Wednesday, June 1, 2016

HARAMBE - ஹரம்பி

                                                          ஹரம்பி 

                                                             HARAMBE

10 லட்சம் பிரதிகளுக்கு மேல் பிரசுரமாகும் ஆனந்தவிகடனின் இணைய இதழில் சென்ற வாரம் வெளிவந்து, அதிக வாசகர்களின் மாறுபட்ட  விமர்சனத்துக்கு உள்ளாகிய ஹரம்பி என்ற  இந்தக் கதையை உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.                                                              நன்றி :  விகடன்


ட்ரிக்கரை அழுத்தும் முன் ஒருகணம் யோசிக்கவில்லையா...
ஹரம்பியும் ஒரு தாயின் பிள்ளைதானே! - விகடன் எடிட்ரேஸ் சாய்ஸ்

- குரு அரவிந்தன் -

ந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது. ஒரு கணம் கணினித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன். காரணம் நேற்றுதான் ஹரம்பிக்கு ஒரு லைக் போட்டு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி  அனுப்பியிருந்தேன்.


முகநூலில் 17 வது பிறந்த நாள் என்பதால் ஹரம்பியின் அழகான படத்தைப் போட்டு ஒரு லைக் போடுங்கள் என்று முகநூலில் பதிவு செய்திருந்தார்கள்.  சென்ற வருடம் 'ஸ்வீட் ஸிக்டீன்' என்று 16 வது பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடிய புகைப்படங்களும் அந்த முகநூலில் இடம் பெற்றிருந்ததைக் கவனித்தேன். ஸ்வீட் ஸிக்டீனைக் கடந்து சென்ற  ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாதது அந்த நாள் என்பதால் ஹரம்பிக்கும் மறக்க முடியாத நாளாக அது இருந்திருக்கும்.

வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தை நோக்கிய நகர்வு இங்கேதான் அனேகமானவர்களுக்கு ஆரம்பமாகின்றது.  ஏனோ முகநூலில் பார்த்த ஹரம்பியின் அந்த அப்பாவித் தனமான பார்வையில் ஏதோ ஒரு சோகம் குடியிருப்பதை அவதானிக்க முடிந்தது. ஒருவேளை ஹோம்சிக் என்று எல்லோரும் சொல்வது போல உறவுகளைப் பிரிந்து, இயற்கைச் சூழலை விட்டு இங்கே வந்த சோகமாகக்கூட அது இருக்கலாம்.

ஹரம்பியின் இந்த சிறை வாழ்க்கை எத்தனை வருடங்களாகத் தொடர்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு சிறையில் அடைத்து வைக்குமளவிற்கு ஹரம்பி எந்த ஒரு குற்றமும் செய்திருக்க நியாயமில்லை என்பதைக் குழந்தைத் தனமான அந்த முகத்தைப் பார்த்த போதே நான் புரிந்து கொண்டேன். ரெக்ஸாசில் சுதந்திரமாய் திரிந்த ஹரம்பியை அந்தச் சிறைக்குக் கொண்டு வந்ததற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கலாம், ஒருவேளை அனாதையாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்திருக்கலாம்.

ஆனாலும் முதல் நாள் பார்த்த போதே எனக்குக் ஹரம்பியைப் பிடித்துப் போய்விட்டது.

ஒரு நிமிடத்தில் எல்லாமே தலைகீழாக மாறியிருந்தது. மார்க்கண்டேயருக்குப் பதினாறு வயதுபோல, ஹரம்பிக்குப் பதினேழு வயதிலே தத்து என்று தலையில் எழுதப்பட்டிருக்கலாம்.

நான்கு வயதுதான் இருக்கும், யமதூதுவன் போல அந்தச் சிறுவன் பெற்றோருடன் அங்கு நுழைந்திருந்தான். செயற்கையாகப் போடப்பட்ட பாதுகாப்பு வேலிபோலப் பதினைந்தடி ஆழத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த அந்தக் காட்சிதான் அவன் கண்ணில் முதலில் பட்டது.

தண்ணீரைக்கண்டதும் தானும் தண்ணீரில் விளையாடப் போவதாக அவன் அடம் பிடித்தான். தாயார் என்ன சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாகத் தாயாரின் கைகளை உதறிவிட்டு அந்த இடத்திலே தரையில் உட்கார்ந்து கொண்டான். தாயார் சற்று விலகியதும் எழுந்து ஒரே ஓட்டமாக ஓடி மேலே போடப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியையும் கடந்து திடீரெனக் கீழே குதித்தான்.

ஒரே நிமிடந்தான், என்ன நடக்கிறது என்று தெரியாமல் பார்வையாளர்கள் எல்லோரும் உறைந்து நின்றனர். கீழே விழுந்த சிறுவன் அடிபட்டதால் அப்படியே மயக்கமாகக் கிடந்தான். பதினைந்தடி ஆழமாகையால் கீழே விழுந்த போது சிறுவனின் உடம்பில் அடிபட்டிருக்கலாம். சில நிமிடங்கள் மயக்க நிலையில் அசையாமல் அப்படியே அவன் கிடந்தபோதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் கீழே இருந்த இரண்டு பெண் கொரிலாக்கள் அந்தச் சிறுவனை நோக்கி வேகமாக ஓடிவந்தன.

மேலே நின்ற கும்பல் ஓவென்று கூக்குரலிட, இதைக்கண்ட ஹரம்பி ஓடிச்சென்று அந்தக் கொரிலாக்களைத் தள்ளிவிட்டு கீழே மயங்கிக் கிடந்த அந்தச் சிறுவனைக் குனிந்து பார்த்தது.

மற்றக் கொரிலாக்களால் ஆபத்து வரலாம் என்று நினைத்தோ என்னவோ, தனது காதலிகளான அந்த இரண்டு கொரிலாக்களையும் சற்றுத் தூரம் வரை விரட்டிவிட்டுப் பொறுப்புள்ள ஒரு தகப்பனைப் போல சிறுவனுக்கு அருகே வந்து பாதுகாப்பாக நின்று கொண்டது.

மயக்கம் தெளிந்த சிறுவனின் கண்களில் எதிரே பூதாகரமாய் நின்ற ஹரம்பிதான் கண்ணில் படவே, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத சிறுவன் ஓவென்று பலமாக அழத் தொடங்கினான். இதைப் பார்த்துக் கொண்டு வெளியே நின்ற மக்கள் கூட்டம் என்ன நடக்கப் போகிறதோ என்ற பதட்டத்தில் மீண்டும் கூக்குரலிட்டது. அவர்கள் கும்பலாகக் கீழே வந்து அந்தச் சிறுவனைத் தாக்கி விடுவார்களோ என்ற பயம் ஹரம்பியைச் சட்டென்று பிடித்துக் கொண்டது.

மேலே நின்று கத்திக் கூக்குரலிடும் அந்தக் கும்பலின் சத்தம் மேலும் மேலும் அதிகரிக்கவே, அவர்கள் எந்த நேரமும் கீழே வந்து சிறுவனைத் தாக்கலாம் என்ற பயத்தில் ஹரம்பி மேலே அண்ணார்ந்து பார்த்தது.

சிறுவனை அந்தக் கும்பலிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால் இதற்கு ஒரே வழி அந்தச் சிறுவனை ஒதுக்குப் புறமாகக் கொண்டு சென்று கூக்குரலிடும் மக்களிடம் இருந்து பாதுகாப்பதே என்று அது நினைத்தது. ஐந்தறிவு படைத்த அந்த மிருகத்திற்கு அதைவிட வேறு எதுவம் யோசிக்கத் தோன்றவில்லை. தனது குட்டிகளை எப்படிப் பாதுகாக்குமோ அப்படித்தான் அது செய்ய நினைத்தது.

ஆனால் மிருகம் ஒன்று நினைக்க மனிதன் ஒன்று நினைத்தான். ஹரம்பியால் சிறுவன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என மிருக்காட்சிச் சாலைப் பணியாளர்கள் நினைத்தார்கள். ஆனால் ஹரம்பியோ எந்த ஒரு கட்டத்திலும் சிறுவனைத் தாக்கவோ, பயமுறுத்தவோ முற்படவில்லை. மாறாகச் சிறுவனைப் பாதுகாக்கவே நினைத்தது. எனவே சிறுவனைத் தூக்கித் தனது காலடியில் இருத்திவிட்டு அவனைப் பாதுகாப்பதில் கவனமாக இருந்தது. பாதுகாப்பான ஒரு மூலையில் சிறுவனை உட்கார வைத்தால் மக்கள் கூட்டம் சிறுவனைத் தாக்க மாட்டார்கள் என ஹரம்பி நினைத்து. எங்கே சிறுவனைப் பாதுகாப்பாய் வைக்கலாம் என்று அக்கம் பக்கம் பார்த்தது.

ஹரம்பி சுமார் 400 கிலோ எடை இருக்கலாம். நெட்டையான உருவம். சுமார் ஐந்தரையடி உயரமிருக்கலாம். நடக்கும் போது அசைந்து அசைந்து நடப்பதே அதற்குத் தனி அழகைக் கொடுத்தது. மேலே நின்று கத்திக் கூக்குரலிட்டவர்கள் அந்தச் சிறுவனைத் தாக்க முனைந்ததால்தான் அவர்களிடம் இருந்து தப்புவதற்காகத்தான் சிறுவன் கீழே தண்ணீருக்குள் குதித்தான் என்று ஹரம்பி நினைத்ததிருக்கலாம். அந்தக் கும்பலிடம் இருந்து சிறுவனைக் காப்பாற்ற சட்டென்று தண்ணீருக்குள் இருந்த சிறுவனை அணைத்துத் தூக்கி நிற்க வைத்தது.

சிறுவனைத் தூக்கி நிற்க வைத்த ஹரம்பிக்குச் சிறுவனை இரண்டு கைகளாலும் அணைத்துத் தூக்கி தோளில் போடத் தெரியவில்லை. தனது குட்டியை எப்படிக் கையில் பிடித்து அழைத்துக் கொண்டு செல்லுமோ அப்படித்தான் சிறுவனைப் பிடித்து கொண்டு சென்றது. கீழே விழுந்து முழங்காலில் அடிபட்டதால் சிறுவனால் நடக்க முடியாமலிருந்தது.

மீண்டும் தண்ணீருக்குள் விழுந்த சிறுவனை என்ன செய்யலாம் என்று ஒரு கணம் யோசித்தது. ஐந்தறிவுதான் என்றாலும் புத்திசாலிக் ஹரம்பி சிறுவனை அப்படியே  தண்ணீரில் மிதக்க விட்டபடி அப்படியே ஒரு பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் சென்றது. இக்கட்டான அந்த சூழ்நிலையில் வேறெதுவும் செய்யக் கூடிய நிலையில் ஹரம்பி இருக்கவில்லை. குழந்தையைத் தண்ணீருக்குள்ளால் இழுத்துச் சென்று பாதுகாப்பாக மூலையில் உட்கார்ந்து கவனமாகத் தனது காலடியில் இருத்திவைத்திருந்தது.

கும்பலின் குரல் இப்போது இன்னும் அதிகரித்திருந்துது. ‘சூட் தட் நாஸ்டி அனிமல்’ கும்பலில் யாரோ கூக்குரலிட்டார்கள். அடுத்த கணம் அருகே நின்ற சிலரும் சேர்ந்து அவனோடு கோரஸ் பாடினார்கள்.

‘சுடுவதா இல்லையா?’ துப்பாக்கியோடு ஹரம்பியைக் குறிவைத்தபடி நின்ற காவலாளியின் மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது.

எந்த ஒரு காரணமும் இல்லாமல் அநியாயமாக ஒரு உயிர் பறிக்கப்படப் போகிறதே என்ற கவலைகூட இல்லாமல் ‘கொன்றுவிடு’ என்ற குரல்கள் துப்பாக்கி ஏந்திய காவலாளியில் மனதில் வலுக் கட்டாயமாக மீண்டும் மீண்டும் விதைக்கப்பட்டன.

தற்செயலாகச் சிறுவனுக்கு ஏதாவது நடந்தால் தன் மீது பழியைப் போட்டு விடுவார்கள். அதற்கு முன் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நினைப்போடு அவனது விரல் ட்ரிக்கரில் பதிந்தது.

குரங்கில் இருந்து பிறந்தவன்தான் மனிதன் என்பார்கள். தன்னை சுடுவதற்கு இந்த ஆறறிவு படைத்தவர்கள் ஏன் குறி வைக்கிறார்கள் என்பது கூட அந்த ஐந்தறிவு படைந்த கொரிலாவிற்குப் புரிந்திருக்கவில்லை.

நெற்றிப் பொட்டில் துப்பாக்கி ரவை துளைத்து இரத்தம் பீறிட்ட போதும்கூடச் சிறுவனைத் தாக்க ஹரம்பி முனையவில்லை. உயிர் பிரியும் அந்தக் கடைசி நிமிடத்தில்கூட ‘உன்னை வெறிபிடித்த இந்த மனிதக் கூட்டத்தில் இருந்து பாதுகாக்க என்னால் முடியவில்லையே’ என்ற இயலாமையுடன் கண்களில் நீர்துளிர்க்க மௌனமாக அந்தச் சிறுவனைப் பார்த்தது ஹரம்பி.

அடுத்த விநாடியே விழி மூடக்கூட அவகாசம் இல்லாமல் அதன் உயிர்த் துடிப்பு மெல்ல அடங்கிப் போனது. வாய் பேசமுடியாத அந்த ஜீவனின் உயிரைப் பறித்து விட்ட மனநிறைவோடு வெளியே நின்று கத்திக் கூக்குரலிட்டவர்கள் தங்கள் வெறி அடங்கியதும் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினார்கள்.


‘கட்டுக்கடங்காமல் போகலாம் என்பதால் ஹரம்பியைச் சுட்டுக் கொன்று விட்டோம்’ என்று பொறுப்பானவர்கள் அறிக்கையில் எழுதிவைத்து விட்டுப் போய் விட்டார்கள். ‘உங்களைவிட எங்களுக்குத்தான் கவலை அதிகம்’ என்று முகநூலில் பதிவு செய்து தங்களுக்குள் வேறு சமாதானம் சொல்லிக் கொண்டார்கள்.

'தன்னைப் பலி கொடுத்ததன் மூலம் காலமெல்லாம் திட்டித் தீர்க்கவிருந்த மனித குலத்திடம் இருந்து ஹரம்பி விடுதலை பெற்றுக் கொண்டது. '

அவரவருக்கு அவரவர் வாழ்க்கை முக்கியமானாலும், ஓன்று மட்டும் எனக்குப் புரியவில்லை. இவர்களுக்கு எப்படி மனம் வந்தது ஹரம்பியைச் சுட்டுக் கொல்வதற்கு? அனாதையாய் கூண்டுக்கள் அடைந்து கிடந்து இத்தனை காலமாய் வந்து போன பார்வையாளர்களை எல்லாம் மகிழ்வித்துக் கொண்டிருந்த ஹரம்பியும் ஒரு தாயின் பிள்ளைதானே!

- குரு அரவிந்தன் -


நன்றி :  விகடன்


இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

இவங்க என்னப்பா சொல்லுறாங்க...?


SUNDAR

கொரில்லா இப்படி நினைத்ததாம். அப்படி நினைத்ததாம். கதை எழுதியிருக்கிறார் - விட்டிருக்கிறார். ஒரு செய்தியை விவரிக்கும்பொழுது உணர்ச்சி வசப்படக்கூடாது. அப்படியானால் இப்படித்தான் ஆகும்.

x இது வெறும் கதை என்றால் நீங்கள் ஏன் உணர்ச்சி வசப்படுறீங்க..?

PONRAJ.A

மிக அருமையான எழுத்தாக்கம். உயிரினங்களிலே மனிதன்தான் கொடுமையானவன்.

Vivek Paramasivam

"யமதூதுவன் போல அந்தச் சிறுவன்"  இந்த வரிகளை தவிர்த்திருக்கலாம்

x என்ன செய்வது விதி இப்படித்தான் யாரையாவது மாட்டிவிடும்...:

KUMAR

கொரில்லா சுட்டு கொல்லப்பட்டது வருத்தமளிக்கும் செய்திதான்.. சுட்டுக்கொல்லாமல் அதற்கு மயக்க மருந்து கொடுத்து காப்பாற்ற முயற்சித்து இருக்கலாம்.. ஆனால் ஊசி குத்தியவுடன் கொரில்லாக்களின் செயல்பாடுகள் (மயக்கமடையும் வரை) அதிகரிக்கும். அதனால் ரிஸ்க் எடுக்காமல் காவலாளி அதனை சுட்டு விட்டார். சோகமான நிகழ்வுதான். ஆனால் இதில் சொந்த கற்பனையை சேர்த்து கவிதை பாட ஒன்றுமில்லை. ஒருவேளை அந்த கொரில்லாவால் சிறுவனுக்கு ஏதாவது நேர்ந்து இருந்தால்?? காட்டில் நீங்கள் தனியாக ஒரு கொரில்லாவிடம் மாட்டி பாருங்கள்.. உயிர் காக்க யார் முதலில் ஆயுதத்தை எடுக்கிறார்கள் என்று அப்போது புரியும்..

x கதை உங்கள் மனதையும் தொட்டிருப்பது நன்றாகத் தெரிகின்றது.

பங்காளி

இந்த சம்பவத்தில் குழந்தையின் பெற்றோருக்கும் பங்கு உள்ளது. அவர்கள் குழந்தை அடம் பிடித்த போதே உஷாராகி இருக்க வேண்டும். அந்த வீடியோவை நானும் பார்த்தேன். கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது போன்று எந்த சமயத்திலும் குழந்தைக்கு தீங்கு இழைக்க அது முனைய வில்லை. அதன் செயல்பாடு குழந்தையை காப்பாற்றும் நோக்கில் தான் இருந்தது. கொரில்லாவை கொன்றதற்கு பதிலாக மயக்க ஊசி போட்டு பிடித்திருக்கலாம். கட்டுரை எழுதிய திரு. குரு அரவிந்தன் அவர்களின் ஜீவகாருண்யத்தை புரிந்து கொள்ள முடியாத சிந்தை உடைய சில நண்பர்கள் அவரை விமர்சித்துள்ளார்கள். திரு. குரு அரவிந்தன் அவர்களே உங்கள் கட்டுரை கருணையின் வடிவம்!!. ஜீவ காருண்யத்தின் உருவம்!!. எனவே தூற்றுவோரின் கருத்தை புறந்தள்ளி விட்டு ஜீவ காருண்யம் பேணுவோம்! மானுடம் போற்றுவோம் !!

x ஜீவ காருண்யம் என்றால் என்னவென்று தெரியாதவர்களும் இருக்கிறார்கள்

Gandhi

முழுக்க முழுக்க அம்மாவின் தவறு !

AJay

மன்னிக்கவும், நான் அம்மா என்றவுடன் ஜெயாவை நினைத்து டிஸ்லைக் போட்டுவிட்டேன்..

V.Parthiban

குழந்தையை காப்பதற்கு வேறு வழி இருக்கா உங்களிடம். போய் ஒங்க இந்த சோகக்தையை சொல்லி கூட்டிட்டு வந்துடலாம?... குழந்தையை அந்த இடத்தில விட்ட குற்றத்திற்காக குழந்தையின் பெற்றோரை தண்டிக்க வேண்டும். அப்பதான் திருந்துங்கள் இந்த மக்கள்.

Jeyabalan. M

உலகத்தில் எந்த உயிரனத்துக்கும் இல்லாத சுயநல வெறியின் உதாரணம் தான் இது.உலகம் தோன்றியபோது எல்லா உயிர்களுக்கும் ஒரு விகிதாசார எண்ணிக்கை அளவு இருந்தது. அனால் இப்பொழுது மனிதன் கோடி கணக்காக பெருகி அதே நேரத்தில் பெரும்பாலான உயிர்களை அழித்துவிட்டான். இப்படியே தொடர்ந்தால் கொஞ்ச காலங்களில் மனித இனம் அழிவது உறுதி.

Selvakumar

இதை எழுதியவரின் குழந்தை கிலே விழுந்திர்ந்தால் தெரியும் வேதனை

Gunaseker

கட்டுரையை வாசித்தவுடன் மனம் பதறுகிறது....சாந்தியடைய வேண்டுகிறேன்.

ENA NENGA UNGALUKU ANTHA CHIRUVAN MELA IRAKAM ILAMA PESURINGA ENA KETA ANTHA SIRUVAN UYIR THAPINAN , ENAMA HARAMBI AVANA KAPATHUNU UNGALUKU EPDI TERIUM ENA PESURINGA ITHU POLA EZHUTHARATHA NIRUNTHUNGA MANITHARGALAI NESIYUNGAL MUDHALIL APURAM VILANGINATHA NESIYUNGAL

அந்த ஜீவனைக் கொன்றதில் எனக்கும் உடன்பாடில்லை..
அதனை மயக்கமடையச்செய்து அந்தச் சிறுவனை மீட்டு.. இரண்டு உயிருக்கும் நியாயம் செய்து இருக்கலாம்..என்றே அந்த வீடியோவைப் பார்த்தபோது தோன்றியது..

சில சம்பவங்கள் மனதைவிட்டு அவ்வளவு எளிதில் இறங்காது..
அழுத்திக்கொண்டே இருக்கும்..இந்த கொடூரமும் அப்படியாகிப்போனது எனக்கு.. அந்த ஜீவனின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்தவனாக..

-அபுதாலிப் மலேசியாவிலிருந்து..

Touching lovely Story


It is a very touching story. You emphasized in this story that Harambe acted as a caring mother and wanted to protect the boy from other gorillas and people. At the same time, people and the security didn’t realise Harambe’s motive.

Harambe thought it was its duty to protect the boy from others. But that didn’t happen. The security guard shot and killed Harambe. Why did they not just use a tranquiliser to put Harambe to sleep and bring the boy back to his mother? The duty of human beings is to live intelligently, help the beings of lesser intelligence and nourish those who depend upon them. They are also expected to serve the purpose of creation.

You touched our Hindu principles. The Great Mahathma Ghandi also said “all the great religions teach love of human, but Hinduism teaches love of animals as well”. That is why many Hindus never eat meat. They feel killing an animal is wrong. The animals have the right to live as a human.

After reading the story I am very much impressed by your thoughts and I heard it has reached millions of people. In conclusion I agree with your view for “Do not kill animals but protect them” and I request you to translate this article in to English and publish in English newspapers to reach another million readers.


Nantheeswarar


Prakash

அந்த கொரில்லா இறந்தது எற்றுகொல்வதர்கில்லை ஆனால்.... தயைகூர்ந்து.....Dont try to make a dramatic Scene out of it.... which is so unreal... please do understand... we cant sit and watch a kid being handled... there is no certainity that the Gorilla is gonna save and have the kid brought up... no need to bring an emotion which you are sure of... pls.... let approach it in practical way .. pls

AJAY

பெற்றோர்கள் குற்றம் தானே தவிர, கொரில்லாவின் குற்றம் அல்ல. இன்னொருத்தர் வீட்டின் உள்ளே எல்லை மீறி நுழைந்துவிட்டு, அங்கு இருப்பவர்களை குறை சொல்லி சுட்டது போல இருக்கிறது இந்த செயல்.

JOHN

Living in America, I know there are stringent laws against harming endangered species. Intent was not to shoot, but the Zoo officials were left with not much choice, considering the risk posed to the child. Tranquilizer darts could cause the Gorilla into an agitated state putting the child's life at an even greater risk. If you are asking why NOT larger dose of tranquilizer, the risk is the same except the Gorilla is unlikely to survive. While this is extremely sad, there are emergency process and procedure well documented in these Zoos and officials followed it to the dot in this case.

Sridharan

Ur argument is understood.The question is do the human beings have the right to kill a nature animal. If u cannot create some thing ...you have no right to destroy is the basic principle of nature on which we live.correct me if i am wrong.

கௌரி


முதலில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பாவம் அந்த கொரில்லா இவர்களது அலட்சியத்தால் அதன் உயிர் பிரிந்தது. பிரிந்தது என்னமோ விலங்கானாலும் உயிர் உயிர்தானே. தயவு செய்து பொற்றோர்கள் தனது குழந்தைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

Elamurugu Elango

மனித உயிர் தான் மகத்தானதா சிந்தியும் மக்களே ஹரம்பியும் ஓர் உயிர் தான் !!!   சக மனித உயிர்க்கே மதிப்பளிக்காத இவ்வுலக மக்களிடம் பிற உயிர்க்கு இரக்கம் எதிர் பார்ப்பது தவறு தான் !!!
சிறந்த பதிவு தோழர் குரு அரவிந்தன் :

Vijaya

Lovely article. It made me cry.I totally agree with you.

இ.ப.ஞானப்பிரகாசன்


ஐந்தறிவு என்கிறோம். ஆனால் ஐந்தறிவுள்ள குரங்கு மனிதனைக் காப்பாற்ற முயன்றிருக்கிறது. ஆனால் ஆறு போதாமல் ஏழாம் அறிவெல்லாம் பெற்ற உலகின் அதியுயர் பிறவியான மனிதன் அது தன் குழந்தையைக் காப்பாற்றப் பார்க்கிறதா தாக்கப் போகிறதா என்பதைக் கூடப் புரிந்து கொள்ளத் தெரியாத விலங்காயிருக்கிறான்! கொடுமை!

Vankatesh

இப்போதெல்லாம் நல்ல படங்கள் வருவதில்லை நீங்கள் சினிமாவிற்கு கதை எழுதினால் நன்றாக இருக்கும்.

Aravind

நிச்சயமாக இதை தவறு என்று சொல்லவில்லை ஆனால்இ குழந்தையை காப்பாற்ற ஹரம்பியை கொன்றது சரி என்று ஒருபோதும் ஏற்க முடியவில்லை. இதைத்தான் ஆங்கிலத்தில் “hypothetical'  என்பார்கள். இங்கே அந்த குழந்தையும்இ ஹரம்பியும் ஒன்றுதான்… விலங்கு எது என்று தான் விளங்கமுடியவில்லை.

Parameshwaran.P


மனித குலத்திடம் இருந்து ஹரம்பி விடுதலை பெற்றுக் கொண்டது.

Kuru Aravinthan

பல வாசகர்களின் மன நிலையையும் வெளிக் கொண்டு வருவதற்கு இந்தக் கதை உதவியிருக்கின்றது. நடந்ததை மட்டும் எழுதினால் அது யாருடைய கவனத்தையும் ஈர்த்திருக்க மாட்டாது. இந்தவாரம் வட அமெரிக்காவில் அதிகம் பேசப்பட்ட எழுதப்பட்ட சம்பவமாக இது இருக்கின்றது. மனித நேயம் இன்னும் மரணிக்கவில்லை என்பதையிட்டு ஓரளவு மனநிறைவாக இருக்கின்றது. தங்கள் கருத்துக்களை மனம் திறந்து சொன்ன எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

குரங்கு இறந்தால் அதன் சொந்தங்கள் நீதி மன்றத்தை நாடப் போவதில்லை என்ற திரு. கோபிநாத்தின் செய்தி பலரையும் சிந்திக்க வைத்திருக்கும். இந்த உண்மை மனித குலத்திற்குத் தெரியும். இதை விமர்சித்தவர்களும் தங்கள் ஊகத்தைத்தான் சொன்னார்கள். அவர்களும் தங்கள் மனதில் பட்ட கற்பனையைத்தான் எழுதினார்கள். 
இப்படி எல்லோரும் கற்பனை கலந்து எழுதியதால்தான் எது சரி எது பிழை என்று பலரையும் சிந்திக்க வைத்தது.


இனியும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்காமல் எப்படித் தடுக்கலாம் என்பதில் நிர்வாகத்தினர் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் இந்தக் கற்பனைக் கதையின் நோக்கம். கருப்பொருள் மட்டும் உண்மைச் சம்பவம். இனிய விகடன் வாசகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.