழுழுவதும் ஹர்த்தால், கடையடைப்பு இடம் பெற்றது, செவிடன் காதில் ஊதிய சங்குபோல!

சுப்பர் சிங்கரில் வைல்ட்காட் போட்டியில் பங்கு பற்ற ஒன்பது பேர் வந்திருக்கிறார்கள். ஏற்கனவே பரிதா, ராஜகணபதி, சியாட் ஆகியோர் நடுவர்களால் தெரிவாகியிருக்கின்றனர். அரவிந் முகுந்தன், லட்சுமி, பிரியா, லதா கிருஷ்ணன், சௌமியா, ஆனந் அரவிந், அர்ஜ+ன், எர்வின் விக்ரோறியா, நிருஜன் ஆகியோர் அவர்களுடன் போட்டியிடுகின்றார்கள். ஏற்கனவே தெரிவான மூவருடன் இவர்களில் இருந்து இன்னும் இருவரோ அல்லது மூவரோ வாக்குகளின் அடிப்படையில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகலாம். இம்முறை யார் யாரெல்லாம் தெரிவாகிறார்களோ தெரியவில்லை. பரிதாவிற்குப் போட்டியாக லதா கிருஷ்ணனை கொண்டு வர முயற்சிகள் நடைபெறலாம். சென்ற வருடம் சுப்பர் சிங்கர் யூனியர் போட்டியில் கனடியரான ஜெசிகா யூட் வைல்ட் காட்டில் தெரிவாகி இரண்டாவது இடத்தைப் பெற்றது ஞாபகமிருக்கலாம்.

No comments:

Post a Comment