Sunday, March 27, 2016

Nadeswara College -7
                                                நடேஸ்வராக் கல்லூரி

                                                     
                                                    CANADA UTHAYAN                                             கண்டதும்! கேட்டதும்!!

                                             நடேஸ்வராக் கல்லூரி – 7

உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 26 வருடங்களாக அகப்பட்டிருந்த காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியைத் (ஜே 234 கிராமசேவகர் பிரிவு) திரும்பவும் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். ஈழத்தமிழர்களின் அழிக்க முடியாத செல்வம் இந்தக் கல்விச் செல்வம்தான். நடேஸ்வராக் கல்லூரி எனக்கு ஆரம்பக்கல்வியைத் தந்த கல்லூரி மட்டுமல்ல, எனது தந்தையாரும் அங்கே அதிபராகக் கடமையாற்றியவர் என்பதால் அவரைப் போன்றவர்களின் கனவுகளையும் நிறைவேற்ற மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.

கல்லூரியை விடுவிப்பதற்காக நடேஸ்வராக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் மூலம் நாங்களும் பல வழிகளிலும் முயற்சி எடுத்திருந்தோம். எங்கள் தொலைபேசி அழைப்புகளுக்கும், மின்னஞ்சல்களுக்கும், கடிதங்களுக்கும் பலன் கிடைத்திருப்பது மட்டுமல்ல, அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு. சுற்று மதில்கள் உடைக்கப்பட்டு, தளபாடங்கள் எரிக்கப்பட்டு, அங்கே இருந்த முக்கியமான கட்டிடங்கள் தொலைந்து போயிப்பதாகக் கல்லூரி அதிபர் நேற்று அறிவித்திருந்தார். எத்தனையோ இழப்புகளைச் சந்தித்த எங்களுக்கு இது ஒன்றும் பெரிதல்ல, அடுத்த கட்டத்திற்கு உடனடியாக நாங்கள் நகரவேண்டும். தற்போதைய அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, தெல்லிப்பழையில் உள்ள மாணவர்களுக்கு முக்கியமாகப் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அங்குள்ள தளபாடங்களையும் பழைய இடத்திற்குக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். அதற்கான முயற்சிகளை முதலில் மேற்கொள்ள ஒழுங்குகள் செய்கின்றோம். கல்விதான் எங்கள் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை நிச்சயம் செய்யும் என்பதால் ஒன்றுபட்டு உழைப்போம்.


யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையே நடைபெறும் வருடாந்த துடுப்பாட்டப் போட்டி சென்ற வாரம் ஆரம்பமாகி, யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடை பெற்றது. மூன்று நாட்கள் நடந்த இந்தப் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. கிருபாகரன் 103 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அர்ஜ+னா ரணதுங்க இந்த விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.


ரஸ்யாவைச் சேர்ந்த பிரபல ரென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா ஊக்க மருந்து பாவித்த குற்றத்திற்காக நான்கு ஆண்டுகள் ரென்னிஸ் போட்டிகளில் பங்கு பற்றுவதில் இருந்து தடைசெய்யப்பட்டிருக்கின்றார். பெண்கள் ரென்னிஸ் ஆட்டத்தில் 2005 ஆம் ஆண்டு முதலிடத்தை வகித்த இவர் தற்போது 7வது இடத்தை வகிக்கின்றார். 28 வயதான இவர், 1994 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க பிரஜையாக இருக்கின்றார்.


ஆறாவது 20 ஓவர் உலகக் கிண்ண கிரிகெட் போட்டியின் சுப்பர்10 சுற்று சென்ற செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. முதற் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிக் கொண்டன. தெரிவான 10 அணிகளில் இலங்கை, மேற்கிந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் முதலவது குழுவிலும், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் இரண்டாவது குழுவிலும் இடம் பெறுகின்றன.


‘ஹார்மெனி ஒவ் த சீஸ்’ என்ற பெயரைக் கொண்ட, உலகின் மிகப் பெரிய கப்பலான  உல்லாசப் பயணக் கப்பல் பிரான்சில் இருந்து சென்ற ஞாயிற்றுக் கிழமை வெள்ளோட்டம் விடப்பட்டது. 18 தளங்களில், 16 பயணிகளுக்கான தளங்களைக் கொண்ட இந்தக் கப்பல் 210 அடி உயரமுள்ளது. 1,187 அடி நீளமும் 216 அடி அகலமும் கொண்ட இந்தக் கப்பலில் 6000 பயணிகள் பயணிக்க முடியும். 227,000 தொன் நிறையைக் கொண்ட இந்தக் கப்பல் 1.1 பில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்டது. றோயல் கரீபியன் இன்ரநாஷனல் நிறுவனத்திற்காக கட்டப்பட்ட இந்தக் கப்பல் 22 நொட்ஸ் வேகத்தில் செல்லக்கூடியது.


விஜே தொலைக்காட்சியினர் சுப்பர் சிங்கர் போட்டியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். பரிதா, ஆனந் அரவிந்த், ராஜகணபதி, லட்சுமி, சியாட் ஆகிய ஐவரும் போட்டியாளராக இருக்கின்றார்கள். சில நடுவர்கள் பரிதாவை அளவிற்கு மீறிப் புகழ்ந்தாலும் ஆனந் அரவிந்த்திற்கு அதிக புள்ளிகள் போட்டு முன்னிலைப் படுத்துவதில் கவனமாக இருக்கின்றார்கள். சிலருக்கு மொழி உணர்வைவிட மத உணர்வுதான் அதிகம் என்பதால், நடக்கப் போகும் வாக்கெடுப்பிலும் அதைத்தான் காட்டுவார்கள். அதிக வாக்கு யாருக்குக் கிடைக்கப் போகிறது என்பது இப்போதே எல்லோருக்கும் தெரிந்ததுதான். அடுத்த வாரம் முடிவு என்வென்று தெரிய வந்தாலும் இப்பொழுதே ஓரளவு முடிவை ஊகிக்க முடிகின்றது. அதிக கனடிய ரசிகர்களைச் சுப்பர் சிங்கரைப் பார்க்க வைத்தவர் என்ற பெருமை கனடியரான பாடகி செல்வி ஜெசிகா யூட்டுக்கே உரியது.


ஈழத்து எழுத்தாளரும் மூத்த ஊடகவியலாளருமான புண்யாமீன் அவர்கள் சென்ற வாரம் காலமாகி விட்டார். அண்மையில் புனித மக்காவிற்குச் சென்று திரும்பிய இவர் சிறிது காலம் சுகவீனமுற்றிருந்தார். இவரது ஜனாஸா நல்லடக்கம் சென்ற 10 ஆம் திகதி உடதலவின்னையில் நடைபெற்றது. இச்சந்தர்ப்பத்தில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment