Wednesday, March 16, 2016

2013 TX 68 - Kuru's Page - 6


கண்டதும்! கேட்டதும்!!
குரு அரவிந்தன்
‘கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
தீரவிசாரித்து அறிவதே மெய்!’
எனது கண்ணில் பட்டோ அல்லது எனது காதில் புகுந்தோ ஏதாவது விதத்தில் அவ்வப்போது மனதில் பதிந்திருந்தால் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். இது தேடலுக்கான தகவல் மட்டுமே!
..........................................................................................................................

கண்ணாமூச்சி விளையாடும் விண்கல் - 6

சென்றவாரம் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவோடு கவிநாயகர் வி. கந்தவனம் போன்ற சில தமிழ் அறிஞர்களினால் திருக்குறள் விழா ரொறன்ரோ நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல அறிஞர்கள் இந்த திருக்குறள் விழாவில் உரையாற்றினார்கள். தமிழைத், தமிழர்களை உலகறியச் செய்த நூல்களில் திருக்குறள் முதன்மையானது. அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களைக் கொண்ட, நூலான திருக்குறள் இதுவரை சுமார் 80 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. எல்லாமாக 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்களைக் கொண்ட திருக்குறளில் மொத்தம் 12000 சொற்கள் அடங்கி இருக்கின்றன. நாங்கள் கல்வி கற்ற காலத்தில் அறம், பொருள் ஆகிய இரண்டு அதிகாரங்களை மட்டுமே பாடசாலைகளில் சொல்லித் தந்தார்கள். மூன்றாவது அதிகாரமான ‘இன்பம்’ என்ற அதிகாரம் எங்களுக்குத் தவிர்க்கப்பட்டிருந்தது. பெரியவர்களானதும் அதில் என்ன இருக்கிறது என்று நாங்களாகவே தேடிப்படிக்க வேண்டி வந்தது. சூழ்நிலை மாறியதால் புலம் பெயர்ந்த மண்ணில் உள்ள மாணவர்களுக்கு இதெல்லாம் ஒரு சாதாரண விடையமாகவே இருக்கின்றது. இணையத் தளங்கள் மூலம் நிறையவே பார்க்கக்கூடிய சுதந்திரம் அவர்களுக்கு இருக்கின்றது. இதைவிட பாலியல் கல்வியும் இங்குள்ள மாணவர்களுக்கு அறிமுகமாகி இருக்கின்றது. எனவே புலம்பெயர்ந்த மண்ணில் உள்ள மாணவர்களுக்குத் திருக்குறளின் இந்த அதிகாரத்தைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ரொறன்ரோவில் நடந்த இந்த திருவள்ளுவர் விழாவிற்கு வந்திருந்தவர்களின் தொகை மிகக் குறைவாகவே காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இப்படியான இலக்கிய விழாக்களை அடுத்த தலைமுறை ஏன் தவிர்க்கிறார்கள் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதொன்று. அவர்களுக்கு ஏற்றமாதிரி நிகழ்ச்சிகள் அமையாததும் ஒரு காரணம். இங்கே நடக்கும் சில நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, இந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஒரு சிலர் அடுத்த தலைமுறையினரையும் சேர்த்து தடம்மாறி எங்கோ அழைத்துச் செல்வது போலத் தெரிகின்றது.


விஜே தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இறுதிச் சுற்றுக்காக ஐவரைத் தெரிவு செய்யும் நிகழ்ச்சியில் நடுவர்களால் ஏற்கனவே பரிதா, ராஜகணபதி, சியாட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். வைல்ட்காட் போட்டி மூலம் ஒன்பது பேர் போட்டி போட்டு அதில் ஆறு பேர் போட்டிக்குத் தகுதியாகி இருந்தனர். இவர்களில் வாக்கெடுப்பின் மூலம் ஆனந் அரவிந் மட்டுமே தெரிவாகி இருந்தார். மிகுதியான ஒரு வெற்றிடத்தை நிரப்புவதற்கு இந்த வாரம் போட்டி நடைபெற்றது. அதில் இறுதியாகப் பிரியாவும் லட்சுமியும் போட்டி போட்டதில் லட்சுமி தெரிவாகி இருந்தார். கொஞ்சம் மிருகம், கொஞ்சம் கடவுள், சந்திரலேகா என்ற பாடலைப் பாடிய லட்சுமி, பாடகி பிரியங்கா பாடுவது போலவே சிரித்த, மலர்ந்த முகத்தோடு பாடினார். இறுதிச் சுற்றுக்காக இப்போது பரிதா, ராஜகணபதி, சியாட், ஆனந் அரவிந்த், லட்சுமி ஆகிய ஐவரும் தெரிவாகி இருக்கிறார்கள். திறமையின் அடிப்படையில் இவர்களில் ஒருவர் சுப்பர் சிங்கராகத் தெரிவாக இருக்கின்றார். ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகள் என்ன என்பதை நிருஜனாவது புரிந்து கொண்டிருந்தால், திறமை இருக்கிறதோ இல்லையோ, வாக்குகளின் அடிப்படையில் தெரிவாகி இந்த ஐவரில் ஒருவராக இருந்திருப்பார் என்று உணர்வாளர் ஒருவர் ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளத் தவறிவிட்டார்’ என்பதையும் சொல்லிக் காட்டினார். பல வருடங்களைக் கடந்து காலம் சென்றாலும் நீறு பூத்த நெருப்பாய் தமிழ் மக்களின் உணர்வுகள் அழியாமலே இருக்கின்றன என்பதையே இது காட்டி நிற்கின்றது.


சுமார் 100 அடி அகலம் கொண்ட ஒரு விண்கல் பூமியை நோக்கி வருவதாக சென்றவாரம் வந்த செய்திகள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. என்ன நடக்குமோ என்ற பயத்தோடு மக்கள் இருந்தாலும், எதிர் பார்த்ததைவிடக் குறைந்த தூரத்தில், எதிர்பார்த்த நேரத்தைவிட முன்பாகவே இந்த விண்கல் சென்ற திங்கட்கிழமை காலை பூமியைக் கடந்து சென்று விட்டது. இப்படி ஒரு பாரிய விண்கல் பூமியைக் கடந்து சென்றதுகூடப் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். பூமியின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழையும் விண்வெளிக் கற்களை கண்காணித்துக் கொண்டே இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 2013 ரிஎக்ஸ் 68 என்ற பெயரை இந்த விண் கல்லுக்குச் சூட்டியிருக்கின்றது. அக்டோபர் மாதம் 6 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த விண்கல் அடையாளம் காணப்பட்டது. மூன்று மில்லியன் மைல்களுக்கு அப்பால் இந்த விண்கல் கடந்து செல்லும் என்று எதிர்பார்த்தாலும் அதைவிடக் குறைவாக 2.5 மில்லியன் மைல்கள் தூரத்தில்தான் கடந்திருக்கின்றது. 34, 279 மைல் வேகத்தில் இந்த விண்கல் பூமியைக் கடந்து சென்றது மட்டுமல்ல, மறுமுறை பூமியைக் கடக்கும் போது சிலசமயம் இன்னும் அருகே வருவதற்குச் சந்தர்ப்பமும் உண்டு. 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஸ்யாவின் வான்வெளிக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்திய  விண்கல்லை விட இது இரண்டு மடங்கு பெரியதாகும். கண்ணாமூச்சி விளையாடும் இது போன்ற கற்கள் புவியீர்ப்புக்குள் அகப்பட்டால் புவியின் கதி என்னவாகும்?


No comments:

Post a Comment