Sunday, March 27, 2016

முகநக நட்பது - 8

கண்டதும்! கேட்டதும்!!

முகநக நட்பது நடபன்று – 8

சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சென்ற வாரம் போட்டி முடிவுகளை அறிவித்திருந்தார்கள். பரிதா, ராஜகணபதி, சியாத், லக்ஷ்மி, ஆனந் அரவிந்த்; ஆகியோர் போட்டியில் பங்கு பற்றியிருந்தனர். இவர்களில் ஆனந் அரவிந்த் முதலாவது இடத்தையும், பரிதா இரண்டாவது இடத்தையும், ராஜகணபதி மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர். இது புதிய பாடகர்களுக்கான தேர்வு என்று சொன்னாலும், முதலாவதாக வந்த ஆனந் அரவிந் ஏற்கனவே ஆரோகணம், நீர்ப்பறவை போன்ற படங்களுக்கு மட்டுமல்ல, வேறு சில படங்களுக்காகவும் (2012) பாடியிருந்த பின்னணிப் பாடகராவார். ஜேர்மனியில் இருந்து சென்று போட்டியில் கலந்து கொண்ட இலங்கையரான நிருஜனைப் பற்றி ஏற்கனவே இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். சிறந்ததொரு பாடகராக இருந்தும், இலட்சக் கணக்கான ஈழத்தமிழரின் வாக்குகளைத் தனது அலட்சியத்தால் இழந்தவர் இந்த நிருஜன். இசை ஆர்வம் கொண்ட ஏமாற்றப்பட்ட ஈழத்தமிழரின் எதிர்பார்ப்பைப் பிரதிபலிப்பது போல, சாம் என்ற அன்பர் ஒருவர் நிருஜனின் முகநூலில் இப்படி ஒரு பதிவை ஆங்கிலத்தில் பதிந்திருந்தார்.
‘ I feel you haven't represented Eelam Tamils in anyway because you haven't selected any songs similar to Jessica to show our Eelam Tamils Pain to India. Jessica earned so much sympathetic with world Tamils but you have missed that opportunity. I feel you brought up in Germany without knowing much about the Eelam Tamils Painful stories. Any how you have gained much experience from India. At least now on wards you can select Eelam related songs to sing in musical programs. Similar to "En innamey En Saname" song, or Another song is Oru Theivam Thantha Poovey"  Have a nice Journey.’  
என்று அவர் எழுதியிருந்தார். ஈழத் தமிழரின் உணர்வுகள் ஆங்காங்கே நீறுபூத்த நெருப்பாய் இருக்கத்தான் செய்கிறது என்பது இப்படியான பதிவுகளில் இருந்து புலப்படுகின்றது.

வலிகாமம் கல்வி வலைய பாடசாலைகளுக்கு இடையே நடைபெற்ற பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனக்கல்லூரி பெண்கள் அணி 3:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுச் சாம்பியனாகியது. மகாஜனக்கல்லுர்ரி மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மானிப்பாய் மகளிர் கல்லூரியை எதிர்த்து மகாஜனக்கல்லூரி அணி போட்டியிட்டது. மகாஜனக் கல்லூரியின் பரீட்சை முடிவுகளும் இப்போது சிறப்பாக வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. யுத்தத்தால் முற்றாகப் பாதிக்கப்பட்டு அங்குமிங்கும் இடம் பெயர்ந்த கல்லூரியாக இருந்தாலும் மீண்டும் எழுந்து நிற்க முயல்வதைப் பாராட்டியேயாக வேண்டும். இந்தப் பாராட்டு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கங்களுக்கும் உரித்தானது. 

சென்ற சனிக்கிழமை யாழ். சென்.ஜோன்ஸ் மைதானத்தில் சென்.ஜோன்ஸ் - யாழ். மத்திய கல்லூரி துடுப்பாட்ப் போட்டி நடைபெற்றது. 14வது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் ஆட்டத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சென். ஜோன்ஸ் அணி 7வது தடவையாக இந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டது. இந்த துடுப்பாட்டத்தில் தனது திறமையினை வெளிப்படுத்திய சென். ஜோன்ஸ் விளையாட்டு வீரர் யதுசன் ஆட்ட நாயகநாகத் தெரிவு செய்யப்பட்டார்.  ஆறாவது உலகக் கிண்ண 20 போட்டிகளின் சுப்பர் 10 ஆட்டத்தின்போது, இலங்கை மேற்கிந்திய அணிகள் மோதிக் கொண்டன. இதில் மேற்கிந்திய அணி மிகவும் அபாரமாக விளையாடி இலங்கை அணியைத் தோற்கடித்தது. மேற்கிந்திய அணியினருக்காக பிளச்சர் 84 ஓட்ங்களை எடுத்து ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப் பட்டிருந்தார். மும்பை வான்கடே விளையாட்டு திடலில் நடைபெற்ற இன்னுமெரு சுப்பர் 10 ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணியினர் ஆப்கானிஸ்தான் அணியினரை 39 ஓட்டங்களால் தோற்படித்திருந்தனர். இந்தப் போட்டியில் 64 ஓட்டங்களை எடுத்து, ஆட்ட நாயகனாக தென்னாபிரிக்க அணியைச் சேர்ந்த வில்லியர்ஸ் தெரிவானார். 

1961 ஆம் ஆண்டு கியூபாவுடனான உறவைத் துண்டித்துக் கொண்ட அமெரிக்கா மீண்டும் உறவு கொண்டாட ஆரம்பித்துள்ளது. நெல்சன் மண்டேலாவின் இறுதி கிரிகைகளுக்காக சென்றிருந்த பராக் ஒபாமா மற்றும் ராவுல் கஸ்ரோ ஆகியோர் பகிரங்கமாக கைகுலுக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, சென்ற வாரம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கியூபாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். கியூபா அதிபர் ராவுல் கஸ்ரோ பராக் ஒபாமாவை வரவேற்றார். அங்கு நடந்த பேஸ்போல் ஆட்டத்தில் இருவரும் கலந்து சிறப்பித்தனர். கியூபாவைச் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகள் பலர் ‘கியூபா’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சீருடையுடன் இந்த ஆட்டத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தனர். 55 வருட காலமாக ரஸ்யாவுடன் நெருங்கிய உறவை வைத்திருந்த கியூபா இன்று அமெரிக்காவுடனான தனது உறவைப் புதுப்பித்துக் கொண்டது.

No comments:

Post a Comment