Wednesday, March 16, 2016

செங்கையாழியான் - Kuru's Page - 5

கண்டதும்! கேட்டதும்!!
குரு அரவிந்தன்
‘கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
தீரவிசாரித்து அறிவதே மெய்!’
எனது கண்ணில் பட்டோ அல்லது எனது காதில் புகுந்தோ ஏதாவது விதத்தில் அவ்வப்போது மனதில் பதிந்திருந்தால் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். இது தேடலுக்கான தகவல் மட்டுமே!
----------------------------------------------------------------------------------------------------------

கண்ணீர் அஞ்சலி - 5

எழுத்தாளர் செங்கையாழியான் அமரராகிவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டபோது ‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்ற வாசகம்தான் நினைவில் வந்தது. யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் தலைவராக இருந்த குணராசா என்ற இயற் பெயர் கொண்ட இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். புவியியல் பட்டதாரியான இவர் புவியியல் சம்பந்தமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஈழத்து எழுத்தாளர்களில் அதிக படைப்புக்களைத் தந்தவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. நல்லை நகர், யாழ்ப்பாண அரசர் பரம்பரை, ஈழத்தவர் வரலாறு போன்ற இவரது ஆய்வு நுல்களும் வெளிவந்திருக்கின்றன. இலங்கை அரசாங்கம் தென்னிந்தியப் புத்தகங்களின் வருகையைத் தடைசெய்த காலத்தில் இவரது எழுத்துக்கள் பிரபலமாயிருந்தன. வீரகேசரி பிரசுரங்கள் மூலம் இவரது நாவல்கள் அப்போது பிரசுரமாகியிருந்தன. இவரது எழுத்தில் இருந்துதான் வழுக்கை ஆற்றைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். மாணவனாக நான் இருந்தபோது ஒரு முறை செட்டிகுளத்திற்குச் சென்றபோது, அங்கு அரச உத்தியோகத்தராக இருந்த அவரைச் சந்தித்திருந்தேன். இவர் கனடா வந்தபோது எங்கள் வீட்டிற்கும் விருந்தினராக வந்திருந்தார். அப்போது பல இலக்கிய முயற்சிகள் பற்றி நாங்கள் கலந்துரையாடினோம். இவரது வாடைக்காற்று என்ற நாவல் படமாக்கப்பட்டபோதும், எனது முள்வேலி என்ற கதை வேலி என்ற பெயரில் மதிவாசனால் படமாக்கப்பட்ட போதும் இனிய நண்பர் அமரர் கே. எஸ். பாலச்சந்திரன்  நடித்திருந்தார். இச்சந்தர்ப்பத்தில் செங்கையாழியானின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

மகளிர் தினத்தை ஒருபக்கம் கொண்டாடிக் கொண்டிருந்தாலும், சென்ற வருடம் இலங்கையில் இடம் பெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் போது 1854 துஷ்பிரயோக முறைப்பாடுகள் பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகின்றது. இதில் சுமார் 1500 சம்பவங்கள் பதினாறு வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு எதிரானதாக அறிக்கைகள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்தில் சராசரி இரண்டு அல்லது மூன்று வன்முறைகளாவது தினமும் நடப்பதாகப் பதிவுகள் கூறகின்றன. யுத்தம் காரணமாக சுமார் 40,000 பெண்கள் வரை குடும்பத் தலைவரை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகத் தெரிகின்றது. இவர்களுக்கான உதவிகள் ஒருபக்கம் நடந்தாலும், பெண்களின் பாதுகாப்பு சம்பந்தமான உதவிகள் போதாது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிப் பத்திரிகையில் புகைப்படங்களைப் போட்டால் மட்டும் போதாது, இத்தகைய வன்முறைகளை எங்கு நடந்தாலும் கண்டிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுப்பதே சிறந்தது.


88 வது ஆஸ்கார் விருது விழா சென்ற ஞாயிற்க் கிழமை 28-02-2016 நடைபெற்றது. மாட்மாக்ஸ் (ஆயன ஆயஒ குரசல சுழயன) என்ற படம் ஆறு விருதுகளைத் தட்டிக் கொண்டது. சிறந்த நடிகராக றிவெனன்ற் படத்தில் நடித்த லியோனார்டோ டி கப்றியோவும், சிறந்த நடிகையாக றூம் படத்தில் நடித்த பெரி லாஸனும் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். சிறந்த படமாக ஸ்பொட்லைட் (ளுpழவடiபாவ) தெரிவு செய்யப்பட்டது. சிறந்த துணை நடிகராக மார்க் ரைலோன்ஸ், சிறந்த துணை நடிகையாக அலிஸியா விக்காண்டர், சிறந்த இசைஅமைப்பாளராக என்னியோ மோரிகோணி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். சிறந்த ஆவணக் குறும்படமாக ஏ கேர்ள் இன்த றிவர் தெரிவு செய்யப்பட்டது.  இந்திய சினிமா சார்பில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டு தனது ஆடை அலங்காரத்தால்  எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். காரணம் அவர் அணிந்திருந்த நகைகளின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 80 இலட்சம் என்று தெரிகின்றது. தொகுப்பாளராக நகைச்சுவை நடிகர் கிறிஸ் ஹாரிஸ் பணியாற்றினார். கறுப்பின நடிகர்கள் இந்த விழாவில் ஒதுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், வில் ஸ்மித் போன்ற பிரபல நடிகர்கள் இந்த ஆஸ்கார் விருது விழாவைப் புறக்கணித்திருந்தனர். (புகைப்படம் நன்றி : ABC)


சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வைல்ட்கார்ட் தெரிவு இவ்வாரம் நடைபெறுகின்றது. ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட மூவரைத் தவிர ஒன்பது பேர் போட்டி போடுகின்றார்கள். சென்ற வாரம் இவர்கள் எல்லோரும் தங்கள் திறமையைக் காட்டியிருந்தார்கள். வாக்கு வங்கியை நிரப்ப வேண்டும் என்றால் ஒரு உண்மையை இவர்கள் தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. ஈழத்தமிழரின் வாக்குகளைப் பெற வேண்டுமானால் அவர்களின் கடந்தகால சோகங்களைப் பாடல் மூலம் கொண்டு வந்து நினைவூட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்; இருப்பதால், அதை யார் செய்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிப்போம் என்று பலர் குறிப்பிட்டது எனது நினைவில் நிற்கின்றது. புத்திமான் பலவான்.

சென்ற செவ்வாய்க்கிழமை மார்ச் 2 ஆம் திகதி 2016 நாசாவின் ஸ்கொட் ஹெலி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்குத் திரும்பினார். அமெரிக்கரான இவர் வானத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்தில் தொடர்ச்சியாகத் 340 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்துள்ளார். தலைமன்னார் பகுதியில் சர்ச்சைக்குரிய இராமர் அணை பத்தடி தண்ணீருக்குள் மூழ்கி இருப்பதை வானத்தில் இருந்து படம் எடுத்துக் காட்டியது இவர்தான்!

No comments:

Post a Comment