Saturday, July 2, 2022

Red wine - Story by: Kuru Aravinthan

 வணிகவகுப்பும் ரெட்வைனும்!
(குரு அரவிந்தன்)
அன்று விமானம் மூன்று மணிநேரம் தாமதம் என்று மின்னஞ்சல் மூலம் அறிவித்தார்கள். ஏற்கனவே போர்த்துக்கல் தலைநகரான லிஸ்பனில் உள்ள சர்வதேச விமான நிலையமான ஹம்பேர்ட்டோ டெல்காடோ விமான நிலையத்திற்கு வந்திருந்தபடியால், வணிக வகுப்பினர் தங்குமிடத்தில் தங்கியிருந்தேன். வாடகைக்கு எடுத்த வண்டியையும் திருப்பிக் கொடுத்திருந்ததால், வேறு எங்கும் செல்ல மனம் வரவில்லை.
விரும்பிய அளவு தேவையான உணவு வகைகளை எடுத்து இலவசமாகச் சாப்பிடக் கூடிய வசதிகளை ஏற்படுத்தி இருந்தனர். உணவு பிடித்ததோ இல்லையோ, வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அங்கு கிடைத்ததை சாப்பிடப் பழகி வைத்திருந்தேன். ஓய்வெடுப்பதற்கு வசதியான இருக்கைகளும் போட்டிருந்தார்கள். முக்கியமாக மடிக்கணனி, செல்போன்களுக்கான தொடர்பு வசதிகளும் அங்கே போதிய அளவு இருந்தன. அங்கிருந்த அனேகமானவர்கள் குடும்பத்தை மறந்து செல்போனோடு தங்கள் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார்கள்.
வணிக வகுப்பு என்றால் என்ன என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். நான் சொல்ல வந்தது வணிக பாடம் படிக்கும் வகுப்பல்ல, இது கொஞ்சம் பணம் படைத்த வசதியானவர்களுக்கான வகுப்பாகும். வர்த்தகர்கள்தான் பயணிக்க வேண்டுமென்றில்லை, விமானத்தில் பயணிக்கத் தகுதி பெற்ற யாரும் இந்த வணிகவகுப்பில் பயணிக்கலாம். பொதுவாகப் பணம் படைத்த வர்த்தகர்களும், உயர் அரசபணியாளர்களும், அரசியல் வாதிகளும்தான் இதில் பயணிப்பதுண்டு. சக பயணிகளின் தொந்தரவு இல்லாமல், விமானத்தில் தனிக் கபின் போல, கை காலை நீட்டிப் படுத்துக் கொண்டு செல்லக்கூடியதாக உங்கள் இருக்கை உங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.
வசதி என்றால் என்ன என்ற கேள்விக்கு நான் பதில்தரவும் முனையவில்லை. தொடர்வண்டியில் பயணிக்கும்போது, உங்களுக்கான ஒரு இருக்கையை ஒதுக்குவதற்கோ, அல்லது பயணத்தின் போது படுத்துக் கொண்டு செல்வதற்கோ வசதிகள் இருப்பது போல, விமானத்தில் பயணிக்கும் போதும் அது போன்ற சில வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். வசதிகள்தான் முக்கியம் என்று பார்த்தால், நிம்மதியாகப் பயணிக்க என்ன கொஞ்சம் பணம் அதிகமாகச் செலவாகும், அவ்வளவுதான்.
தொழில் சம்பந்தமாக விமானத்தில் பயணிக்கும் போதெல்லாம், இந்த வணிக வகுப்பில்தான் பயணிப்பதுண்டு. நிறுவனத்தின் செலவில் இந்த வசதிகள் கிடைப்பதற்குக் காரணம் அவர்களுக்கும் எங்களின் தேவைகள் இருப்பதால், அவர்கள் இறால் போட்டு சுறாபிடிக்கும் கதைதான். உள்ளே வரும்போது உங்கள் விமான பயணச்சீட்டை வரவேற்பு மேசையில் நிற்பவரிடம் காட்டினால் போதுமானது, அங்கே உள்ள வசதிகளை நீங்கள் அனுபவிக்கலாம்.
விமானநிலையத்தில் உள்ள தங்குமறைக்கு வந்த நான் தேவையான உணவை எடுத்துக் கொண்டு எனக்கு ஏற்ற இருக்கை ஒன்றைத் தெரிவு செய்து அமர்ந்து கொண்டேன். என்னைச் சுற்றிவர என்ன நடக்கிறது என்று அவதானித்தேன். ஒருவர் அங்குமிங்கும் நடந்தபடி வீடியோ உரையாடல் மேற்கொண்டிருந்தார். ஆர்வம் காரணமாக அவர் என்னைக் கடந்து செல்லும் போதெல்லாம் எட்டிப் பார்த்தேன். வெள்ளைத் தாடி விட்ட ஒருவரின் முகம்தான் அதில் தெரிந்தது. சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக அவர் கதைத்துக் கொண்டிருந்தார். வணிகம் சார்ந்த உரையாடலாக இருக்கலாம், அவருக்குக் கடைசி அழைப்பு வந்ததைக்கூட அவர் கவனிக்கவில்லை. நல்ல காலம், வணிக வகுப்பு என்பதால் அங்கேதான் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் அங்கே வந்து அவரைத் தேடிப்பிடித்து அவசரமாக அழைத்துச் சென்றார்கள்.
அருகே இருந்தவர் தானும் அவரைக் கவனித்ததாக சொன்னார். எங்களுக்கான அறிமுகம் அப்போதுதான் ஆரம்பமானது. அவர் ஒரு போத்துக்கேயர், நன்றாக ஆங்கிலம் கதைத்தார். றொட்றிக்கோ என்று தனது பெயரை அறிமுகம் செய்தார். மதுபான வர்த்தக விடயமாக உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட லண்டன் செல்வதாகக் குறிப்பிட்டார். தனது விமானமும் தாமதமாகிவிட்டது என்று குறிப்பிட்டார். நானும் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.
1505 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கையின் கோட்டை இராச்சியத்தைக் கைப்பற்றிய போது, கரையோரப் பகுதி மக்களைக் கத்தோலிக்கர்களாக மதம் மாற்றிச் சில்வா, பெர்னான்டோ, பெரேரா, மாட்டின், மரியா என்று தங்கள் பெயர்களையே அந்த மக்களுக்கும் சூடினார்கள் என்பது நினைவில் வந்தது. அதனால்தான் இங்கே சந்தித்த போர்த்துக்கேய மக்களின் பெயர்களும் எனக்குப் பழக்கமான பெயர்களாக இருந்தன. நண்பர் வைன் வர்த்தகத்தில் ஈடுபட்டவர் என்பதால் எங்கள் உரையாடலும் அது சம்பந்தமானதாவே அமைந்தது.
‘நீங்க போட்டோ பகுதியைச் சேந்தவரா?’ என்று கேட்டேன்.
‘ஆமாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?’
‘இல்லை, போட் வைன் உலகப் பிரசித்தி பெற்றது, அதனால்தான் கேட்டேன்’ என்றேன்.
‘அங்கே போட்டோவுக்கு வந்திருந்தீர்களா?’
‘ஆமாம், நானும் நண்பனும் குவின்ராவுக்கு வந்திருந்தோம்.’ என்றேன்.
‘நீங்க அங்கே வந்து பார்த்ததில் மகிழ்ச்சி, உங்களுக்குப் போட்டோ பிடித்திருந்ததா?
‘ரொம்பவே பிடித்திருந்தது. இலங்கையில் மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களைப் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அங்கேயும் மலைச்சரிவுகளில் தேயிலை செடிகள் நிரையாக இருப்பதைப் போல, இங்கேயும் திராட்சைக் கொடிகள் மலைச்சரிவுகளில் நிரையாக நிற்பதைப் பார்த்து ரசிக்கக்கூடியதாக இருந்தது.’
‘இங்கே உள்ள ‘வின்யாட்’ என்று சொல்லப்படுகின்ற திராட்சைத் தோட்டங்கள் உள்ள இடங்களைச் சுமார் 14 பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். முக்கியமாக போட்டோ பகுதியைத் திராட்சை தோட்டங்களுக்கான மரபுரிமைப் பகுதியாக ஐக்கியநாடுகள் மரபுரிமை அமையம் அறிவித்திருப்பது எங்களுக்குப் பெருமையாக இருக்கின்றது.’
‘உங்க நாட்டு வைன் உற்பத்தி எவ்வளவு இருக்கும்?’
‘நாங்க ஐரோப்பிய ஒன்றியத்தில் 5வது இடத்தில் அதிக வைன் ஏற்றுமதியாளர்களாக இருக்கிறோம். உலகச் சந்தையைப் பொறுத்த வரையில் 10வது இடத்தில், பின்னால்தான் இருக்கிறோம். சரியாகத் தெரியவில்லை கடந்த வருடம் சுமார் 936 மில்லியன் டொலர் வரை பெறுமதியான 306 மில்லியன் லிற்ரேஸ் வைன் ஏற்றுமதி செய்திருக்கிறோம் என நினைக்கின்றேன்’ என்றார்.
‘உங்க போட் வைன்தான் சிறந்தது என்று நினைக்கிறீகளா?’
‘நிச்சயமாக, இதில் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். யார் என்ன சொன்னாலும் வைனுக்கு எங்கள் பரம்பரை வாழ்ந்த டோரோ போட்டோதான் பிரபலமானது. இதை டோரோ பள்ளத்தாக்கில் உள்ள என்னைப் போன்ற சிலர் குடும்ப வியாபாரமாகவே தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றோம். இதைவிட லிஸ்போவா, அல்என்ரியோ போன்ற பகுதிகளிலும் வைன் உற்பத்தி செய்கின்றார்கள். இதைவிடச் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளுக்காகக் கொஞ்சம் வைன் இறக்குமதியும் செய்கின்றோம்’ என்றார்.
‘லிஸ்பனில் ஆற்றங்கரையில் வைன் பீப்பாக்கள் ஏற்றிய படகுகளைப் பார்த்தேன். அப்பொழுதான் விசாரித்தபோது, நீண்டகாலமாகப் போட்டோ பகுதியில் இருந்து படகுகள் மூலம் வைன் கொண்டு வருவதாகச் சொன்னார்கள், இது உண்மையா?’
‘ஆமாம், அது எமது நீண்டகால பாரம்பரியம், அப்போது வீதிப் போக்குவரத்துக்கள் குறைவான காலம் என்பதால் வைன் பீப்பாக்களைக் கொண்டு செல்வதற்குப் படகுகளைத்தான் பயன் படுத்தினார்கள். அதனால்தான் இங்கே அனேகமான மதுச்சாலைகள் ஆற்றங்கரைகளில் இருக்கின்றன.’ என்றார்.
‘சிறந்த வைன் என்று நீங்கள் எதைச் சிபார்சு செய்வீங்க?’
‘எனக்குப் பிடித்தமானது என்றால் போட்வைன்தான். இன்னும் சொல்வதென்றால் வுழரசபையயேஉழையெடஇ யுசயபழநெணஇ யுடகசழஉhநசைழ இ வுசinஉயனநசைய போன்றவற்றைச் சொல்லலாம்’ என்றார்.
‘யார் எல்லாம் உங்க வைனை வாங்குகிறார்கள்?’
‘முக்கியமாகப் பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, அங்கோலா போன்ற நாடுகள் அதிகம் வாங்குகின்றன. இப்போ கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளும் புதிதாக எங்களுடன் வைன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன, அது சம்பந்தமாகத்தான் லண்டன் போகிறேன். கனடாவில் எங்க வைனுக்கு வரவேற்பிருக்கா?’ என்றார்.
‘இருக்கு, எங்க இனப் பெண்கள் முன்பு பொதுஇடங்களில் மதுபானமே அருந்துவதில்லை, இப்போது உங்கள் ரெட்வைன் அறிமுகத்தால், உடலாரோக்கியத்திற்கு நல்லதென்று சமூக நிகழ்ச்சிகளில் ‘ரெட்வைன்’ அருந்தத் தொடங்கி விட்டார்கள்’ என்றேன்.
‘நல்லது, அதனாலே எங்களுக்கு வருமானம்தானே, ஆமா என்ன பிராண்ட் வைன் பாவிக்கிறாங்க’ என்றார்.
‘தெரியலை, நான் நினைக்கிறேன் உங்க ‘பைராடா டிஓசி’ ரெட்வைனைத்தான் விரும்பிச் சாப்பிடுவாங்க என்று, ஆமா கோவிட் காலத்தில் இங்கேயும் வைன் உற்பத்தி பாதிக்கப்பட்டதா?’
‘பெரிதாக இல்லை, காலநிலை சீர்கேடு, மற்றும் கோவிட்-19 காரணமாக சென்றவருடம் உற்பத்தி இரண்டு வீதத்தால் குறைந்திருக்கிறது. உணவு விடுதிகள், மதுச்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டதாலும், போக்குவரத்து தடைப்பட்டதாலும் வைன்பாவனையும் குறைந்திருந்தது. திரும்பவும் பழையபடி எங்கள் சந்தையைப் பிடிக்க வேண்டும்’ என்றார்.
‘வைனுக்குப் புதிய சந்தைகள் ஏதாவது கிடைத்தனவா?’
‘பெல்ஜியம், டென்மார்க், உக்ரைன், மெக்சிக்கோ போன்ற நாடுகள் ஆர்வம் காட்டியிருக்கின்றன. சந்தைப்படுத்துவது இப்போது நடக்கும் உக்ரைன் போரால் சற்று தாமதமாகிறது.’ என்றவர், ‘சரி இவ்வளவு கேள்விகளையும் கேட்டீர்களே, அங்கே வந்தபோது வைன் ரேஸ்ட் பண்ணிப்பார்தீங்களா?  உங்களுக்கு எந்த வைன் பிடித்திருந்தது? அது பிடித்ததற்குக் காரணம் என்ன?’ என்று கேட்டார்.
நான் சிரித்துவிட்டுச் சொன்னேன் ‘நான் மதுபானம் அருந்தவதில்லை, திராட்சைப்பழம் சாப்பிட்டுப் பார்த்தேன் ருசியாக இருந்தது. நண்பர்தான் அங்கே வைனை ருசிபார்த்து விட்டு நன்றாக இருப்பதாகச் சொன்னார்’ என்றேன்.
‘நீங்கள் திராட்சைப் பழத்தை விரும்பிச் சாப்பிட்டதாகச் சொன்னீங்க, அப்போ ஏன் வைன் குடிக்க மாட்டேன் என்று சொல்றீங்க?’ அவர் வைன் வணிகர் என்பதால் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதிலேயே கவனமாக இருந்தார்.
‘நீங்கள் கேட்டதும் எனக்கு எங்க ஆன்மீகத் துறவி சுவாமி விவேகானந்தர் சொன்னதொரு கதை நினைவுக்கு வருகிறது. அது என்னவென்றால் சுவாமியின் சீடன் ஒருநாள் அவருக்கு இரவு உணவின்போது திராட்சைப்பழங்களைப் பரிமாறினான். அதை அவர் சாப்பிடும் போது ‘சுவாமி எனக்கொரு சந்தேகம்’ என்றான். ‘என்ன சந்தேகம் கேள்’ என்று சுவாமி கேட்டார்.
அதற்கு அவன் ‘நீங்கள் திராட்சைப்பழம் சாப்பிடலாம் என்றால் ஏன் அதன் சாற்றைப் பதப்படுத்திச் செய்யும் வைன் சாப்பிட மாட்டேன் என்று சொல்கிறீர்கள், இரண்டும் ஒன்றுதானே?’ என்றான். சுவாமி இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கப் படுத்தினாலும் சீடன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
மறுநாள் காலையில் சுவாமி எல்லா சீடர்களையும் அழைத்தார். கேள்வி கேட்ட சீடனை மட்டும் தண்ணீர் தொட்டிக்கு அருகே அமரச் சொன்னார். அந்தச் சீடன் கேட்ட கேள்வியை எல்லாச் சீடர்களுக்கும் சொன்னார், அப்புறம் ஒவ்வொரு சீடனாக கேள்வி கேட்ட சீடனின் தலையில் அங்கே உள்ள செம்மண்ணைக் கையால் அள்ளிக் கொட்டச் சொன்னார். ஒவ்வொரு முறையும் ‘நோகுதா’ என்று கேட்ட போது சீடன் இல்லை என்று பதிலளித்தான். அதேபோல தண்ணீரையும் கோப்பையில் எடுத்துத் தலையில் ஊற்றச் சொன்னார், அப்பொழுதும் சீடன் நோகவில்லை என்று சொல்லிச் சிரித்தான். இப்போது அருகே இருந்த செங்கட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து சீடனின் தலையிலே போடச் சொன்னார். உடனே சீடனோ தலையிலே கை வைத்துக் கொண்டு ‘வேண்டாம்’ என்று கத்தினான். ‘அதே மண்ணும், அதே தண்ணியும் சேர்ந்து உருவானதுதானே இந்தச் செங்கட்டி ஏன் இதை மட்டும் நோகும் என்கிறாய்’ என்று சுவாமி கேட்டார். சீடன் உண்மையைப் புரிந்து கொண்டதால் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.
கதையைச் சொல்லிவிட்டு அவரைப் பார்த்தேன்.
‘புரியுது, இது உங்க கலாச்சாரத்திற்கு ஏற்ற கதையாக இருக்கலாம், ஆனால் இங்கே வைன் எங்க வாழ்க்கையோடு கலந்து விட்டது, எங்க வியாபாரமே இதில் தானே தங்கியிருக்கின்றது!’ என்றார்.
‘நான் கணக்காளராக இருந்தாலும், ஒரு எழுத்தாளனாகவும் இருக்கின்றேன். அதனால்தான் இவற்றை அறிந்து வைத்திருந்தேன். எனது நண்பர் வைனைப்பற்றிச் சொன்ன விடயங்களும், உங்களைப் போன்ற அனுபவசாலிகளிடம் பெற்ற விடயங்களும் ஒரு கதைக்கு வலுவூட்டக் கூடியன.’ என்றேன்.
‘அப்போ, நீங்கள் எழுதப்போகும் கதையில் எனக்கும் பங்குண்டு’ என்றவர், நேரத்தைப் பார்த்துவிட்டு, பயணத்திற்கான நேரம் வந்துவிட்டதாகச் சொல்லி விடைபெற்றார்.
எனக்கும் நேரமாகிவிட்டதால் விமானத்தை நோக்கிப் புறப்பட்டேன். வணிக வகுப்பில் எல்லோருக்கும் வைன் பரிமாறினார்கள், போத்துக்கேயரின் போட் வைனாகக்கூட இருக்கலாம்.
விமானப்பணிப்பெண் சிரித்த முகத்தோடு வைன் போத்தல்களைக் காட்டி எது வேண்டும் என்று கேட்டபோது, சுவாமி விவேகானந்தர்தான் கண்ணுக்குள் நின்றார், ‘வேண்டாம்’ என்று சொன்னேன், ஆச்சரியமாகப் பார்த்த அவள் தலையை அசைத்துவிட்டு அடுத்தவரிடம் சென்றாள். வணிக வகுப்பில் இப்படியும் ஒரு பயணியா என்று அவள் மனதுக்குள் வியந்தபடி என்னைக் கடந்து போயிருக்கலாம். மற்றப் பயணிகள் விரும்பிய வைனைக் கேட்டுவாங்கி அருந்தினார்கள், சுவாமி விவேகானந்தர் சொன்ன, எனக்குத்  தெரிந்த கதை அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.Fast Trains - Kuru Aravinthan

 
Saturday, April 23, 2022

International Tamil Short Stories

                                             கனடாவில் சர்வதேச சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா.

சர்வதேச சிறுகதைத் தொகுப்பின் முதல் பிரதியை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் 17-4-2022 அன்று வெளியிட்டு வைத்தார்.
‘கனடாவில் கடந்த 29 வருடங்களாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் உலகெங்கும் இயங்கும் இலக்கிய அமைப்புக்களின் மத்தியில் தனித்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இந்த வெற்றிகரமான அமைப்பு உலகின் பல நாடுகளிலும் வாழும் எழுத்தாளர்களிடையே சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தி, அதில் பரிசு பெற்ற சிறுகதைகளை தொகுத்து சாதனை புரிந்துள்ளது. இதற்காக கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பாராட்டுக்குரிய ஒரு இலக்கிய அமைப்பு என்ற வகையில் கனடா வாழ் தமிழ் மக்களும், மக்கள் அமைப்புக்களும் அதனைப் பாராட்ட வேண்டும்’ இவ்வாறு சென்ற ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 17ம் திகதி 2022 கனடாவில் இயங்கிவரும் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ‘சிந்தனைப்பூக்கள்’ எஸ். பத்மநாதன் புகழாரம் சூட்டினார்.


பைரவி நுண்கலைக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தை 29 வருடங்களுக்கு முன்னர் நிறுவிய எழுத்தாளர் ‘வீணைமைந்தன்’ அவர்கள் உட்பட இந்த நிறுவனத்தை இதுவரை சிறப்பாகக் கொண்டு நடத்திய பலரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் விதைத்த விதை இன்று ஓரு விருட்சமாக வளர்ந்துள்ளது. எனவே தற்போது எழுத்துலகில் கால்பதித்தவர்கள் இந்த அமைப்போடு இணைந்து பணியாற்றிக் கனடிய மண்ணுக்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுகின்றேன்’ என்று குறிப்பிட்டார்.எழுத்தாளர் இணையத்தின் தலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்தாய் வாழ்த்து – கனேடிய தேசியகீதம் ஆகியன செல்வி கம்சாயினி சாந்தகுமார் அவர்களால் இசைக்கப்பட்டது. வரவேற்புரையை இணையத்தின் செயலாளர், உதயன் ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து தலைவர் உரையை எழுத்தாளர் குரு அரவிந்தன் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவருவதற்கு உதவிய அத்தனை அன்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.


எழுத்தாளர் குரு அரவிந்தன் தொகுத்திருந்த இந்த சிறுகதைத் தொகுப்பை கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வெளியிட்டிருந்தது. இனிய நந்தவனம் பதிப்பகத்தின் இச்சிறுகதைத் தொகுப்பில் எஸ். நந்தகுமார், டலின் இராசசிங்கம், விமலாதேவி பரமநாதன், ஸ்ரீராம் விக்னேஷ், தேவகி கருணாகரன், கோவிந்தராயு அருண்பாண்டியன், சுமதி பாலையா, ஹரண்யா பிரசாந்தன், இராமேஸ்வரன் சோமசுந்தரம், இதயராஜா சின்னத்தம்பி, அருண்சந்தர், சுசீலா ராஜ்குமாரன், பரமேஸ்வரி இளங்கோ, மூதூர் மொகமட்ராபி, ஜெயபால் நவமணிராசையா, அண்ணத்துரை பாலு ஆகியோரது பரிசு பெற்ற 16 கதைகள் இடம் பெற்று இருக்கின்றன. இதில் தமிழ்நாட்டில் இருந்து 6 எழுத்தாளர்களும், இலங்கையில் இருந்து 6 எழுத்தாளர்களும், கனடா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒவ்வொரு எழுத்தாளர்களும் பரிசு பெற்றிருந்தனர்.


இந்த நிகழ்வின் போது, கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறப்புக் கௌரவத்தை திருவாளர்கள் கவிஞர் சுரேஸ் அகணி, சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன், மற்றும் தமிழ் நாட்டிலிருந்து கனடாவிற்கு வருகை தந்துள்ள இலக்கியவாதி திருமதி அண்ணாமலை தமிழரசி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் ஒன்றாரியோ மாகாண சபையின் ஸ்காபுறோ தென்-மேற்கு தொகுதியின் உறுப்பினர் - என்டிபி கட்சியின் பிரதான பேச்சாளர் திருமதி டொலி பேகம் (எம்.பி.பி) அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.விழாவில் மொன்றியால் மாநகரிலிருந்து வருகை தந்த ‘வீணைமைந்தன்’ மற்றும் யுகம் வானொலி கவிஞர் கணபதி ரவீந்திரன், தமிழ் நாட்டிலிருந்து கனடாவிற்கு வருகை தந்துள்ள இலக்கியவாதி திருமதி அண்ணாமலை தமிழரசி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

சிந்தனைப் பூக்கள் பத்மநாதன் அவர்கள் வெளியீட்டுரை நிகழ்த்தினார்.

சிறுகதைத் தொகுதியின் முதற் பிரதியை எழுத்தாளர் இணையத்தின் தலைவர் குரு அரவிந்தன் அவர்களிடமிருந்து கனடா கவிஞர் கழகத்தின் தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பல அன்பர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் நிர்வாக சபை உறுப்பினர் அருட்கவி ஞானகணேசன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
You and Kulasingam Kularanjan

Wednesday, April 13, 2022

Story - சதிவிரதன் - Sathi Virathanஇலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’சுலோச்சனா அருண்
சென்ற ஞாயிற்றுக் கிழமை (3-4-2022) இலக்கிய வெளியின் 19வது இணைய வழிக்கலந்துரையாடலில் ‘சிறுகதை நூல்களைப் பற்றிப் பேசுவோம்’ என்ற தலைப்பில் புலம்பெயர்ந்தோரின் 4 சிறுகதைத் தொகுப்புக்கள் திறனாய்வுக்கு எடுக்கப்பட்டன. முறையே வ.ந.கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ பற்றி சு.குணேஸ்வரன், குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’ பற்றி முனைவர். கோவிந்தராயூ (இனியன்), சாத்திரியின் ‘அவலங்கள்’ பற்றி தானாவிஷ்ணு, சயந்தனின் ‘பெயரற்றது’ பற்றி ந.குகபரன், ஆகியோர் உரையாற்றினார்கள். புலம்பெயர்ந்த மண்ணில் தங்கள் நேரத்தைச் செலவிட்டு இதுபோன்ற மிகச்சிறந்த சிறுகதை வடிவங்களைத் தமிழில் உருவாக்கித் தந்த எழுத்தாளர்களையும், இந்த நிகழ்வை சிறப்பாக ஒழுங்கு செய்து நடத்திய எழுத்தாளர் அகில் அவர்களையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினார்கள். சிலர், தமிழ் இலக்கியம் இன்னும் செழித்து வளர, இது போன்ற இன்னும் பல நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம் பெறவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்கள்.
கேள்வி நேரத்தின் போது பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக வெளிவந்த குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’ பற்றி, நிகழ்வில் பங்குபற்றிய ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி சர்ச்சைக்குரியதாக எடுக்கப்பட்டுப் பலராலும் விவாதிக்கப்பட்டது. இந்தச் சிறுகதை நூல் பற்றித் திறனாய்வு செய்த தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கோவிந்தராயூ அவர்கள், மொத்தமாகப் 17 கதைகள் இதில் இடம் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டு, எல்லாக் கதைகளுமே மிகவும் சிறப்பாக, வெவ்வேறு கோணத்தில் அமைந்திருக்கின்றன, ஆனாலும் நேரம் கருதி சில கதைகளை மட்டுமே தெரிந்தெடுத்து தனது கருத்துக்களைச் சொல்வதாகக் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக நூலில் இடம் பெற்ற சுமை, 401, சிந்துமனவெளி, சௌப்படி, அட மானிடா நலமா?, சதிவிரதன் போன்ற கதைகளைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.
இலங்கையில் நடந்த யுத்தத்தின் பின் நடந்த ஒரு சம்பவத்தைச் ‘சுமை’ என்ற கதை குறிப்பிடுகின்றது. வறுமைச் சூழ்நிலை காரணமாக, சிறையில் வாடிவதங்கி முதுமையின் இயலாமையோடு வெளிவந்த அப்பாவியான பெற்ற தகப்பனையே, சுமையாக நினைக்கும் மகளைப் பற்றியது. சிறை வாழ்க்கையும், வறுமையும் எவ்வளவு கொடியது என்பதை எடுத்துக் காட்டும் கதையிது. இந்தக் கதையின் கடைசி வரிகள் தன்னை உறைய வைத்து விட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்தக் கதை கனடா தமிழ் வானொலி நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது. உதயன் பத்திரிகையிலும் வெளிவந்தது. இன்னுமொரு கதை ‘சிந்துமனவெளி’ என்பது, கணவன் மனைவிக்கான உறவைக் குறிப்பது. சந்தேகம் எவ்வளவு பொல்லாதது என்பதை எடுத்துக் காட்டுகிறது கனடா உதயனில் வெளிவந்த, இந்தக் கதை. 
‘சௌப்படி’ என்ற கதை தமிழகத்தில் இருந்து வெளிவரும் ‘இனிய நந்தவனத்தில்’ வெளிவந்தது. வயதுக்கு வந்த பெண்களை மாதத்தில் மூன்று நாட்கள் இருட்டறைக்குள் ஒதுக்கி வைத்து, சிறைக் கைதிகள்போல, ஆண்கள் மட்டுமல்ல மூத்த பெண்களும் சேர்ந்தே வேடிக்கை பார்த்த அன்றைய சமூகத்தின் மனநிலையை எடுத்துக் காட்டும் கதையிது. இன்றும் தமிழ் நாட்டில் சில இடங்களில் இதுபோன்ற கொடுமை நடக்கிறது என்று இனியன் அப்போது குறிப்பிட்டார். ‘அட மானிடா நலமா?’ கூர்க்கனடாவில் வெளிவந்தது. ஆறறிவு கொண்ட மானிடரைவிட அறிவில் கூடிய ஒரு கூட்டத்திடம் தற்செயலாக அகப்பட்ட ஒரு இளம் பெண்ணையும், ஆணையும் பற்றிய கதையிது. இந்தக் கதையின் முடிவிலும் ‘நலமெடுத்தல்’ என்ற அழகான தமிழ் சொல்லை ஆசிரியர் பாவித்திருக்கின்றார். ‘மானிடருக்கு மகிழ்ச்சி தருவதில் உடலின்பமும் முக்கிய இடம் வகிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அதையும் வேண்டுமென்றே எடுத்து விட்டால் வாழ்வதில் என்ன பயன்?’ என்ற கேள்வியை அப்போது எழுப்பினார்.நூலின் தலைப்பாக இடம் பெற்ற கதை ‘சதிவிரதன்.’ என்னதான் அறிவியல் முன்னேறினாலும், இயற்கையின் தேவைகள் அவ்வப்போது தவிர்க்க முடியாமல் குறுக்கிடத்தான் செய்யும் என்பதை எடுத்துச் சொல்லும் கதையிது. தமிழகத்தில் இருந்து வெளிவரும் ‘இனிய நந்தவனம்’ இதழில் சர்ச்சைக்குரிய இந்தச் சிறுகதை வெளிவந்திருந்து.
மெய்நிகர் நிகழ்வில் பங்குபற்றிய ஒருவர் இந்தத் தலைப்பு ஏற்படையதாக இல்லை என்று தனது கருத்தை முன்வைத்தார். காரணம் ‘சதிலீலாவதி என்று ஒரு படம் வெளிவந்தது, அது போல எதையாவது வைத்திருக்கலாம், ‘சதிவிரதன்’ என்ற ஒரு சொல்லே இல்லை, அதற்கு ஒரு அர்த்தமும் இல்லை’ என்று குறிப்பிட்டார்.
அப்போது முனைவர் கோவிந்தராயூ ‘அதனால்தான் எழுத்தாளர் குரு அரவிந்தன் அந்த சொல்லைப் புதிதாக உருவாக்கி இருக்கின்றார். கணவனுக்கு உண்மையாக மனைவி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது போல, மனைவிக்கு உண்மையாகக் கணவனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே’ என்று சுட்டிக்காட்டி, ‘சதிபதி’ என்ற சங்க இலக்கியச் சொல்லை முன்வைத்து, ‘பதிவிரதை’ என்ற சொல்லின் எதிர்ப்பால்தான் ‘சதிவிரதன்’ என்று விளக்கம் தந்தார்.
ஆனாலும் முனைவரின் விளக்கத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவர் ‘ஆளுக்காள் இப்படியான புதிய சொற்களைத் தமிழ் மொழிக்கு அறிமுகப் படுத்துவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது, ‘சதி’ என்றால் ‘சூழ்ச்சி’ என்றுதான் பொருள் படுமே தவிர மனைவியை அல்ல’ என்று உடனே வாதிட்டார். ‘எங்களால்’ என்று அவர் யாரைக் குறிப்பிட்டார் என்பது தெரியவில்லை.
‘ஒரு எழுத்தாளனுக்குப் புதிய சொல்லை உருவாக்குவதற்கான உரிமை உண்டு. சங்ககாலத்தில் இருந்து இப்படியாக உருவாக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்தான், குறிப்பாக வள்ளுவர், கம்பன், இளங்கோவடிகள் மற்றும் புலவர்கள், சான்றோர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட சொற்கள்தான் இன்று அகராதியில் இடம் பெற்று இருக்கின்றன. எழுத்துக்களைப் படைப்பவன் என்பதால்தான் எழுத்தாளனைப் ‘பிரமன்’ என்கிறோம். படைப்பாளி என்ற வகையில் எழுத்தாளர் குரு அரவிந்தனுக்கு அந்த உரிமை உண்டு.’ என்று முனைவர் சுப்ரமணிய ஐயா அவர்கள் எடுத்துரைத்தார். மேலும் அவர் குறிப்பிடும் போது,
‘பேசாப்பொருளைப் பேசுவது எழுத்தாளனுக்கு மிகவும் அவசியமானதாகும். ஒரு காலகட்டத்தில் சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாகச் சொல்லத் தயங்கியதை ஜெயகாந்தன் துணிந்து பேசவந்ததால்தான் ஜெயகாந்தனை நோக்கி இலக்கிய ஆர்வலர்களின் பார்வையும் திரும்பியிருந்தது. அது போலத்தான் குரு அரவிந்தனின் சிலகதைகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. அதனால் சமுதாயத்திற்கு நன்மை தருமெனில், சீர்திருத்தம் பெறுமெனில் அதில் தவறில்லை.’என்று குறிப்பிட்டார்.
‘தமிழர் பண்பாட்டில் பயிற்றப்படாத பண்புநிலைகளைத் தமிழர் இயைபாக்கம் செய்ய முற்படும் போது, ஏற்படும் இன்னல்களை ஆசிரியர் குரு அரவிந்தன் எழுத்திலே திறம்படப் பதிவு செய்துள்ள புனைதிறன் பாராட்டிற்குரியது’ என்று முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் இந்த நூலில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆசிரியரைப் பற்றிய அறிமுக உரையில், ‘குரு அரவிந்தன் போன்ற நவீன எழுத்தாளர்கள் வரலாற்று உண்மைகளையும் இழைத்து நவீன புனைவுகளுடாக கொண்டு வரும் போது, அவர் கல்கியின் இடத்திற்குத் தன்னை உயர்த்திக் கொண்டிருக்கின்றார். மண்ணையும், உயிர்களையும், தாவரங்களையும், இயற்கையையும் கூடவே ரசித்தவராகவும் அவற்றுக்காக ஆதங்கப் படுபவராகவும் குரு அரவிந்தன் தன்னை இயற்கைசார் கலைஞராகவும் காட்டுகின்றார்’ என்று முனைவர் பார்வதி கந்தசாமி அறிமுக உரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த நிகழ்வில் பங்குபற்றியவர்களில் ஒருவரான எழுத்தாளர் அகில், ‘தமிழில் ஒரு சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உண்டு. சதி என்றால் சூழ்ச்சி என்பது மட்டுமல்ல, மனைவி என்ற அர்த்தமும் உண்டு. ‘சதி’ வழமை என்பது முற்காலத்தில் ‘பதி’ யான கணவனுடன் சேர்ந்து உடன் கட்டை ஏறுவது, 1800 களின் தொடக்க காலத்திலும் சில இடங்களில் இந்த வழக்கம் இருந்திருக்கிறது’ என்று இணையத்தளத்தில் இருந்த விளக்கத்தையும் தந்தார். எழுத்தாளர் வ.ந. கிரிதரன், எழுத்தாளர் போல் ஜோசெப் ஆகியோரும் முன்னாள் பேராசிரியர் முனைவர் சுப்ரமணிய ஐயாவின் கருத்தை ஆமோதித்து தமது கருத்துக்களையும் முன்வைத்தனர்.
இந்த மெய்நிகர் நிகழ்வின் மூலம், எழுத்தாளர் குரு அரவிந்தன் உருவாக்கிய ‘சதிவிரதன்’ என்ற சொல் சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது, தமிழ் இலக்கியப் பரப்பிற்கு ஆரோக்கியமானது என்றே நான் கருதுகின்றேன். இது போன்று இன்னும் பல புதிய சொற்களை எழுத்தாளர் தமிழுக்குத் தரவேண்டும் என்று வாசகர் வட்டத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

Tamil New Year - புத்தாண்டு -2022

 

தமிழர்களின் புத்தாண்டு எப்போது?

குரு அரவிந்தன்


தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்திலா, அல்லது சித்திரை மாதத்திலா என்ற கேள்வியால் எழுந்த குழப்ப நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இலங்கைத்தமிழ் மக்கள்தான் என்றால் மிகையாகாது.


இலங்கைத் தமிழர்கள் காலாகாலமாய் இந்து மதத்தைப் பின்பற்றிச் சைவசமயத்தவர்களாகவே இருந்தார்கள். சைவமும் தமிழும் ஒன்றாகவே வளர்ந்தன. அதனால்தான் எந்த வேற்றுமையும் பாராட்டாது, தென்னிந்தியாவில் இந்துக்கள் கடைப்பிடித்தது போலவே, சித்திரைத் திருநாளையே தமிழர்களின் புதுவருடமாகக் கொண்டாடினார்கள். தைமாதத்தில் உழவர்களின் திருநாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினார்கள். மக்கள் மனதில் பதிந்திருக்கும் இந்த நடைமுறைகளில் மாற்றங்களைத் திடீரென ஏற்படுத்துவது என்பது இலகுவான காரியமல்ல என்பது நாமறிந்ததே. மேலை நாட்டவரின் வருகையால் இலங்கைத்தமிழ் மக்கள் சிலரிடையே மதமாற்றங்கள் ஆங்காங்கே ஏற்பட்டதால், தமிழர்களில் மதம் மாறிய ஒரு பகுதியினர் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடுவதைத் தவிர்த்திருந்தனர். ஆனாலும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் இந்துக்களாக இருந்ததால், அந்த நிகழ்வுகளில் பாரபட்சம் பார்க்காது அவர்களுடன் கலந்து கொண்டனர்.


இராசிச் சக்கரத்தில் உள்ள 12 இராசிகளில் மேச ராசியின் ஊடாக சூரியன் நகர்ந்து வரும் மாதமான சித்திரை மாதமே வருடத்தின் முதல் மாதமாக பண்டைய தமிழர்கள் கருதியதற்குக் காரணம் அவர்கள் இந்துக்களாக இருந்ததுதான். சித்திரை பற்றி சங்க இலக்கிய நூல்களிலும் கூறப்பட்டுள்ளன. நெடுநல்வாடை, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சித்திரை பற்றிக் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. தொல்காப்பியத்தில் கார்காலமே தொடக்கமாகக் குறிப்பிடப் பட்டிருப்பதாக நச்சினார்க்கினியர் உரைநடையில் இருந்து அறிய முடிகின்றது. தமிழ் மாதங்கள் எல்லாம் ‘ஐ’ இலும் ‘இ’ யிலும் முடியும் என்பதையும் தொல்காப்பியரே குறிப்பிட்டிருக்கின்றார். இதேபோல தைமாதத்தையும் புதுவருடம் என்று நேரடியாக இலக்கியங்கள் குறிப்பிடவில்லை. இதனால்தான், வடமொழி ஆதிக்கத்தின் காரணமாகத் தென்னிந்திய இந்துக்களாக இருந்த தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். அந்த வழக்கமே இலங்கைத் தமிழர்களிடமும் இருந்தது. இது ஆங்கில நாட்காட்டியில் பொதுவாக ஏப்ரல் 14 ஆம் திகதியைக் குறிக்கும். சில ஆண்டுகளில் ஆங்கில நாட்காட்டியின்படி ஏப்ரல் மாதம் 13 ஆம் அல்லது 15 ஆம் திகதியிலும் இடம் பெறுவதுண்டு.


சித்திரை வருடப்பிறப்பு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் கொண்டாடப் படுகின்றது. வருடப் பிறப்பு அன்று காலையில் எழுந்து, மருத்துநீர் வைத்து நீராடிப் புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்று மகிழ்ச்சியோடு வழிபட்டு வருவர். உறவினர், நண்பர்களுக்கு இனிப்பு பலகாரங்களைப் பரிமாறி உபசரிப்பர். கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதுண்டு. சில இடங்களில் மாட்டு வண்டில் சவாரியும் இடம் பெறுவதுண்டு. போர்த்தேங்கய் அடிப்பது, முட்டி உடைப்பது, கிளித்தட்டு விளையாடுவது, மரதன் ஓட்டப் போட்டி, துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி, நீச்சல் போட்டி போன்றவையும் சில இடங்களில் இடம் பெறும். சிறுவயதினர் ஊஞ்சல் கட்டி ஆடுவார்கள். ஒற்றை ஊஞ்சல், இரட்டை ஊஞ்சல், அன்ன ஊஞ்சல் என்று வசதிக்கு ஏற்ப மரத்திலே கட்டி ஆடுவார்கள். வருடப்பிறப்பன்று நல்ல நேரம் பார்த்துப் பெரியவர்களிடம் இருந்து ‘கைவிசேடம்’ வாங்குவார்கள். நல்ல காரியங்களையும் அன்று தொடக்கி வைப்பார்கள்.


தமிழ்நாட்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1921 ஆம் ஆண்டு பல தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி, மிகவும் கவனமாக ஆராய்ந்து தகுந்த ஆதாரங்களோடு தைமாதம்தான் தமிழர்களின் புத்தாண்டு, சித்திரை மாதமல்ல என்று முடிவெடுத்தனர். 1939 ஆம் ஆண்டு திருச்சியிலும் கூடி அதை உறுதி செய்தார்கள். அதனால் திருவள்ளுவர் பிறந்த ஆண்டைத் தமிழர்களின் ஆண்டாகக் கணித்தார்கள். அதாவது கிறீஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பாகத் திருவள்ளுவர் பிறந்ததாகக் கணித்திருந்தார்கள். பல காரணங்களால் அதை அப்போது நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது. 1981 ஆம் அண்டு முதல் தமிழக அரசு தைமாதம் தான் புதுவருடம் என்பதைக் கடைப்பிடித்து வருகின்றது. ஆனால் இடையே அரசியல் இலாபம் கருதி மீண்டும் வருடப்பிறப்பைச் சித்திரை மாதத்திற்கு மாற்றினார்கள். தமிழ் சான்றோர் ஒன்றுகூடி எடுத்த முடிவுக்கான ஆதாரங்கள் எதுவும் ஆவணமாக இல்லை என்று ஒரு சாரார் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. சென்னையில் கணிசமான அளவு வேற்று இனத்தவர்கள் வாழ்வதாலும், அவர்களின் கைகளில் சில ஆட்சி அதிகாரங்கள் இருப்பதாலும், இந்த இழுபறி நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் தமிழகத் தமிழரும், வருடப்பிறப்பு எது என்று தெரியாமல் இப்போது குழம்பிப் போயிருக்கிறார்கள்.


கொழும்பிலே ‘கேவ் அன்ட் கொம்பனி’ என்று மிகப்பழைய புத்தகவிற்பனை நிலையம் இருந்தது. அவர்களிடம் அச்சகமும் இருந்ததால் நாட்காட்டிகளையும் அச்சடித்தார்கள். கணக்குப் பரிசோதனைக்காகச் அங்கு சென்றபோது, நிலவறையில் மிகப் பழைய நாட்காட்டிகளைச் சுவரிலே தொங்கவிடப்பட்டிருந்ததை அவதானித்தேன். 1940 களில் அச்சாகிய நாட்காட்டிகளில் தமிழ் வருடப்பிறப்பு என்று மட்டும் போடப்பட்டிருந்தது. நாடு சுதந்திரமடைந்தபின் 1950 களில் வெளிவந்த நாட்காட்டிகளில் தமிழ் – சிங்கள வருடப்பிறப்பு என்று இடம் பெற்றிருந்தது. 1960 களில் வெளிவந்த நாட்காட்டிகளில் சிங்கள – தமிழ் வருடப்பிறப்பு என்று மாற்றப்பட்டிருந்தது. 1970 களில் வெளிவந்த நாட்காட்டியில் சிங்கள வருடப் பிறப்பு என்று மட்டுமே போடப்பட்டிருந்தது. 1971 ஆம் ஆண்டு தமிழ் நாட்டு நாட்காட்டிகளில் தை மாதந்தான் தமிழர்களின் புதுவருடம் என்று அறிவிக்கப்பட்டதால், சிங்கள பதிப்பகத்தினர் அதைத் தமக்குச் சாதகமாக எடுத்து தமிழ் வருடப்பிறப்பு என்பதை நீக்கிவிட்டு இந்து – சிங்கள வருடப்பிறப்பு என்று மாற்றியிருந்தனர். 1980 களில் சில நாட்காட்டிகளில் ‘இந்து’ என்ற சொல்லையும் எடுத்து விட்டனர். 1972 ஆம் ஆண்டு தமிழகத்தில் தைமாதம்தான் தமிழர்களின் வருடப்பிறப்பு என்று அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வரும் 60 சித்திரைப் புத்தாண்டுகளில் ஒரு பெயர்கூடத் தமிழ்ப் பெயர் இல்லை, எல்லாமே வடமொழிப் பெயர்கள்தான், எனவே சித்திரை எமது புதுவருடமல்ல என்பதும், நாயக்கர் ஆட்சிக் காலத்தில்தான் இந்த மாற்றங்கள் இடம் பெற்றதாகவும் ஒரு பக்கத்தினரின் வாதமாக இருக்கின்றது.


‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதற்கிணங்க, புலம் பெயர்ந்து வந்து பல்கலாச்சார நாட்டில் வாழும் நாங்கள் மற்றவர்களது கலாச்சாரத்திற்கு எப்படி மதிப்புக் கொடுக்கிறோமோ, அதே போல ஒவ்வொருவருடைய நம்பிக்கைக்கும் மதிப்புக் கொடுத்து நட்போடு பழகுவோம். இலங்கைத் தமிழர்கள் முக்கியமாக மூன்று பண்டிகைகளைக் கொண்டாடி வந்தார்கள். தீபாவளி, தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு. இவற்றில் தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல என்ற காரணம் சொல்லி, அதைக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டார்கள். இப்பொழுது சித்திரை வருடப்பிறப்பையும் நிறுத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். அடுத்தது தைப்பொங்கல்தான் எஞ்சி இருக்கிறது. இதற்கும் ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து நிறுத்தி விட்டால் என்ன நடக்கும். அதன் பின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் இல்லாத இனமாக தமிழர்களை இனம் காண்பார்கள். ஒரு இனம் தன்னை அடையாளப்படுத்த மொழி, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றைப் பேணிக் காக்க வேண்டும். இவை இல்லாவிட்டால் முகமற்றவர்களாகி விடுவோம். எதையுமே ஆராய்ந்து முடிவெடுக்கக் கூடிய சிறந்ததொரு தலைமைத்துவம் எமக்காக இல்லாததால் இழுபறிப்பட வேண்டிய நிலையில், உலகெங்குமுள்ள தமிழ் இனம் இன்று இருக்கிறது.


புதிதாக ஒன்றை அறிமுகப் படுத்துவதென்றால் அதை ஆதாரங்களோடு ஆணித்தரமாக அறிமுகப் படுத்த வேண்டும், அதைத் தொடர்ந்தும் நடைமுறைப் படுத்த வேண்டும். அப்போதுதான் அது காலத்தால் நிலைத்து நிற்கும். புதுமை என்ற பெயரில் எமது அடையாளங்களை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கும் இனமாகத் தமிழ் இனத்தை இன்று மாற்றி விட்டார்கள். இத்தகைய பண்டிகைகள் கொண்டாடப் படுவதற்கு முக்கிய காரணம், ‘மக்கள் மகிழ்வோடு இருக்க வேண்டும்’ என்பதுதான். எனவே எப்போதும் சோகத்திற்குள் மூழ்கிக் கிடக்காமல், இந்த பல்கலாச்சார நாட்டின் முக்கியமான நிகழ்வுகள் எல்லாவற்றிலும் முடிந்தளவு பங்கு பற்றி, அவர்களுடன் சேர்ந்து, மொழி மதம் எல்லாவற்றையும் கடந்து நாமும் திருநாட்களைக் கொண்டாடி மகிழ்வோம். காரணம், யார்மனதும் நோகாமல் இந்த வாழ்க்கை வாழ்வதற்கே!

Tuesday, March 22, 2022